வியாழன், 4 அக்டோபர், 2018

மலேசியா அரசு தமிழ்ப் பள்ளியில் 140ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா



கிள்ளான், அக்.2 பெரியார் பெரிதும் விரும்பிய மலேசியா லெட்சுமி தோட்டத்தில், பிறந்தநாள் விழா நினைவு மய்யம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மலேசியா, கிள்ளான் நகருக்கு அருகில் லெட்சுமி தோட்டம் என்று அழைக்கபட்ட புக்கிட் ராஜா நகரில் அமைந்துள்ள அரசு தமிழ்ப்பள்ளியில் பெரியார் பிறந்தநாள் வெகு சிறப்பாக, பரிசுகள், நூல்கள், பெரியார் பிஞ்சு இதழ்கள், இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. பெரியார் தமிழர்க்காக மட்டுமின்றி உலக மனித குலத்திற்கே வழிகாட்டிய சிந்தனையாளர் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.மல்லிகா தமது உரையில் கூறினார். திராவிட இயக்க பணியாளரும் தோட்ட தொழில்துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார். பெரியார் 1954இல் இங்குள்ள மக்களை சந்தித்து மன மகிழ்வோடு உரையாடி அறிவுரை வழங்கியதை நினைவு படுத்தினார். வரலாறை பதிவு செய்ய பெரியார் மய்யம் விரைவில் அமைக்கப்படும், பள்ளியின் நிர்வாகம் இந்த வேண்டுகோளை ஏற்றுகொண்டுள்ளது என அறிவித்தார். இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும், பெரியார் பெருந்தொண்டர்கள், கோ.ஆவுடையார், கு.கா.இராமன், கு.கிருட்டிணன் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 2.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக