ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அமெரிக்க மண்ணில் சுயமரியாதைக்காரர்கள் சென்ற சுற்றுலா -4

- ஒரு தொகுப்பு -

18.12.2019 அன்றைய தொடர்ச்சி...

உயர்கல்வி பல்கலைக் கழகங்களின் உறைவிடம் பாஸ்டன்:

அமெரிக்க அய்க்கிய நாடுகளின் அங்கமாக உள்ள மாசசூசெட்ஸ் (Massachusetts) தொடக்ககாலம் முதல் இன்றுவரை மிக முக்கிய மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகர் பாஸ்டன் (Boston). அமெரிக்க விடுதலைப் போர் வரலாற்றைப் படிக்கும் பொழுது பாஸ்டன் நகரைப் பற்றிய குறிப்பு தவறாமல் வரும்; அட்லாண்டிக் கடற் கரையில் அமைந்துள்ள துறைமுக நகரம். அந்நாளில் அமெரிக்கக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பிரிட்டனிலிருந்து மிகப்பலர் முதன்முதலாகக் குடி யேறிய இடம் பாஸ்டன் நகரமாகும். பிரிட்டிஷ் மக்களின் குடியிருப்புப் பகுதி பாஸ்டன் நகராகும்; பிரிட்டன் மக்களின் நேரடி வாரிசு என்றும், அமெரிக்காவில் உள்ள பிற இனமக் களுடன் கலப்பில்லாதவர்கள் என பாஸ்டன் நகர அமெ ரிக்கர்கள் தங்களை உயர்வாகக் கருதிக் கொண்டிருக்கும் போக்கு இன்றும் நிலவுகிறது.

நகரைச் சுற்றிப் பார்க்க எங்களை அழைத்துச் சென்ற அமெரிக்க வழிகாட்டி உலகநாடுகளைப் பற்றிய முக்கிய சமூக, அரசியல் பொருளாதாரச் செய்திகளை அறிந்தவ ராக இருந்தார். பாஸ்டன்நகர அமெரிக்கர்களின் மேலா திக்க மனப்பான்மையினை கூறவந்த அந்த வழிகாட்டி, 'உங்கள் நாட்டு (இந்தியா) பார்ப்பனர்களைப் போல உள்ளார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் Boston Brahmins (பாஸ்டன் பார்ப்பனர்கள்) எனக் குறிப்பிடலாம் என ஒப்பீட்டுடன் விளக்கமளித்தார். 17-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க விடுதலைப் போருக்கு வித்திட்ட நகரம் பாஸ்டன்.  பிரிட்டனின் காலனி ஆதிக் கத்தை விரும்பாத அமெரிக்கர்கள், பிரிட்டனிலிருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படும் வணிகப் பொருள் களுக்கு வரி கொடுக்க மாட்டோம்,  பிரிட்டனின் பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என எதிர்ப்புக் காட்டினர், அச்சமயம் பிரிட்டனிலிருந்து கப்பல் மூலமாக ஏரளமான அளவில் தேயிலைச் சரக்குப் பெட்டிகள் பாஸ்டன் துறைமுகத்தை வந்தடைந்தன. பிரிட்டனின் ஆதிக்க அரசியலை எதிர்க்கும் விதமாக போரா அமெரிக்கர்கள் செவ்விந்தியர் போல வேடமணிந்து பாஸ்டன் துறைமுகத்தில், கப்பல் மூலம் வந்த சரக்குகளை இறக்கவந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு தேயிலைச் சரக்குப் பெட்டிகள் இருந்த கப்பலில் ஏறினார்கள். ஒட்டு மொத்தமாக அத்துணை தேயிலைச் சரக்குகளையும் கப்பலிலிருந்து தூக்கி கடலில்  வீசி எறிந்து வீணாக்கி தங்களது எதிர்ப் பினைக் காட்டினார்கள். தேயிலை கடல்நீரில் கலந்து, கரைந்து போனதால் அந்த நிகழ்வு 'பாஸ்டன் தேநீர் விருந்து' (Boston Tea Party)  என பிரபலமாகப் பேசப் பட்டது. அமெரிக்க விடுதலைப் போரை முடுக்கிவிட்ட முக்கிய நிகழ்வாக பாஸ்டன் தேநீர் விருந்து அமைந்துவிட்டது.

காலைச் சிற்றுண்டிக்குப் பின்,

பாஸ்டன் புறநகர் பகுதியில் இருந்த விடுதியைக் காலி செய்து விட்டு பாஸ்டன் நகர் முழுமையும் சுற்றிப் பார்க்க கிளம்பிய நாங்கள் முதன் முதலாக 'பாஸ்டன் தேநீர் விருந்து' நடைபெற்ற நிகழ்விடம் வந்தோம். அந்த வரலாற்று நிகழ்வினை நினைவுபடுத்தும் வகையில் கப்பலின் வடிவத்தை செயற்கையாக உருவாக்கி

17-ஆம் நூற்றாண்டுச் சூழலை நினைவிடமாக வைத் துள்ளனர். வரலாற்றை நினைவுபடுத்திப் பார்ப்பதில் அமெரிக்கர்களின் அணுகுமுறை பாராட்டப்படும் சிறப்புக்குரியது. ஒரு சில நிகழ்வுகளை உள்ளடக்கிய வரலாற்றுக்கே நினைவிடம் வைக்கும் அமெரிக்க வழக்கத்தைப் பார்க்கும்பொழுது, சுயமரியாதை இயக்க வரலாற்றில் திருப்பு முனையான எத்தனையோ நிகழ்வுகளுக்கு நமது மண்ணில் நினைவிடம் அமைத்து நமது எழுச்சி வரலாற்றை அடுத்தடுத்து வருகின்ற புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியானது.

பாஸ்டன் நகரை அடுத்துள்ள பகுதிகள் உயர்கல்வி நிலையங்கள் - உலகப் புகழ்வாய்ந்த கல்வி நிலை யங்களைக் கொண்டுள்ளது.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்

(Massachusetts Institute of  Technology-MIT)

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் MITயும் ஒன்று. தமிழகத்தில்  MIT என்றதும் சென்னை-குரோம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல் கலைக் கழகத்தின் அங்கமாக (Constituent)   உள்ள  (Madras Institute of Technology-MIT) நினைவுக்கு வந்தது. மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் படித்த சென்னை  உயர்கல்வி பொறியியல் நிறுவனம். ஆனால் அமெரிக்காவில் ஏராளமான பல்கலைக்கழகங்கள், அனைத்து உயர்கல்வித் துறை களான கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்வியை ஒரே வளாகத்தில் அளிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றன. பாஸ்டனில் உள்ள MIT பல்கலைக் கழகத்தில் பயின்றோர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள் பலருக்கு அவர்களது ஆய்வுக்கு உலகப் புகழ்பெற்ற நோபல்பரிசு பல துறைகளிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2019) பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, அவரது துணைவியார் எஸ்தர் டுஃப்ளே மற்றும் மைக்கேல் கிரேமர் (ஹார்வர்டு பல் கலைக்கழகம்) ஆகியோர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியர்களாக உள்ளனர். நாங்கள் MIT-அய் பார்வையிட்ட பொழுது சுற்றுலா வழிகாட்டி, கடந்த காலங்களில் பலர் - இந்த உயர் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என பொதுவாகத்தான் குறிப்பிட்டார். சுற்றுலா நிறைவு பெற்ற ஒரு வார காலத்திலேயே MIT-அய் சார்ந்த இரண்டு பொருளாதாரப் பேராசிரியர்கள் நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது MIT-யின் பெருமையைப் பறை சாற்றுவதாக இருக்கிறது. அடுத்து சற்று தூரத்தில் இருந்த தொன்மையான புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றிற்குச் சென்றோம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம்  (Harvard University)

1636-ஆம் ஆண்டு கிறிஸ்தவப் பாதிரியார் ஜான் ஹார்வர்டு என்பவரால் நிறுவப்பட்ட இந்த உயர்கல்வி நிலையம் அமெரிக்காவிலேயே மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்ததாகும். பிறநாடுகளில் உள்ள உயர்கல்வி பயின்றோருக்கும், பழம்பெருமையினால் மிகவும் பிரபலமான ஒரு கல்வி நிறுவனம் இது. வளா கத்தைச் சுற்றிப் பார்த்து வருகையில் - எழுந்து நிற்கும் கட்டடங்களே பழமையை கலைநயத்துடன் வெளிப் படுத்தின. பெரிய-மிகப்பெரிய நூலகம் உள்ளது. இங்கு பணியாற்றிய, பணியாற்றி வரும் பல ஆய்வுப் பேராசிரி யர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள செய்தி யோடு சுற்றுலா வழிகாட்டி கூடுதல் செய்தி ஒன்றையும் கூறினார். ஹார்வர்டு பல்கலைக் கழகம் தன்னிடம் பயின்ற மாணவர்களுள் - ஜே.எம்.கென்னடி, பாரக் ஒபாமா உட்பட எட்டுப் பேரை அமெரிக்க நாட்டின் குடி யரசுத் தலைவராக உயர்ந்திட வழி ஏற்படுத்தியுள்ளது.

நமது நாட்டில் சமூகநீதி வழங்குவதற்கு, வழி முறையாக அமைந்துள்ள 'இட ஒதுக்கீடு' (Reservation) நடைமுறை போலவே கல்வியில் ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் ஆகிய மாணவர்கள் பயில 'உடன்பாட்டு செயல்முறை' (Affirmative Action) நடைமுறையில் உள்ளது. பெரும் பாலான உயர்கல்வி நிலையங்களும், வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களும் தனியார் வசம் இருந்த போதிலும் உடன்பாட்டு செயல்முறை கடைப்பிடித்தலால் அந்த நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட அனைவரையும் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் சில நிமிடங்களில் பார்த்து விடமுடியாது. ஓரளவிற்குப் பார்த்துவிட்டு பல்கலைக்கழக நிறுவனர் ஜான் ஹார்வர்டுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்தோம். பல்கலைக் கழக வரலாற்றைச் சுருக்கமாக சுற்றுலா வழிகாட்டி கூறிமுடித்தார்.

ஜான் ஹார்வர்டு சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டு அதன் மீது கருப்பு வண்ணம் பூசப்பட்டு அமர்ந்து இருக்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சிலையைப் பார்த்த சுற்றுலா வந்த சுயமரி யாதைத் தோழர்களில் ஒருவர் சரியானபடி ஒரு விளக்கத்தினை வழிகாட்டியிடம் கேட்டார்.

வீ. குமரேசன்

(தொடரும்)

- விடுதலை நாளேடு 21 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக