சனி, 7 நவம்பர், 2015

அமெரிக்க மனித உரிமைச் சங்க திட்ட இயக்குநர் பிரட்எட்வர்டு உரை!-துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!

அமெரிக்காவில் பெரியார் கொள்கை பரவலுக்கு உதவிடத் தயார்!
அமெரிக்க மனித உரிமைச் சங்க திட்ட இயக்குநர் பிரட்எட்வர்டு உரை!
மேரிலாண்டில் நடந்த தந்தை பெரியாரும் மனிதநேயமும் நிகழ்வில் எழுச்சி! முனைவர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனுக்கு முனைவர் அரசு செல்லையா நினைவுப் பரிசு வழங்கினார்.

அமெரிக்கா - மேரிலாண்ட் மாநிலத்தின் லாரல் சேவஜ் நூலகத்தின் அய்ன்ஸ்டீன் கருத்தரங்க அறையில் நடைபெற்ற தந்தை பெரியாரும் மனித நேயமும் எனும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியோர் (31.10.2015)
வாசிங்டன், நவ. 6- வாசிங்டன் வட்டார பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் அமெரிக்கா - மேரிலாண்ட் மாநிலத்தின் லாரல் சேவஜ் நூலகத்தின் அய்ன்ஸ்டீன் கருத்தரங்க அறையில் 31.10.2015 அன்று நண்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தந்தை பெரியாரும் மனித நேயமும் எனும் சிறப்பு நிகழ்ச்சி பேராசிரியர் அரசு செல் லையா தலைமையில், பெரியார் பன்னாட்டு மய்ய இயக் குநர் டாக்டர் சோம.இளங்கோவன் முன்னிலையில் நடை பெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்க மனித உரிமை சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ராய் ஸ்பெக்கார்ட், அமெரிக்க மனித உரிமை சங்கத்தின் திட்ட இயக்குநர் ஃபிரட் எட்வர்டு, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், இந்திய மனித உரிமை எழுத்தாளர் டாக்டர் இன்னையா நாரிசெட்டி ஆகியோர் பங்கேற்றனர். ராய் ஸ்பெக்கார்ட், ஃபிரட்எட்வர்டு ஆகியோர் ஆங்கிலத்திலும் முனைவர் துரை.சந்திர சேகரன் தமிழிலும் உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி, வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன், பேராசிரியர் அரசு செல்லையா ஆகியோர் சிறப்பு செய்ததுடன் - அறிமுக உரையும் ஆற்றினர். தோழியர் பூஜா செல்வம் பெரியார் ஒருவர்தான் பெரியார், தமிழுக்கும் அமுதென்று பேர் ஆகிய பாடல்களை கேட்போரை ஈர்த்திடும் வகையில் சிறப்பாகப் பாடினார்.
இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் - ஏன்? என்பதை விளக்கி ஆங்கிலத்தில் டாக்டர் சோம.இளங் கோவன் உரையாற்றினார். டாக்டர் ஆர்.பிரபாகரன் தமிழ் சமுதாயமும் மனித நேயமும் எனும் தலைப்பிலும், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளர் மணிகுமரன் மனித நேயம் செழிக்க பெரியாரின் பங்கு என்பது பற்றியும் கருத்துரையாற்றினர்.
டாக்டர் இன்னையா பிறந்த நாள்
விழாவில் பங்கேற்ற டாக்டர் இன்னையா நாரிசெட்டி பிரபல மனித உரிமை எழுத்தாளர். அவரின் பல நூல்கள் வாசிங்டன் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. ரிச்சர்ட் டாகின்ஸின் ‘The God Delusion’ என்ற நூலினை தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். சிறந்த பத்திரிக்கையாளர். சீரிய மொழி பெயர்ப்பாளர். அவரின் பிறந்த நாளினை ஒட்டி விழாவில் கேக்வெட்டி கொண் டாடும்படியான ஏற்பாடும் செய்யப்பட்டு நிறைவேறியது. அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.
நூல் அறிமுகம்
அமெரிக்க மனித உரிமை சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ராய் ஸ்பெக்கார்ட் எழுதிய “Creating Change through Humanism” எனும் நூலின் கருத்தினை ஒட்டியே தமது உரையை கேள்வி - பதில் முறையில் நிகழ்த்தினார்.
மனித நேயம் என்றால் என்ன? மனித நேயத்துடன் செயல்பட கடவுளும் சமயமும் துணை நிற்கின்றனவா? எவ்வளவு காலமாக நீங்கள் மனித நேயம் - பகுத்தறிவின் இன்றியமையாமையை உணர்ந்திருக்கின்றீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை பார்வையாளர்களைப் பார்த்து விடுத்தார் ராய் ஸ்பெக்கார்ட்.
அவையோரில் பலரும் ஊக்கத்துடனும் உற்சாகத்து டனும் பதில் அளித்து நிகழ்வை சுவையாக்கினர். மூன்று தலைமுறைகளாக நாத்திகர்களாக, பகுத்தறிவாளர்களாக இருப்பதைக் கேட்டு அவர் வியந்தார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வாழ்நாள் தொண்டே இதற்குக் காரணம் என்பது அவருக்கு அவையோரால் சொல்லப்பட்டது. அது கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
பகுத்தறிவும் மனித நேயமும் விரைந்து பரவிடும் ஆற்றல் வாய்ந்தது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் அவர் விளக்கினார். மாந்த நேயம் மற்றும் பகுத்தறிவுத் தொண்டு செய்வோருக்கு, கருத்தளிப்போருக்கு மதச்சார் பாளர்களால் உலகமெங்கும் ஏற்பட்டுவரும் ஆபத்தினை விவரித்தார். வங்க தேசத்தில் மனித உரிமைகள் பற்றிப் பேசுவோர் - எழுதுவோர் கொல்லப்பட்ட செய்தியையும் சுட்டினார்! அவரின் நூல்கள் பலராலும் வாங்கப் பெற்றன.
பெரியார் கொள்கை பரவலுக்கு உதவிடத் தயார்!
அமெரிக்காவின் மனித உரிமை சங்கத்தின் திட்ட இயக்குநர் ஃபிரட் எட்வர்டு பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை நன்னெறி காரணகாரிய தேடல், மனித நேயம் - ஒரு உலகப் பார்வை எனும் தலைப்பில் சீரிய உரை யாற்றினார். அவர் தமது உரையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனிதநேயம், பகுத்தறிவு இவற்றை முன்னிறுத்தும் அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் தாம் பங்கேற்றதை நினைவு கூர்ந்ததுடன், அவற்றில் தமது அனுபவங்களையும் விளக்கினார். உலகளாவிய அளவில் பகுத்தறிவாளர்களும், மனிதநேயர்களும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பகுத்தறிவாளர் கள், மனித நேய ஆர்வலர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவும், கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் வேண்டும் என்றார். சமயச் சார்பாக கூடுவோரைப் போல், நாமும் வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ கூடி மகிழ வேண்டும் என்றார். கலைநிகழ்ச்சிகள் போன்ற உத்திகளை கருத்துப் பரவலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதன் மூலம் திட்டங்கள் தீட்டப்பெறவும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், செயல்படுத்திடவும், ஆய்வுக்கு அதனை உட்படுத்திடவும் சாத்தியமாகும் என்றார். பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவில் இன்னும் பலராலும் அறியப்பட தன்னாலான உதவிகளைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
பிரட் எட்வர்டு அனுப்பிய செய்தி
நிகழ்ச்சி முடிந்து சென்ற பிறகு பேராசிரியர் அரசு செல்லையா அவர்களுக்கு ஃபிரட் எட்வர்டு அனுப்பிய செய்தியில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளமை பாராட்டுவதற்குரியதாகும். செய்தி வருமாறு: தாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்தித்ததில், நிகழ்வில் பேசியதில் நான் பெருமகிழ்வு அடை,கிறேன். நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வாசிங்டன் டி.சி பகுதியில் இவ்வளவு பெரியார் பற்றாளர்களைக் கொண்ட அமைப்பு இருப்பதுபற்றி நான் அறியவில்லை. உங்கள் அமைப்புக்கு ஏதாவது இணையதளம் உள்ளதா? எப்படி உங்கள் அமைப்பை செயல்படுத்துகிறீர்கள், உறுப்பினர்கள் எவ் வாறு சேர்க்கிறீர்கள்? பெரியாரைப் பற்றி - பெரியார் கொள்கைப்பற்றி வெகு பேர்கள் தெரிந்து கொள்ள நான் உதவிடத் தயாராக உள்ளேன். நான் வெகு ஜன தொடர்புள்ளவன். அமெ ரிக்க மனித உரிமை சங்கத் தின் மூலம், யுனைடெட் கொய்லேஷன் ஆப் ரீசன் அமைப்பு மூலமும் பொது மக்கள் தொடர்பு பணிகள் செய்துள்ளேன். அதனால் வெற்றியும் ஈட்டி உள்ளேன். உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை தர தயாரா யுள்ளேன். உங்கள் அமைப்பு வெற்றிபெற, மலர்ச்சி அடைய நான் வாழ்த்து கிறேன் என்று குறிப்பிட் டுள்ளார்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
நிகழ்வின் இறுதியில் தந்தை பெரியாரின் தத்துவங் களும், சமுதாயத் தொண் டும் எனும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஒரு மணி 10 நிமிடம் சிறப்புரையாற்றினார். அவருக்கு நினைவுப் பரிசினை விழாக்குழு சார்பில் பேராசிரியர் அரசு செல்லையா வழங்கினார். திராவிடர் கழக சார்பில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பயனாடை மற்றும் சிறப்பாடைகளை பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன், தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் சிவசைலம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி, பேராசிரியர் அரசு செல்லையா ஆகியோருக்கு அணிவித்து பாராட்டைத் தெரிவித்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் டாக்டர் சரோஜா இளங்கோவன், மீனா செல்லையா, கீதா பிரபாகரன், ராஜிசெல்வம், செல்வம், தமிழ்ப் பள்ளி நிர்வாகிகள் ராசாராம், மகேந்திரன் பெரியசாமி, சுந்தர், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை குழந்தைவேல், ராமசாமி, சித்தானந்தம், எழில்வடிவன், அறிவுப் பொன்னி, கலைச்செல்வி சந்திரசேகரன், மெய்யப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்க முன்னாள் நிர்வாகி மயிலாடுதுறை சிவா நன்றி கூறினார்.
-விடுதலை,6.11.15


பார்வையாளர்களைக் கவர்ந்த ஒலி- ஒளி - வினாடி வினா
மேரிலாந்து, செப். 22- அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள் வழக்கம் போல் இந் தாண்டும் சீரும் சிறப்புமாக பல்வேறு சிறப்பு அம்சங் களுடன் நடைபெற்றது.
வாசிங்டன் அருகே உள்ள மேரிலாந்து, லாரல் நகரில் உள்ள நூலகத்தில் தந்தை பெரியார் விழா நிகழ்ச்சிக்கு, வாசிங்டன், மேரிலாந்து, விர்ஜெனியா, பென்சில்வேனியா போன்ற பெரும் நகரங்களில் இருந்து தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
இந்த ஆண்டின் மிகச் சிறப்பு என்னவென்றால் தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பொதுச்செய லாளர் மானமிகு முனை வர் துரை. சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண் டும், விழாவில் பெரியார் நமக்கு ஏன் இன்றும் தேவை என்பதை மிக எளிமையாக, நுண்மைமாக, விரிவாகத் தமிழ் அன்பர் களிடம் பகிர்ந்து கொண் டதாகும்."
தந்தை பெரியார் காலம் முழுக்க எதிர் நீச்சல் போட்டவர் என்பதை பல எடுத்து காட்டுகளுடன் விளக்கினார். தந்தை பெரியார் அவர்கள் தனது சமுதாய பணி என்பது இமயமலை வெயிலில் காய்கிறது என்பதற்காக குடை பிடிப்பது போன்ற செயல் என்பாராம். தனது மக்கள் பணி என்பது சறுக்கு மரத்தில் ஏறுவ தற்கு ஒப்பான பணி என்றும் சொல்வாராம்.
மனிதனுடைய அடிப்படைப் பிரச்சினை ஜாதி, மதம், கடவுள் என்ப தால் அதனை தொடர்ந்து எதிர்த்துப் போராடிய மிகப் பெரும் போராளி தந்தை பெரியார். 1967 ஆம் ஆண்டு திருவாரூர் அருகே உள்ள விஜயபுரத் தில் நடந்த பயிற்சி முகா மில் கடவுள் மறுப்பு தத்து வத்தை உலகிற்கு வழங்கினார்.
ஏதென்ஸ் நகரத்து சாக்ரடீஸ் எப்படி இளை ஞர்களை சிந்திக்கத் தூண் டினாரோ? அப்படி தந்தை பெரியார் தமிழக இளை ஞர்களை ஆழமாகச் சிந் திக்க தூண்டினார். தமிழக மக்களின் வாழ்வியில் நெறிகளைத் தூண்டியவர் தந்தை பெரியார். 1927 ஆம் ஆண்டு குடும்ப வாழ் வியல் பற்றியும், குடும்பக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் பேசியவர். கர்ப்ப ஆட்சி என்ற நூலை வெளியிட்ட வர். ஓர் ஆணும், பெண் ணும் மனம் ஒத்து திரு மணம் செய்து கொள்வதை யும், மணமகளை வாழ்க்கை துணைவர் என்றும் சொன் னவர் பெரியார், வாழ்க்கை இணையர் வாழ்வின் உயர் விற்கு மிக முக்கியம் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
தாய் மொழியில் திருமணங்கள்
திருமணங்கள் நமது தாய் மொழியில் நடை பெற வேண்டும் என்பதை யும், நமது இனத்தின் மேம்பாட்டை வலியுறுத் துவதாக திருமணங்கள் இருக்க வேண்டும் என்ப தையும் சொன்னவர் தந்தை பெரியார். அதன் காரணமாகவே சுயமரி யாதைத் திருமணங்கள் நடை பெற வேண்டும் என்று புது முறையை வகுத்துக் கொடுத்தவர் தந்தை பெரியார். இதன் மூலம் தமிழகத்தில் பண் பாட்டுப் புரட்சி ஏற்பட் டது. அந்த காலகட்டத் திலேயே தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார். தமிழில் பெயர் வைப்பதால் ஒரு இனத்தின் மாண்பு காக் கப்படுகிறது என்பதையும் தந்தை பெரியார் சொல்லி யுள்ளார். அவமானமான  பெயர்களையே பொருள் உணராமல் பெருமையாக வைத்துக்கொள்வதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.
இப்படிப் பெயர் மாற் றத்தின் காரணமாகவே நாராயணசாமி நெடுஞ் செழியன் ஆனார், சோம சுந்தரம்-மதியழகன் ஆனார், ராமய்யா - அன்பழகன் ஆனார், தண்டபாணி-இளம்வழுதி ஆனார், சின்னராஜ்-சிற்றரசு ஆனார் என்பதை துரை. சந்திர சேகரன் எடுத்துரைத்தார்.
தந்தை பெரியார் இதி காசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதங்களில் உள்ள தவறுகளை சுட்டிக் காண்பித்தும், திருக்குறளின் பெருமைகளையும் தமிழர் களிடையே பரப்பியவர். தமிழ்நாட்டில் முதன் முதலில் திருக்குறளிற்கு மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார். நல்ல கருத்துக் கள் திருக்குறளில் ஏராள மாக உள்ளன. அதை விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக வேதங் களில் மற்றும் இதிகாசங் களில் நல்ல கருத்துக் களைத் தேடுவது என்பது-மலத்தில் அரிசி பொறுக்கு வதற்கு ஒப்பானது என்று கூறினார். அதே நேரத்தில் தந்தை பெரியார் திருக் குறளில் உள்ள பெண் அடிமை குறள்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது
1950களில் குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த இராஜாஜியைக் கடுமை யாக எதிர்த்து போராடி அந்த திட்டத்தை முறி யடித்து, காமராசரை முதல் அமைச்சர் ஆக்கிய சம்ப வத்தை நினைவு கூர்ந்தார்.
தந்தை பெரியார் மானு டப் பற்றை மிகவும் விரும் பியவர், ஆகையால் தான் கடவுளை மற மனிதனை நினை என்றார்.
தந்தை பெரியார் இறந் தவுடன் கவிஞர் கண்ண தாசன் அவர் இல்லை என்றால் நாட்டில் அறி வில்லை, ஆக்கமில்லை... அவர் இல்லை என்றால் நாட்டில் அறிஞர்தாம் பிறப்பதில்லை'' என்று குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் மிகப் பெரும் சீர்திருத்தவாதி என்பதை மிக அருமையாக உரையாற்றி தெளிவாக் கினார் மானமிக துரை சந்திரசேகரன்.
மருத்துவர் சோம. இளங்கோவன்
தந்தை பெரியாரின் விழாவை சீரும் சிறப்புமாக ஆண்டு தோறும் நடத்தி வரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் மருத்துவர் சோம இளங்கோவன் மிக பாராட்டுக்குரியவர். விழாவில் பேசிய ஒவ்வொருவரையும் வரவேற்று அறிமுகப் படுத்தி அவர்களை பேச அழைத்தார். மானமிகு
ஆசிரியர் அவர்களின் தலைமையில் பல புதிய திட்டங்களுடன் பெரியார் வலைக்காட்சி,பண்பலை மற்றும் தங்கள் உழைப்பை அர்ப்பணித்து 350க்கும் மேல் திராவிட விழிப்புணர்ச்சி மாநாடுகள், பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டிகள், பெரியார் பயிற்சிப் பாசறைகள், கருத்தரங்கங்கள் தமிழகமெங்கும் நடந்து வருவதை அனைவர்க்கும் மருத்துவர் சோம. இளங்கோவன் எடுத்துரைத்தார். அவரது வாழ்விணையர்  மருத்துவர் சரோஜா அவர்களும் தந்தை பெரியார் பற்றியும் முக்கியமாக, தந்தை பெரி யாரின் மிக முக்கிய கனவு  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதைப் பகிர்ந்து கொண்டார். பெண்களுக்கு நாம் பெரியார் கருத்துக்கள் எப்படி வாழ்வில் நம்மை உயரவைக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். பெரியார் பொன்மொழிகளை குழந்தைவேல் ராமசாமி, மீனா செல்லய்யா, ஜெயந்தி சங்கர், கல்பனா மெய்யப்பன் எடுத் துரைத்தனர். கவிஞர் பன்னீர்செல்வம் பெரியார் பற்றிய கவிதையைப் பாடினார்.
ஒலி- ஒளி - வினாடி வினா
மேரிலாந்தில் நடை பெற்ற விழாவில் மற்றொரு மிக முக்கியமான சிறப்பு , வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க தலைவர் சுந்தர் குப்புசாமி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், தமிழ் நாடு அறக்கட்டளைத் தலைவர் சிவசைலம் மூவரும் மற்றும் முன்னாள் பேரவைத் தலைவர் முனைவர் அரசு செல்லையா, முன்னாள் வாசிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் மயிலாடுதுறை சிவா கலந்து கொண்டும், விழாவில் தந்தை பெரியார் பற்றி நல்ல பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். வாசிங்டன் வட்டார பிரபல வலைப் பதிவர், சமுதாய மாற் றத்தை விரும்பும் முனைவர் சங்கர பாண்டி, தந்தை பெரியாரின் தன்னல மற்ற கருத்துகளை, அவரின் கடும் பணியை கணினித்துறை சார்ந்த இளை ஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்  என்பது மிக முக்கியம் என்று சொன்னார்.
விழாவில் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியாக பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர் வினாடி வினா மூலம் தந்தை பெரியாரின் முக்கியமான சமுதாய மாற்ற பணிகள் மற்றும் நீதிக்கட்சி  மூலம் நடைபெற்ற சமுதாய மாற்றத்தை சட்டம் மூலம் மாற்றியதை பார்வையாளர்கள் கவரும் வண்ணம் பகிர்ந்து கொண்டார். நாஞ்சில் பீட்டரின் இந்த ஒலி/ஓளி வினாடி வினா பரவலாக பலரையும் கவரும் வண்ணம் இருந்தது. அவர் தந்தை பெரியாரின் கருத்துகள் உலக மக்கள் அறியும் வண்ணம் பல மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றார்.
விழாவில் அனைவரையும் வாசிங் டன் தமிழ்ச் சங்க தலைவர் சுந்தர் குப்புசாமி வரவேற்றுப் பேசினார். விழா விற்கு  வந்த அனைத்துத் தரப்பு மக்க ளுக்கும் முனைவர் அரசு செல்லையா நன்றி தெரிவித்தார்.
நூல்கள் அறிமுகம்
அண்மையில் வெளியிடப்பட்ட 37ஆவது பெரியார் களஞ்சியம் திருவள்ளுவர்-திருக்குறளும், மற்றும் இங்கர்சால் நூலும் அறிமுகம் செய்யப்பட்டன. பலரும் நூல்களை வாங்கினார்கள். புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஈ.வெ.ரா. என்னும் நான்" வீடியோக் காட்சி ஒளிபரப்பப்பட்டது
செய்தி: மயிலாடுதுறை சிவா / மருத்துவர் சோம இளங்கோவன்
-விடுதலை,22.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக