22011 இதழ்கள் -> ஜூலை 01-15
- சோம.இளங்கோவன்
ஏழை பணக்காரர் ஆவது ஆங்காங்கே நடப்பதுதான். அதில் பலர் தமது ஏழ்மையை மறைக்கப் பார்ப்பார்கள், பலர் மறந்தும் விடுவார்கள்.
ஆனால், மற்ற ஏழைகளைப் பார்த்து அவர்களின் மனம் நோகாமல் அவர்களுடன் பழகி, அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வைக்கும் பணக்கார ஏழைகள் வெகு சிலரே ! அதில் மிகவும் நேர்மையான மனதுடன் தெளிவாகவும், துணிவாகவும் செயல் பட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வின் ஒளிவிளக்கே என்று மனமாரப் புகழ்வது ஓப்ராவை மட்டுமே!
ஓப்ராவின் குழந்தைப் பருவம் மிகவும் ஏழ்மையும், துன்பமும் நிறைந்திருந்தது. வேண்டாத குழந்தையாக இளந்தாய்க்குப் பிறந்தவர். பாட்டி ஏழ்மையில் வளர்த்தாலும் தன்னம்பிக்கையுடன் பேச்சு, எழுத்து, பாட்டு, கிறித்துவ ஆலயம் என்று அன்புடன் வளர்த்தார். ஆனால் ஓப்ரா ஒன்பதாவது வயதிலே வீட்டு வேலை செய்த அம்மாவுடன் வாழ மில்வாக்கி நகருக்கு அனுப்பப்பட்டு விட்டார்.
அம்மா நாள் முழுதும் வேலைக்குப் போய் விடுவார். உடன் இருந்த உறவினர்களும், நண்பர்களும் இளம் ஓப்ராவை பால் வன்முறைத் தொல்லைக்கு ஆளாக்கி அலைக்கழித்துவிட்டனர். தனது 13 ஆம் வயதிலே வீட்டைவிட்டு ஓடப் பார்த்தார். ஆனால் குறைந்த வயது என்பதால் குழந்தைகள் நிறுவனத்தில் அடைக்கப்பட்டார். அவர் அடைந்த துன்பங்களை நினைவு கூர்ந்து தன்னுடைய நிகழ்ச்சியில் பலமுறைப் போராடி பில் கிளிண்டன் அமெரிக்கத் தலைவராக இருந்தபோது குழந்தைகள் பால் வன்முறையாளர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்று அறியும் ஓப்ரா சட்டம் என்றழைக்கப் பட்ட சட்டத்தை நிறைவேற்றினார்.
பெற்றோர்கள் ஆதரவில்லாத இளம் பெண்களுக்காக ஓப்ரா பல முறைகளில் ஆதரவும், அந்த ஆதரவளிப்போரை தனது நிகழ்ச்சிகளில் சிறப்பாகப் பாராட்டியும் உள்ளார். இளம் பெண்கள் கல்வியில் முன்னேறி தங்கள் திறமைகளை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே இவரது அடிப்படைக் கொள்கை. பெண்கள் தங்கள் பொருளாதாரம் பற்றிய அறிவைப் பெருக்கி எது முக்கியம், எது முக்கியமில்லை, எப்படிச் சிக்கனமாக வாழ வேண்டும், ஏன் கட்டாயமாகச் சேமிக்க வேண்டும் என்பதையெல்லாம் உணரவைத்தார்.
சூசன் ஆர்மன் என்றொரு பெண் தனது வாழ்க்கையின் பொருளாதாரச் சீர்குலைவும் பின் எப்படி முன்னேறி வந்தார் என்று சொல்லியும் எழுதியும் வந்தார். அது நல்ல வழி முறைகள் நிறைந்திருந்ததைப் பார்த்த ஓப்ரா அவரை தனது நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். அவர் உடனே மிகவும் புகழ் பெற்றது மட்டுமல்லாமல் பல லட்சம் நூல்கள் விற்றார். அதனால் பல லட்சம் பேர் ஆண்களும், பெண்களும், குடும்பங்களும் தங்கள் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து வெளியேறி வாழ்க்கை யில் முன்னேறியதுதான் மிகவும் முக்கியம்.
சூசன் ஆர்மன் ஓப்ரா தன் வாழ்க்கை யையே மாற்றிவிட்டார் என்பதல்லாமல் பலர் கூறும் கூற்றைச் சொன்னார்.
"இது எங்களுக்கு ஒரு நிகழ்ச்சியல்ல. எங்கள் வாழ்க்கையை நல்ல வழியில் உருமாற்றி விட்ட திருப்பு முனை என்று நெஞ்சார வாழ்த்தியது தான் மிகவும் முக்கியம்" என்று சொல்லிப் பெருமைப்பட்டார்.
இது ஒரு துறையென்று இல்லை. இந்த மாதிரி வாழ்வின் பல துறைகளில் உடல் நலம், உறவுகள், மன நலம், முன்னேற்றம், கல்வி, தொழில் என்று ஏழைகள், முக்கியமாக பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தன்முனைப்புடனும் வாழும் வழிகள் என்று தனது நிகழ்ச்சிகளை மக்களின் வாழ்க்கைத் தடத்தைச் செப்பனிட்டு முன்னேற்றும் மனிதநேயப் பாதையில் கொண்டு செல்வதுதான் மிகவும் போற்றப்படுகின்றது. போற்றாத பத்திரிகைகளே இல்லை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே இல்லை. அடையாத பரிசுகளும், பட்டங்களும் இல்லை என்று புகழின் உச்சக் கட்டத்தில் நிற்கின்றார். குற்றம் குறை கூறுபவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து அவர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் அடைந்தவர்.
பெண்களுக்கு, அதுவும் ஏதாவது தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்று துடிக்கும் ஏழைப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பார். நல்ல கேள்விகளைக் கேட்பார். அது மற்றவர்களுக்குப் பாடமாக அமையும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உடனேயே அவர்களின் தொழில் சில நாட்களிலேயே பெருவளர்ச்சி அடைந்துவிடும். இந்த மாதிரி ஒருவர், இருவர் என்று அல்ல, பலர் பல துறைகளிலே. ஆனால், மக்களுக்குத் தேவையான துறைகளிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். கோடிசுவரர்கள் ஆகியுள்ளனர்.
அதைவிட முக்கியம் ஏழை மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவது. பணக்கார நாடான அமெரிக்காவிலே ஏழைககாட்டி விளக்கினார். இது ஏழைகளுக்கு மட்டுமன்றி உடல் நலத்துடன் நள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர் என்பது உண்மை. அவர்களுக்கு அரசு வாரம் 40 டாலர்கள் சாப்பாட்டிற்காகத் தருகிறது.
அந்த 40 டாலர்களிலே எப்படி நல்ல உணவை வாங்கிச் சாப்பிட முடியும்? ஓப்ரா பெரிகோன் என்ற பெரிய பேராசிரியரை அழைத்து மக்களுக்குக் காண்பித்தார். என்ன உணவுகள் நல்ல குறைந்த விலையில் வாங்கக்கூடிய சிறந்த ஆனால் சுவைபட உண்ணக்கூடியவை என்று ன்றாக வாழ விரும்புபவர்களுக்கும், எடை குறைக்க வேண்டியவர்களுக்கும் மிக்க பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்து போற்றப்பட்டது.
பணக்கார ஓப்ரா இந்த ஏழை உணவுவகைகளைத் தானே உண்டு அதன் பயன்களைத் தெரிவித்தார்.
இரண்டரை பில்லியன் டாலர் ( சுமார் 12,500 கோடி ரூபாய்) சொத்துக்கு உரியவராக இருந்தாலும் மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிப்பதுதான் பேரின்பம் என்ற உண்மையை உணர்ந்து அனுபவிப்பவர். அதைக் கொஞ்சமும் தயக்கமில்லாமல் சொல்லுபவர். நம்மிடம் எவ்வளவு இருக்கின்றது என்பதல்ல. வாழ்க்கையில் நம்மிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்பதுதான்! என்று சொல்லிலும் செயலிலும் காட்டும் பணக்கார ஏழை, பெருங்கொடை வள்ளல் ஓப்ரா உலகின் ஒப்பற்ற " ஓ" தான்.
(தொடரும்)
"ஓ" ஆப்பிரிக்காவில் அதிசயம் - 4
- சோம.இளங்கோவன்
ஆப்பிரிக்கா என்ற உடனேயே பலருக்கு மனதில் தோன்றுவது இருண்ட கண்டமும், சிங்கம், புலி, யானைகளும் நிறைந்த காட்சிகளுந்தான். ஏன், அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்றாலே மேல் நாட்டில் பலர் பாம்பு, யானை நிறைந்த கிராமங்கள் என்றுதான் நினைத்திருந்தனர்.
நைல் நதிக்கரையிலே எகிப்திய நாகரிகம் ஓங்கி வளர்ந்து, இன்று உலகம் அதிசயிக்கும் பெரிய பெரிய பிரமிடுகள் உள்ள எகிப்தும் ஆப்பிரிக் காதான். மனித இனம் முதன் முதலில் தோன்றி யதே ஆப்பி ரிக்கா என்று தான் இன்று தெரிய வருகிறது. கருப்பின மக்கள் தங்கள் கூட்டு வாழ்க்கையில் பல கூறுகளாக வாழ்கின்றனர். கென்யா, தென்ஆப்பிரிக்கா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகள் பல உலகத் தலைவர்களைத் தந்துள்ளன.
வட அமெரிக்காவிலே 1977இல் அலெக்சு ஃகேலி என்பவர் எழுதிய ஆராய்ச்சி நூல் வேர்கள் (Roots). அது தொலைக்காட்சிப் படமாக்கப்பட்டு 36 விருதுகள் பெற்றது. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நீக்ரோ என்றழைப்பதை ஒழித்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்ற புதிய தாக்கத்தைச் சொல்லில் மட்டுமல்லாது மனதளவிலும் உருவாக்கிவிட்டது. தென் ஆப்பிரிக்க இனப் போராட்டம் அமெரிக்காவின் தெருக்களிலும், கல்லூரிகளிலும் தாக்கத்தை உண்டாக்கி "தென் ஆப்பிரிக்காவை ஒதுக்குங்கள்" போராட்டம் வலுவுற்றது. நெல்சன் மண்டேலா தீவிரவாதியாக அமெரிக்க அரசால் முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் அவர் விடுதலைக்காக அமெரிக்காவின் பெரும்பாலானோர் போராடி னார்கள். அவரது விடுதலை அமெரிக்கக் கருப்பினத்தைச் சுயமரியாதையுடனும், கருப்பில் பெருமை என்றும் வாழ வளர வழிகாட்டி விட்டது. அந்த மாபெரும் தலைவர் ஓப்ரா வின்பிரியீடம் ஆப்பிரிக்கப் பெண்களுக்காக நல்ல முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஓப்ரா வின்பிரி ஆழ்ந்து சிந்தித்து ஒரு அற்புதத்தை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தினார். 52 ஏக்கர் பரப்பளவிலே, 28 அழகான இந்த நூற்றாண்டின் சிறந்த வகுப்பறைகள், கணினி மய்யங்கள், இரண்டு அற்புதமான அரங்கங்கள், இசை மன்றங்கள் என்று கனவில்கூட அந்தக் குழந்தைகள் நினைத்துப் பார்க்க முடியாத பெண்கள் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி என்ற மாணவியர் பள்ளி 2007இல் நெல்சன் மண்டேலா, மற்றும் இங்கிலாந்து, உலகப் பெரிய பாடகர்கள் கலந்து கொள்ளத் திறக்கப்பட்டது. ஓப்ராவின் கொடை நிறுவனத்தால் 40 மில்லியன் டாலர்களில் அய்ந்து நட்சத்திர ஓட்டல் போன்ற அந்த மாணவியர் தங்கிப் படிக்கும் எதிர்காலத் தலைமைகளை உருவாக்கும் கருவறை தொடங்கப்பட்டது.
பெண்கள் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளியில் ஓப்ரா
இவ்வளவு ஆடம்பரப் பள்ளி அவசியமா? இந்தப் பணத்தை வேறு நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கலாமே என்று குறை சொன்னார்கள். நெல்சன் மண்டேலா தனது உரையில் தன்னம்பிக்கை குறைந்த, சமமான சந்தர்ப்பங்கள் அளிக்கப்படாத இந்த ஏழை, எளிய, நலிந்த பெண் குழந்தைகள் நன்கு பயிற்சி பெற்று பெரிய தலைவர்கள் ஆவார்கள். இங்கு நான் பலருடைய ஒளி மிகுந்த கண்களிலே பல வருங்கால ஓப்ரா வின்பிரீகளை இப்போதே பார்க்கின்றேன் என்றார். இந்த அரிய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஆப்பிரிக்காவையே மாற்ற வழி வகுக்கும் என்றார். அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் இதன் தாக்கம் ஆப்பிரிக்காவையே மாற்றி அமைக்கப் போகின்றது. இதைச் செய்த ஓப்ராவின் திறமையே தனித்தன்மை வாய்ந்தது என்றார். இதைச் செய்ய உங்களுக்கு எப்படித் தோன்றியது என்று பில் கிளிண்டன் ஓப்ராவைக் கேட்டார். அதற்கு ஓப்ரா, ஆசிரியர்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள். எனது வாழ்க்கையை மாற்றி அமைத்தவரே ஒரு ஆசிரியர்தான். அந்தச் சந்தர்ப்பம் இந்தக் குழந்தைகளைக் கட்டாயம் மாற்றும் என்றார்.
இந்தப் பள்ளி ஆரம்பித்ததிலிருந்தே பல் துறைகளிலே பெருஞ்சாதனைகளைப் படைத்துக் காட்டியுள்ளது. உலக அளவிலே போட்டியிட்டுப் பல வெற்றிகளைப் படைத்துள்ளது. கணிதத்தில், அறிவியலில், பேச்சுப் போட்டியில், கலைகளில் என்று பல்வேறு உலக அளவிலே பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளனர். இதிலே படிக்கும் மாணவிகள் பலர் எளிய சூழ்நிலையில், இன்னும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சரியான பயிற்சியும் சந்தர்ப்பமும் அளிக்கப்பட்டால் இவர்கள் சாதிக்கக் கூடிய வர்கள் என்பதைக் காட்டியுள்ளனர்.
இந்தப் பள்ளியின் கல்வி முறையே வேறுபட்டது. மாணவர்கள் சேர்ந்து பயில்வதும், புரியாததை மற்ற மாணவர்களே அவர்களுக்குப் புரிய வைப்பதுமான கூட்டுக் கல்வி முறை. அனைத்திலும் ஒரு புதிய அகன்ற நோக்குள்ள பயிற்சி. கலை, நாட்டியம், நாடகம், இசை இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. தலைவர்களாக வரத் தயாராக பொது அறிவு, பேச்சுத் திறமை, எழுத்துத் திறமையை வளர்த்தல் என்று அதுவே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த பயிற்சி ஆக்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் மேலாக ஒவ்வொரு மாணவரும் 3,000 மணிகள் போல சமுதாயப் பயிற்சி பெறுகின்றனர். முதியோர், உடல் நலமில்லாதவர்கள், கிராமத்துப் பெண்கள் இவர்களுக்கு உதவுதல், பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். 2007இல் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 2008லேயே இந்தப் பள்ளி மாணவிகள் காய்கறிகள் வளர்ப்பது, மார்பகப் புற்று நோய் தடுப்பது பற்றிப் பெண்களுக்கு எடுத்துச் சொல்லுதல், ஆதரவற்றவர்கள் விடுதிகளுக்குச் சென்று பணி செய்தல் போன்றவற்றைச் செய்துள்ளனர்.
அலெக்சு ஃகேலி |
2009இல் பெரிய எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பயிற்சி நடத்தினார்கள். 30 பள்ளிகளிலிருந்து 100 குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்குப் பயிற்சிகள் அளித்தனர். அவர்களுடைய புத்துலக அரங்கிலே பசுமைப் புரட்சிபற்றி நாட்டிய, கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதிலே ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்த பெண் அவரது குடும்பச் சூழ்நிலையை வருணித்து தான் எப்படி முன்னேறி நோபல் பரிசு வாங்கப் போகின்றேன் என்று சொன்னதைக் கேட்ட ஓப்ரா அப்படியே உருகிப் போய் அந்தப் பெண் குழந்தையைக் கட்டித் தழுவிப் பெருமைப் பட்டார். இங்கிலாந்து மற்றும் பிற நாட்டுப் பாடகர்கள், நடிகர்கள் அங்கே வந்து பங்கேற்றுள்ளனர். மற்றும் கலை மூலம் எதிர்கால வாழ்க்கை, எப்படி அனைத்தையும் குப்பையாக்காமல் மறுபடி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கியுள்ளனர். ஆகஸ்ட் 2009இல் 44 நாடுகளிலிருந்து போட்டியிட்டு இரண்டு குழந்தைகள் அமெரிக்க பாசுடன் நகரிலே நடந்த பெண்கள் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்றனர். 16 வயது டெப்ரா இளம் பெண்கள் கருத்தரிப்பு, பெண்கள் அனுபவிக்கும் குடும்ப வன்முறை, பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் என்பதைப்பற்றிய கட்டுரைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
2010இல் ஃகேபிடட் ஃபார் ஃகுயுமேனிட்டி (Habitat for Humanity) என்ற உலக அமைப்புடன் சேர்ந்து ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் 225 மாணவிகள் சுண்ணாம்பு, கற்கள் என்று அனைத்திலும் பங்கு பெற்று உழைத்தனர்.
இதையெல்லாம் அதிசயம் என்று நினைக்கலாம். ஆனால் இதற்கும் மேலே ஒரு அதிசயம் நடந்துள்ளது. இவரது பள்ளியிலே பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் குழந்தைகளைத் துன்புறுத்தியுள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. உடனே ஓப்ரா தனது அனைத்து முக்கிய அலுவல்களையும் தள்ளி வைத்துவிட்டு அமெரிக்காவிலிருந்து நேரே சென்று ஏழு குழந்தைகளையும் விசாரித்தார். அவர்கள் பெற்றோருடன் பேசினார். அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் செல் பேசியைக் கொடுத்து தனது எண்ணையும் கொடுத்து ஏதாவது நடந்தால் என்னை நேரே கூப்பிடுங்கள் என்று சொன்னார்.
ஓ வென்ற அதிசயம் ஆப்பிரிக்காவை மட்டுமல்ல உலகத்தையே அதிசயிக்க வைத்தது.
- (தொடரும்)
" ஓ' அமெரிக்காவில் நிற வெறிப் போராட்ட வெற்றிகள்!
- சோம.இளங்கோவன்
ஓப்ராவின் நிகழ்வுகளில் முக்கிய இடம் பிடித்த நாட்களில் ஒன்று மே 4, 2011 ஆகும்.
மேடையிலே 178 பேர். ஆண்கள், பெண்கள், கருப்பு, வெள்ளை, இளையவர், முதியவர் , ஆனால் அனைவரும்
வெற்றி வீரர்கள், சாதனையாளர்கள். ஆம், 50 ஆண்டுகளுக்கு முன்னே தங்கள் உயிர்களைப் பணயம் வைத்தவர்கள். அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார் ஓப்ரா வின்ஃபிரி.
அப்படி என்ன அவர்கள் சாதித்து விட்டார்கள் ? அது சாதனை மட்டுமல்ல சரித்திரமும் கூட !
மே 4, 1961 தலைநகர் வாசிங்டனிலிருந்து 13 பேர் ஆண்களும், பெண்களும், 5 கருப்பரும், 8 வெள்ளையருமாக இரண்டு பொதுப் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர். தென் கோடியில் உள்ள நியூ ஆர்லியன்சு மாநகருக்குச் செல்லத் திட்டம், எவ்வளவு தூரம் போக முடியும் என்பது அவர்களுக்கே தெரியாது.
1954லிலே அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் சரித்திரப் புகழ் பெற்ற பிரவுன் கல்வி நிறுவனங்கள் வழக்கிலே தீர்ப்பளித்துவிட்டது. நூறாண்டுகளுக்கு முன்னரே ஆபிரகாம் லிங்கன் பல்லாயிரம் மக்கள் இழப்பிலே தெற்கிலே இருந்த அடிமைகளை விடுவித்துவிட்டார். அனைவரும் சமம், சட்டத்திலே. ரோசா பார்க் அம்மையார் 1955 இல் பேருந்திலே கருப்பர்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம், வெள்ளையர்களுக்காக எழுந்து இடங்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று போராடி வெற்றி பெற்றுவிட்டார். அமெரிக்கப் பள்ளியிலே கருப்பு மாணவர்கள் நுழையக் கூடாது என்பதை அய்சனோஃவர் படையை அனுப்பிச் சரி செய்துவிட்டார். அமெரிக்காவின் முதல் கத்தோலிக்கர் ஜான் கென்னடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.
மிகவும் முற்போக்குவாதியாகக் கருதப்பட்டார். ஆனால், தென் மாநிலங்களிலே நிற வெறி தாண்டவமாடியது. பேருந்திலே சேர்ந்து உட்கார முடியாது. கழிவறைகள் தனித்தனிதான். சேர்ந்து உணவகங்களிலே உண்ண முடியாது. கருப்பர்கள் சாப்பாட்டை வெளியே இருந்து வாங்கி, வெளியே தரையிலே அமர்ந்து உண்ணும் பரிதாபம். இதற்கு முடிவு கட்டக் கிளம்பியவர்கள்தான் அந்தப் பதின்மூவர்.
அவர்களுக்கு " சமத்துவப் பேராயம் " என்ற அமைப்பு நல்ல பயிற்சி கொடுத்து அனுப்புகின்றது. உயிருடன் திரும்புவது நிச்சயமல்ல என்பதை நன்கு அறிந்துதான் துணிவுடன் செல்கின்றார்கள். தலைநகர் வாசிங்டனிலிருந்து நிறவெறி ததும்பிய தென் மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டும். அமெரிக்கா ஒரு நாடாக இருந்த போதும் மாநிலங்களின் அதிகாரம் சிறப்பானவை. அந்தந்த மாநில அரசுகளுக்குச் சட்ட திட்டங்கள் உண்டு. 50 அய்க்கிய நாடுகள் சேர்ந்ததுதான் அமெரிக்கா.
ஆகவே அந்தந்த மாநிலங்கள் தனி நாடுகள் போன்றுதான் சட்டங்கள். அங்கே அரசாளுவோர் நிறவெறி கொண்ட தலைவர்கள்தாம். கூ கிளக்சு கிளான் என்ற வெள்ளை உடையும், முகமூடியும் அணிந்த நிறவெறிக் கூட்டம் தலைவிரித்தாடும் இடங்கள்தாம் தென் மாநிலங்கள். அதிலே பலி கிடாக்களாக இந்தப் பதின்மூன்று பேர்.
ஆரம்பத்திலே தொந்தரவு இல்லாமல் சென்றுவிட்டனர். ஆனால் இவர்கள் இரண்டு பேருந்துகளிலே கருப்பும், வெள்ளையும் ஒன்றாக அமர்ந்து வருகின்றனர். ஒன்றாக உணவருந்தி வருகின்றனர். கழிவறைகளிலே வெள்ளையர் கழிவறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவிவிட்டது. நிறவெறி வெள்ளையர்கள் கொலை வெறியுடன் இருக்கின்றார்கள். இந்தப் பதின்மூன்று பேருக்கு மார்ட்டின் லூதர் கிங் வரவேற்பு கொடுக்கின்றார். அவரைக்கூட வரச் சொல்கின்றார்கள். அவரோ, இவர்களைத் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்று கைவிடச் சொல்கின்றார். உயிருக்குத் துணிந்த இவர்கள் தொடர்ந்து செல்வதென்று விடுதலைச் சவாரி" என்று தொடர்கின்றனர்.
தென் மாநிலங்களின் முதல் எல்லையாக அலபாமா மாநிலத்தின் எல்லை அனிச்டன் என்ற ஊரில் நுழைகின்றனர். கும்பல் சூழ்ந்து கொண்டு பேருந்தை அடித்து நொறுக்குகின்றனர். ஓட்டுநர் காரை ஓட்டவிடாமல் டயரை வீணாக்கி விடுகின்றனர். ஓட்டுநர் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டிவிட்டு உதவிக்காகச் செல்கின்றார். உள்ளே நுழைய முடியாது என்று நம்பி உள்ளே இருப்பவர்கள் கல்லெறியிலிருந்து காப்பாற்றிக் கொஞ்சம் துணிவுடன் இருக்கின்றனர். அப்போது வெளியிலிருந்து அவர்கள் தயாரித்த கைக்குண்டுகளைப் பேருந்தின் உள்ளே வீசுகின்றனர். உள்ளே ஒரே புகையும் நெருப்பும், கதவோ பூட்டப்பட்டுவிட்டது.
சாவதுதான் வழி என்று நினைத்தபோது பேருந்தின் பெட்ரோல் டேங்க் வெடிக்கின்றது. அனைவரும் வெளியே தூக்கி எறியப்படுகின்றனர். கேஃங் தாமசு என்ற கருப்பு இளைஞருக்கும் அவருடன் உயிர் தப்பிய ஜெனவீவ் க்ஃயூசு என்ற வெள்ளை அம்மையாருக்கும் அடி விழுகின்றது.
இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 13 வயது வெள்ளைப் பெண் ஜேனி பொஃர்சைத் ஓடி வந்து உதவி குடிக்கத் தண்ணீர் கொடுக்கின்றார். "கூ கிளக்சு கிளான்" என்ன செய்தாலும் பரவாயில்லை என்று மனிதாபிமானத்துடன் உதவி செய்கின்றார். பின்னாட்களில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக வந்த ஜான் லூயிசு என்பவரை எல்வின் வில்சன் என்ற வெள்ளை நிற வெறியர் அடித்து நொறுக்குகின்றார். அவர் அங்கே அதிகாரி. கடைசியில் அவர், லூயிசிடம் புகார் செய்வதென்றால் நீ புகார் செய்யலாம் என்கின்றார். லூயிசோ நான் இங்கே யாரையும் தொந்தரவு செய்ய வரவில்லை, அனைவரும் அன்புடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் விரும்புகின்றேன் என்றாராம். அமெரிக்கப் போர் வீரர்கள் வாசிங்டன் தலைநகருக்குக் கட்டுப்பட்ட போராளிகள் வந்து காப்பாற்றி அடுத்த மாநிலம் டென்னசியில் நாச்வில்லுக்குக் கொண்டு செல்கின்றனர்.
போராட்டம் முடிந்து விட்டது என்று நிற வெறியர்கள் குதூகலிக் கின்றனர்.
இந்தப் போராட் டத்தைப் பற்றிக் கேள் விப்பட்ட பலரும் கலந்து கொள்ள வருகின்றனர். முக்கியமாகக் கல்லூரி மாணவர்கள் வருகின் றனர். சிகாகோவைச் சேர்ந்தவர் டயான் நாச் எனும் வெள்ளைப் பெண்மணி. அவர் 21 மாணவர்களுடன் போராட்டத்தில் குதிக்கின்றார். அமெரிக்காவின் சட்ட மந்திரியான ராபர்ட் கென்னடி அவரது துணைச் சட்ட ஆணையரை அழைத்து அந்தப் பெண்ணுடன் பேசிப் போராட்டத்தை நிறுத்தச் சொல்கின்றார். உங்கள் உயிர்களுக்கே ஆபத்து என்று அச்சுறுத்துகின்றார். அந்தப் பெண்ணோ, நாங்கள் எங்கள் உயில்களை எழுதி வைத்து விட்டுச் சாகத்தான் இங்கு வந்துள்ளோம் என்று பதிலளிக்கின்றார். இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராபர்ட் அபர்நாத்திடம் ராபர்ட் கென்னடி இந்த "விடுதலைச் சவாரி" இயக்கம் உலக அளவிலே அமெரிக்காவிற்கு அவமானமாக இருக்கின்றது என்று சொன்னபோது அவர், "எங்களுக்கு இவ்வளவு காலமாக வாழ்க்கையே அவமானமாகத்தான் இருந்து வந்திருக்கின்றது என்பது அவருக்குத் தெரியாதா?" என்று சொன்னாராம். நியூயார்க் கார்னல் பல்கலைக்கழகம், மற்றும் பல பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள், பொதுமக்கள் என்று 436 பேர் சேர்ந்து விட்டனர் அங்கே. அதிலே மூன்றில் ஒரு பங்குதான் கருப்பின மக்கள். மீதி அனைவரும் வெள்ளையர்கள். அவர்கள் தொடர்ந்து போராடிச் சென்றனர். மிகவும் பின்தங்கிய வெள்ளை வெறிபிடித்த ஓப்ராவின் மாநிலமான மிசிசிப்பியில் மிகவும் மோசமான சிறைச்சாலையிலே 4 பேர் தங்கும் அறையிலே 40 பேர் என்று அடைக்கப்பட்டனர். அங்கேயும் தொடர்ந்து இன வேறுபாடின்றி அவர்கள் ஒன்றாக இருந்ததைக் கண்டு மாநில ஆட்சியாளர் கொதித்துப் போனார். துன்புறுத்தப்பட்டனர். அங்கே அவர்கள் பாடிக் கொண்டே இருந்தனர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தனர் வெறி பிடித்தவர்கள்.
கடைசியாக செப்டம்பர் 22, 1961இல் மாநில வர்த்தக ஆணையர் சட்டப்படி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வருபவர்களுக்கு மாநில அரசு சட்டப்படியல்லாமல் அமெரிக்கப் பொதுச் சட்டப்படி உரிமைகள் வழங்க வேண்டும், பொது இடங்களில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது. அந்தப் போராட்டத்தில் 1961இல் கலந்து கொண்டவர்களில் உயிருடன் உள்ள 178 பேர்கள்தான் ஓப்ராவின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். இதில் 95 வயதானவர் ஒருவர், அவரும் கலந்து கொண்டார். அதைவிடப் பெரிய அதிசயங்கள் நடத்தியுள்ளார் அதிசயங்களின் சிகரமான "ஓ".
13 வயது வெள்ளைப் பெண்ணாக தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த ஜெனி பொஃர்சைத் ரகசியமாக அழைக்கப்பட்டிருந்தார். அவரை மேடைக்கு அழைத்து, அவரிடம் தண்ணீர் குடித்த கருப்பர் ஃகேங் தாமசு அறிமுகப் படுத்தப்பட்டார். இருவரும் உணர்ச்சியுடன் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொண்ட காட்சி அற்புதமான காட்சி.
ஜான் லூயிசை அடித்த எல்வின் வில்சனும் வந்து அவரிடம் 2009இல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைச் சொன்னார். அவர்கள் இருவரிடமும் ஓப்ரா கேள்விகளைக் கேட்டார்.
கல்லூரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வெள்ளைப் பெண்மணி டயான் நாச் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார் !
கருப்பரும், வெள்ளையரும் இன்னும் முழுக்கச் சரிசமமாக வாழ முடியாவிட்டாலும் அமெரிக்கா ஒரு கருப்பு ஒபாமாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததில் " ஓ' வின் பங்கு மிகவும் அதிகம் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர்.
தமிழகத்திற்கும் ஒரு " விடுதலைச் சவாரி" இன்னும் தேவை என்பதை இளைய தலை முறை நடத்திக் காட்டினால் தந்தை பெரியாரின் ஆசை நிறைவேறும்.
"அநியாயம் எங்காவது நடந்தாலும் அது நியாயம் எங்கும் நிலைத்திருப்பதற்கு ஆபத்தை உண்டாக்கும் மார்ட்டின் லூதர் கிங் சொன்னதை நினைப்போம் என்று நிகழ்ச்சியை முடித்தார் "ஓ".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக