சனி, 7 நவம்பர், 2015

கடவுள் மறுப்பாளர் இங்கர்சால்




- வழிகாட்டி
இறை மறுப்பில் இவ்வுலகில் இணையில்லா புகழ்பெற்றவர் இங்கர்சால். ஜூலை 21 அவரது நினைவு நாள்.
நியூயார்க்கில் பாதிரியார் ஒருவரின் மகனாகப் பிறந்து, பைபிள் மற்றும் மதத் தொடர்பானவற்றை நுட்பமாகக் கற்று, ஆய்வு செய்து, தெளிந்தவர்.

தன்னைப் போலவே தன் மகனும் மதப் போதகராக பணிபுரிய வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசை. அதற்கு அவரைத் தயார் செய்தார். ஆனால், தந்தையின் முயற்சியால் தனக்குக் கிடைத்த மதம் சார்ந்த செய்திகள் மூலம் இவர் இறை மறுப்பாளராக மாறினார்.
மதம் சார்ந்தவற்றை முழுவதும் கற்றுத் தேர்ந்ததால் அவரின் கருத்துக்களை எவராலும் மறுக்க இயலவில்லை. மதவாதிகள் இவரது புரட்சிச் சிந்தனைகளைக் கேட்டு மருண்டனர்.
நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் சண்டைகளும் துன்பங்களும் ஒழிந்து, நாட்டில் நிரந்தர ஒற்றுமையும் நன்மையும் நிலவ, மக்களைப் பிடித்தாட்டும் மதவெறி, மூடநம்பிக்கைகள், கண்மூடி வழக்கங்கள் நீக்கப்பட வேண்டும். அந்த அளவிற்கு மக்களுக்கு உண்மைகள், சரி, தவறுகள், விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட வேண்டும் என்று அரிய சொற்பொழிவுகள் பல ஆற்றினார்.
மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்றால், அவர்களுக்குள் போர்களும், இரத்தச் சிந்தல்களும், மூட வெறிச் செயல்களும், குரோத பகை உணர்வுகளும்  ஏன் படைத்தார்?
பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்படும் கொடுமையை ஏன் உருவாக்கினார்? என்று பல அறிவார்ந்த கேள்விகளின் மூலம் மக்களைச் சிந்திக்கச் செய்தார்.
பாதிரியார்களின் ஞானஸ் _னானம் பற்றி கருத்துக் கூறிய இங்கர்சால், என்னைப் பொருத்தவரை ஞானஸ்னானம் என்பது சுத்தமாகக் குளிப்பதுதான். அது பாதிரியார்கள் கூறும் ஞானஸ்னானத்தை விடச் சிறந்தது என்றார்.
தனது வழக்கறிஞர் தொழிலின் மூலம் ஈட்டிய பொருளையெல்லாம் பொதுமக்களின் பணிக்கே செலவிட்டார்.
உலகப் பிரளயக் கதை சொன்ன மோசோயைவிட டார்வின் சொன்ன பரிணாமக் கோட்பாடு மேலானது, சரியானது என்பது என் கருத்து என்று கூறி மதத்தை ஆட்டங் காணச் செய்தார்.
மத நூல்களை எழுதின எல்லோரையும்விட, ஹெக்கேல், ஹக்ஸ்லி, டின்டால் முதலிய அறிஞர்களின் எழுத்துக்கள், பூமியைப் பற்றி, வின்வெளியைப் பற்றி, மனித உடல்பற்றி, வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்னை ஈர்க்கின்றன என்றார்.
இவரது சிந்தனைகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நூல்களாக வெளியிட்டுள்ளது. இங்கர்சால் பெரியார் போன்றோரை இளந் தலைமுறையினர் தேடித்தேடி அறிந்து தெளிவும், ஊக்கமும் பெற்று உயரவேண்டும்!

உண்மை இதழ்,1-15.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக