புதன், 18 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா - 3

- ஒரு தொகுப்பு -

16.12.2019 அன்றைய தொடர்ச்சி...

பிலடெல்பியா நகரம் (City of Philadelphia)

சில்வர் ஸ்பிரிங் நகரிலிருந்து 135 மைல்கள் (217 கிலோ மீட்டர்) பயணம் செய்து சரியாக 12.30 மணிக்கு பிலடெல்பியா நகருக்கு வந்துசேர்ந்தோம். அமெரிக்க நாட்டிலேயே பெரிதும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நகரம் பிலடெல்பியா, அமெரிக்கா, பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் விடுதலைக்கான வித்து ஊன்றப்பட்ட இடம் பிலடெல்பியா நகரமாகும். அமெ ரிக்க விடுதலைப் போரில் பங்கேற்ற ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்ஸன், பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகிய தலைவர்-தளபதிகள் வாழ்ந்த நகரம் பிலடெல்பியா ஆகும். அமெரிக்க விடுதலைப் போருக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் பிலடெல்பியா. அமெ ரிக்கா விடுதலை பெற்ற பிறகு அந்நாளில் (1776-ஆம் ஆண்டில்) 13 மாநிலங்களை மட்டும் உள்ளடக்கிய அமெரிக்க அய்க்கிய நாட்டின் தலைநகராக விளங்கிய நகரம் பிலடெல்பியா. அதற்குப் பின்னர்தான் வாஷிங்டன் D.C. உருவாக்கப்பட்டு தலைநகர் மாற்றப்பட்டது.

விடுதலை மணி தேசியப் பூங்கா

(National Park of Liberty Bell)

பிலடெல்பியா நகரின் கட்டடங்களின் அமைப்பே 400 ஆண்டு கால வரலாற்றைச் சொல்வது போல விளங்கிக் கொண்டிருந்தன. விடுதலை மணி (Liberty Bell)  தேசியப் பூங்காவிற்கு சென்றோம். லிபர்டி பெல் என்று அழைக்கப்படும் வரலாற்று புகழ்பெற்ற மணி, விடுதலை உணர்வின் வெளிப்பாடாக, ஓர் அடையாள மாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க விடு தலைப் போருக்கு முன்னர், பிலடெல்பியா சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன் ஒலிக்கப்படும் மணியாக இருந்த வழக்கம் பின்னர் நகரின் முக்கிய பிரச்சினைகள், அபாய அறிவிப்புகள் பற்றிய எச்சரிக்கை விடுப்பதற்கான பயன்பாட்டில் இருந்தது. இந்த வழக்கத்தை ஒட்டி முக்கிய நிகழ்வுக்காக அதற்கென பிரத்யேகமாக 4 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மணி இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டது. வந்து சேர்ந்தபொழுது அந்த மணியில் ஏற்பட்ட கீறல் காரணமாக உரிய அளவில் ஒலி எழுப்பிட அந்த மணி பயன்படவில்லை. அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தின் பொழுது இந்த விடுதலை மணி ஒலித்ததாகவும் தெரியவில்லை. இருப்பினும் இந்த லிபர்டி பெல்லை ஒரு நினைவுச் சின்னமாகக் கருதி, விடுதலை உணர்வின் மேன்மையை பறைசாற்றிடும் வகையில் ஒரு தேசியப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த விடுதலை மணியில் கிறிஸ்துவ மத போதனைப் புத்தகத்தில் உள்ள வரிகளான, ‘Proclaim Liberty throughout all the Land unto all the Inhabitants there of’ (அனைத்து நிலப்பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் விடுதலை பிரகடனப்படுத்தப்படுவதாகுக) எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த லிபர்டி பெல் சின்னத்தைப் பற்றி அதனைப் பார்வையிட்ட பல தலைவர்களும் அதன் பின்னணியில் உள்ள விடுதலை வேட்கையினைப் பற்றிப் பாராட்டி கருத்து தெரிவித்த நிகழ்வுகள் படங்களாக அந்தப் பூங்காவில் இடம் பெற்றுள்ளன.

பிரான்சு நாட்டு தலைநகர் பாரீசுக்கு சென்றவர்கள் ஈபிள் கோபுரத்தைப் (Eiffel Tower) பார்க்காமல் எப்படி வர இயலாதோ அந்தளவிற்கு பிலடெல்பியாவிற்கு வருபவர்கள் லிபர்டி பெல் நினைவுச் சின்னத்தை பார்க்காமல் திரும்ப முடியாது; அப்படிப்பட்ட முக்கிய வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவுப் பூங்காவாக அது திகழ்கிறது.

அந்த நினைவுச் சின்னப் பூங்காவிற்கு அருகிலேயே, அமெரிக்க விடுதலைப் போரை முன்னின்று நடத்திய வரும், விடுதலை பெற்ற அமெரிக்க அய்க்கிய நாடு களின் முதல் குடியரசுத் தலைவராக விளங்கியவருமான ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்ந்த இல்லம், சிதிலமடைந்து தரை மட்டமான நிலையிலும், எஞ்சிய கட்டுமானங் களைப் பாதுகாத்து நினைவுச் சின்னமாக்கியுள்ளனர். அதைப் பார்க்கின்ற இளைய தலைமுறையினருக்கு சின்னம் பற்றிய சிறப்பைவிட விடுதலைப் போரை நினைவு படுத்திப் பார்க்கின்ற ஓர் உணர்வினை அந்த இடம் ஊட்டிவருகிறது.

இந்த இடங்களை எல்லாம் சுற்றிக் காட்டிட ஓர் உள்ளூர் வழிகாட்டிப் பெண்மணி வந்திருந்தார். ஒவ்வொரு இடத்தைப் பற்றிய செய்திகளையும் மிகுந்த ஆர்வத்துடன் விளக்கிக் கொண்டு வந்தார். ஆங்கிலத் தில் அவர் விளக்கமளித்தாலும் அமெரிக்கர்களின் ஆங்கிலப் பேச்சின் முழுமையைப் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. கேட்டுக் கேட்டு பழக்கப்படவேண்டும் என உணர்ந்து கொண்டோம். அந்த வழிகாட்டிப் பெண்மணி எங்களுடன் வருகை தந்த பின்னர் விடைபெறும் பொழுது (கட்டணம் பெற்றுக் கொண்ட வழிகாட்டியாக இருந்த போதிலும்) எங்களுடன் நிரந்தரமாக வந்த வழிகாட்டியிடம் ஒரு நிகழ்வினைக் கூறி ஆதங்கப்பட்டாராம். அதாவது அந்தப் பெண்மணி ஒவ்வொரு இடத்தைப் பற்றிய செய்திகளை விளக்கிக் கொண்டு இருந்த பொழுது அதைக் கவனிக்காமல் சுற்றுலா வந்த எங்களுள் சிலர் சத்தமாக உரையாடிக் கொண்டு இருந்ததைத்தான் அந்தப் பெண்மணி ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியி ருந்தார். அதாவது, அவரது எதிர்பார்ப்பு இதுதான்: விளக்கமளிப்பதை கவனிக்காமல் இருந்தால் கூடப் பரவாயில்லை; அதற்கு இடையூறு அளிக்கும் வகையில் உரையாடிக் கொண்டிருந்ததை தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக அவர் நினைத்து வெளிப்படுத்தியி ருக்கிறார். அவரின் ஆதங்கத்தின் வெளிப்பாட்டில் நில விய ஒருவித சுயமரியாதை உணர்வு நியாயமாகத்தான் பட்டது; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்,  பிலடெல்பியா நகரைச் சார்ந்த அந்த வழிகாட்டிப் பெண்மணி.

நண்பகல் பசிநேரம் நெருங்கியதால் அங்கிருந்து நகரின் மய்யப்பகுதியில் அமைந்திருந்த ஓர் இந்திய உணவகத்திற்கு சென்று உணவருந்தினோம். பொதுவாக இந்திய உணவகமாக இருந்தாலும் அங்குள்ள அமெரிக் கர்களின் சுவையறிந்து அதற்கு ஏற்றாற்போல இந்திய உணவு வகைகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. உப்பு, காரம் மிகவும் குறைந்து சப்பென்று சாப்பிடுவது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

நண்பகல் உணவருந்திய பின்பு பிலடெல்பியா புறநகர்ப் பகுதியில் இருந்த கிரௌன் பிளாசா (Crown Plaza) விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் பயணம் - நயாகரா அருவிக்கு நீண்ட தொலைவு தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தால் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டோம். இரவு உணவினையும் அதே இந்திய உணவகத்திற்குச் சென்று  சாப்பிட்டு விட்டு விடுதிக்குத் திரும்பினோம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய இடம், புதிய சூழல் என பயண அனுபவம் சற்று களைப்பு கலந்த களிப்பாகவே இருந்தது. விடுதி அறைகள் மிகவும் தூய்மையாகவும், நல்ல தண்ணீர், மின்சார வசதி முழுவதும் தங்கு தடையின்றி இருந்தது. குடிநீரும், குளிக்கும் நீரும் ஒன்றே. அறையிலேயே எந்நேரத்திலும் காபி அல்லது தேநீரை நாமே தயாரித்துக் கொள்ள உதவியாக உரிய பொருட்கள், உபகரணங்கள் இருந்தன. தொடர்ந்து வந்த பயணக் களைப்பினைப் போக்கும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் தங்கிய விடுதி ஏற்பாடுகள், வசதிகள் விடுதியில் வழங்கப்பட்ட காலை நேர சிற்றுண்டி விருந்து அனைத்தும் சிறப்பாக இருந்தன.

பிலடெல்பியா விடுதியின் வரவேற்புத் தளத்தில் நேர்கொண்ட ஓர் அனுபவம் நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள உதவியது. விடுதிக்கு வந்ததும், அறைச்சாவி களை பெற்று, உடன் வந்த தோழர்களுக்கு வழங்கிவிட்டு, ஒரு விளக்கம் வேண்டி வரவேற்பு முனையில், மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்த  பெண் விடுதி ஊழியர் ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அவர் மிகவும் பொறுமையாக, தான் மற்றொருவருக்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருப்பதாகவும், அவரை அடுத்து மற்றொருவர் எங்களுக்கு முன்னரே வந்து வரிசையில் காத்திருப்பதால். அவருக்கு உரிய பதிலைத் தந்துவிட்டுத்தான் எங்களது கேள்விக்கு அவர் பதிலளிக்க முடியும் என எந்தவித சங்கடமுமின்றி தெளிவாகக் கூறினார். முன்னர் வந்தவர் முன்னரே செல்ல வேண்டும்; பின்னர் வந்தவர் காத்திருந்து தனது முறை வரும்பொழுதுதான் வேண்டிய விளக்கத்தைப் பெறமுடியும் என்பது சற்று உடனடிச் சங்கடமாக இருந்த போதிலும், நினைத்துப் பார்த்தால் சரியாகவே தோன் றியது. நாகரிக வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாகவே அந்த நிகழ்வு அளித்த அனுபவம் உணர்த்தியது.

சுற்றுலா சென்று பல்வேறு இடங்களைப் பார்ப்ப தோடு, மனிதநேய நாகரிக வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஓர் அலாதியான இன்பம் இருந்தது. அனைவரும் விரைவாகத் தூங்கி அதிகாலையில் எழுந்து (காலை 6.30 மணிக்கே காலை விருந்து சிற்றுண்டி தயாராகி விடும்) தயாராகி அடுத்த ஊருக்கு பயணத்தை தொடர்ந்திடும் நினைப்புடன் அவரவர்களது அறைக்குச் சென்றோம்.

நயாகரா அருவி  (Niagara Falls)

காலைச் சிற்றுண்டியை பிலடெல்பியா விடுதி யிலேயே முடித்துவிட்டு சரியாக 9.30 மணிக்கு நயாகரா நகரத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். பிலடெல்பியா இருப்பது பெனிசில்வேனியா மாநிலம். நயாகரா இருப்பது நியூயார்க் மாநிலத்தில்; பயண நேரம் 669 கி.மீ.; சாலை வழிப் பயணநேரம் 7.15 மணி; நெடுநேரப் பயணம்; இடையில் நண்பகல் உணவிற்கு இறங்கியதைத் தவிர வேறெங்கும் தங்காமல் தொடர்ந்து பயணம் செய்தோம். நயாகரா - அமெரிக்காவின் வடக்கு எல்லையில் உள்ள நகரம்; கனடா நாட்டின் தென்பகுதி யினை ஒட்டியுள்ள அமெரிக்க நகரம். இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள எல்லைப் பாதுகாப்பிற்கு எந்தவித ராணுவமும் நிறுத்தப்படவில்லை. நாடுவிட்டு நாடு செல்லும் பயணிகள் ஏதோஉள்ளூர் பயணம் போன்று பாஸ்போர்ட், விசா சம்பிரதாய பரிசோதனையுடன் வந்து செல்லுகின்றனர். ஆனால் அமெரிக்காவின் தென் எல்லையில் உள்ள நாடு மெக் ஸிகோ. அங்கிருந்து அமெரிக்காவிற்குள் வருவதற்கோ கெடுபிடிகள் அதிகம். அமெரிக்கா, கனடா போன்ற நாடு களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுவும், வாழ்வாதார, அடிப்படை வசதிகளைப் பொறுத்த அளவில் அதிக வேறுபாடுகளும் கிடையாது. ஆனால் ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்ஸிகோ நாட்டு மக்க ளிடையே வாழ்வாதாரக் கட்டமைப்பும், வேலைவாய்ப்பு வசதியும் மிகவும் குறைவு. சட்டத்தை மீறி மெக்ஸிகோ நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள் மெக்ஸிகோவினர் நுழைந்து விடுகிறார்கள். இருப்பினும் அப்படிப்பட்ட வர்களை உடல் உழைப்பு வேலைகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளும் வழக்கம் அமெரிக்கநாட்டின் தென் பகுதியில் உள்ள கலிபோர்னியா, கொலரோடா, டெக் ஸாஸ் ஆகிய மாநிலங்களில் நிலவி வருகிறது.

நயாகரா நகரைச் சென்றடையும் பொழுது இரவுப் பொழுதாகி விட்டது. விடுதியில் இறங்கி அறையில் பெட்டி, பொருட்களை வைத்து விட்டு, அருகிலேயே இரவு உணவையும் முடித்துவிட்டு கால்நடையாகவே நயாகரா அருவியை பார்க்கச் சென்றோம். இரவு நேரத் தில் வண்ணவிளக்குகள் அந்த நதியின் இருபுறங்களிலும் உள்ள இரண்டு நகரங்கள் மின்னிடும் சூழலில் நயாகரா அருவியை பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.

நயாகரா அருவி என்பது ஒன்றல்ல; மூன்று அருவிகளின் சங்கமம் ஆகும். குதிரை லாட அருவி (Horseshoe Falls) கனடா நாட்டின் ஆண்டாரியா மாநிலப்பகுதியில் உள்ளது. மீதமுள்ள அமெரிக்க அருவி  (American Falls), பிரைடல் வொய்ல் அருவி (Bridal Veil Falls)  ஆகிய இரண்டும் அமெரிக்க நாட்டு நிலப்பரப்பில் உள்ளவை. இவை மூன்றும் சங்கமிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் உயரம் 165 அடிகளாகும்.

பலவித வண்ணவிளக்குகளின் வெளிச்சத்தில் விழும் நீர் அந்தந்த வண்ணங்களில் ஒளிர்ந்தது. அமெரிக்கப் பகுதியில் உள்ள கரையிலிருந்து நீர்வீழ்ச்சிப் பக்கம் நெருங்கிச் சென்ற வேளையில் நீர்த்திவலைகள் காற்றோடு காற்றாகக் கலந்து வந்து உடம்பில் ஒட்டிக் கொண்டன. ஆற அமர ஓர் இடத்தில் இருந்து அமை தியாக அருவி கொட்டுவதைப் பார்க்கவே மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இரவு நேரத்தில் நயாகரா அருவிக் காட்சிகளை பார்த்து ரசித்த நினைவுகளுடன் மீண்டும் அடுத்த நாள் பகல்நேரத்தில் அருவியைப் பார்த்திடும் நினைப்புடன் விடுதிக்கு திரும்பி வந்தோம்.

அடுத்தநாள் (25, நவம்பர்) காலைச் சிற்றுணவை விடுதியிலேயே முடித்துக் கொண்டு அறையைக் காலி செய்து பொருட்களை சுற்றுலாப் பேருந்தில் இருத்தி விட்டு மறுபடியும் நயாகரா அருவியைப் பார்க்கச் சென்றோம். பகல்நேரத்தில் பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது. நயாகரா அருவியின் ஒட்டு மொத்த பேரழகையும் கண்டு மகிழ்ந்தோம். அருவியை, நதியின் கரையிலிருந்து பார்ப்பது ஒருவகை அனுபவம்.  நீர் விழும் இடத்திற்கு அருகில் சென்று பார்ப்பது, அந்தச் சூழலில் மகிழ்வது சற்று மாறுபட்ட அனுபவம். அருவியை அருகில் சென்று பார்ப்பதற்கான பயண ஏற்பாட்டை நயாகரா நகர சுற்றுலா நிர்வாகமே செய்து வருகிறது. அதற்கு  ‘Maid of the Mist’ (நீர்த்திவலை மங்கை) என அந்தப் பயணத்திற்கு - அது தொடர்பான சுற்றுலா ஏற்பாடுகளுக்குப் பெயரிட்டுள்ளனர்.  எங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனமே ஒட்டு மொத்தமாக நதியில் மின்சார குறுங்கப்பலில் (Motorised Miniship) பயணிக்க பயணச் சீட்டுகளை வாங்கிவிட்டனர். கப்பலில் ஏறிப் பயணிக்க பெருங் கூட்டம் காத்திருந்தது. கப்பலில் ஏறும் முன்பே  ‘Maid of the Mist’ நிர்வாகம் பயணிகள் அனைவருக்கும் உடம்பில் அருவி நீர் படாமல் இருக்க நெகிழி உடையினை (Polythene dress) வழங்கினர். உடையினை அணிந்த எங்களுக்கு ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்தது ஒருவித மகிழ் வினைத் தந்தது. பயணிகள் இரண்டு அடுக்குகளில் அமர்ந்து, நின்றிருக்க, கப்பலானது நதியின் போக்கை எதிர்த்து நகர்ந்தது.  அருவியை நெருங்க நெருங்க ஒருவித பேரழகு மனநிலை நெஞ்சம் முழுவதும் கவ்விக் கொண்டது. அருவியையை நெருங்க நெருக்க நீர்த்திவலைகள் மிகுந்த காற்றுச் சூழல் அதிகரித்துக் கொண்டே வந்தது. அபாயக்கோடு வரை கப்பல் பயணிக்கும் பொழுது சுற்றுலா சென்ற அனைவரும் வயது, உடல்நிலை எதையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்த சூழல் இயற்கையின் இயல்புப்போக்கு எவ்வளவு இனிமை யானது என்பதை புரிய வைத்தது. ஒளிப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்வுகளில் பார்த்த நயாகரா நீர் வீழ்ச்சியினை நேரில் நெருங்கி தொட்டுப் பார்த்துவிட்ட தீரச் செயலுடன் எங்களது கப்பல் பயணம் மீண்டும் கரையினை வந்தடைந்தது. தங்களிடம் உள்ள செல்பேசி காமிராக்கள் மூலம் அந்தச் சூழல் முழுவதையும் ஒருவரை மற்றவர் ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம், சுயப்படபிடிப்பும் (Selfie) செய்து கொண்டோம். கரை திரும்பிய பின்னர் கரைப்பக்கம் அருவியை நெருங்கிப் பார்த்திடும் பார்வையாளருக்கான இடங்களில், வயது முதிர்ந்தவர்களும் படியேறிப் பார்த்து ரசித்து இளைஞர் களாகிவிட்ட சூழலையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்க முடிந்தது.

அமெரிக்காவில் எந்தவொரு சுற்றுலா இடம்-போற்றுதலுக்குரிய நினைவிடம் போனாலும் அதன் நினைவாகப் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள ஒரு வித வணிக மயச் சூழலை பரவலாகப் பார்க்க முடிகிறது. நயாகரா அருவியைப் பார்த்ததன் நினைவாக, ‘Maid of the Mist’  இலட்சினையுடன் பொறிக்கப்பட்ட உடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்தன. தோழர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிக் கொண்டோம்.

நயாகரா அருவி தந்த உள மகிழ்ச்சியுடன், குளிர்ந்த மனநிலையுடன் அந்த நெஞ்சம் நிறைந்த இனிய சூழலைவிட்டு அகல முடியாமலும், தொடரவேண்டிய பயணம் அதிகம், தூரமும் அதிகம் என்ற கட்டாயத்தால் அங்கிருந்து நகர்ந்து வந்து பேருந்தில் ஏறினோம்; பாஸ்டன் நகர் நோக்கிய பயணம் தொடர்ந்தது. முந்தையநாள் பயண தூரத்தை விட அந்தநாள் பயணம் அதிகம்; 476 மைல் (766 கிலோ மீட்டர்). நண்பகல் உணவை இடையில் முடித்துக் கொண்டு தொடர்ந்து பயணம் செய்து இரவு 9.00 மணி அளவில் பாஸ்டன் நகரின் புறப்பகுதியில் உள்ள விடுதிக்கு  (Laquinta Andover)  வந்து சேர்ந்தோம்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு 18 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக