ஞாயிறு, 15 நவம்பர், 2015

சுயமரியாதை இயக்கத்தின் நீதி வாக்கியங்கள்!


1) அறிவைக் கெடுப்பது ஆத்திக மதமே.
ஆலயம் தன்னை அப்புறப் படுத்து.
இந்து மதத்தால் இடுக்கண் விளையும்.
ஈசன் என்பது மோசம் செய்வது.
உண்மைத் தெய்வம் உலகுயிராகும்.
ஊக்கம் என்பது உயிரினும் பெரிது.
என்றும் மக்களை ஒன்றாய்க் கருது.
ஏழை மக்களை ஏறிட்டு நோக்கு.
அய்யம் தெளிந்து செய்வன செய்க.
ஒற்றுமை இருப்பின் உலகு செழிக்கும்.
ஓதியுணர்ந்து நீதியைக் கைக்கொள்
அவ்வை வாக்கிலும் ஆராய்ந்து செய்க.

2) கல்லுத் தெய்வம் பொல்லாங்கு செய்யும்.
காசை வீணாய்க் கரியாக்காதே.
கிழிந்த பஞ்சாங்கம் ஒழிந்தால் நன்று.
கீழ்மைக் குணத்தை வாழ்விலகற்று.
குற்றம் களைவர் கற்றுணர்ந்தவர்கள்
கூற்றுவர் நமக்குக் கொடும் பார்ப்பனரே.
கெதியிழந்தாலும் மதியிழக்காதே.
கேள்வி ஞானம் வாழ்வில் நல்லது.
கைம்பெண் துயரம் கடிதில கற்று.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளு.
கோவில் நாட்டைக் கேவல மாக்கும்.

3)    சமத்துவம் நிறைந்தால் சமூகம் முன்னேறும்.
சிக்கன வாழ்க்கை கைக்கொள்வாயே
சீற்றம் ஒழிந்தால் ஏற்ற முறலாம்.
சுயமரியாதையே சுதந்திர வாழ்வு.
சூது நிறைந்தது வேதமென்றறிந்துகொள்.
செத்தவருக்குத் திதி கொடுக்காதே.
சேத்திரமென்று செலவு செய்யாதே.
சொர்க்கம் என்பது துட்டுப் பறிப்பதே,
சோதிடமகற்றின் நீதிடம் பெறலாம்.

4) தண்ணீர் யார்க்கும் தரணியில் சொந்தம்.
தாழ்ந்தவரென்று ஜாதியிலில்லை.
திருவிழா, மனிதரைத் தெருவில் விடுவதே
தீர்த்தமென்று நீ திரிந் தலையாதே.
துக்கமென்பதை இக்கணம் அகற்று.
தூய மனத்தால் தீயவை அகற்று.
தெய்வத்தை நினைத்து உய்வது கெடுதி.
- குடியரசு (30.3.1930)
விடுதலை,5.10.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக