சனி, 18 மார்ச், 2023

புரட்சிப் பட்டறையில் பூத்த மலர் - அலெய்டா குவேரா!

 

கியூபா நாட்டின் புரட்சித் தந்தை பிடல் காஸ்ட்ரோவின் சீரிய சகப் போராளி - 'படைத் தலைவர்' சேகுவேரா ('சே' என்றால் 'தோழர்' என்று பொருள்). உலகில் எங்கெங்கெல்லாம் அநீதி - கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தன் போர்க்களமாக்கி, அப்போரில் தான் கொண்ட லட்சியத் திற்காக தன்னையே கொடுத்த தகத்தாய கொள்கைத் தங்கம் தான் புரட்சியாளர் சேகுவேரா!

அவர்தம் புரட்சிப் பட்டறையில் பதப்படுத்தி பூத்த புதுமலர்கள் - கொள்கைகள் நறுமலர்கள் தான் தமிழ்நாட்டிற்கு - கேரள சுற்றுப் பயணம் முடித்து வந்து நமது கொள்கைப் போராட்டத்தின் திரிகளுக்கு மேலும் ஒளியூட்டினர். அவரது  அன்பு மகள் அலெய்டா சேகுவேரா மற்றும்  குழந்தை நல மருத்துவரும், அவரது கொள்கைப் பேத்தியுமான டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்தனர். பெரியார் மண்ணான தமிழ்நாட்டு மண்ணின் கொள்கை - லட்சிய மணத்தினை முகர்ந்து - முற்றோதிய முழு மனிதம் நோக்கிய இலக்குடன் பதப்படுத்திய  மண்ணாக தமிழ் மண் இருப்பது கண்டு புளகாங்கிதத்துடன் பூரித்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும், அவர் களுக்குத் தோள் கொடுக்கும் இயக்கத் தலைவர்களும் கரம் கோர்த்து, புதியதோர் உலகு செய்து, பொது உடைமைக் கொள்கை புத்தாக்கம் தரும் புதிய பூமி, புதிய வானமாக தமிழ்நாடு- பெரியார் மண் திகழ்வதில் நம்மைப் போலவே - தோழர் அலெய்டாவும் மகிழ்ந்து "உங்கள்  மாநிலத்தின் பெயர் என்ன?" என்று கூடியிருந்த மக்கள் பெருந்திரளைப் பார்த்துக் கேட்க - 'தமிழ்நாடு' என்று மக்கள் ஓங்கிக் குரல் கொடுக்க, இன்னும் உரத்து முழங்குங்கள் என்று கூறியது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திராவிட இலக்கின் உண்மையை உலகும் உணர்ந் தோதுகிறது என்பதையே காட்டியது!

அது மட்டுமா?

அவரை நாம் பெருமையோடு, அவர் 'புரட்சி வயிற்றிலிருந்து  வந்த பீரங்கி' என்று வர்ணித்து வரவேற்ற நிலையில் நேற்று அவர் பதிலளித்தப் பாங்கு வியக்கத்தக்கது! வித்தகர் அவர் என்பதை விரி உலகத்திற்கே உணர்த்தியது!

"நான் யாருடைய மகள் என்பது முக்கியமல்ல;

நான் யாராக இருக்கிறேன் என்பதே முக்கியம்!

என் தாயார் (புரட்சியாளர் சேகுவேராவின் மனைவி) கூறிய அறிவுரை எனக்கு என்ன தெரியுமா?"

"இந்த மண்ணில் கால் ஊன்றிய நீ எப்போதும் உறுதியாக நிற்க வேண்டும். இதை இந்த நேரத்தில் நினைவு கொள்கிறேன்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பிரமிப்பை அளிக்கிறது!

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அங்குள்ள மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்.

எத்தனை தடைகள் இருந்தாலும் கியூபா மக்களின் மகிழ்ச்சியை மட்டும் அமெரிக் காவால் தடுக்க முடியவில்லை"

"எனது தந்தையார் இறந்தபோது (படுகொலை செய்யப்பட்டதைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார் - கவனியுங்கள்) உலக மக்களில் பெரும்பாலோர் வருத்தப்பட்டனர்.

ஒருவரின் இறப்புக்காக யாரும் அழ வேண்டியது இல்லை; அவர் கடமையைத் தொடர்ந்து செய்தால் அவர் நம்மோடு வாழ்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்"

இந்த வீரமும், நெஞ்சத்துக் கொள்கை உரமும் நிறைந்த பக்குவப்பட்ட பேச்சே, சேகுவேராவின் குடும்பம் கொள்கைப் பட்டறையில் தயாரித்த போர்க்கள ஆயுதங்களாகவே அமைந்திட்டன என்பதை நமக்கும், உலகத்திற்கும் காட்டுகிறது!

இப்படிப்பட்ட வீரப் பெண்களே, வீர வேங் கைகளே, விவேக சிந்தாமணிகளே இன்றைய அடிமைப் பெண்ணுலகை  ஆர்ப்பரித்து எழ வைக்கக் கூடிய தகுதி வாய்ந்தோராவர். பாலின வேறுபாடு இன்றி சமூகப் புரட்சிக்குத் தலை மையாக - அன்னை மணியம்மையார் போன்ற தியாகத் திருஉருவங்களை முன்னிறுத்தி புதியதோர் உலகு செய்து, அதனைப் பொது உரிமை, பொது உடைமை பூத்த சமுதாயமாக மாற்றிட புரட்சி பூபாளம் பாடுவோம் என்பதே தோழர் அலெய்டா பெற்ற வரவேற்பும், அதில் அவர் ஆற்றிய பதிலுரையும் - இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக