தனது தந்தையாரைப் பற்றி அவரது மகள் பிராட்லா பானர் இப்படி எழுதினார்.
Without god he lived, and without god he died -கடவுளின்றியே அவர் வாழ்ந்தவர். கடவுளின்றியே அவர் மறைந்தும் போனார் என்று எழுதினார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் திற்குத் தேர்வு செய்யப் பட்டார். ஆனாலும் அந்நாடாளுமன்றத்தின் மரபுக்குத் தலை குனிய மறுத்தார். அதுதான் கடவுள் பெயரால் பதவிப் பிரமாணம் எடுப்பது என்ற நிலை. அதனால் அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், கொஞ்சம்கூட ஊக்கம் தளரவில்லை; இரண்டு முறை தேர்தலில் தோல்வி கண்டு மூன்றாம் முறையாக நார்த் ஹாட்டன் தொகுதியில் வெற்றி பெற்று கம்பீரமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந் தார். இப்பொழுது அவர் கொள்கையில் வெற்றியும் பெற்றார்.
மனசாட்சிப்படி உறுதி மொழி எடுக்கலாம் என்று ஒரு மசோதாவையே இவருக்காகவே பிரிட்டன் நாடாளுமன்றம் நிறைவேற் றியது என்றால் அந்தத் தனி மனிதனின் நாத்திக உரமும், போராடும் குணமும்தான் எத்தகையது!
இவ்வளவுக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்தான். தந்தையார் ஒரு வக்கீல் குமாஸ்தா. பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்றவருமல்லர். தந்தையார் வேலை பார்த்த அந்த அலுவலகத்திலேயே 12 வயதில் எடுபிடி வேலையில் சேர்ந்தார்.
பிராட்லாவின் நாத்திகக் கொள்கை பலரையும் புரட்டி எடுத்தது; அவர் வேலை பார்த்த இடத்தின் முதலாளி - 'பிராட்லா தன் நாத்திகக் கொள்கையைக் கைவிட வேண்டும்; இல்லையேல் அவர் பார்க்கும் வேலையைக் கைவிட நேரிடும்' என்பதுதான் அந்த நிபந்தனை.
அந்த வறுமைக்காரரோ கொள்கைச் சீமானாய் வெளியேறினார்.
பிறகு இராணுவத்திலும் பணியாற்றினார். அவர் கொள்கையில் மேலும் மேலும் மெருகேறினார். வழக்குகள் - எதிர்ப்புகள் என்பது அவரின் நிழலாகவே தொடர்ந்து கொண்டிருந்தன.
சுதந்திர சிந்தனையாளர் கட்சி (Free Thought Publicity Company) ஒன்றை நிறுவினார். இதற்கு நிதி சேர்த்தது எப்படி தெரியுமா? வெறும் சந்தாக்கள்தான்.
'ஒரு வாய் புகையிலையைத் தியாகம் செய்யுங்கள். ஒரு குவளைப் பீரைத் தியாகம் செய்யுங்கள்!' என்பதுதான் அவர்தம் வேண்டுகோள். ஆம், சந்தாக்கள் குவிந்தன (இந்த இடத்தில் 'விடுதலை' சந்தாவை நினையுங்கள்.)
வெறுத்த மக்கள் அவருக்கு சிலை எழுப்பி மகிழ்ந்தனர். இவர் யார் தெரியுமா? சார்லஸ் பிராட்லா. என்ன, பெரியார் வாழ்வைப் பல வகை களிலும் ஒத்துள்ளது என்று நினைக்கிறீர்களா? ஆம் என்க!
- மயிலாடன்
குறிப்பு: இன்று அவர் பிறந்த நாள் (1833).
(26.9.1833)
- விடுதலை நாளேடு, 26.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக