ஞாயிறு, 28 ஜூலை, 2024

தெலங்கானா மாநிலம் – வாரங்கல் நகரில் இந்திய நாத்திகர் சங்கத்தின் மூன்றாம் மாநில மாநாடு


Published July 27, 2024

 கழகப் பொருளாளர் பங்கேற்றார்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டணம் நகரில் தலைமையகத்தைக் கொண்டு 1972 – ஆம் ஆண்டு இந்திய நாத்திகர் சங்கம் (Atheist Society of India) நிறுவப்பட்டது. சீரிய பகுத்தறிவாளர் முனைவர். ஜெயகோபால் அவர்களை நிறுவனராகக் கொண்டு தொடங்கப்பட்ட சங்கம் ஆந்திர மாநிலம் முழுவதும் கிளைகளைக் கொண்டு நாத்திக, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2004 – ஆம் ஆண்டில் மாணவர்களை அறிவியல் மனப்பான்மைக் கொண்டு செயல்பட வைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பினை (Scientific Students’ Federation) இச்சங்கம் தொடங்கி களப்பணி ஆற்றி வருகிறது. ஆந்திர மாநிலம் பிரிந்ததற்குப் பின்னர் தெலங்கானா மாநிலக் கட்டமைப்பிலும், இந்திய நாத்திகர் சங்கம் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. தெலங்கானா மாநில இந்திய நாத்திகர் சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு ஜூலை 24 – ஆம் நாள் வாரங்கல் நகரில் நடைபெற்றது. அந்த மாநில மாநாட்டில் கலந்து கொள்ள திராவிடர் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ. குமரேசன் இந்திய நாத்திகர் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டார். உடன் திராவிடர் கழக சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன் அவர்களும் சென்று பங்கேற்றார்.

திராவிடர் கழகத்துடன் கொள்கை உறவு

அண்மையில் காலமான முனைவர். ஜெயகோபால், திராவிடர் கழகத்துடனும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். மியான்மா நாட்டில் பிறந்து, வளர்ந்து, தாயகம் திரும்பியவர். மியான்மர் நாட்டில் வாழ்ந்த காலத்தில் பெரியாருடைய எழுத்துகளை படித்ததன் மூலமாக தமிழைக் கற்றுக் கொண்டவர். சரளமாக தமிழில் உரையாடக் கூடியவர். திராவிடர் கழகம் நடத்திய பல மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். தந்தை பெரியாருடைய கொள்கை மீது கொண்ட பற்றுதலினால், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் முதன் முதலாக தந்தை பெரியாருடைய சிலையினை விசாகப்பட்டணம் – கடற்கரை சாலையில் அமைத்திட முயற்சி செய்தவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்திட அன்றைய ஆந்திர மாநில அமைச்சர் பெருமக்கள் முன்னிலை வகித்து சிறப்பாக சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விசாகப்பட்டண நகர் மன்றத் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றிடும் வகையில் நிகழ்ச்சியினை ஜெயகோபால் அவர்கள் நடத்தினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலிவு காரணமாக ஜெயகோபால் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது படத்திறப்பு — நினைவேந்தல் நிகழ்விற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் சென்று பங்கேற்றார். திராவிடர் கழகத்துடன் கொள்கை உறவுநிலை கொண்டு இந்திய நாத்திகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

மாநில மாநாடு

இந்திய நாத்திகர் சங்கத்தின் மூன்றாம் மாநில மாநாடு வாரங்கல் நகர் அனுமன்கொண்டா பகுதியில் நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். மாநாட்டு தொடக்க உரையினை ரவி ஜெயகோபால் ஆற்றினார். சங்கத்தின் தெலங்கானா மாநிலத்தின் தலைவர் நரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

மாநாட்டின் தொடக்க உரையினை திராவிடர் கழகப் பொருளாளர் ஆங்கிலத்தில் வழங்கினார். தனது

உரையில் அவர் குறிப்பிட்டதாவது:-

பெரியார் இயக்கம் என்பது நாத்திக இயக்கம் – கடவுளை மறுக்கின்ற அமைப்பு என்பது பரவலாக அறியப்பட்டுள்ளது. கடவுள் மறுப்பு என்பது பிரச்சாரத்தின் சாரமாக இருந்தாலும், கடவுள் மறுப்பு என்பது முழுமையான கொள்கையல்ல; இல்லாத கடவுளை மறுத்துப் பேசுவது மட்டும் கொள்கைப் பிரகடனம் ஆகாது. பெரியாரின் கொள்கையானது மனிதர் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதே. ஆனால் நடைமுறையில் மனிதரிடையே சமத்துவநிலை இல்லை. பாகுபாடு காட்டுவது, ஏற்றத்தாழ்வு நிலை, அதன் அடிப்படையில் மனிதருக்கு அவசியமான தேவையான கல்வி மறுக்கப்படுவது என்ற நிலைமைகள் சமூகத்தில் உள்ளன. இந்த உயர்வு தாழ்வுகள் இருநிலைப்பட்டவை (binary) அல்ல; அவை பலநிலைப்பட்டவை; பலநிலைப்பட்டவை மட்டுமல்ல; தரநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையாக (graded inequality) உள்ளது. இந்த பிரிவினை என்பது மனிதரால் உருவாக்கப்பட்டவை என்றபோதிலும், கடவுள் விதித்த விதி; கடவுள் தானே உருவாக்கிய பிரிவு என சொல்லுவதாக கற்பிக்கப்படுகிறது. மக்களால் அந்த கற்பித்தல் ஏற்றுக்கொள்ளவும் பட்டுள்ளது.

மக்களிடையே சமத்துவநிலையினை உருவாக்கிட கடவுளின் கற்பிதம் தடையாக உள்ளது; அந்தத் தடை தகர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் கடவுள் மறுப்பு – கடவுள் எதிர்ப்பு ஓர் அணுகுமுறை என்ற அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. சமத்துவ நிலையினை எட்டிட ஒவ்வொருவரின் சுயமரியதை உணர்வு எழுச்சி பெறவேண்டும். பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவைகளை வலியுறுத்தித்தான் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்கினார். அதன் நூற்றாண்டு (1924 – 2025) இப்பொழுது நடைபெறுகிறது. பெரியார் இயக்கத்தார் தேர்தலில் போட்டியிடாமல், சமுதாயப் பணி ஆற்றுகின்றவர்கள்.

பிறப்பின் அடிப்படையில், பாகுபாடு, பிரிவினையைத் தாண்டி உடல் உழைப்பு மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. தந்தை தொழிலைத்தான் மகன் செய்திட வேண்டும்; மாறிச் செய்தால், மீறியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் உரிய பங்கு வேண்டும் என 1929–இல் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 1989-இல் சட்டமாகி, பின்னர் 2006–இல் ஒன்றிய அரசின் சட்டமாகவும் ஆகி பாலின சமத்துவத்திற்கு வித்திட்டது. தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம் இதுவரை அரசமைப்புச் சட்டத்தின் மூன்று திருத்தங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்துவதுதான் அந்த மூன்று சட்ட திருத்தங்களும்.

தனது கழகப்பணிக்கு கிடைத்த வெற்றியை தன் வாழ்நாளிலேயே கண்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியாருக்குப்பின் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் இயக்கத்தை வழிநடத்தினர் (1973-1978). அவருக்குப் பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இயக்கத்தினை வழிநடத்தி வருகிறார். பெரியார் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் தொடர்ந்து திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது.
– இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்டுக் கூறினார். ஆங்கில உரையினை தெலுங்கில் மொழிபெயர்த்திட ஏற்பாடு செய்திருந்தனர்.

நண்பகல் உணவிற்குப் பின்னர் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், தெலுங்கு மொழியில் சில மணித்துளிகள் உரையாற்றினார்.
வழக்குரைஞர் சைனிக் நரீந்தர் நன்றி கூறி மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக