- ஒரு தொகுப்பு -
14.12.2019 அன்றைய தொடர்ச்சி...
வெள்ளை மாளிகை
(The White House)
218 ஆண்டுகளுக்கு முன்னர் 1800-ஆம் ஆண்டு முதல் ஜான் ஆடம்ஸ் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலிருந்து குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக வெள்ளை மாளிகை விளங்கி வருகிறது. வெள்ளையர் இன அமெரிக்கர்கள் மட்டுமே குடியரசுத் தலைவர்களாக பதவி ஏற்று ஆட்சி செய்த காலத்தில் மனிதன் (The Man) எனும் தலைப்பில் இர்விங் வேலஸ் (Irving Wallace) எழுதிய வெள்ளை மாளிகை பற்றிய ஒரு புதினம் மிகவும் பிரசித்தி பெற்றது. குடியரசுத் தலைவராக ஒரு கருப்பர் (ஆஃப்ரோ அமெரிக்கர்) இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதைக் கரு. இந்த ஆங்கில புதினத்தைத் தழுவி அறிஞர் அண்ணா தனக்கே உரிய எழுத்துத் திறனுடன் 'வெள்ளை மாளிகையிலே' எனும் இலக்கியப் படைப்பினை உருவாக்கினார். அந்தப் படைப்பு களின் கனவுகளை நனவாக்கும் வகையில், முதன்முறையாக கருப்பர் இன அமெரிக்கரான பாரக் ஒபாமா (Barack Obama) அமெரிக்க அய்க்கிய நாடுகளின் 44-ஆம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். தொடர்ந்து இரண்டு முறை (2009-2017) அவர் பதவியில் இருந்தார். கருப்பர் என்பது எந்த வகையிலும் தகுதிக் குறைவானது அல்ல என்பதை கண்ணியமாக, ஆட்சி செய்த பாங்கின் மூலம் நடத்திக் காட்டி, மனிதரிடம் இருக்கும் பிறவி சார்ந்த இழிவு, தகுதிக் குறைவு, செயலாற்ற இயலாது போன்ற பொய் வாதங்களைத் தவிடு பொடியாக்கிய பெருமைக்கு உரியவராக பாரக் ஒபாமா விளங்கினார்.
வெள்ளை மாளிகை என்றதும் கோள வடிவக் கோபுரம் கொண்ட கட்டடம் உங்கள் மனக்கண்ணில் தோன்றலாம். ஆனால் அது வெள்ளை மாளிகை அன்று. கேபிடோல் மாளிகை (Capitol building) என்றழைக்கப் படும் United States Congress கட்டடம் அதாவது அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம். அதனைப் பிறகு பார்க்கலாம்.
நாங்கள் முதலில் பார்த்தது உண்மையான வெள்ளை மாளிகை. அதாவது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமும், அலுவலகமும் உள்ள கட்டடம். அதன் வடபுறமுகப்பான லாஃபியேட் சதுக்கம், பூங்கா அமைந்த பகுதி. முன்பு அந்த பூங்காவில் பொது மக்கள் அனுமதிக்கப்படுவதுண்டாம். இப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக முழக்க கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் அங்கேயே நெடுநாட்களாக இருந்து போராடக் கூடியவர்களைப் பார்த்தோம். ஆங்காங்கே பல்வேறு கோரிக்கைகள் ஆங்கில பதாகைகளை ஏந்தியபடி கவனத்தை ஈர்க்க முனைந்தனர். அமெரிக்க அரசு கவனம் செலுத்துகிறதோ இல்லையோ, அங்கு வரும் பார்வையாளர்கள் கவனம் செலுத்தினர். அதன்பிறகு அங்கிருந்து நாம் முன்னர் சொன்ன கேபிடோல் கட்டடம் சென்றோம்.
பயணம் செய்த பேருந்து பெனிசில்வேனியா நிழற் சாலையில் நுழைந்ததும் தூரத்தில் காபிடோல் (Capitol) தெரிந்தது. நெருங்க நெருங்க பிரமிப்புடன் ஒரு பேரமைப்பை பேருருவை நோக்கி நகர்வதாகவே தோன்றியது. பெனிசில்வேனியா நிழற்சாலை எனும் பெயருக்கேற்ற நிழல் தரும் மரங்கள் வான்நோக்கி வளர்ந்து சாலையின் இரு மருங்கிலும் வரிசையாக வரவேற்றன. அந்த வழியில் தான் இன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவருக்குச் சொந்தமான டிரம்ப் இன்டர்நேஷனல் விடுதி (Trump International Hotel) இருப்பதை வழிகாட்டி எங்களுக்குச் சுட்டிக் காட்டினார். முழுமையான அரசியல்வாதியாக இல்லாமல், பல நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளியாக இருந்து வெள்ளை மாளிகைக்கு வந்தவர் டொனால்டு டிரம்ப்.
கேபிடோல் கட்டடத்தின் ஒரு வெளிப்புறப் பகுதி, (படிக்கட்டுகள் பல அடுக்கடுக்காக அமைந்த பகுதி) மட்டும் பார்வையாளர் பார்த்திட அனுமதிக்கப்பட் டுள்ளது. அனைவரும் படிக்கட்டுகளில் நின்று கேபி டோல் கட்டடத்தின் முழு வடிவமைப்பும் உள்ளடங்கும் வகை யில் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அரை மணி நேரம் அந்த வளாகத்தில் உலாவி விட்டு பன்னாட்டு மாநாடு நடைபெற விருந்த மேரிலாந்து மாநிலம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
அமெரிக்க அய்க்கிய நாடுகளின் கூட்டமைப்பில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் (மாநிலப் பரப்பு, மக்கள் தொகை ஆகிய அளவுகளைப் பொருட்படுத்தாது உண்மையான பிரதிநிதித்துவம் அளிக்கப் படும் வகையில்) இரண்டு உறுப்பினர்கள் செனட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படு கிறார்கள். அடுத்து ஒவ்வொரு மாநிலமும் காங்கிரஸ் பேரவைக்கும் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுத்து அனுப் புகிறது. குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டாலும் அதிக அதிகாரங்கள் அவருக்கு இருந்தும், அதனை நெறிப்படுத்துகின்ற வகையில் செனட் அவைக்கு அதிகாரம் உள்ளது. உண்மையான கூட் டாட்சி முறைக்கு எடுத்துக் காட்டாக அமெரிக்கா விளங்கு கிறது. கூட்டாட்சி அமைப்பின் தலைவரான குடியரசுத் தலை வரின் நேரடி ஆளுகைக்கு என வாஷிங்டன் D.C. எனும் நகரம் உருவாக்கப்பட்டது. இது எந்த மாநிலப் பகுதியிலும் வராது. வாஷிங்டன் எனும் பெயரிலேயே ஒரு தனி மாநிலம் அமெரிக்காவின் வட மேற்குக் கோடியில் உள்ளது. வாஷிங்டன் மாநிலத்தி லிருந்து வேறுபடுத்திக்காட்ட, தலை நகரான வாஷிங்டன் D.C. (District of Columbia) எனும் பெயரில்தான் அழைக்கப் பட்டு வருகிறது. வாஷிங்டன் டி.சி.யிலிருந்து கிளம்பி அண்டை மாநிலமான மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங் பகுதிக்கு வந்தடைந்தோம்.
சில்வர் ஸ்பிரிங் நகரில் மாநாடு நடைபெற்ற மாண்ட் கோமரி கல்லூரிக்கு அருகி லேயே (சாலையைக் கடக்கும் தூரத்தில்) இருந்த விடுதியில் (Holiday Inn Express) ஒதுக்கப்பட்ட அறைகளில் (ஓர் அறைக்கு இருவர்) தங்கினோம். சிறப்பாகவும், அடிப்படை வசதி களுடன் கூடிய அறைகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டி ருந்தன. மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களில் அமெரிக்க நாட்டிற்கு முதல் தடவை யாகச் சென்றவர்கள் பலர். இரவு உணவு மாநாட்டு ஏற்பாட்டாளர் களால் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு, விடுதியின் உணவகத்திலேயே அருந்திட வசதிகள் உருவாக்கப்பட்டி ருந்தன. இரவு உணவிற்குப் பின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர். சோம இளங்கோவனும், முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களும் அமெரிக்க நாட்டு குடிமக்களது நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள், வருகை தந்துள்ள பிற நாட்டினர் கடைப்பிடிக்க வேண்டிய குடிமை நடவடிக்கைகள் என மாநாட்டுப் பேராளர்களுக்கு பல குறிப்புகளை வழங்கினர். குறிப்பாக அமெரிக்க நாட்டில் கடைப்பிடிக்கப்படும் போக்குவரத்து விதிகளில் உரிய கவனம் செலுத்துவது பற்றியும் சரியாகக் கடைப் பிடிப்பதைப் பற்றியும், எடுத்துரைத்தனர்.
நடைமேடை தவிர, சாலைகளில் நடந்து செல்லக் கூடாது; சாலையைக் கடந்து செல்ல நினைத்தால் உரிய வழித்தடத்தில் தான் கடந்து செல்ல வேண்டும்; உரிய வழித்தடத்திற்கு வந்து அங்குள்ள கம்பத்தில் உள்ள பொத்தானை அழுத்தி சாலையினைக் கடக்க காத் திருக்க வேண்டும்; சாலையின் குறுக்காக நடை மேடையில் உள்ள விளக்கில் வெள்ளை நிற வெளிச்சம் தெரியும் பொழுதுதான் கடந்து செல்ல வேண்டும். சாலையில் வாகனங்கள் செல்லாவிட்டாலும், உரிய வழித்தடத்தில் அல்லாமல் பிற இடங்களில் குறுக்காக நடந்து சாலையினைக் கடக்க முயற்சிக்கக் கூடாது. வாகனங்களின் பயணம் இந்தியாவில் உள்ளதைப் போல (இடது பக்கப் பயணம்) அல்லாமல் அமெரிக் காவில் வலது பக்கப் பயணமாக உள்ளதைப் பற்றிய நினைப்பினை எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி புதிய நாடு, புதிய மக்கள் வாழும் இடம், வாழும் சூழல், சாலை விதிகள் என பரந்துபட்டு முக்கியக் குறிப்புகளைப் மாநாட்டுப் பேராளர்களுக்கு விளக்கமாக அளித்தனர். விதி முறைகள் பற்றிய விளக்கம் அளிக்கும் பொழுது இந்தியாவிற்கும் அமெரிக் காவிற்கும் உள்ள காலநேர வேறுபாடு காரணமாக பேராளர்கள் அனைவரும் ஜெட் லாக் (Jet lag) எனப் படும் தூக்க நிலைக்கு உந்தப்பட்டனர். (ஜெட்லாக் என்பது உறங்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக வரும் உடல் உணர்வு. நாம் முன்னரே கண்டதுபோல நமது நாட்டில் உறங்கும் இரவு அமெரிக்காவில் பகல் நேரமாகும், அமெரிக்காவில் இரவு என்பது இந்தியாவில் பகலாக இருக்கும். உறங்கும் நிலை அமெரிக்கச் சூழலுக்கு ஒத்துப்போக ஓரிரு நாட்களாகும் என்பதற்கு அமெரிக்காவிற்கு (இந்தியாவிலிருந்து) செல்லும் அனைவரும் பழக்கப்பட்டே ஆக வேண்டும். பயணக் களைப்பு காரணமாக (தொடர்ந்து 4.30 + 14.00=18.30 மணிநேரப் பயணம்) அனைவரும் நன்றாகத் தூங்கி எழுந்தோம்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து மீண்டு வந்த அமெரிக்கர்கள், தங்களில் மிகப் பலர் பிரிட்டனின் வம்சாவளியினைச் சார்ந்தவர்கள் என்ற போதிலும், சில பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டு இருந்திட வேண்டும்; பிரிட்டனின் மறுமதிப்பாக அமெரிக்கா இருந்திடக் கூடாது என்பதில் தொடக்கம் முதல் கவனமாக இருந்து பல மாற்றங்களைச் செய்துள்ளனர். இன்று பிரிட்டனிலேயே மெட்ரிக் முறை ஏற்றுக் கொள் ளப்பட்டாலும், அமெரிக்காவில் லிட்டர் அளவிற்குப் பதிலாக காலன் என்பதும் எடையளவில் கிலோ என்பதற்குப் பதிலாக பவுண்டு என்பதும் நடைமுறையில் உள்ளது. தூரத்தை கிலோ மீட்டருக்குப் பதில் மைல் என்று தான் கணக்கிடுகிறார்கள். ஆங்கிலத்தில் டாய்லெட் (Toilet) என்பதை ரெஸ்ட் ரூம் (Rest Room) என்பதாகச் சொல்லுகிறார்கள்.
இப்படி அமெரிக்கர்களின், அமெரிக்காவில் வாழும் பிறநாட்டினரின் பயன்பாட்டில் உள்ள வழக்கங்கள் பற்றி பெற்ற விளக்கங்கள் மாநாட்டின் பொழுதும் அதைத் தொடர்ந்து ஒரு வார காலம் சுற்றுலா செல்லும் பொழுதும் பயனுள்ள வகையில் இருந்தன.
செப்டம்பர் 21 22 (சனி ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற சுயமரியாதை-மனிதநேய பன்னாட்டு இரண்டாம் மாநாடு பல்வேறு நாட்டவர், அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் பங்கேற்புடன் சிறப்புகள் பல பெற்று, வரலாற்றில் நிலைத்து நிற்கும் வகையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சென்ற அனைவரும், பிறநாட்டவர்களும், பெரியார் இயக்க வரலாற்றில் பெருமைப் படத்தக்க வகையில் இடம் பெற்றவர்களாகி விட்டோம் என்பதை நினைக்கும் பொழுது மனதிற்கு பெரிதும் மகிழ்ச்சி, மனநிறைவு. மாநாட்டு ஏற்பாட்டா ளர்களான பெரியார் பன்னாட்டு அமைப்பு, (Periyar International, USA) அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association) மற்றும் ஓடியாடி உழைத்திட்ட பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டத் தினருக்கு நன்றிகள் பல கூறும் வகையில் மாநாட்டு நடவடிக்கைகள் நிலைத்து பெருமை படைத்துவிட்டது. (பன்னாட்டு மாநாடு நடைபெற்ற விதம், மாநாட்டு நடவடிக்கைகள் முழுவதும் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான 'அமெரிக்காவில் பெரி யார்' எனும் நூலில் தொகுப்பாகவே வெளி வந்துள்ளது.)
மாநாடு நிறைவு பெற்று
மீண்டும் தொடர்ந்த சுற்றுலா
செப்டம்பர் 23-ஆம் நாள் காலை சிற்றுண்டியை அருந்தியபின், எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு விடுதி அறைகளைக் காலி செய்தோம். அடுத்த ஆறு நாள்களுக்கு தொடர்ந்து பயணிக்க சிறப்பு சுற்றுலாப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுலா முழுவதும் எங்களுக்கு உடன் வழிகாட்டியாக மும்பை நகரிலிருந்து அடில் டாக்டர் (Adil Doctor) எனும் வழிகாட்டும் உதவியாளரை சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் அனுப்பி இருந்தது. எங்களது சுற்றுலா நிறைவடைந்து இந்தியா திரும்பிச் செல்ல நியூயார்க் விமான நிலையம் வரை உறுதுணையாக உடன் இருந்து சென்றார். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தோழர்களுடன் மாநாட்டில் பங்கேற்ற மூன்று ஜெர்மானியப் பிரதிநிதி களும் எங்களுடன் சுற்றுலாவில் சேர்ந்து வந்தனர். அம் மூவர் - உல்ரிக் நிக்லஸ், முனைவர் பிலிப் மொல்லர் மற்றும் ஸ்வென் வொர்ட்மான் ஆவார்கள். முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்கள் ஜெர்மனி-கொலோன் நகரில் 2017-ஆண்டு ஜூலை மாதம் பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு முதலாம் மாநாடு நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர். பெரியார் பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி கிளையின் தலைவராக உள்ள இவருக்கு 2019-ஆம் ஆண்டு சமூகநீதிக்கான
கி. வீரமணி விருது மேரிலாந்தில் நடைபெற்ற இரண்டாம் பன்னாட்டு மாநாட்டில் வழங்கப்பட்டது. பிலிப் மொல்லர் ஜெர்மன் நாட்டு புருனோ நிறுவனத்தில் பணியாற்றுபவர்; மாநாட்டில் 'நடைமுறை மனிதநேயம்' எனும் தலைப்பில் உரையாற்றியவர். ஸ்வென் வொர்ட் மான் ஜெர்மனி-கொலோன் பல்கலைக் கழகத்தில் தென்கிழக்கு நாடுகள் பற்றிய ஆய்வுத் துறையில் பணியாற்றி வருபவர்.
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சுற்றுலா செல்லுகையில் கவனமாக இருந்து, பாதுகாப் புடன் நல்ல முறையில் இருந்திட அனுபவபூர்வமான அறிவுரைகளை வழங்கினார்; எங்களை வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
சரியாக காலை 9.30 மணிக்கு மேரிலாந்து - சில்வர் ஸ்பிரிங்கிலிருந்து கிளம்பினோம். அமெரிக்க நாட்டு தலைநகர் வாஷிங்டன் D.C. யைச் சுற்றியுள்ள மாநி லங்கள் இரண்டு. ஒன்று, தென்மேற்கு பக்கத்தில் இருக் கும் வர்ஜினியா; மற்றது-வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மேரிலாந்து. வாஷிங்டன் D.C. யிலிருந்து வடக்கு நோக்கிப் பயணித்தோம். இந்த மாநிலங்கள் அனைத்தும் அமெரிக்க நாட்டு வடக்குப் பகுதியில் அமைந்த கிழக்கு கடற்கரையினை (அட் லாண்டிக் பெருங்கடல்) ஒட்டியுள்ள மாநிலங்களாகும். மேரிலாந்து மாநிலத்தின் முக்கிய நகரமான பால்டி மோரை கடந்து டெலவார் மாநிலத்தின் தலைநகர் டென்வர் வழியாக பெனிசில் வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியா நகரை நோக்கிப் பயணித்தோம்.
- வீ. குமரேசன்
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக