திங்கள், 30 டிசம்பர், 2019

விருதுநகர் ப.க. மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எழுப்பிய வினா

திருவள்ளுவர் பிறந்த 2000 ஆண்டுகளுக்குமுன் இந்து மதம் இல்லாத நிலையில், அதனை இந்து நூல் என்பது எப்படி?

விருதுநகர் ப.க. மாநாட்டில்  எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  எழுப்பிய வினா


விருதுநகர், டிச.21 திருவள்ளுவர் பிறந்த 2000 ஆண்டுகளுக்குமுன் இந்து மதம் இல்லாத நிலையில், அதனை இந்து நூல் என்பது எப்படி?  என்ற வினாவினை எழுப்பினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா  தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வழியில் நின்று இந்த மண்ணை பகுத்தறிவு வழியில் முன்னோக்கி இழுத்துச் செல்லவேண்டும் என்று போராடிக் கொண் டிருக்கின்ற சமூகநீதிப் போராளிகளே,  தமிழ்ச் சொந்தங்களே, என்னுடன் வருகை தந்திருக்கின்ற என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மதுரைக்குச் சென்று விமானம் பிடித்து சென் னைக்குச் செல்லவேண்டும் என்கிற காரணத்தால், சற்று முன்னதாகவே, அய்யா அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே பேசி, விடைபெறவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியில் நான் நின்று கொண்டிருக்கின்றேன். இடையிலேயே விடைபெறுவதற்காக முதலில் என் னுடைய வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

21 தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்

பகுத்தறிவாளர் கழகத்தின் இந்தப் பொன்விழா மாநாட்டில் நிறைவேற்றி இருக்கிற 21 தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று, இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் தொட்டிருக்கின்ற நிலையில், பொன்விழாவின் தொடக்க நிகழ்ச்சி விருதுநகரிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொடக்க விழா நிகழ்விலே பங்கேற்று உரையாற்றக்கூடிய ஒரு அரிய வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக தமிழர் தலை வர் அய்யா அவர்களுக்கும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கும் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர்

இந்த மண்ணில் தோன்றியிருக்காவிட்டால்...

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் இந்த மண்ணில் தோன்றியிருக்காவிட்டால், 50 ஆண்டு களுக்கு முன்பே அல்லது 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடும், சங் பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடும் ஒரு பகுதியாக மாறியிருக்கும். இன்றைக்குத் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியவில்லை, வேரூன்ற முடியவில்லை என்கின்ற வகையில், ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகள்தான். அதுதான் இன்றைக்குத் தமிழ்நாட்டை, மதச்சார்பற்ற ஒரு நிலப்பகுதியாக அறியக்கூடிய வகையில், பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.

சென்னை அய்.அய்.டி. மாணவி பாத்திமா லத்தீப் உயிர்ப் பலியாகியிருக்கின்ற நிலையில், அவருடைய பெற்றோர் இருவரும், பதறிக்கொண்டு சொன்ன வார்த்தைகள், ‘‘வேறு எங்கே எங்கள் பெண்ணை அனுப்பினாலும் பாதுகாப்பு இருக்காது; தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற  நிலம். ஆகவே, இங்கே பாதுகாப்பு இருக்கும் என்று எண்ணித்தான், சென்னை அய்.அய்.டி. யிலே படிக்க வைத்தோம். ஆனால், இங்கேயும் மதவெறி என் குழந்தையின் உயிரைப் பறித்துக் கொண்டதே'' என்று வேதனையோடு அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தந்தை பெரியார் அவர்களின்

உழைப்புதான், சிந்தனைதான்

அப்படி ஒரு எண்ணம் தமிழ்நாட்டில், மதவெறிக்கு இடமில்லை, ஜாதி வெறிக்கு இடமில்லை, இங்கே பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு சிந்தனையை அவர்களுக்கு உருவாக்கி இருப்பது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் உழைப்புதான், சிந்தனைதான்.

சமூகநீதியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழர் தலைவர்

இன்றைக்கு நம்மிடையே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இல்லை என்றாலும், அந்த இடத்தை இட்டு நிரப்பி, வெற்றிகரமாக, பகுத்தறிவு சிந்தனை களைப் பரப்பிக் கொண்டிருப்பதுடன், சமூகநீதியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள்.

அவருடைய நிறைவுரையைக் கேட்கவேண்டும் என்கிற ஆவல்; ஆனால், எனக்கு நேரமில்லை. அதனால், நிறைவு  விழா மாநாட்டிலும் பேசுகிற வாய்ப்பை அய்யா அவர்கள் எனக்கு வழங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் ஜாதியவாதிகளும், மதவாதிகளும் கோலோச்சுவதற்குத் துடிக்கிறார்கள்

இது தொடக்க விழா மாநாடு; பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு  பெற்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் ஜாதியவாதிகளும், மதவாதிகளும் கோலோச்சுவதற்குத் துடிக்கிறார்கள்; இங்கே கொடிகட்டி ஆளத் துடிக்கிறார்கள். ஏனென் றால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டைத் தவிர, மற்ற மாநிலங்களில் அவர்களின் தாக்கம் இருந்தது, ஆதிக்கம் இருந்தது, அவர்களால் வெற்றி பெறவும் முடிந்தது. தமிழகத்தில் அது எடுபடவில்லை. ஆனால், எப்படியாவது இன்றைக்கு தலைவர் கலைஞர், ஜெயலலிதா அம்மையார் இல்லை என்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. வின் இக்கட்டான நிலைமைகளை, அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி இங்கே கோலோச்ச வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இத்தகைய ஒரு சூழலில்தான், அவர்கள் கையில் எடுத்திருக்கின்ற யுக்திகள் - அய்யன் திருவள்ளு வருக்குக் காவி உடை உடுத்துவது, திருநீறு பூசுவது, நாமம் சாத்துவது, ருத்திராட்சக் கொட்டை அணி விப்பது போன்ற நடவடிக்கைகள்.

திருவள்ளுவர்  நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடை

அய்யன் திருவள்ளுவருடைய உருவத்தை நாம் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு எந்த உருவம் தந்தாலும், அதற்கு நாம் எப்படி எதிர்ப்போ அல்லது ஆதரவோ செய்ய முடியும் என்கிற ஒரு நிலை இருக் கிறது. ஆனாலும்கூட, அய்யன் திருவள்ளுவர், நமக்கு வழங்கியிருக்கிற அருட்கொடை என்று சொல்லலாம், நமக்கான அந்த அறிவுக்கொடை திருக்குறள்.

உலகத்தில் எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்ற ஒரு மகத்தான அறநூல். அந்த நூல், அய்யன் திருவள்ளுவரின் சிந்தனையை நமக்கு வெளிப்படுத்துகிறது; அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அவரை சமணர்கள் தங்களுடைய முனிவர்கள் என்று உரிமை கோருகிறார்கள்; பவுத்தர்கள் உரிமை கோருகிறார்கள். சமணமும், பவுத்தமும் உரிமை கோரு வதில்கூட  ஒரு பொருள் இருக்கிறது.

ஏனென்றால், சமணமும், பவுத்தமும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் உயர்ந்தவர்கள் - தாழ்ந்த வர்கள் என்று போதிக்கின்ற மதங்கள் இல்லை.

சமணமும், பவுத்தமும் சமத்துவத்தைப் பேசுகின்ற மதங்கள்.

அய்யன் திருவள்ளுவரும் சமத்துவத்தைப் போதிக் கக்கூடிய ஒரு மாமனிதர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று சொன்னார்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'' என்ற ஏழு சொற்கள், அய்யன் திருவள்ளுவர் யார் என்று மதிப்பீடு செய்வதற்கான ஓர் அளவுகோல்.

1330 குறளில், மற்ற குறள்களைக்கூட நாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, இந்த ஒற்றைக் குறளை ஆய்வு செய்தால் போதும். அவருடைய சிந்தனை எவ்வளவு உயர்ந்தது, மேம்பட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'' என்று சொல்லு வதன்மூலம்,

பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்று சொல்ல வில்லை.

பிறப்பொக்கும் எல்லா இனத்திற்கும் என்று சொல்ல வில்லை.

பிறப்பொக்கும் எல்லா மதத்திற்கும் என்று சொல்ல வில்லை.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்றுதான் சொல்லியிருக்கிறார். அது மனித உயிராக இருக்கலாம், விலங்குகள் உயிராக இருக்கலாம், பறவைகளின் உயிராக இருக்கலாம், எந்த உயிராகவும் இருக்கலாம். உயிர் என்பது எப்படி பிறப்பெடுக்கிறது என்றால், தாய்வழியே பிறப்பெடுக்கிறது.

அதனால், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' - அதில் உயர்வு - தாழ்வை எப்படி நாம் மதிப்பிட முடியும் என்கிற கேள்வி அதற்குள்ளே புதைந்து கிடக்கிறது.

‘‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' - செய்யும் தொழிலால் வேற்றுமை இருந்தாலும், அவர் களின் சிறப்பு அதனால்  பாதிக்கப்படாது என்பதுதான் - ‘‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' என்பது.

ஆனால், இவர்கள் அதற்கு என்ன விளக்கம் சொல் லுகிறார்கள்? ஏன் நாம் சமணம் உரிமை கோருவதை எதிர்க்கவில்லை; பவுத்தம் உரிமை கோருவதை எதிர்க்கவில்லை. இவர்கள் உரிமைக் கோருவதை எதிர்க்கிறோம் என்றால், சமணமும், பவுத்தமும் சமத் துவத்தைப் பேசுகிறது; அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளும் சமத்துவத்தைப் பேசுகிறது. அதனால், அவர்களின் சிந்தனைகளில் ஒரு ஒற்றுமை இருப்பதால், உரிமை கோருவதில்கூட தவறில்லை என்று நாம் கருதுகிறோம்.

சனாதனத்தின் அடிப்படையான கோட்பாடு!

ஆனால், சனாதனம் - இதுதான் அவர்களே சொல் லிக் கொள்கிற ஒரு கோட்பாடு.

சனாதனம் என்றால், மாறாதது; நிலையானது என்று அவர்கள் அதற்கு விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் வகுத்த வரையறை என்பது மாறாது; அது அப்படியே தொடரும்.

என்ன வரையறை?

பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு உண்டு என்கிற கோட்பாடுதான் சனாதனத்தின் அடிப்படை யான கோட்பாடு.

ஒரு மனிதன் அக்கிரகாரத்தில் பிறந்தால் உயர்ந்த வன் என்றும், மற்ற குடியிருப்புகளில் பிறக்கிறவன் அத்தனை பேரும் தாழ்ந்தவன் என்றும் சொல்லுகிற ஒரு கோட்பாடு.

நான்கு வருணம் என்று வருணத்தை வரை யறுக்கின்ற கோட்பாடு. அந்த வருணங்களில் ஒரே ஒரு வருணம்தான் உயர்ந்த வருணம் - மேல் வருணம் - மேல்ஜாதி, மேல் மக்கள் என்பது. மற்ற வருணங்கள் அனைத்தும் கீழ்ஜாதி - கீழானவர்கள் என்று சொல்கிற கோட்பாடு. அதுதான் சனாதனம்.

பிராமணர்கள் என்கிற பார்ப்பனர்களைவிட, அவ் வளவு பேரும் கீழ்ஜாதிதான். அதைத்தான் சதுர்வர்ணம் சொல்லுகிறது.

இந்துத்துவம் என்ற

சனாதனத்தை எதிர்த்து...

அதில் என்ன ஒரு நுட்பமான கோட்பாட்டை வைத்திருக்கிறார்கள் என்றால், ஒருவன் ஓரிடத்தில் கீழ்ஜாதியாக இருப்பான்; அவனே இன்னொருவனுக்கு மேல்ஜாதியாகவும் இருப்பான். அது ஒரு சமரசம்.

அதனால்தான், இந்துத்துவம் என்ற இந்த சனாதனத்தை எதிர்த்து, பிராமணர் அல்லாதவர்கள் போராட முடியாத நிலை ஏற்பட்டது என்று, புரட்சி யாளர் அம்பேத்கர் அவர்களும்,  தந்தை பெரியார் அவர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.

ஏன் இதை எதிர்த்து, ஜாதி இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் போராடவில்லை என்றால், ஜாதி இந்துவாக தன்னை உணருகிற ஒவ்வொருவனும்,  பிராமணனுக்கு கீழ்ஜாதியாக இருந்தாலும், தனக்குக் கீழே இருக்கிற வர்ணம் எதுவோ, அதற்கு இவன் மேல்ஜாதி என்கிற ஒரு உளவியலையே  அது தருகிறது.

எல்லா கீழ்ஜாதிக்காரனுக்கும் ஒரு இடத்திலே ஒரு மேல்ஜாதி உணர்வையும் சேர்த்துத் தருகிற கோட் பாடாக, சனாதனக் கோட்பாடு இருக்கிறது; இப்படி ஒரு சமரசம் அதிலே செய்யப்பட்டு இருக்கிறது என்று நம்முடைய மாமனிதர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நுட்பமாக நமக்குச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஆகவேதான், இந்த மண்ணில் இந்தக் கோட் பாட்டைப் புரிந்துகொள்வதிலிருந்துதான் அடிமைத் தளையிலிருந்து மக்களை மீட்க முடியும் என்று சிந்தித்த அந்த அறிவு இருக்கிறதே, அதுதான் பகுத்தறிவு.

பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்வதற்காக இயக்கம் காணவில்லை.

கடவுள் சிலைகளை அவமதிப்பதற்காக அவர் இயக்கம் காணவில்லை.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு சொல்லப்படுகிறது. இது இத்தனை ஆண்டுகளாக, இத்தனை லட்சம் ஆண்டுகளாக எப்படிப் பாதுகாக் கப்பட்டு வருகிறது என்பதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கின்றபொழுது,

ஜாதியை வருணம் காப்பாற்றுகிறது,

வருணத்தை மதம் காப்பாற்றுகிறது,

மதத்தை அவர்கள் கோட்பாடு காப்பாற்றுகிறது,

மதத்தை அவர்களின் கடவுள் காப்பாற்றுகிறது.

ஆகவே, இந்த வருணம் கடவுள் என்கிற அந்த அடையாளங்களை எதிர்த்துப் பேசவேண்டும் என்கிற துணிச்சலைப் பெற்றதால், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை அவரால் உருவாக்க முடிந்தது.

மதம் இல்லாமலும், கடவுள் நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும்!

இன்றைக்கு உலகமே ஒரு புள்ளிவிவரம் சொல்லு கிறது.

மதம் இல்லாமல்,

கடவுள் நம்பிக்கை இல்லாமல்,

வழிபாடு இல்லாமல் வாழக்கூடிய மக்கள் தொகை என்பது, உலக அளவில், நம்பிக்கை உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட, பெருகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

கடவுளை நம்புகிறவர்களின் எண்ணிக்கையைவிட,

மதத்தில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை யைவிட,

மதம் இல்லாமலும், கடவுள் நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை, அந்த சதவிகிதம் பெருகி வருகிறது என்று புள்ளிவிவரம் சொல்வதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே, இதற்கெல்லாம் வித்திட்ட பெருமை, இந்தக் காலகட்டத்தில், சம காலத்தில், அந்தக் காலத்தில் சாக்ரட்டீஸ் போன்றவர்கள் எல்லாம் இருந்திருக்கலாம்; ஆனால்,  நாம் வாழும் இந்தக் காலத்தில், அல்லது இந்த நூற்றாண்டில், இதை மாபெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுத்த பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

கடவுள் மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

சடங்கு மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

சம்பிரதாய மறுப்புதான் பகுத்தறிவு என்று இல்லை

பிறப்பின் அடிப்படையில் இருக்கிற உயர்வு - தாழ்வு என்பது தவறு; அதற்குக் காரணமான கோட்பாட்டை எதிர்த்துப் போராடுவது என்பதுதான் பகுத்தறிவு.

ஒரு கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம்

தந்தை பெரியாரின் போராட்டமே, ஒரு கோட்பாட் டிற்கு எதிரான யுத்தம். சனாதனத்திற்கு எதிரான யுத்தம். சனாதனத்தைப் புரிந்துகொள்வதுதான் பகுத்தறிவு.

பிறப்பின் அடிப்படையிலே, உயர்வு - தாழ்வு உண்டு என்பதை காலங்காலமாக கட்டிக் காப்பாற்றி, அதை சிதைய விடாமல் முன்னெடுத்துச் செல்வதற்கு எது காரணமாக இருக்கிறது என்று பார்க்கிற பொழுதுதான், மனிதர்களை சுயமாக சிந்திக்கவிடாமல், சடங்குகளுக்குள்ளும், சம்பிரதாயங்களுக்குள்ளும், கடவுள் வழிபாடுகளுக்குள்ளும் மக்களைக் கொண்டு போய் தள்ளிவிட்டார்கள். அந்த மாயையிலிருந்து மக்களால் மீள முடியாத நிலையில், அவர்களால் அந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. அதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ள முடிய வில்லை.

ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள் சனா தனத்தை எதிர்த்துப் பேசினார். மக்களை நேரிடையாக மயக்கி வைத்திருக்கிற மாயை எதுவோ, அதன்மீது குறி வைத்து தனது விமர்சனத் தாக்குதல்களைத் தொடுத்தார்.

மொத்தத்தில் அவர் ஏதோ கடவுள் மறுப்பாளர், கடவுள் சிலை அவமதிப்பாளர் என்பதைப் போன்ற ஒரு தொடர்பை, தோற்றத்தை இங்கே உருவாக்கி விட்டார்கள்.

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் சனாதனம் ஒரு காரணம்!

மக்கள் தொகையில் பாதியாக இருக்கின்ற பெண்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

பெண்களுக்கு கல்வியில்லை,

பெண்களுக்கு சொத்துரிமை இல்லை,

பெண்களுக்கு அதிகாரமில்லை

பெண்களின் பேச்சுக்கு மதிப்பில்லை

கருத்துச் சொல்ல சுதந்திரமில்லை

இப்படி பெண்கள் மக்கள் தொகையில் சரி பாதியாக இருப்பவர்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் இந்த சனாதனம் ஒரு காரணம்.

இந்த சிந்தனைதான் பகுத்தறிவு சிந்தனை. ஜாதியின் பெயரால் உழைக்கின்ற மக்களை ஒன்றுபடவிடாமல், சிதறடிக்கப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு தொடர்ந்து மைனாரிட்டியாக இருக்கக்கூடியவர்கள் ஆள முடியும் என்கிற நிலையை வெற்றிகரமாக இங்கே நிகழ்த்திக் கொண்டிருப்பதற்குக் காரணம் சனாதனம்தான். இந்த நுட்பம்தான் பகுத்தறிவு.

ஒட்டுமொத்தத் தொகையில் 3 சதவிகிதமாக இருக்கிற பார்ப்பனர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடிகிறது.

உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளில் அவர்கள் மட்டுமே ஆதிக்கம் செய்ய முடிகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையாக அவர்கள் மட்டுமே இருக்க முடிகிறது.

இதை ஏன்? என்றுகூட கேள்வி எழுப்புகிற ஒரு துணிச்சல், அந்த விழிப்புணர்வு மற்றவர்களுக்கு இல் லாமல் போனதற்கு எது காரணம் என்று சிந்தித்தவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

சமூகநீதி சிந்தனைதான்

பகுத்தறிவுச் சிந்தனை

ஆகவே, இவர்கள் எந்த மவுடீகத்தில் மூழ்கிக்  கிடக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்த நிலையில்தான், சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறார். இவர் களுக்கு விழிப்புணர்வு  உருவாகவேண்டுமானால், அதிகார வலிமையைப் பெறவேண்டும். அதிகார வலிமையைப் பெறவேண்டுமானால், இவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அதிகாரப் பகிர் விலும் இட ஒதுக்கீடு வேண்டும். இந்த இட ஒதுக்கீடு என்பதுதான் சமூகநீதி. சமூகநீதி சிந்தனைதான் பகுத்தறிவுச் சிந்தனை.

எவ்வளவு ஆழமாக, நுட்பமாக அரசியலைப் புரிந்து தந்தை பெரியார் அவர்கள் இந்தக் களத்தை அமைத்திருக்கிறார்; ஒரு மாபெரும் மக்கள் இயக் கத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதனால்தான், புராணங்களையும், சாஸ்திரங்களையும் அவர் கையில் எடுத்தார். எல்லா வற்றிற்கும் அடிப்படையாக இருக்கிற மனுதர்மத்தை அவர் குறி வைத்து விமர்சனம் செய்தார்.

இல்லாத ஒன்று  என்று யாரும் அதை சொல்ல முடியாது. எங்கே இருக்கிறது மனுதர்மம் என்று  யாரும் கேட்க முடியாது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பே நம்பிக்கையின் அடிப் படையில்தான் நிலத்தை வழங்குகிறோம் என்று அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆதாரங்களின் அடிப் படையில் அல்ல.

இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது

மனுதர்ம சாஸ்திரம்தான்

ஆகவே, நாட்டை ஆளுவது இந்திய அரசமைப்புச் சட்டமா? அல்லது மனுதர்ம சாஸ்திரமா? என்றால், இந்தத் தீர்ப்பை வைத்தே சொல்ல முடியும், இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பது மனுதர்ம சாஸ்திரம்தான். அரசமைப்புச் சட்டமில்லை.

மெத்தப் படித்தவர்களே, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே, தீர்ப்பை எழுதக்கூடியவர்களே, நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பை எழுதக்கூடிய நிலை இருக்கிறது என்று சொன்னால், இந்த இடத்தில் நம்மை விமர்சனப் பார்வையோடு பார்க்க வைப்பது தான் பெரியாரின் பார்வை - அதுதான் பகுத்தறிவுப் பார்வை - அதுதான் பகுத்தறிவு சிந்தனை. இல்லை யென்றால், நாமும் வாய்மூடித்தான் கிடக்கவேண்டும்.

ஆகவேதான் மனுதர்மத்தை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் வெகுமக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்.

அது வெறும் சாஸ்திரமாக இல்லை,

அது வெறும் கோட்பாடாக இல்லை,

அது ஒரு சமூகத்தை வழிநடத்தக் கூடிய சட்ட மாகவும் இருக்கிறது; தண்டனை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு தண்டனை; ஒரே குற்றம், வெவ்வேறு தண்டனை. ஆக, தண்டனையை வரையறை செய்யக்கூடிய ஒரு நூலாகவும் அது இருக்கிறது என்பதை, முதலில் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளம் கண்டு சொன்ன பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைச் சாரும்.

யோசித்துப் பாருங்கள், நாம் இங்கே இருந்து மெனக் கெட்டு கோவிலுக்குப் போய், அங்கே கடவுளுடைய அருள் கிடைக்கும் என்று நினைக்கிறோம். கடவுளு டைய கருவறைக்குள்ளேயே இருக்கிறவர்கள், எல்லா அத்துமீறல்களையும் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள  ஒரு கோவிலில் தேவநாதன் என்பவர் செய்த அட்டூழியம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். இதை யெல்லாம் கண்டிப்பதற்கு இங்கே யாரும் இல்லை.

அய்யன் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசாதீர்கள் என்று சொன்னால், கோபப்படுகிறார்கள். இதை மட்டும் சொல்லி நான் என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு!

அய்யன் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் தோராய மாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு - கிறித்து பிறப்பதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது நூறு ஆண்டு களுக்கு முன்பு என்று சொல்லுகிறார்கள். அல்லது அதற்குப் பின்னால்கூட இருக்கலாம். எப்படியோ 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்தார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தபொழுது, இந்தியாவில் இருந்த மதங்கள் என்ன? ஆதிசங்கரர் காலமே கி.பி.எட்டாம் நூற்றாண்டு. 1200 ஆண்டு களுக்கு முன்பு. அப்பொழுதே இந்து மதம் என்ற ஒன்று இல்லை.

அப்பொழுது அவர் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, மக்களைச் சந்தித்து,

சைவம்,

வைணவம்,

கானபத்தியம்,

கவுமாரம்,

சவுரம்,

சாக்தம் என்ற ஆறு சமயங்களை - இந்த ஆறு சமயங்களுக்குள் ஒரு ஒருமித்த பண்பாடு இருக்கிறது; எனவே, இதனை ஒன்று சேர்க்கவேண்டும் என்பதற் காக ஆங்காங்கே மடங்களை நிறுவினார் என்று வரலாறு சொல்லுகிறது.

அது 1200 ஆண்டுகளுக்கு முன்பு. அய்யன் திருவள்ளுவர் காலம் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆதிசங்கரருக்கு முன்னால் 800 ஆண்டுகளுக்கு மூத்தவர் அய்யன் திருவள்ளுவர்.

இந்து மதம் என்ற ஒரு மதம்

ஒற்றை வடிவத்தில் இல்லை

1200 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் என்ற ஒரு மதம் ஒற்றை வடிவத்தில் இல்லை. ஒற்றைச் சொல்லாடலில் குறிப்பிடப்படவில்லை.

சைவம் என்பது வேறு சமயம்

வைணவம் என்பது வேறு சமயம்

மகாராட்டிராவை மய்யமாகக் கொண்டு இயங்குகிற விநாயகர் - கானபத்தியம், கணபதி வழிபாடு.

முருகப் பெருமானைத் தலைவராகக் கொண்டு அல்லது  கடவுளாகக் கொண்டு வழிபடக்கூடிய கவுமாரம் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய ஒன்று.

சாக்தம் அல்லது  சக்தி அல்லது அம்மன் வழிபாடு இன்றைக்கும் மேற்கு வங்கம்தான் அதற்குப் பெயர் போன பகுதியாக இருக்கிறது.

இப்பொழுது எங்கே போனது சவுரம்? சவுரம் என்றால், சூரியனை வழிபடக் கூடியவர்கள்.

சாக்தம் என்றால், சக்தியை வழிபடக் கூடியவர்கள்.

கவுமாரம் என்றால், குமரனை, திருமுருகனை வழிபடக் கூடியவர்கள்.

சைவம் - சிவனை

வைணவம் - விஷ்ணுவை

இந்த மதங்கள் எங்கே போயின? சமயங்கள் எங்கே போயின?

இந்த 200 ஆண்டு காலத்தில்தான் இந்து, இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில்தான் இந்தப் புழக்கம் வந்தது.

திருவள்ளுவருக்கு

மதச் சாயம் பூசாதீர்கள்!

அப்பொழுது 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால், வள்ளுவர் இருந்தது உண்மை என்றால், அவர் உங்கள் மதத்தில் ஏதேனும் ஒன்றில் இருந்திருக்க வேண்டும். ஒன்று, சைவத்தில் இருந்திருக்கவேண்டும்; அல்லது வைணவமாக இருக்கவேண்டும்.

ஆனால், தோள்பட்டையில்,  திருநீறு  பூசியிருக் கிறார்கள்; நெற்றியில் நாமம் சாத்தியிருக்கிறார்கள். இரண்டும் இருக்க முடியாது, 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக. ஏதாவது ஒன்றைத்தான் சொல்ல முடியும். ஒன்று சைவத்தைச் சார்ந்தவர் என்று சொல்லுங்கள் அல்லது வைணவத்தை சார்ந்தவர் என்று சொல் லுங்கள். அல்லது முருகப் பெருமானை வழிபடக் கூடியவர் என்று சொல்லுங்கள்.

கிடையாது.

ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் எதிர்த்து, மறுத்துப் பேசியிருக்கிறார். மதச் சாயம் அவருக்குக் கிடையாது. அதனால்தான் நீங்கள் மதச் சாயம் பூசாதீர்கள் என்று சொல்லுகிறோம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

இது கடவுள் வாழ்த்து. ஆதிபகவன் - பகவன் என்கிற பிராமணன்; ஆதி என்கிற  பறைச்சி; இந்த இரண்டு பேருக்கும் இடையில் பிறந்த சமூகம்தான் இந்த சமூகம். இப்படி ஒரு கதை.

அப்பொழுதே கலப்பு மணம் நடைபெற்று இருக் கிறது போலிருக்கிறது, அவர்களுடைய பார்வையில்.

அந்தக் கருத்தில் நமக்கு உடன்பாடில்லை.

ஆதி என்கிற பறைச்சி அல்லது புலைச்சி; பகவான் என்கிற பிராமணன், பார்ப்பனன். இவர்களுக்கிடையில் தோன்றிய உலகம்தான் மானுட உலகம், மனித உலகம்.

இந்த உலகத்திற்கு உள்ள எல்லா மனிதர்களும் இவர்களுக்குப் பிறந்தவர்களாம்.

கிறித்துவ மதத்தில் ஆதாம் - ஏவாள் என்று சொல் கிறார்கள்.

இவர்கள் ஆதி பகவன் என்று சொல்வதாகச் சொல்கிறார்கள்.

மூடிய வாயைத் திறந்ததும் வருகிற முதல் ஒலி ‘அ' - அதனால் அகர முதல எழுத்தெல்லாம்

அந்தத் திருக்குறளை நன்றாக நீங்கள் படித்துப் பாருங்கள்,

அகர முதல எழுத்தெல்லாம்

உலகத்தில் இருக்கிற எந்த சமூகமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், மூடிய வாயைத் திறந்ததும் முதலில் ஒலிக்கின்ற சொல் ‘அ' என்பதுதான். யாரும் ‘இ' என்று இளிக்கமாட்டோம். இதழ்களை விரித்தவுடன் வருகிற ஒலி  ‘அ'. வெள்ளைக்காரனாக இருந்தாலும், கருப்பனாக இருந்தாலும், இந்தியனாக இருந்தாலும், ஆஸ்திரேலியனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மூடிய வாயைத் திறந்ததும் வருகிற முதல் ஒலி ‘அ' - அதனால் அகர முதல எழுத்தெல்லாம். இது உலகத்திற்கே பொருந்தும்.

பிறகு எப்படி ஆதிபகவன் என்று தமிழ்நாட்டிற்குள்  மட்டுமே அவருடைய சிந்தனை சுருங்கும். அது உலகத்திற்கே விரிந்து, உலகளாவிய பார்வை கொண்ட ஒரு மாமனிதருக்கு,  உடனே ஆதிபகவன் என்கிற இந்தியப் பார்வைக்குள் அல்லது தமிழ்நாட்டுப் பார்வைக்குள் எப்படி சுருங்கும்?

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்''  இது உலகளாவிய பார்வை; உள்ளூர்ப் பார்வையல்ல.

ஆதிபகவன் என்பது

ஆதவனைக் குறிக்கின்ற சொல்

ஆகவே, ஆதிபகவன் முதற்கே உலகு என்றால், ஆதிபகவன் என்பது ஒரு சொல்தான்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

ஆதிபகவன் என்பது ஒரு சொல்தான்; ஆதி யும்,பகவன் என்பதும் வேறு வேறு சொல்லல்ல. இரண்டு சொல் அல்ல.  எனவே, இரண்டு பெயராக இருக்க வாய்ப்பில்லை. ஆதிபகவன் என்பது ஒற்றைச் சொல். அப்படியென்றால், ஆதிபகவன் என்பது ஆதவனைக் குறிக்கின்ற சொல்லாகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால், இந்த பூமி என்கிற உலகம், சூரியனி லிருந்து சிதறி வந்த, லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த ஒரு பகுதி, நிலப்பரப்பு. உலகம் பூமியிலி ருந்துதான் தொடங்குகிறது. ஏனென்றால், மனிதனுக்கு உலகம் பூமிதான். பிரபஞ்சத்தை இவன் உலகமாகப் பார்க்க மாட்டான். மனிதன் வாழக்கூடிய ஒரே கோள் பூமி. எனவே, மனிதன் பார்வையில் ஒரே உலகம் பூமி.

ஆக, உலகம் எங்கிருந்து தொடங்குகிறது என்றால், ஆதிபகவனிலிருந்து தொடங்குகிறது என்று அறிவியல் பார்வையோடு அய்யன் திருவள்ளுவன் ஆதவனைத்தான் குறிப்பிட்டு இருக்க முடியுமே தவிர, ஆதி என்கிற பறைச்சியையும், பகவன் என்கிற பிரா மணனையும் குறித்திருக்க வாய்ப்பே இல்லை.

கடவுள் வாழ்த்து  என்பதேகூட, இவர்கள் இடையில் சொருகியதாகத்தான் இருக்க முடியும்

எனவே, கடவுள் வாழ்த்து  என்பதேகூட, இவர்கள் இடையில் சொருகியதாகத்தான் இருக்க முடியும்; அந்தத் தலைப்போ, அதிகாரங்களோ அவர்தான் எழுதினார் என்பதற்கு நமக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

வ.உ.சி. போன்றவர்களே, ஏராளமான இடைச்செரு கல்கள் இருப்பதாகப்  பதிவு செய்திருக்கிறார்கள் என்று இப்பொழுது நாம் வாட்ஸ் அப்பில் பார்க்கிறோம்.

எனவே, பகுத்தறிவு என்பது குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும் விமர்சிப்பதற்கானது அல்ல. உலகம் முழுவதும்  உள்ள மக்கள் தலைநிமிர்ந்து தன்மானத் தோடு வாழ்வதற்கான சிந்தனை.

பகுத்தறிவு என்பது தமிழர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல.

உலகம் முழுவதும் அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தக் கூடியது.

பகுத்தறிவு என்பது குறிப்பிட்ட இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பதற்கானது அல்ல.

உலகில் எங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் இருக் கிறதோ, அறிவியலுக்கு முரணாக இருக்கின்றனவோ, அவ்வளவையும் எதிர்க்கிற, அதிலிருந்து மாறுபட்டு, அறிவியல் சார்ந்து சிந்திக்கிற ஒரு சிந்தனைதான் பகுத்தறிவு சிந்தனை.

உலகம் தழுவிய பார்வையுள்ள

ஒரு மாமனிதர் தந்தை பெரியார்!

எனவே, அய்யன் திருவள்ளுவர் உலகம் தழுவிய பார்வையுள்ள ஒரு மாமனிதர் என்பதுபோல, அய்யா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், உலகம் தழுவிய பார்வையுள்ள ஒரு மாமனிதர் என்பதைச் சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரையாற்றி னார்.

- விடுதலை நாளேடு, 21.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக