வெள்ளி, 21 செப்டம்பர், 2018

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல்




ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில் காந்தியாரின் சேவாகிராமத்தில் சில மாதங்கள் தங்கி மக்களுக்குச் சேவை ஆற்றிட வேண்டும் எனும் உறுதிப்பாட்டினை மேற்கொண்டவர்.

நாடாளுமன்றத்திற்கு (லோக் சபா) இரண்டு முறை உறுப்பினராக விஜயவாடா தொகுதியிலிருந்து காங்கிரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டின் ஏற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டு அதன் வெற்றிக்கு பாடுபட்டவர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு சென்றபொழுதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று மரியாதை செலுத்திய பண்பாளர். பெரியார் இயக்கத்தின் மீது நீங்காத பற்று கொண்டிருந்தவர். சென்னபடி வித்யா அவர்கள் மரணம் அடைந்த செய்தி அறிந்த தமிழர் தலைவர் நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநரும் வித்யா அவர்களின் சகோதரருமான டாக்டர் விஜயம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பினார். கோரா வலியுறுத்திய நேர்மறை நாத்திகம் (றிஷீவீவீஸ்மீ கிலீமீவீனீ) கருத்துகளை மேலும் பலப் படுத்துவதே மறைந்த வித்யா அவர்களுக்கு செலுத்தப்படும் சரியான மரியாதையாகும் என தமிழர் தலைவர் தமது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 21.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக