திங்கள், 9 டிசம்பர், 2019

விருதுநகர் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் சூளுரை

குலக்கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான காமராசர் பிறந்த ஊர் இது

மீண்டும் குலதர்மம் தலைதூக்குகிறது - முறியடிப்போம்! முறியடிப்போம்!!

விருதுநகர் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தமிழர் தலைவர் சூளுரை

விருதுநகர், நவ.30  இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டம் ஒழிக்கப்படக் காரணமாக இருந்தவர் களுள் ஒருவரான கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊர் இந்த விருதுநகர். மீண்டும் இப்பொழுது குலக்கல்வி புதிய வடிவத்தில் தலைதூக்குகிறது - அதனை முறியடிப்போம் என்று சூளுரைத்தார் பகுத்தறிவாளர் கழகப் புரவலரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாடு

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு நடைபெறக் கூடிய பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா என்ற இந்த சிறப்பான மாநாடு, நம்முடைய விருதுநகர் மண்ணிலே நடைபெறுகிறது. விருதுநகரைப் பொறுத்தவரையில் பல மாநாடுகள் தொடர்ந்து, சுயமரியாதை மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாநாட்டினுடைய தனிச் சிறப்பாக, பகுத்தறிவாளர் களுடைய கூட்டமைப்பாக, நாத்திகர்களுடைய கூட்டமைப்பாக இருக்கக்கூடிய அமைப்பினுடைய தென்மாநிலங்களுடைய தலைவர் அருமை பெருமைக்குரிய டாக்டர் நரேந்திர நாயக் அவர்களே,

அதுபோல, கேரள யுக்திவாதிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், பகுத்தறிவாளர் அமைப்பைச் சேர்ந்த வரும், நம்மோடு எப்போதும் இருக்கக்கூடியவரும் நம்முடைய அருமை நண்பருமான தோழர் பேராசிரியர் சுகுமாறன் அவர்களே,

அதுபோல, நார்வேயிலிருந்து வந்திருக்கக்கூடிய சீரிய பகுத்தறிவாளர், மனிதாபிமானி கிறிஸ்டினா அவர்களே,

மற்றும் கழகத்தின் துணைத் தலைவர் உள்பட, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக்கூடிய அருமைப் பெரியவர்களே, நண்பர்களே, தாய்மார் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய உரை என்பது சுருக்கமாக இருக்கும். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விரி வாக உரையாற்றுவேன்.

பேரணி இல்லாத காரணத்தால், காலை நிகழ்ச்சிகள்  நீள்கிறது.  மாலை பொதுக்கூட்ட நிகழ்ச்சியைக்கூட  முன்கூட்டியே தொடங்கிவிடலாம்;  அதன் காரணமாக 9 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்துவிடலாம். வெளியூர் தோழர்கள் அவரவர் ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாகவும் இருக்கும். ஆகவே தோழர்கள் ஒத்துழைக்கவேண்டும்.

ஊர்ப் பொதுமக்களுக்காகத்தான் பொதுக்கூட்டம் மாலையில் நடைபெறவிருக்கிறது. தீர்மான விளக் கங்களும் அந்தப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இருக்கும்.

தோழர் நல்லதம்பி அவர்கள்

தனித்து விடப்படவில்லை

இங்கே நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கழகத் துணைப் பொதுச்செயலாளர் உள்பட, மாநில பகுத் தறிவாளர் கழகத் தலைவர் அழகிரிசாமி, பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் அவர்கள், பகுத்தறிவு ஆசிரியரணியைச் சார்ந்த தோழர்கள் அனைவருடைய சிறப்பான  ஒத்துழைப்பு, மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் திருப்பதி, ஆதவன், அமைப்புச் செயலாளர் தோழர் செல்வம் அவர்களும், இன்னும் வரிசையாக அவர்களோடு இணைந்த நம்முடைய தோழர்களும், மாணவர் கழக, இளைஞரணி, மகளிரணி ஆகிய தோழர்களும் இணைந்து - தோழர் நல்லதம்பி அவர்கள் தனித்து விடப்படவில்லை, நல்லதம்பி அவர்கள் சிறப்பாக இங்கே பகுத்தறிவாளர் கழகத்தினுடைய அந்தச் சுடரை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம்,

நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற வெங்கடாசலபதி

அதுபோலவே, மறைந்தும் மறையாமல் நம்மு டைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற வெங்கடா சலபதி அவர்களுடைய அருமைப் புதல்வன், நம்மோடு என்றைக்கும் இருக்கிறார்; வெங்கடாசலபதி அவர்களுடைய  நூற்றாண்டு ஜனவரி மாதத்தில் வருகிறது என்று சொன்னார்கள், அந்த நூற்றாண்டு விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தென்மாவட்டங்களில் ஏராளமான மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன என்று இங்கே சொன் னார்கள். குறிப்பாக, சுயமரியாதை மாநாடு, செங்கல் பட்டுக்கு அடுத்தபடியாக ஈரோடு, அடுத்து விருதுநகர்.

சர் ஆர்.கே.சண்முகம்

விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் யார் என்று சொன்னால், சர் ஆர்.கே.சண்முகம் அவர்கள். சுய மரியாதை இயக்கத்திற்குத் தலைவராக இருந்தவர்.

எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், எனக்கு 11 வயது நடைபெற்ற காலகட்டத்தில், கடலூர், திருப்பாதிரிபுலியூரில் என்னுடைய ஆசிரியர் திரா விடமணி அவர்கள் முன்னின்று நடத்திய, தென் னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு. ஏனென்றால், அப்பொழுது திராவிடர் கழகம் என்ற பெயர் வரவில்லை. நீதிக்கட்சிதான்.  நாங்கள் மாணவப் பருவத்திலிருந்து அந்தப் பயிற்சி பெற்றவர்கள். அப்படி வந்த காலகட்டத்தில், திருப்பாதிரிபுலியூரில்  நடைபெற்ற அந்த மாநாட்டில், மாலை ஊர்வலத்தில், தந்தை பெரியார்மீது செருப்பொன்று வீசப்பட்டது; இரண்டாவது செருப்பை தேடிப் பிடித்தார் பெரியார் அவர்கள்.

பெரியாரின் உற்ற தள நாயகர்  வி.வி.ராமசாமி

செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும் என்று கவிதை எழுதக் கூடிய அளவிற்கு, எதிர்ப்பு வந்த இடத்தில், கடலூரில் இன்றைக்கும் சிலை இருக்கக்கூடிய காட்சியைப் பார்க்கிறோம். அப் படிப்பட்ட அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார் என்று சொன்னால், எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது; 76 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி - இந்த ஊரைச் சார்ந்த, தந்தை பெரியாருக்கு உற்ற தள நாயகராக கடைசி வரையில் இருந்த வி.வி.ராமசாமி அவர்களாவார்கள்.

நிறைய பேருக்கு, ஈ.வி.ராமசாமியா? வி.வி.ராம சாமியா? என்ற சந்தேகம் இருக்கும். வி.வி.ஆர். என்றால், உள்ளூரில் நன்றாகத் தெரியும்.  விருதுநகர் காரர்களுக்கு வி.வி.ராமசாமி நாடார் என்று சொல் வார்கள். எல்லோரும் செங்கல்பட்டு மாநாட்டில், ஜாதிப் பட்டத்தை எடுத்துவிட்டார்கள்.

வி.வி.ராமசாமி அவர்கள், ‘தமிழ்த்தென்றல்' என்ற ஒரு மாதப் பத்திரிகையை நடத்தினார், தமிழ் இன உணர்வோடு. இன்றைய இளைய தலைமுறையின ருக்கு இந்தத் தகவல் தெரியாது. வி.வி.ஆர். அவர்கள், கடைசிவரை பெரியாருடைய தளபதி. காமராசர் காங்கிரசில் இருந்த காலத்தில், நீதிக்கட்சிக்குப் பெரிய தூண்கள் இங்கே இருந்தார்கள். அந்தத் தூண்களில் ஒருவர் வி.வி.ராமசாமி அவர்கள்.

அப்படிப்பட்ட வி.வி.ஆர். அவர்கள்தான், கடலூ ரில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைவர். நான் முதன்முதலில், மேஜை மீது ஏறி நின்று பேசிய மாநாட்டினை இந்த ஊரைச் சார்ந்தவர்தான் தலைமை தாங்கி நடத்தினார். இந்த வி.வி.ஆருக்கு எவ்வளவு உணர்ச்சி என்று சொன்னால், 1971 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது; அண்ணா அவர்கள் மறைந்து, கலைஞர் அவர்கள் முதலமைச்சராகி இரண்டாண்டு ஆகிறது; இன்னும் அவருடைய ஆட்சி ஓராண்டு இருக்கிறது;  இந்திரா காந்தி நாடாளுமன்றத் தேர்தலை அறிவிக்கிறார்கள்.

‘‘தந்தை பெரியார் எங்கே இருக்கிறார்?''  முதலமைச்சர் கலைஞர்!

கலைஞருக்கு ஒரு கருத்து தோன்றியது; பொதுத் தேர்தல் நடைபெறுகிறது - அதுகூடவே சட்டமன்றத் தேர்தலையும் நடத்திவிட்டால், வசதியாக இருக்குமே. ஓராண்டில் அதற்குத் தனி தேர்தல் தேவையில்லையே என்று நினைத்தார். ஆனால், அப்படி எடுக்கப்படுகின்ற முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவாகவோ அல்லது தவறான முடிவாகவோ இருக்கக்கூடாது. சரியான முடிவாக இருக்கவேண்டும் என்று நினைத்த நேரத் தில், என்னை அழைத்தார், அதனை இப்பொழுது சொல்வதால் ரகசியம் ஒன்றுமில்லை. ‘‘தந்தை பெரியார் எங்கே இருக்கிறார்?'' என்று முதலமைச்சர் கலைஞர் கேட்டார்.

‘‘பெரியாரை துணை கோடல்'' என்பதுதான் அந்த ஆட்சியினுடைய, தி.மு.க. ஆட்சியினுடைய இலக் கணம்.

சேலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினை பகுத்தறிவாளர் கழகம் நடத்தவிருக்கிறது. அதற்காக அங்கே அய்யா சென்றிருக்கிறார் என்று சொன்னேன்.

அப்படியென்றால், நீங்கள், அய்யா அவர்களிடம் ஒரு கருத்து கேளுங்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலை நடத்தவேண்டும் என்றால், மேலே அனுமதி வாங்கிவிடலாம். இந்திரா காந்தி யோடு கூட்டணி வைத்திருக்கிறோம்.  அப்பொழுது தான் இந்திரா காந்தி அம்மையார் தனியே இயக்கத்தை ஆரம்பித்திருந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் நடத்தலாமா? என்று கேட்டு வாருங்கள் என்றார்.

நான் இதற்காக சேலம் சென்றேன். தொலைப் பேசியில் சொல்லக்கூடாத அளவிற்கு அரசியல் ரீதியாக ரகசியமாக நடந்த செய்தி இது. என்னைப் பார்த்ததும் அய்யா அவர்கள், ‘‘என்னங்க இங்கே வந்திருக்கிறீங்க?'' என்றார்.

நாம்தான் வெற்றி பெறுவோம்!

அய்யா அவர்களிடம், தனியே சென்று அந்தத் தகவலை சொன்னேன்.

நல்ல யோசனை என்று சொல்லுங்கள். இதுதான் சரியான தருணம். இன்னும் ஓராண்டு போனால், ஒருவேளை வித்தியாசமாக இருக்கலாம் ஏனென்றால், தி.மு.க.வை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். தி.மு.க.விற்கு எதிர்ப்பை உண்டாக்குகிறார்கள். தைரியமாக கலைக்கச் சொல்லுங்கள்; நாம்தான் வெற்றி பெறுவோம் என்றார்.

இந்தத் தகவலை முதலமைச்சர் கலைஞரிடம் சொன்னதும், உடனே அமைச்சரவையைக் கூட்டி, ஓராண்டிற்கு முன்பே, ஆட்சியைக் கலைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலை சந்திக்கின்றோம்; நாடாளு மன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் சந்திப்போம் என்று அறிவித்தார்கள்.

தவறை உணர்ந்த காமராசர்!

அந்த நேரத்தில், இராஜகோபாலாச்சாரியாரும், காமராசரும் ஒன்று சேர்ந்தார்கள். வாழ்நாளிலேயே எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இவர்கள். தோல்வியுற்ற பிறகு காமராசர் சொன்னார், ‘‘என் வாழ்நாளில் செய்யக்கூடாத தவறை அரசியல் தவறை நான் செய்தேன் என்றால், இராஜாஜியோடு கூட்டணி சேர்ந்ததுதான்; அதனைப் பெரியார் அவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொன்னார்.

தேர்தலில் உச்சக்கட்டப் பிரச்சாரம் நடைபெற்றது. ஊழலோ ஊழல், தி.மு.க. ஆட்சி இனிமேல் வராது என்று பிரச்சாரம் செய்தார்கள்.

அப்பொழுதுதான் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதில் ராமன் படம் வைக்கப்பட்டு வந்தது. பெரியாருக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக ஜனசங்கத்தினர் அனுமதி வாங்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். இன்றைக்குத்தான் பா.ஜ.க., அன்றைக்கு ஜனசங்கம்தான். முதலமைச் சராக இருந்த கலைஞர், கருப்புக் கொடி காட்டுவதற்கு அனுமதி வழங்கினார். ஏனென்றால், கருப்புக் கொடி காட்டினால், பெரியாருடைய வேகம் இன்னும் அதிக மாகும். உற்சாகமாகப் பேசுவார்; அவர்களை ஏன் தடுக்கவேண்டும்; இடத்தைத் தேர்வு செய்து கொடுங் கள், அந்த இடத்தைவிட்டு அவர்கள் தாண்டக்கூடாது என்று சொல்லச் சொல்லி அனுமதி கொடுத்தார்.

ஊர்வலத்தில், பெரியாரை நோக்கி செருப்பு வீசி னார்கள். ஆனால், அய்யாவின் கார் நகர்ந்துவிட்டதால், அந்த செருப்பு ஊர்வலத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த கடவுளர் படங்கள் வந்த வாகனத்தில் வந்து விழுந்தது, அதை நம்மாள் அந்த செருப்பை எடுத்து, இராமன் படத்தின்மீது அடித்தார்.

‘‘இராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?''

தேர்தல் நேரத்தில் எதிரிகளுக்குப் பிரச்சாரம் செய்வதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தினால், ‘‘இராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?'' என்று ‘துக்ளக்' புத்தகத்தில் அட்டைப் படம் போட்டு வெளியிட்டார்கள்.  அதை காமராசருடைய காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் சேர்ந்து, பெரிய பெரிய போஸ்டர் அடித்து ஓட்டினார்கள். இப்படி மக்களுக்கு மத உணர்ச்சியை  உண்டாக்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தார்கள்.

அந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தி.மு.க. சட்டப்பேரவையில் 137 இடங்கள் பெற்றிருந்தது; அந்தத் தேர்தல் முடிவின்போது 184 இடங்கள் பெற்றது தி.மு.க. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிற்குப் பெரும்பான்மை பெற்றது தி.மு.க.

வி.வி.ஆரின் தொலைப்பேசி அழைப்பு!

எதற்காக இதை நான்  இந்த விருதுநகரில் சொல் கிறேன் என்றால், தி.மு.க. வெற்றி பெறாது என்று திட்டமிட்ட பிரச்சாரங்களை ஊடகங்கள் செய்தன.

திடீரென்று விருதுநகரில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது; ‘‘யார், ஆசிரியர் வீரமணியா பேசுவது?'' என்று ஒரு குரல்.

ஆமாங்க, நான்தான் பேசுகிறேன், நீங்கள் யார் அய்யா? என்று கேட்டேன்.

நான் வி.வி.ஆர். பேசுகிறேன். இங்கே நிறைய அட் டூழியப் பிரச்சாரங்களை செய்கிறார்கள். ஆகையால், விடுதலையில் தினமும் மனுதர்மத்தை எடுத்துப் போடுங்கள். தேர்தல் முடியும்வரை போடுங்கள் என்றார்.

மனுதர்மம் தோற்றது;

மனித தர்மம் வென்றது!

அதன்படியே நாங்கள் போட்டோம்; மனுதர்மம் தோற்றது; மனித தர்மம் வென்றது. அதை சொன்னவர் வி.வி.ஆர்.

பிறகு காமராசர் அவர்களே வருத்தப்பட்டார்; தவறான முடிவு எடுத்தோமே என்று.

இந்த விருதுநகரில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. இன்றைக்குத் திருவள்ளு வருக்கு சாயம் அடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அம்பேத்கரை கரைத்துப் பார்த்தான், நடக்கவில்லை. பெரியார் சிலையை நெருங்கிப் பார்த்தான், நடக்க வில்லை.

இன்றைக்கு வேட்டி கட்டிப் பார்க்கிறார்கள்; நீங்கள் வேட்டி கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி, தமிழ்நாட்டை ஒருபோதும் கட்டி ஆள முடியாது; இந்த மண்ணை காவி மண்ணாக்க முடியாது. ஏனென்றால், இந்த மண் வித்தியாசமானது.

கருப்பினுடைய தத்துவமே என்னவென்றால், கருப்பு வண்ணத்தின்மீது எது விழுந்தாலும், கருப் பாகத்தான் தெரியும். வேறு வண்ணம் வராது.

குறள் மாநாட்டுத் தீர்மானங்கள்!

விருது நகர், குறள் மாநாடு 3.4.1949 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்பொழுது இயக்கம் ஒன்றாக இருந்தது. அதற்குப் பிறகு 6 மாதங்கள் கழித்துதான் இயக்கம் பிரிகிறது.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்,

1. இப்பொழுதுள்ள கல்வித் திட்டத்தில் முதல் உயர்நிலை வகுப்பு (பாரம்) தொடங்கி இளங்கலைஞர் (பி.ஏ..,)  வகுப்பு முடிய திருக்குறள் முழுதும் படித்து முடிக்கும் வகையில் படிப்படியாகப் பாடத் திட்டம் வகுப்பு மாறும், அதற்கென தனி வினாத்தாள் (ஷேக்ஸ்பியர் போல) ஏற்படுத்துமாறும் கல்வித்துறை அதிகாரிகளையும், பல்கலைக் கழகங்களையும் இம்மாநாடு வேண்டுகின்றது.

2. ஆட்சி மன்றங்களில் உறுப்பினராக வரு வோர்க்கும், கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் தலைவராக வருவோர்க்குரிய தகுதிகளில் திருக்குறள் புலமையும் ஒன்றாக வற்புறுத்துமாறு ஆட்சியாளரை வேண்டுகின்றது.

3. திருவள்ளுவர் விழாவுக்கென ஒரு நாளைக் குறிப்பிட்டு, அரசு விடுமுறை நாளாக்கி, அந்நாளை நாடெங்கும் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.

4. திருக்குறள் பற்றிய விழாக்கள், மாநாடுகள் முதலியவற்றின் நிகழ்ச்சிகளை அறிவிக்குமாறும், ஒலிபரப்புமாறும் திருச்சி வானொலி நிலையத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.

குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால்,

எனவேதான் நண்பர்களே, இந்த மண் காமராச ரைப் பெற்றெடுத்த மண். அதேநேரத்தில், காமராசரை ஆதரித்த பிறகு, பெரியார் மிகச் சிறப்பான வகையில் அவருக்கு ஆதரவு கொடுத்தார். பச்சைத் தமிழர் காமராசர்  அவர்கள்  முதலமைச்சராவதற்கே தயங் கினார். பெரியார்தான், ‘‘நாங்கள் எல்லாம் இருக்கி றோம்; நீங்கள் தைரியமாக இருங்கள்'' என்று சொன்ன பிறகு, முதலமைச்சரான காமராசர் அவர்கள், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் பொறியாளர்களாகவோ, மருத்துவர்களாகவோ, வழக்குரைஞர்களாகவோ வந்திருக்க முடியுமா?

இன்றைக்குக் குலக்கல்வி வேறு ரூபத்தில், மறு வடிவத்தில் மாற்று மோகனி அவதாரத்தில் மீண்டும் இப்பொழுது வரக்கூடிய முயற்சி எடுக்கிறது.அதை  முறியடித்தாகவேண்டும். அதைப்பற்றி மாலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் தெளிவாகச் சொல்கிறேன்.

‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்''

இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'' என்ற புத்தகம் இன் றைக்கும் இருக்கிறது சாமியார்கள், நிர்வாண சாமியார்கள், டில்லியில் காமராசர் அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபொழுது, அவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள்.

அதைக் கண்டித்து விடுதலையில் கட்டுரைகள் தொடர்ந்து வந்தன. அந்தத் தலைப்பை அய்யாதான் கொடுத்தார். அந்தப் புத்தகத்தைப்பற்றி  இந்த மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், ஆர்.எஸ்.எஸ். காரர்கள், அம்பேத்கரையும் உரிமை கொண்டாடு கிறார்கள்; காமராசரையும் உரிமை கொண்டாடுகிறார்கள். ஏதோ, காமராசர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந் ததுபோன்று; யார் யாரையெல்லாம் வளைத்துப் போட முடியுமோ, வளைத்துப் போடுகிறார்கள். இதுவரைக்கும், பெரியாரிடம்தான் அவர்களால் நெருங்க முடியவில்லை.

எரிமலையிடம் நெருங்க முடியாது

காரணம் என்னவென்றால், எந்த மலைமீது வேண்டுமானாலும் ஏறலாம்; இமயமலைமீதுகூட ஏறலாம்; ஆனால், எரிமலையிடம் நெருங்க முடியாது.

நெருப்புத் தூய்மையானது; நெருப்புப் பயன்படக் கூடியது; நெருப்பு மாசற்றது.

நெருப்பு, நமக்குப் பயன்படக்கூடியது என்றாலும், அதைத் தூக்கி வைத்து கொஞ்ச முடியாது. நெருப்பு, நெருப்பாகத்தான் இருக்கும்.

ஆகவேதான், தந்தை பெரியார், எல்லோரையும் தூய்மைப்படுத்துகின்ற, சமைக்க வேண்டிய நேரத் தில், சமையலுக்குப் பயன்பட்டு, தீ வைக்க வேண்டிய நேரத்தில் தீ வைத்து, எரிக்க வேண்டியவைகளை எரித்து, அத்தனையும் செய்வதற்கு, பல்வகைப் பயன்பாடுடைய நெருப்புபோல.

தூய்மையும், நெருப்பும் ஒன்றானது. அசுத்தமான நெருப்பு என்று இதுவரையில் இல்லை.

அசுத்தமான நெய் இருக்கலாம்;

அசுத்தமான தண்ணீர் இருக்கலாம்;

அசுத்தமான காற்றுகூட இருக்கலாம்

ஆனால், அசுத்தமான நெருப்பு என்று நீங்கள் இதுவரையில் கேள்விப்பட்டு இருக்க முடியாது. அதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வகையில் நண்பர்களே, இன்றைக்கு அம் பேத்கர் படத்தையும் இங்கே திறந்து வைத்திருக் கிறோம்.

அமெரிக்காவில்கூடவா ஜாதி?

பேராசிரியர் காளிமுத்து அவர்கள் உரையாற்றும் பொழுது சொன்னார். புத்தகத்தை மொழி பெயர்த் திருக்கிறார். அமெரிக்காவில்கூடவா ஜாதி? என்ற அளவிற்கு வந்தால், அந்தப் புத்தகத்தில், அம்பேத்கர் எழுதிய ஒரு மேற்கோளைப் போட்டிருக்கிறார்கள். அதை மட்டும் நான் சொல்கிறேன்.

இந்து மதத்தில் இருக்கிறவன், இந்து என்று தன்னை அழைத்துக் கொள்கிறவன், உலகத்தின் எந்தப் பாகத்திற்குக் குடிபெயர்ந்தாலும், அவன் கையில் கொண்டு போகக்கூடிய சரக்கு ஒன்றே ஒன்றுதான்; அதுதான் ஜாதி. அதுதான் தீண்டாமை.

இன்றைக்கு அதைத்தான் கொண்டு போகிறார்கள்.

இன்றைக்கு அம்பேத்கர் ஜெயந்தியை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுகிறார்கள்.

காந்தியாரைக் கொன்ற கோட்சே  ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி எடுத்தவன். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, காந்தியாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடுகிறது.

காந்தியாரைக் கொன்றவர்கள், இன்றைக்குக் காந்தியார் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்

காந்தியாருக்கு ஏற்பட்ட விபத்தைப் பாருங்கள். காந்தியாரைக் கொன்றவர்கள், இன்றைக்குக் காந்தி யார் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

காமராசரை உயிரோடு வைத்து கொளுத்த  முயன்றவர்கள் காமராசரைக் கொண்டாடுகிறார்கள்.

ஓநாய் சைவமாகிவிட்டது என்று சொல்லுகிறார்கள்; நம்பினால், நீங்கள் ஏமாளிகள் என்று பொருளே தவிர, ஓநாயினுடைய குற்றமல்ல. அதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வகையில்தான், ஓநாய் ஒருநாளும் சைவமாகாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு ஒரே ஒரு செய்தி என்னவென்று சொன்னால், அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்களே, இந்து மதத்தில் என்ன ஜாதி இந்து என்ன? மீதி இந்து என்ன? வருணஸ்தர்கள் என்ன? அவர்ணஸ்தர்கள் என்ன?

படிக்கட்டு ஜாதி முறையை அம்பேத்கர் சொன் னாரே, அதனை ஒழிப்பதற்குத் தயாரா நீங்கள்?

ஒரே ஜாதி என்று சொல்வீர்களா?

இந்து சகோதரர்களே ஒன்று சேருங்கள் என்று சொல்கிறீர்களே! நாம் ஒன்று சேரலாம் என்கிற அளவிற்கு இருக்கிறதா?

ஒரே நாடு,

ஒரே மொழி,

ஒரே கலாச்சாரம்

என்று சொல்கிறீர்களே, ஒரே ஜாதி என்று சொல்வீர்களா?

பெரியாருடைய கொள்கைகளை

அப்படியே  பிரதிபலித்தார் காமராசர்!

ஆகவேதான், பெரியாரும், அம்பேத்கரும் சமத் துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் பாடுபட்டவர்கள். காம ராசர் அவர்கள் பெரியாருடைய கொள்கைகளை அப் படியே பிரதிபலித்தார். ஆகையால்தான், பெரியார் அவர்கள், காமராசருக்குப் பெரிய துணை யாக இருந்தார்.

தகுதி, திறமை என்று பேசும்போது காமராசர்  சொன்னார்,

பறையரை நான்  டாக்டர் ஆக்கினேன். அவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்துப் போனான் சொல் என்றார். நீ படித்ததும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தவனைபற்றியும் எனக்குத் தெரியும் என்றார்.

அதேபோன்று,

தாழ்த்தப்பட்டவனை பொறியாளராக்கினேன். அவன் பாலம் கட்டினான்; எந்தப் பாலம் இடிந்து விழுந்தது சொல் என்றார்.

மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பேசினார். பெரியார் கேட்டதுபோன்றே காமராசரும் கேட்டார்.

எவன்டா உன்னுடைய தலையில் எழுதியது? அவனைக் கொண்டுவாடா அதனை மாற்றி எழுது வதற்காகத்தான் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னவர் காமராசர் அவர்கள்.

பகுத்தறிவின் பயனை உருவாக்கித் தந்த தலைவர்களின் படங்களைத் திறந்திருக்கிறோம்!

எனவே, பகுத்தறிவு, இன உணர்வு, சமத்துவம், சம வாய்ப்பு, வாய்ப்பற்றவர்களுக்கெல்லாம் இருப்பது தான் பகுத்தறிவின் பயன். அந்தப் பகுத்தறிவின் பயனை உருவாக்கித் தந்த தலைவர்களின் படங் களைத்தான் இங்கே திறந்து வைத்திருக்கிறோம்.

தீர்மானங்களுக்குப் பிறகு மாலை நேரத்தில் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்படும்.

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்! வாழ்க அம்பேத்கர்!

வளர்க பகுத்தறிவு! வளர்க சுயமரியாதை!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

- விடுதலை நாளேடு 30 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக