- ஒரு தொகுப்பு -
வீ. குமரேசன்
அமெரிக்க அய்க்கிய நாட்டின் மேரிலாந்து மாநிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை - மனிதநேய பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை-விமான நிலையம் அண்ணா பன்னாட்டு முனையத்திலிருந்து சுயமரியாதைக் கொள்கையில் பற்றுடையோர் 47 பேர், 2019 செப்டம்பர் 19-ஆம் தேதி இரவு 9.30 மணிக்குக் கிளம்பினோம். 4.30 மணி நேரப் பயணத்திற்குப் பின் நாங்கள் சென்ற எமிரேட்ஸ் (Emirates) விமான நிறுவனத்தின் தலைமையிடமான துபாய் நகர விமான நிலையம் வந்து சேர்ந்தோம். சென்னையிலிருந்து புறப்படும் பொழுதே பயணச் சான்றுகளை (Boarding Pass) சென்னை - துபாய், துபாய்-வாஷிங்டன் ஆகிய இரு விமானப் பயணங்களுக்கும் சேர்த்துப் பெற்றுக் கொண்டதால், துபாய் விமான நிலையத்தில் வெறும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு மட்டுமே ஆளானோம். பல்வேறு கட்ட பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு வாஷிங்டன் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்து நீண்ட நேரப் (12 மணி நேரம்) பயணத்திற்கு அணியமானோம். 20-ஆம் தேதி காலை 8.40 மணிக்கு வாஷிங்டன் சென்று சேருவதாகப் பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தால் ஆசிய, அய்ரோப்பிய நாடு களைக் கடந்து அட்லாண்டிக் கடல் மீது பெரிதும் இரவு நேரத்தில் பயணப்பட வேண்டியிருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் இரவு முடிந்து விடியல் தொடங்கி விட்டது. பூமி சுழற்சியின் போக்கில் ஒருநாள் என்பது இந்தி யாவிற்கு முதலில் தொடங்கி விடும். மேற்கு நோக்கிச் செல்ல செல்ல அந்தநாள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்தியாவில் பகல் நேரம் அமெரிக்காவில் இரவு நேரமாகும். அமெரிக்கா விடிய விடிய இந்தி யாவில் இரவு தொடங்கும்.
ஏறக்குறைய 12 மணிநேர கால வேறுபாடு இரு நாடுகளுக்குமி டையே உண்டு. காலவேறுபாடு நினைப்பில்தான், காலையில் வாஷிங்டன் சென்று சேருவோம் என்பதால் பயணநேரத்தின் பெரும்பகுதி இரவு நேரமாகத்தான் இருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் துபாயில் விமானம், ஏறிய சில மணிநேரங்களில் விடியத் தொடங்கி விட்டது. அமெரிக்காவை நோக்கி விடியலை முன் நகர்த்தியபடி செல்வதைப் போலவே அமைந்தது எங்கள் பயணம்! செப்டம்பர் 20-ஆம் நாள் காலை சரியாக 8.40 மணிக்கு வாஷிங்டன் ஜே.எப். கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கினோம்.
சென்னையிலிருந்து இந்தியாவை விட்டுக் கிளம்பும் பொழுது கடவுச்சீட்டு (Passport), விசா (Visa) பரிசோ தனை நடந்ததைப் போலவே, அமெரிக்க மண்ணில் நுழைந்திடும் பொழுதும் குடிவரவுச் சோதனையுடன் சில கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அமெரிக்காவிற்கு எதற்காக வந்திருக்கிறோம் எங்கு தங்கவிருக்கிறோம்? எவ்வளவு நாள் தங்கி இருப்போம்? எப்பொழுது திரும்பிச் செல்வோம்? என பல கேள்வி களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது. வந்த நோக்கம் ஒன்றாக இருப்பதையும், ஒரே இடத்தில் தங்க விருப்பதையும் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்ததும், எங்கள் அனைவரையும் ஒன்றாக சேர்ந்து வர அறிவுறுத்தினார்கள். அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி வருவதற்காகக் காத்திருந்தோம். அப்போது விமான நிலையத்தின், ஒரு பகுதியில் எங்களது தோற்றம், உடல் நிறம், உடை ஆகியவற்றைப் பார்த்து இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிந்து கொண்ட ஒரு பெண் பரிசோதனை அதிகாரி (அவரும் தோற்றத்தில் இந்திய வம்சாவளியினைச் சார்ந்தவர் போல இருந்தார்) எங்களருகில் வந்து இந்தியில் பேசி உதவி செய்வது போல சில விவரங்கள் கேட்டார். அதற்கு நான் எங்களுக்கு இந்தி தெரியாது. தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ளோம் என பதிலளித்தேன். ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்த அந்த அமெரிக்க - இந்திய வம்சாவளி பெண் அதிகாரி எந்த விளக்கமும் கேட்காமல் மெல்ல நகர்ந்து சென்று விட்டார். இந்தி யாவைச் சேர்ந்தவர்கள் என்றாலே இந்தி மொழி தெரியும் என்ற தவறான கருத்தினை வெளிநாடுகளில் பரப்பியதில் இந்தியாவை 72 ஆண்டுகளாக ஆண்டு வந்தவர்களுக்கும், வருபவர்களுக்கும் பெரும்பங்கு உள்ளது என்ற உண்மை அப்பட்டமாக விளங்கியது. பரிசோதனையினை அனைவரும் நல்ல படியாக முடித்துக் கொண்டு எங்களது பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்திற்கு வந்தோம். பெட்டிகளை வைத்து எடுத்துச் செல்லும் தள்ளுவண்டிக்கு 5 அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் ரூபாய் 350) கட்டணம் செலுத்தித் தான் பயன்படுத்த முடிந்தது. (இந்தியாவில் விமான நிலையத்தில் பெட்டி எடுத்துச் செல்லும் வண்டிக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஒரு வேளை அரசு வசமுள்ள இந்திய விமான நிலையங்கள் தனியார்வசம் சென்றுவிட்டால் கட்டணம் செலுத்தி வண்டிகளைப் பயன்படுத்தும் நிலைமை உருவாகலாம்). விமான நிலைய வருகை முனையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் எங்களுடன் வந்த தமிழர் தலைவர் அவர் களையும், எங்களையும் மகிழ்ச்சியுடனும், எழுச்சியு டனும் வரவேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும், வரவேற்க வந்தோருடன் உரையாடி விட்டு, ஒளிப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், உள்ளூர் (வாஷிங்டன் நகர்) சுற்றுலா செல்லவிருந்த எங்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர். பாதுகாப்பாக விடுதிக்கு மாலையில் வந்து சேர்ந்து விடுங்கள் என தமிழர் தலைவர் எங்களிடம் கூறிவிட்டு, மேரிலாந்தில் உள்ள விடுதிக்கு முன்னரே கிளம்பிச் சென்றார். வாஷிங்டன் நகரைச் சுற்றிப் பார்க்க சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க- பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர். சோம. இளங்கோவன் அவர்களின் வாழ்விணையர் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள் எங்களுடன் வந்தார். சுற்றுலா இடங்களைப் பற்றிய விளக்கத்தை வழங்கிட ஓர் அமெரிக்கரும் (வழிகாட்டி) உடன் வந்தார். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் எங்களுக்குச் சாப்பிட சில நொறுக்கு தீனிப் பொட்டலங்கள், குடிநீர் புட்டிகள் வழங்கப்பட்டன. கூடவே உதட்டுக்குச் சாயம் இடும் குப்பியைப் போல ஒன்றை ஒவ்வொருவருக்கும் வழங் கினார்கள். திறந்து பார்த்த பொழுது வெள்ளை நிறத்தில் வாசலின் போன்ற களிம்பு இருந்தது. எங்களது இரண்டு உதடுகளிலும் நன்றாகத் தடவிக் கொள்ளச் சொன் னார்கள். பனிப் பொழிவுக்கு முன்னர் குளிர் போன்ற தட்ப வெப்ப நிலை இருந்தால், அந்த களிம்பைத் தடவ வில்லையென்றால் ஓரிருநாள்களில் உதடு வெடித்து புண்ணாகும் வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை கலந்த உடல் நலக் குறிப்பும் வழங்கப்பட்டது. இவை அனைத் தையும் கேட்டுக் கொண்டே, அமெரிக்க நாட்டுச் சூழலையும், அந்நாட்டுக்கே உரிய உயர்ந்த கட்டட எழுச்சியினையும் பார்த்துக் கொண்டே சென்ற சற்று நேரத்தில் தாமஸ் ஜெபர்ஸன் நினைவகம் வந்து சேர்ந்தோம்.
தாமஸ் ஜெபர்சன் நினைவகம்
(Thomas Jefferson Memorial)
அமெரிக்க நாட்டின் விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றியவரும், அமெரிக்க நாட்டு விடுதலைப் பிரகடனத்தின் (Declaration of Independence 1776) பிதாமகனும், அமெரிக்க அய்க்கிய நாடுகளின் மூன்றாம் குடியரசுத் தலைவருமாகிய (1801-1809) தாமஸ் ஜெபர்சன் அவர்களின் நினைவுகளைப் போற்றுகின்ற வகையில் வாஷிங்டனில் எழுப்பப்பட்ட நினைவகம் அது. 1939-43 ஆண்டுகளில் அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட நினைவகம். அமெரிக்க நாட்டு ஒவ்வொரு குடியரசுத் தலைவருக்கும் நினைவகம் ஒன்று அமெரிக்க அரசின் செலவில் உருவாக்கப்படும் வகையில் அங்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பொழுது 13 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. மூன்றாவது குடியரசுத் தலைவரான தாமஸ் ஜெபர்சன் காலத்தில் அது 26 மாநிலங்களாக உருவெடுத்தது. அதனை நினைவுபடுத்தும் வகையில் நினைவகம் 26 தூண்களுடன் நிர்மாணிக்கப்பட்டு, அதற்குள் தாமஸ் ஜெபர்சனின் பெரிய உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. போட்டோமாக் (Potomac River) கரையில் அமைந்துள்ள இந்த நினைவகத்தில் தாமஸ் ஜெபர்சனின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் விடுதலை வேட்கையின் எதிரொலியால் எழுந்த அவரது முழக்கங்கள், வழிகாட்டு வாசகங்கள் என அவரைப் பற்றிய ஒரு முழுமையான வரலாற்று ஆவணப் பதிவாகவே இருக்கிறது. விடுதலை வேட்கையுடன், முறையாகக் கல்வி பயின்று சான்றோராக விளங்கிய தாமஸ் ஜெபர்சனின் நினைவகத்தினைப் பார்க்கும் பொழுது தொடக்கக் கல்வியைக் கூட முழுமையாக கற்று முடிக்காத சுய சிந்தனையாளர் தந்தை பெரியாரை நினைத்துப் பார்த்து ஒப்பிடத் தோன்றியது. தாமஸ் ஜெபர்சன் பகுத்தறிவைத் தேடி (In Pursuit of Reason) எனும் நூலை எழுதியவர். அமெரிக்க நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பொழுது அதில் இடம் பெறுகின்ற வகையில் ‘All are created equal’ (அனைவரும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறோம்) என கடவுள் அனைவரையும் உருவாக்கியதாக தாமஸ் ஜெபர்சன் குறிப்பிட்டாராம். தாமஸ் ஜெபர்சன் பகுத்தறிவைத் தேடிய வேளையில், அனைவரையும் உருவாக்கியதாகக் கூறப்படும் கடவுளை, 'கற்பிக்கப்பட்ட ஒன்று', என தந்தை பெரியார் கூறியதையும், அத்துடன் 'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என துணிச்சலாக பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் கூறியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பகுத்தறிவின் சிகரம் தந்தை பெரியார் என்று சொல்வதன் மாண்பு, ஆழமான பொருள் மிக்கதாக விளங்கியது - பெருமை கொள்ளச் செய்தது. தாமஸ் ஜெபர்சன் நினைவகத்தின் உள்ளேயும், வெளியேயும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். நினைவக விற்பனை நிலையத்தில் புத்தகங்கள், நினை வுப் பொருட்களை (அமெரிக்க மண்ணில் இறங்கியதும்) முதன் முதல் டாலர் கொடுத்து பெற்றுக் கொண்டு அடுத்த சுற்றுலா இடத்தினைப் பார்க்கக் கிளம்பினோம்.
ஆபிரகாம் லிங்கன் நினைவகம்
(Lincoln Memorial)
அமெரிக்க அய்க்கிய நாடுகளின் 16-ஆம் குடியரசுத் தலைவராக இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிப் பிரகடனம் (Emancipation Proclamation) என்பதை
1863-ஆம் ஆண்டில் உருவாக்கி, நடைமுறைப்படுத்தி கருப்பின மக்களையும் அமெரிக்காவின் பூர்வ குடிமக்களையும் அடிமைகளாக நடத்தி வந்த வழக்கத்திற்கு (சட்ட பூர்வமான) முற்றுப்புள்ளி வைத்த மானுடப் பற்றாளர் ஆபிரகாம் லிங்கன் (1809-1865). செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து பெரும் இன்னலுக்கிடையில் படித்து வழக்குரைஞராகி, குடியரசுத் தலைவர் நிலைக்கு உயர்ந்து, மனிதநேயம் காத்ததற்காகவே கொடியவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவாக எழுப்பப்பட்ட அந்த நினைவகத்தில் ஆபிரகாம் லிங்கன் அமர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட மாபெரும் சிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நினைவகத்தின் நுழைவு வாயிலில் நின்று பார்த்தால் எதிர்ப் பக்கம் தூரத்தில் அமெரிக்க விடுதலைப் போரில் மாண்ட மாவீரர்களின் பெருமையைப் போற்றும் வகையில் அவர்தம் நினைவாக பெரிய தூண் ஒன்று நிறுவப்பட்டி ருக்கிறது. மனித உரிமை வேண்டிப் போராட்டம் நடத்துவோர் கூடிக் கூட்டம் நடத்திட, போராட இந்த லிங்கன் நினைவகம் ஒரு புகலிடமாகவே இருந்து வருகிறது. கருப்பு மக்களின் உரிமைக்கு, அவர்களைப் பேதப்படுத்தி ஒதுக்கிடும் போக்கினைக் கண்டித்துப் போராடிய மார்டின் லூதர் கிங் ஜூனியர் 1963-ஆம் ஆண்டில் இதே லிங்கன் நினைவகத்தி லிருந்துதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க எனக்கு ஒரு கனவு உண்டு (I have a Dream) எனும் எழுச்சி உரை ஆற்றி, கருப்பின மக்களின் பால் அமெரிக்கர்களை (வெள்ளையர்) மட்டுமின்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். புத்தகங்களில், படங்களில் பார்த்துத் தெரிந்து கொண்ட லிங்கன் நினைவகத்தை நேரில் பார்க்கையில் வியப் பாகவும், பெருமையாகவும் இருந்தது. சுற்றுலா சென்றி ருந்த அனைவரும், தனியாகவும், சேர்ந்தும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். நண்பகல் உணவுவேளை நெருங்கியதால் வாஷிங்டன் (D.C.) யில் உள்ள ஓர் இந்திய உணவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். உணவு அருந்திய பின்பு, இயல்பாக ஏற்படும் களைப் புடன், முழுமையான தூக்கம் இல்லாமல் 16 மணிநேரம் பயணம் செய்ததால் சே(£)ர்ந்த களைப்பினையும் பொருட்படுத்தாது, அடுத்த இடத்தினை பார்க்கப் புறப்பட்டோம். பார்க்கப் பயணப்பட்ட இடம், உலக அரசியல் அரங்கில் முக்கியமாகப் பேசப்படும்-உலகப் பொருளாதாரத்தையே பாதிக்க வைக்கக்கூடிய முடிவு களை மேற்கொள்ளுமிடமான அமெரிக்க அய்க்கிய நாடுகளின் குடியரசுத் தலைவரது அலுவலகத் தலைமை யிடமும் - தங்குமிடமுமான வெள்ளை மாளிகை.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 14.12.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக