வெள்ளி, 5 அக்டோபர், 2018

உலகெங்கும் பரவிடும் பகுத்தறிவு பகலவன்



தந்தை பெரியார் பக்தி நிறைந்த வைதிகக் குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கப்பள்ளி படிப்பையே முழுமையாக முடிக்காதவர். ஆனால், அவர் அளித்த அரிய சிந்தனைகள், தீர்வுகள், பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெற்றிகள் ஏராளம் என்பதோடு, எவரும் செய்யாதவை.

நான்காம் வகுப்பு படித்த பெரியாரின் சிந்தனைகள், போராட்டங்களை பிரச்சாரக் கருத்துகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றோர் பலர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கூறியதுபோல அவரது மண்டைச் சுரப்பை இன்று உலகம் ஏற்கிறது. அவரது சிந்தனைகள் உலகமெங்கும் பரவி வருகின்றன. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வதுபோல் பெரியார் உலகமயமாகி வருகிறார்.

உலகெங்கும் பெரியார் சிந்தனைகளைப் பேசும் கருத்தரங்குகள் மாநாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. அந்த விவரங்களை ‘உண்மை’ இதழ்களில் நாம் விரிவாக முன்பு பதிவு செய்துள்ளோம்.

ஆண்டுக்கு ஆண்டு அகிலமெங்கும் நடக்கும் பெரியார் விழாக்களும், பெரியார் சிந்தனைகளை விவாதிக்கும் கருத்தரங்குகளும் அதிகரித்து வருவது ஆசிரியரின் கணிப்பை உறுதி செய்கின்றன.

கடந்த சில மாதங்களில் உலகெங்கும் நடைபெற்ற பெரியார் விழாக்களை தொகுத்து நோக்கினால், இந்த உண்மையும், சிறப்பும் தெளிவாய் விளங்கும் .

வட அமெரிக்காவில்...

சுயமரியாதை பயின்றோர் செல்லுமிட மெல்லாம் சிறப்பு! புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்லும் அமைப்பு ‘வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவை.’ இந்த அமைப்பு ஆண்டு தோறும் ‘பேரவை தமிழ் விழா’ என வட அமெரிக்காவில் வாழும் அனைவரும் பங்கேற்கும் நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா டெக்சாசு மாகாணத்தில் கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை நான்கு நாள் நிகழ்வாக நடைப்பெற்றன. இயல், இசை, நாடகம் என தமிழர் கலைகளை, வாழ்வியல் வளங்களை போற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழகத்திலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், மற்றும் உள்ளூர் படைப்பாளர் பலர் சிறப்பாக பங்குப்பெற்றனர்.

தமிழர் வாழ்வியல் பற்றியும், உயர்வு குறித்தும், சிந்தித்தும், பேசியும் தன் வாழ்நாள் முழுதும் பணி செய்து தமிழர் நெஞ்சங்களில் நீங்காது வாழும் தந்தை பெரியார் பற்றி போற்றாத தமிழர் இல்லை, தமிழர் விழா இல்லை. இந்த மாபெரும் விழாவும் அதனைப் பின்பற்றியது. தந்தை பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக ஓர் இணையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு சீரோடும் சிறப்போடும் நடைப்பெற்றது. தேனைத் தேடி வரும் வண்டாக பகுத்தறிவு பயில தோழர்கள் பலர் திரண்டு வந்திருந்தனர். தந்தைப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மானமிகு. மருத்துவர் சோம. இளங்கோவன் அனைவரையும் வரவேற்று, கருத்தரங்கக் கலந்துரையாடலை துவக்கி வைத்தார். தோழர்கள் தங்களது கருத்துகளாக பதிவு செய்ததின் சாரம்

1. ஜாதிய வேறுபாடுகளை களைந்து சமத்துவ சமுதாயம் ஏற்பட தொடர்ந்து பணியாற்றுதல் அவசியம்

2. மூட நம்பிக்கைகளை களைந்து அறிவியல் பாதையில் பயணப்படுதல்.

3. சமூக வலைத்தளம், ஊடகம் என பல்வேறு தளங்களில் பகுத்தறிவினைப் பேணுதல்

அறிவு தளத்தின் தேவை இன்று மிக இன்றியமையாத ஒன்று. எனவே தந்தை பெரியாரின் சீர்திருத்த கருத்துகளை உலகறிய நாம் கொண்டு செல்வதில் மிக முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என வந்திருந்த அனைவரும் வழி உயர்த்திப் பேசினர். இந்த எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வண்ணம், கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ‘பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு’ போன்று, அடுத்த ஆண்டு செப்டம்பர் 21-_22 ஆகிய தேதிகளில் சிகாகோவில் *உலக மனிதநேய ஆர்வலர்கள் மாநாடு* நடைபெறும் என அறிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் மருத்துவர் சோம. இளங்கோவன்.

இந்த இனிய நிகழ்வில் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, பதிப்பாளர் ஒளிவண்ணன், பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தந்தைப் பெரியார் இன்றும் என்றும் நமக்குத் தேவை என மனதில் எண்ணியவாறு அடுத்த ஆண்டு நிகழ்வினை எதிர்நோக்கியும், அதுவரை ஆற்ற வேண்டிய பகுத்தறிவு பணிகளை எண்ணியவாறும் தோழர்கள் தங்களது இல்லம் நோக்கி திரும்பினர்.

அமெரிக்கா  கலிபோர்னியா

தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை ‘சேன்ஓஸ் பல்கலைக்கழக’ டாக்டர் மார்டின் லூதர் கிங் நூலக அரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பு, கலிபோர்னியா கிளை, பி.ஆர்.அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய சிறுபான்மையினர் கழகம், அம்பேத்கர்கிங்  படிப்பு வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து  பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மனித நேயம் (PERIYAR'S SELF-RESPECT MOVEMENT & HUMANISUM) எனும்  கருத்துரை நிகழ்வாக நடத்தியது.

பேராசிரியர் டாக்டர் அம்ரிக்சிங் (சேக் ரமாண்டோ பல்கலைக் கழகம்), பீட்டர் பிரட்ரிச் (இந்திய சிறுபான்மையினர் கழக இயக்குனர்), ச.கார்த்திகேயன் (அம்பேத்கர்கிங் படிப்பு வட்டம்), பஜன்சிங் (பி.ஆர்.அம்பேத்கர் சீக்கிய நிறுவனம்), கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு) ஆகியோர் உரையாற்றினர். பெரியார் பன்னாட்டமைப்பின் கலிபோர்னியா கிளையின் சார்பில் திருமதி வினோதினி காந்தராஜ் வரவேற்புரையும், ‘பாம்செப்’ அமைப்பின் தோழர் அசோக் பூலா தொகுப்புரையும் வழங்கினர்.

வாசிங்டன்




17.09.2017 அன்று பெரியார் பன்னாட்டு மையத்தின் சார்பில் வாசிங்டன் வட்டாரத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழா வெர்ஜினியா, மேரிலாந்து, நியுஜெர்சி, பென்சில்வேனியா மாநிலங்களின் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொள்ள சிறப்புடன் நடைபெற்றது.

மருத்துவர் சோம.இளங்கோவன், முனைவர் சங்கரபாண்டி, வழக்குரைஞர் கனிமொழி, முனைவர் ஜெயந்தி சங்கரபாண்டி, பெங்களூரு குமரன், கிளாரா பீட்டர், சரோஜா இளங்கோவன், நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தலைவர் ராஜாராம் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து தமிழகக்  கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார்.

மிச்சிகன்




‘பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்’  அமெரிக்கா சார்பாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை  மிச்சிகன் மாநிலத்தில் ஆபர்ன் ஹில்ஸ் நகரில் யார் பெரியார்? நான் பெரியார் பேசுகிறேன்!, பெரியாரின் சமூகப் புரட்சி, பெரியாரின் பெண்ணியம் ஆகிய தலைப்புகளில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தி பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்கள், அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும்  பெரியாரியல் கருத்தியலில் ஆர்வமுடைய பெருமக்கள் பங்கேற்க சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

நியூஜெர்சி




23.09.2017 அன்று அமெரிக்கா  நியூஜெர்சியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை  பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுபாசு சந்திரன் வரவேற்புரையாற்றினார்.

பின்னர், பெரியாரும்..... எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘பெரியாரும் தமிழ்மொழியும்’                என்ற தலைப்பில் மருத்துவர் சரோஜா இளங்கோவன்,

‘பெரியாரும் மத எதிர்ப்பும்’ என்ற தலைப்பில் - செந்தில்நாதன்,

‘பெரியாரும் ஜாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில்- பார்த்திபன் சுந்தரம்,

‘பெரியாரும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில்-வழக்குரைஞர் கனிமொழி ஆகியோர் உரையாற்றினர்.

பெரியார் பிஞ்சுகள்: இனியா ‘பெண்ணுரிமை’ பற்றியும் இதயா ‘சுயமரியாதை’ பற்றியும், பிரியன் ‘என் பார்வையில் பெரியார்’ எனும் பொருளில் ஆங்கிலத்தில் உரையாற்றினர். இலக்கணன், எயினி ஆகியோர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளை ஒப்புவித்தனர்.

திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன் அவர்களின் சிறப்புரைக்குப் பின் சசிக்குமார் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.

சிகாகோ




சிகாகோ அருகில் உள்ள ப்ராஸ்பெக்ட் ஹெய்ட்ஸ் (Prospect Heights) எனும் நகரில் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 28.09.2017 அன்று தந்தை பெரியார் பன்னாட்டு மய்யச் செயலாளர் அருள்செல்வி பாலு அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் நந்தலாலா தங்களின் உரையினை பகிர்ந்திருந்தனர். தோழியர் வினோப்ரியா கவிதை வாசித்தார். தோழர்கள் வ.ச. பாபு, சோம. வேலாயுதம், கலைச்செல்வி, பொன்மலர்,  தமிழ்மணி, வீரசேகர், ஆனந்தன், ராஜேஷ் சுந்தர்ராஜன், சுதாகர், அறிவரசன், அன்பழகன் தம்பதியர், ரத்தினகுமார், பாலசுப்ரமணியன் நடராசன், சுரேஷ், சாந்தகுமாரி, ரவிக்குமார் வைத்தியலிங்கம், யாழினி, செல்வன் பிரபாகரன், மணி குணசேகரன், ரமேஷ் பாப்பண்ணன், முத்துவேல், ரத்தினசாமி, ஸ்கந்தகுமார், சரவணக்குமார், பாலு உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

அமெரிக்கா  கனெக்டிகட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா 30.09.2017 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழர்கள் சுரேஷ் (வரவேற்புரை) சபரீஷ், பிரபு. ராமகிருஷ்ணன், சிவப்பிரியா, அஜோய்(வினாடி-வினா), வழக்குரைஞர் கனிமொழி, மருத்துவர் சரோஜா இளங்கோவன், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் சாக்ரடீஸ் (நன்றியுரை) ஆகியோர் உரை ஆற்றினர்.

தென் ஆப்பிரிக்க கானாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

பன்னாட்டளவில் அதிகாரமளித்தல் மற்றும் மனிதநேயம், சமத்துவம் வழிகளில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் கானாவில் தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் தலைவர் கே.சி.எழிலரசன், துணைத் தலைவர் அலுவலகப் பிரதிநிதிகள், அனைத்து நாடுகளின் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒவுசு அன்சா, புளூ கிரெஸ்ட் கல்லூரியில் பணியாற்றும் இந்திய பேராசிரியர்கள், கல்வி மற்றும் மதிப்பீடுகள் தலைவர் முனைவர் பாலமுருகன், பேஷன் டிசைன் துறைத் தலைவர் ராஜேஷ்குமார், கல்வி விவகாரங்களுக்கான உதவிப் பதிவாளர் சதீஷ்குமார், பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் வளர்ச்சிப் பணிகளில் பணியாற்றி வரும் டாக்டர் சுலமனா ஆகியோரும், பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் உதவியுடன் பொறியியல் கல்வி பயின்று வரும் மாணவர்களும் உரையாற்றினார்.


சிங்கப்பூர்   




சிங்கப்பூர் சையத் ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தின் அரங்கில் தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழா வீ.கலைச்செல்வம் (தலைவர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் க.பூபாலன் வரவேற்று அறிமுக உரையாற்றினார். சவுந்தர்ராஜ் நன்றி கூறினார். “பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயரவில்லை’’ எனும் தலைப்பில் பிமல் ராம் அவர்களை நடுவராகக் கொண்டு மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. மன்றத்தின் புரவலர் புதுமைத்தேனீ மா.அன்பழகன், பொருளாளர் நா.மாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

பினாங்கு

பினாங்கு மாநிலத்தில் மலேசிய திராவிடர் கழக மாநிலத் தலைவர் ச.த.அண்ணாமலை தலைமையில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. தந்தை பெரியார் படத்தை மலேசிய இந்திய காங்கிரசின் டத்தோ ஜெ. தினகரன் திறந்து வைத்து உரையாற்றினார். அறிவம்மை தமிழ்வாணன், கலைமகள் சின்னகருப்பன் ஆகியோர் பெரியார் எழுச்சிப் பாடலை பாடினர். கழகத்தின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் மு.முரளி, உதவித் தலைவர் சே.குணாளன், சா.வடிவேலு, டாக்டர் அபிப் ரகுமான், இரா ப.தங்கமணி, ஜூரு இராசகோபால் ஆகியோர் பெரியார், அண்ணா குறித்து உரையாற்றினர்.

மலாக்கா

மாநில தேகேல் பொது அரங்கில் ம.தி.க மாநில துணைத் தலைவர் கு.பீட்டர் தலைமையில் பெம்பான் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ எங் சூன் கூன் அவர்களின் சிறப்பு அதிகாரி புவான் சித்தி சலேகா, ம.தி.க பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் ஆகியோர் உரையாற்றினர்.

சிலாங்கூர்

சிலாங்கூர் மாநில இளைஞர், மகளிர் ஏற்பாட்டில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் கு.கோபி அவர்கள் தலைமையில் நாடகம், கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் மாணவர்கள் படைத்தனர். கழகத்தின் தேசியத் தலைவர் எப். காந்தராஜ் சிறப்புரை ஆற்றினார்.

தைவானில் பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைக் குரல்

தைவான் தமிழ்ச் சங்கத்தின் 4ஆம் ஆண்டு விழா இலக்கிய அமர்வு 26.12.2017 அன்று நடைபெற்றது. அதில் ‘பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் தேசிய சிங்ஹுவா பல்கலைக்கழத்தின் முனைவர் பட்ட மாணவி செல்வி பவித்ரா ஸ்ரீராம் பேசினார். அவர் தன் உரையின் தொடக்கமாக பேசிய பெரியாரின் அறிமுகம் சற்று புதுவிதமான தொனியில் இருந்தது. அது “தமிழ்நாடு சான்றோர் பலரை நம் நாட்டிற்காக கொடுத்தாலும் அதில், நாட்டிற்காக வாழ்ந்தவர் பலர்; மொழிக்காக வாழ்ந்தவர் பலர்; ஆனால் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளை வேரறுத்தவர்கள் சிலரே, அவர்களுள் ஒருவர்தாம் பெரியார். பழந்தமிழ்சமுதாயத்தில் மதிக்கப்பட்ட பெண்கள் பிற்காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பெரியார் பெண்ணின் விடுதலைக்காகவும் போராடியது நாம் அறிந்ததே’’ என்று கூறி மேலும் அவர் - பெரியாரின் பெண் விடுதலைக்கான சிந்தனைகள் பலவற்றை எடுத்துரைத்தார்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி கலைஞர் மாளிகையில் தலைவர் பெ.கணேசன் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. செயலாளர் இ.அந்தோணி வரவேற்புரையும், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்க உரையும் ஆற்றினர். பொருளாளர் அ.கண்ணன், பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்கள், தமிழ் லெமூரியா இதழாசிரியர் சு.குமணராசன் ஆகியோர் உரையாற்றினர். செ.ரோபின் நன்றி கூறினார்.

பெங்களூரு




பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ வரவேற்புரையும், பெரியார் நகர் பகுதி தலைவர் பொ.பாண்டியன் கழகக் கொடியை ஏற்றி வைத்தும், தந்தை பெரியார் படத்தினை ஓசூர் சி.தேவனும், அறிஞர் அண்ணா படத்தினை ராஜரத்தினாவும் திறந்து வைத்தும் உரையாற்றினர்.

‘நீட்’ தேர்வினை எதிர்த்து முதுபெரும் பெரியார் தொண்டர் முதுசெல்வன் அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.க வெளியீட்டு செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் சிறப்புரையினையும்  ஆற்றினர். மாநில துணைச் செயலாளர் வே.நடராசன் நன்றியுரை ஆற்றினார்.

கேரளா

வைக்கம்  தந்தை பெரியார் நினைவகத்தில் சேர்தலா அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் இரா.சு.பாஸ்கர், மனோரஞ்சித், மணிகண்டன்,சிலம்பரசன், ரஞ்சித் ஆகியோர் தந்தை பெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா

ஜி.டி.சாரய்யாவை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் பிரஜா நாஸ்திக சமாஜம் சார்பில் ஆந்திராவின் ராயலசீமா மற்றும் தெலுங்கானாவின் விசாகபட்டினம், கரீம் நகர், உசாராபாத், பெல்லம்பள்ளி, வாராங்கல் மாவட்டங்களில் பவேறு கிராமங்களில் பெரியார் பிறந்த நாள் விழாவினை தெருமுனையில்  கொண்டாடினர்.

விசாகபட்டினம்




செப்டம்பர் 15,16,17 தேதிகளில் இந்திய நாத்திக சங்கம் சார்பில் விசாகபட்டினம் அம்பேத்கர் பவனில் பொதுக்கூட்டம், பேரணி, பெரியார், அறிவியலுக்கான ஓட்டம் என நிகழ்ச்சிகள் நடந்தேறின. இந்திய நாத்திக சங்கம் மற்றும் அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் ஜெயகோபால் ஒருங்கிணைப்பில் பாஸ் அமைப்பு, தாழ்த்தப்பட்ட பெண்கள் அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றன.

மேலே காட்டியவை சில நிகழ்வுகள் மட்டுமே. இதுபோன்று எத்தனையோ எழுச்சிமிகு நிகழ்வுகள் உலகெங்கும் ஒவ்வொரு நாளும் நடந்தவண்ணம் உள்ளன என்பதே உண்மை.

காரணம், பெரியார் ஒரு குறிப்பிட்ட இனம், மொழி, நாடு, பண்பாட்டுக்கு உரியவர் அல்ல அவர் உலகம் உய்ய, உலகில் சமத்துவம் நிலைபெற, மனிதம் தழைக்க, மனித உரிமை காப்பாற்றப்பட பாடுபட்ட, போராடிய, புரட்சி செய்த உலகத் தலைவர்! அவர் உலகெங்கும் பரவுவார், பயன்படுவார்.

- மஞ்சை வசந்தன்

- உண்மை இதழ், 16-30.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக