புதிய தொடர் : ஒரு வெற்றி மங்கையின் கதை
மே 23 , 2011 சிகாகோ நகரிலே மிகப் பெரிய கொண்டாட்ட நாள் ! மூன்று நாள் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது. பெரிய கூடைப்பந்துப் போட்டி நடக்கும் யுனைட்டட் அரங்கில் 10000 பேர்தான் அனுமதிக்கப் பட்டனர். ஆனால், உலகமே "ஓ" வென்று இந்த விழாவைப் பார்த்து மகிழ்ந்தது.
அமெரிக்கா மட்டுமன்றி உலகமே " ஓ" வென்றால் ஓப்ரா வின்ஃபிரி தான்.
அவரது 25 ஆண்டுகாலத் தொலைக்காட்சி, புகழின் உச்சாணிக் கொம்பிலே இருக்கும் போது அவர் அதை முடித்துக் கொள்கின்றார். அவருடன் அந்த நிகழ்ச்சியில் வேலை செய்தவர்கள் அவருக்கு ஒரு மிகச் சிறப்பான மகுடம் சூட்டும் பிரிவு விழா நடத்த ஏற்பாடுகளைச் செய்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் யார் யார் வருவார்கள் என்பது ஓப்ரா அம்மையாருக்கே தெரியாது. பல அரிய நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது மட்டுந்தெரியும். பல ஆச்சரியப்படும் அரிய நிகழ்ச்சிகள் நடத்திய அவரையே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இன்று செல்வச் சீமாட்டியாகப் பணத்திலும், புகழிலும் புரளும் இவரது ஆரம்ப காலம் ஏழ்மையும், துன்பமும் நிறைந்திருந்தது..அதைத் தாண்டித்தான் கடுமையான உழைப்பால் இவ்வளவு உயர்ந்துள்ளார். இவ்வளவு பெயரும் புகழும் பெற இவர் என்னதான் அப்படிச் சாதித்துவிட்டார்? அதுதான் அவர் மகிமைகளுள் மிகவும் சிறந்து மகிழவைக்கும் மகிமை !
ஒரு துறையென்று இல்லாமல் பல துறைகளில் மனித நேயத்தின் மாண்புகளில் தங்க முத்திரை பதித்துவிட்டதுதான் அவரது சாதனைகளின் சிறப்பு.
தனி மனித விடுதலைக்கான திறவுகோல் கல்வி என்பதை உலகுக்கு, அதுவும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவர்களை அறிய வைத்தார். அறிய வைத்தது மட்டுமல்லாமல் அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். பள்ளிகளும்,நூலகங்களும் படைத்துத் தந்தார்.
அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று உலக மெங்கும் கல்விக்காக கோடி கோடிகளை வாரி வழங்கி வழி நடத்தி வருகின்றார்.
இவரது நிகழ்ச்சிகள் பல தேவையான அதிசயங்களை நடத்திக் காட்டும் நிகழ்ச்சிகளாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 276 பேர் செப்டம்பர் 13, 2004 ஆம் ஆண்டின் 19 ஆவது ஆண்டு தொடக்க விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்தேவை கார் என்பது அறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். ஒருவருக்கும் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது. திடீரென்று ஓப்ரா உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புது கார் காத்துக் கொண்டிருக்கின்றது என்று அறிவித்து மகிழ்ச்சிக் கடலில் முழுக வைத்தார்.
ஒரு மழலைப் பயிற்சி ஆசிரியை மிகவும் பாராட்டப்பட்ட நல்ல பெண். அவரை ஒரு நாள் முழுதும் ஒரு நல்ல உல்லாச உலகத்திலே (Spa) விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டு ஓப்ரா அந்த வகுப்பை நாள் முழுதும் கவனித்து நடத்தினார். மழலைகள் வகுப்பு என்பது எவ்வளவு பொறுப்பான, கவனமான வேலை என்பதை உலகுக்கு உணர்த்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட 302 ஓப்ரா நிகழ்ச்சி தொடர் பார்வையாளர்கள் 25ஆம் ஆண்டு (கடைசி ஆண்டு) துவக்க விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தனர். ஜான் ட்ரவோல்ட்டா, பால் சைமன் போன்ற பலர் அன்று முன்னறிவிப்பின்று கலந்து மகிழ்வித்தனர். அந்த 302 பேரையும் அய்ந்தே வார்த்தைகளினால் ஆச்சரியத்தில் அதிர வைத்து விட்டார். "நீங்கள் என்னுடன் ஆசுத்திரேலியா போகப் போகின்றீர்கள்" !என்றார்.
- டாக்டர் சோம.இளங்கோவன்
"ஓ" பலரின் வாழ்க்கையை உயர்த்திய பெண்மணி
அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழகத்திலே ஒன்று சிகாகோவின் வட மேற்குப் பல்கலைக்கழகம். அமெரிக்கா ஆரம்பத்தில் 13 மாநிலங்களுள்ள சிறிய நாடாகத்தான் இருந்தது. அப்போது அதன் வட மேற்கு எல்லையே சிகாகோவாகத்தான் இருந்தது. ஆகவே, அந்தப் பெயர் இன்றும் நிலைத்துவிட்டது. மேற்கே கலிபோர்னியா வரை பிரெஞ்சு, ஸ்பேனிசு,கடைசியாக ருசியாவிடமிருந்து அலாஷ்கா என்று வாங்கப்பட்டுப் பெரிதாகிவிட்டது. சிகாகோ இன்று அமெரிக்காவின் மய்யப் பகுதியாக உள்ளது. அந்தப் புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தின் மிகவும் புகழ் பெற்ற வணிகக் கல்லூரியிலே மாணவராக இடம் கிடைப்பதே அரிது. அந்த மாணவர்களுக்குக் கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காத ஒரு பெண், அதுவும் கருப்பினப் பெண் பேராசிரியர் என்றால் அவர் ஓப்ரா மட்டுமே!
ஓப்ராவின் தாயார் சிறு வயதிலேயே திருமணமாகமலேயே ஓப்ராவைப் பெற்றுவிட்டார். அவரை வளர்க்க முடியாமல் தனது தாயிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டார். பாட்டி மிகவும் ஏழ்மையானவர். பின் தங்கிய மிசிசிப்பி மாநிலத்திலே ஒரு சின்ன கிராமத்திலே சிறிய விவசாயி.உருளைக் கிழங்கு சாக்கு மூட்டையிலே தைத்த உடையுடன் ஓப்ரா சென்றிருக்கிறார். ஆனால் மூன்று வயதிலிருந்தே பாடவும் பேசவும் பாட்டி பழக்கிவிட்டார். ஆலயத்திலே அந்தக் குழந்தைக்கு பாஸ்டர் (றிணீஷீக்ஷீ) என்றே பெயர். தன்னம்பிக்கையுடன் பேசிய அவரைப் பாட்டி வளர்த்தது விளையும் பயிர் என்று பின்னர் ஒளிவிட்டுவிட்டது.
தனது பதினான்காவது வயதிலே தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். தந்தை இராணுவத்திலிருந்தவர், முடி அலங்காரத் தொழிலாளி. மிகவும் கண்டிப்பாய்ப் படிக்க வைத்துள்ளார்.வாரம் ஒரு நூல் படித்து அதைப் பற்றி எழுதித் தரச் சொல்லி வளர்த்துள்ளார். பள்ளியில் நல்ல மாணவியாகப் படித்துள்ளார். பேச்சுப் போட்டி, நடிப்பில் பரிசுகள் பெற்றுள்ளார். கல்லூரிப் படிப்பிற்கான உதவித் தொகையும் பெற்று கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.
உயர்நிலைப் பள்ளி, கல்லூரி முதலாண்டு படிக்கும் போதே அவர் வாழ்ந்த டென்னசி மாநில நாச்வில் நகர் வானொலியில் செய்தி வாசிப்பவராக வேலை செய்து வந்தார். தனது பதினேழாவது வயதிலே டென்னசி மாநில கருப்பின அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். அவரை தலைநகர் வாசிங்டன் அருகேயுள்ள பால்ட்டிமோர் நகரத் தொலைக்காட்சி நிறுவனம் வேலைக்கு அழைத்ததும் படிப்பைவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
பின்னர், சிகாகோ நகரிலே சரியாக நடக்காத ஒரு தொலைக்காட்சி நிறுவனம் காலைச் செய்தியாளராக அழைத்தது.இதிலே அவரது முழுத் திறமையையும் காண்பித்து வெறும் செய்தியாளராக இல்லாமல் உணர்ச்சியுடன், பார்ப்போருடன் கலந்து அவர்களையும் நிகழ்ச்சிகளில் இணைத்து ஒரு தனிப் பெயர் எடுத்துவிட்டார். வெள்ளை ஆண்களுக்கே உரித்தாக இருந்த இந்தத் தொழிலில் ஒரு இளம் பெண், அதுவும் கருப்பினப் பெண் வந்து வெற்றிக் கொடி நாட்டியதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அதில் சில மணித்துளிகளுக்காக மட்டுமே அழைக்கப்பட்ட அவர் ஒரு மணி நேர நிகழ்வாக " ஓப்ரா வின்ஃபிரி நேரம்" என்று ஒதுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். தினம் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து, பங்கேற்று மகிழும் சிறப்பு ஒளிபரப்பாளராக மாறிவிட்டார். பல அரிய நிகழ்ச்சிகளைத் துணிவுடன் செய்தார்.
இவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். முதல் படம் சிறப்பு வாய்ந்த ஸ்டீவன் ஸ்பெல்பர்க் தயாரித்த " தி கலர் பர்ப்பிள்" என்ற படம். அதிலேயே அவர் ஆஸ்கர், கோல்டன் போன்ற விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். சில படங்களிலும், தொலைக்காட்சிப் படங்களிலும் நடித்தார்.
.இவரது ஒளிபரப்பை மக்கள் வெறும் நிகழ்ச்சியாகப் பார்க்கவில்லை..அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியடைய, தங்களுடைய உணவு, உடை, வாழ்க்கை, உறவுகள், பழக்க வழக்கங்கள் என்று எல்லாவற்றையும் ஈடுபாட்டுடன் மாற்றிக் கொள்ள வழி சொல்லும் நட்பாக, சொந்தமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஓப்ராவும் ஒளிவு மறைவில்லாமல் தனது வாழ்க்கை, தனது நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் சிறப்பு, எப்படி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நல்ல வழி முறைகளை எளிதாக்கிச் சொல்லி முன்னேற்ற முடியும் என்ற பயிற்சிப் பட்டறையாக்கிக் காட்டினார்.
அவர் குண்டாகிவிட்டார். கடினமாக உழைத்து உடல் பயிற்சியுடன் 67 பவுண்டுகள் இளைத்துவிட்டார். அந்த 67 பவுண்டு கொழுப்பு எவ்வளவு இருக்கும் என்பதைக் காண்பிக்க அவரே 67 பவுண்டு கொழுப்பை ஒரு கை வண்டியிலே போட்டு இழுத்து வருவார் ! இந்த மாதிரி எதையும் மக்களுக்கு உடனே புரியும்படியும், ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவார்.
மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், அவர் படித்த நல்ல நூல்களை மற்றவரும் அறிய எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் போல அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவார்.
மக்கள் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் படித்த நூல்களில் மிகவும் சிறந்த நூலை புத்தகம் படி நிகழ்ச்சியில் அந்த ஆசிரியரை அழைத்து விவாதிப்பார். இதனால் பல ஆசிரியர்களும் பெருமைப்படுத்தப்பட்டனர், நூல்களும் பல லட்சங்கள் விற்கப்பட்டன. மக்களும் பயன்பெற்றனர். பல தலைப்பு நூல்களை இவர் படித்து அதை அலசி அனைவரும் பயன்படச் செய்தது பலரின் வாழ்க்கையைத் தொட்டு மாற்றிவிட்டது. பலர் தங்கள் முன்னேற்றமே ஓப்ராவினால்தான் என்று எழுதி வாழ்த்திவிட்டனர். டைம் போன்ற பத்திரிகைகளும் உலகின் முக்கியப் பெண்மணி இவர் என்று பாராட்டினர். தொலைக்காட்சி, பத்திரிகைகள், பல்கலைக்கழகங்கள் என்று பலதரப்பட்டோர் வாழ்த்துகளும், பட்டங்களும், அத்துடன் பணமும் மலை போல குவியத் தொடங்கிவிட்டது .
அவ்வளவு புகழ்ச்சிக்கும் நடுவே அவர் நிதானமிழக்காமல் ஒரு நல்ல நண்பராக, உடன்பிறப்பாக, தாயாக, அறிவுரையாளராக, வழிகாட்டியாக, பல சிறு தொழில் தொடங்கி முன்னேறப் பாடுபட்டவர்களுக்கு அவர் நிகழ்ச்சியில் நேரமளித்தார். விளம்பரதாரராக, "கோல்டன் டச்"சாக இருந்து வந்தார். அவரது நிகழ்ச்சி பல பரிமாணங்களில் வளர்ந்தாலும் பொதுப் பயிற்சிப் பட்டறையாக பலர் மாறக் காரணமாக இருந்தது. பலர் பெரும்புகழும் பணமும் சேர்க்க வழி வகுத்தவராக ஆகிவிட்டார். பல சிறு தொழில் பெண்கள் உடனே கோடீசுவரத் தொழிலதிபர்கள் ஆகிவிட்டனர்.
இதிலே கருப்பு, வெள்ளை, மற்றோர் என்ற பாகுபாடில்லாமல் பலர் பயனடைந்தனர்.
பல கோடிகள் வருமானம் வந்தது, ஆனாலும் மேலும் மேலும் பல்துறைகளிலும் வளர்ந்து கொண்டேயிருந்தது. நிருவாகமும் சிறப்பாக, ஒரு குடும்பமாக அனைவரும் அவரை மிக்க அன்புடன் பாசத்துடன் பார்த்து வேலை செய்தனர்.
1999இல் பல தொழில் வல்லுநர்களே மாணவர்களாகப் படிக்கும் வட மேற்குப் பல்கலைக்கழக வணிகக் கல்லூரி இவரைப் பத்து வாரங்கள் "ஓட்டமிகு நிருவாகம்" (ஞிஹ்ஸீணீனீவீநீ விணீஸீணீரீமீனீமீஸீ) எனும் வகுப்பை எடுக்கும் பேராசிரியராக்கியது. நன்றாகத் தயார் செய்து பாடங்கள், கேள்விகள் தயாரிப்பு என்று கடுமையாக உழைத்து மாணவர்களிடம் சிறப்புப் பெற்றார். ஆண்டிற்கு 125 மில்லியன் டாலர்கள் (சுமாராக 600 கோடி ரூபாய்கள்) சம்பாதித்த காலத்திலே மற்ற பேராசிரியர்களைப் போலவே சில ஆயிரங்கள் ஊதியம் பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றி பல துறைகளில் அடைந்த முதன் மாதிரி வெற்றியைப் பெற்றார்.
ஓ வென்றால் ஓதான் என்றனர் அனைவரும்.
- (தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக