2011 உண்மை இதழ்கள் -> மார்ச் 16-31
ரிச்சர்டு டாக்கின்ஸ்
26.3.1941 இல் ஆப்ரிக்க கென்யா நாட்டின் நைரோபி நகரில் பிறந்தவர். தந்தை கிளின்டன் ஜான் டாகின்ஸ் என்பவர் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்தில் கென்யா நாடு இருந்தபோது வேளாண்மைத் துறையில் பணிபுரிந்த அதிகாரி. இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. ரிச்சர்டு டாகின்சின் எட்டாவது வயதில், 1949 இல் இங்கிலாந்து நாட்டுக்குத் திரும்பினார். சிறுவயது டாகின்ஸ் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவியல்பூர்வமாகப் பதில் தந்து அவரின் பெற்றோர் அவரை வளர்த்தனர். இருந்தாலும், தனது ஒன்பதாம் வயதில் ரிச்சர்டு டாகின்ஸ் கேட்ட கேள்வி கடவுளைப் பற்றியது. அதற்குப் பதில் அளித்த அரவது பெற்றோர் இந்த உலகைக்காட்டி, அதனைப் படைத்திட ஓர் ஆள் இருந்திருக்க வேண்டுமே என்று வாதிட்டு அவருக்குப் பதில் கூறினர். இந்த உலகைப் படைத்துள்ள கடவுளின் ஆற்றல், அவனது படைப்பின் அழகு போன்ற பல செய்திகளைக் கூறிக் (குழப்பி) கிறித்துவ மதத்தின்மீது பிடிப்பை ஏற்படுத்தி, அவரைக் கிறித்துவனாக ஞானஸ்நானம் செய்து வைத்துவிட்டனர். பின்னாட்களில் ரிச்சர்டு டாகின்சின் கருத்தும் எந்தக் குழந்தையும் கிறித்துவக் குழந்தையாகவோ, இசுலாமியக் குழந்தையாகவோ பிறப்பதில்லை; எந்தக் குழந்தையும் எப்படி மார்க்சியக் குழந்தையாகப் பிறக்க முடியதோ அதுபோலவே, எந்த மதக் குழந்தையாகவும் பிறக்காது. குழந்தையின் பெற்றோரின் மதத்தை வைத்துக் குழந்தைக்கும் மதத்தைக் குறிப்பது தவறு என்று அமைந்தது. ஆனாலும் அவர் கிறித்துவக் குழந்தை என்று ஆக்கப்பட்டார். 17,18 வயது இருக்கும்போது பரிணாமக் கொள்கை ஒன்றே படைப்புக் கொள்கையைவிட சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை தகர்ந்து, கடவுள் இல்லை எனக்கூறும் நாத்திகரானார்.கடவுள் _ ஒரு பொய் நம்பிக்கை எனும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் கிளின்டன் ரிச்சர்டு டாகின்ஸ் எனும் ஆங்கிலேயர் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற உயிரியல் அறிஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக புதுக்கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர். 1995 முதல் 2008 முடிய 13 ஆண்டுக்காலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் அறிவை மக்கள் அறியும் துறை (PUBLIC UNDERSTANDING OF SCIENCE) யின் சிறப்புமிக்க பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இப்படி ஒரு துறை நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அமைந்திருந்து கற்பிக்கப்பட்டிருந்தால் அறிவியல் பட்டதாரிகளே மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டிருக்கும் அவலநிலை இந்தியாவில் ஏற்பட்டிருக்காது.
படிப்பும் பணியும்
இங்கிலாந்து தேவாலயப் பள்ளியில் 1954 முதல் 1959 வரை படித்து, பிறகு பாலியோல் கல்லூரியில் விலங்கியல் படித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்கல்லூரியின் பேராசிரியரான நோபல் பரிசு பெற்ற நிகோலஸ் டின்பெர்கன் என்பாரிடம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 1962 இல் பட்டம் பெற்றார். அதே பேராசிரியரின் வழிகாட்டுதலின்கீழ் ஆராய்ச்சி மாணவராகி எம்.ஏ. பட்டமும் டி.பில் பட்டமும் 1966 இல் பெற்றார். விலங்குகளின் பழக்கவழக்கங்கள், குணங்கள், அவற்றின் தெரிவு செய்யும் தன்மைகள் பற்றிய சிறப்பு அறிவுபற்றி ஆய்வு செய்தவர்.
அமெரிக்காவில், பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவின் வியட்நாம் போர்க் கொள்கையை எதிர்க்கும் மாணவர்களே அதிகமாக இருந்தனர். இவரும் அதே கொள்கையைக் கொண்டிருந்த காரணத்தால் மாணவர்களுடன் இரண்டறக்கலந்து போர் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். ஃபிரான்சு நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக வியட்நாம் மக்கள் 1940களில் வீரமிக்க விடுதலைப்போரில் ஈடுபட்டனர். அவர்கள் வியட்மின் என்று அழைக்கப்பட்டனர். விடுதலை பெற்றனர். அவர்கள் நாட்டின் எல்லையில் ஒரு பலகை வைத்துள்ளனர். இந்த வழியாக பிரெஞ்சுப் படையினர் 10 லட்சம் பேர் நுழைந்தனர். ஒருவர் கூட திரும்பவில்லை என்று அந்தப் பலகை அறிவிக்கும். அப்படிப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப் போர் அது. போரின் முடிவில், வியட்நாம் தென், வட வியட்நாம் என்று பிரிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. அப்பத்தைப் பங்கிட்டுத்தர குரங்கு வந்தார்போல, மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளைக் கொண்டது தென்வியட்நாம் என்றும் எல்லார்க்கும் எல்லாமும் என்கிற பொது உடைமைக் கொள்கையைக் கொண்டது வடவியட்நாம் என்றும் பிரிக்கப்பட்டது.
அமெரிக்க எதிர்ப்பு
எல்லாம் மிகச் சிலர்க்கே எனும் முதலாளித்துவக் கொள்கை நிலவும் அமெரிக்கப் பெரிய அண்ணன், பொது உடைமைக் கொள்கையைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என்கிற வெறியில் வடவியட்நாம் மீது தாக்குதல் தொடுத்த நிலையில் அவர்கள் நடத்திய தற்காப்புப் போர் உலக வரலாற்றில் நிலையான இடம் பெற்ற ஒன்றாகும். இளைஞர்களாக இருக்கும் அமெரிக்கர்கள் எல்லாரும் வடவியட்நாம் மீதான போருக்கு வந்து பணியாற்றவேண்டும் என்பது சட்டம். போருக்கு வர மறுத்தவர்கள் உள்ளே தள்ளப்பட்ட கொடுமை. இருந்தும் எதிர்ப்புகள் ஏராளம். அதில் தன்னை இணைத்துக் கொண்ட மானுடப் பற்றாளர் ரிச்சர்டு டாகின்ஸ்.
1970 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணி அமர்த்தப்பட்டார். இருபதாண்டுகளுக்குப் பின்னர் ரீடர் பதவிக்கு உயர்ந்தார். 1995 இல் சிமோன்யி பேராசிரியர் எனும் மிக உயர்நிலைக்கு உயர்த்தப்பட்டார். சார்லஸ் சிமோன்யி என்பார் தம் பெயரால் இப்பேராசிரியர் பதவியை உருவாக்கினார். அறிவியல் அறிவை மக்கள் அறியும் துறை எனப் புதிய துறையை ஏற்படுத்தி, அதன் மூலம் பொதுமக்கள் பயன்படும் வகையில் அறிவியல் புலத்தில் சாதிக்க வேண்டும் என்ற அவாவின் காரணமாக உருவாக்கினார். அப்படி உருவாக்கப்பட்ட துறையின் முதல் பேராசிரியராக ரிச்சர்டு டாகின்ஸ் வரவேண்டும் என்றும் அவர் விருப்பப்பட்டார். அந்தவகையில் புகழ் பூத்த பேராசிரியராக இவர் விளங்கினார்.
நாத்திகக் கொள்கையாளர்
படைப்புக் கொள்கையைக் கடுமையாக எதிர்ப்பவர் ரிச்சர்டு டாகின்ஸ். ஒரு கடவுள் மனிதர்களை, எல்லா உயிர்களை, இந்த உலகைப் படைத்தது எனும் மதக் கொள்கையை மறுப்பவர். படைப்புக் கொள்கையை ஏற்பவர்கள், இந்த உலகு 4 ஆயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் படைக்கப்பட்டது எனக் கூறும் கருத்து, அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை - அபத்தமான முட்டாள்தனமானது என அழுத்தந்திருத்தமாகக் கூறுபவர். 1986 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக யூனியன் விவாதத்தில் கலந்து கொண்டார்.
இவரும் மற்றொரு உயிரியல் அறிவியலாளருமான ஜான் மேனார்டுஸ்மித் என்பவரும் ஒரு தரப்பில், வில்டர்ஸ்மிக், எட்கார் ஆண்ட்ரூஸ் என்பவர்கள் மறுதரப்பில். இவர்கள் படைப்புக் கொள்கையைப் பரப்பும் பைபிள் படைப்புச் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது எனும் கருத்தை இவரது நண்பர் ஸ்டீபன் ஜே கவுல்டு என்பார் கூறுவார். அதனை ஏற்றுக் கொண்ட ரிச்சர்டு டாகின்ஸ் கவுரவம் எனும் உயிர்க்காற்றைப் பெறுவதற்குப் படைப்புக் கொள்கையாளர்கள் இத்தகைய விவாதங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விவாதத்தில் தோற்றுப் போவதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது என்ற திருப்தியே போதும் அவர்களுக்கு (விளம்பர சடகோபம்) எனக் கூறுவார். இருப்பினும், இந்த விவாதத்தில் பங்கு கொண்டார். வென்றார். விவாதத்தின் முடிவில் படைப்பா? பரிணாமமா? என்ற வினாவுக்கு படைப்பு என்று 115 பேரும் பரிணாமம் என்று 198 பேரும் வாக்களித்தனர். ரிச்சர்டு டாகின்ஸ் அணியினர் வெற்றி வாகை சூடினர், அறிவியல் வென்றது. மதம் தோற்றது.
கடவுள் இல்லை என்பதோடு, உலகைப் படைத்தது கடவுளல்ல; அது பரிணாம வளர்ச்சி என்ற கொள்கையை உறுதியாகக் கொண்டதோடு அதனை நிறுவிக்காட்டி வருபவர். அமெரிக்கப் பத்திரிகையாளர் பில்மோயர்ஸ் என்பாரிடம் பேட்டி அளித்த போது, (2004இல்) பரிணாமக் கொள்கை (THEORY) என்று கூறினார். ஏன் அதைக் கொள்கை எனக் கூறுகிறீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்டார். பரிணாமம் நடைபெறும்போது யாரும் பார்க்கவில்லை (பார்க்க முடியாது - காரணம் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்ற படிநிலை வளர்ச்சி) ஒரு கொலை நடந்து முடிந்த பிறகு துப்பறிபவர் வந்து பார்ப்பதைப் போல, நாம் பார்க்கிறோம். கொலை நடக்கும்போது துப்பறிபவர் பார்க்கவில்லை. அனாலும் கிடைத்த தடயங்களைக் கொண்டும், சூழ்நிலை சாட்சியங் களைக் கொண்டும் அவர் முடிவுக்கு வருவதைப் போலத்தான் பரிணாமக் கொள்கை. அதனை இங்கிலீஷ் மொழியில் தியரி என்றுதான் கூறவேண்டும் எனப் பதில் கூறினார்.
- தொடரும்
உலப்பகுத்தறிவாளர் - 2
ரிச்சர்டு டாக்கின்ஸ்
"இங்கிலாந்தின் தலைமை நாத்திகர்"
- சு. அறிவுக்கரசு
அமெரிக்காவுக்கு ஆப்பு
அமெரிக்காவில் புத்தியுள்ள வடிவமைப்பு (INTELLIGENT DESIGN) என்று அறிவியல் சொல்லித்தரப்படுகிறது. அதைப்பற்றிக் கூறும்போது, அந்தக் கருத்து அறிவியல்பூர்வமாக வைக்கப்படுபவை அல்ல; மத நம்பிக்கை அடிப்படையில் கூறப்படுபவையே என ஓங்கியடித்துக் கூறுகிறார். அதேபோல, இங்கிலாந்து நாட்டில் உள்ள அறிவியலின் உண்மை (TRUTH IN SCIENCE) எனும் அமைப்பு படைப்புக் கொள்கையை அரசுப் பள்ளிகளில் கற்றுத் தருகிறது. இதனை எதிர்த்து அதனைக் கல்வித் துறையின் ஊழல் என்று வருணிக்கிறார். அத்துடன் நிறுத்தாமல், தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளையின் சார்பில் அந்தப் பள்ளிகளுக்கு நூல்கள், குறுந்தகடுகள் போன்றவற்றை அளித்து படைப்புக் கொள்கைக்கு மறுப்பான பரிணாமக் கொள்கையை விளக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இந்தச் செயல்பாடுகளினால் அவர் வெளிப்படையான நாத்திகர், மதத்தை மறுப்பவர், முரட்டுத்தனமான குரல் எழுப்பும் பகுத்தறிவாளர் என்றெல்லாம் கூறப்படுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலாந்தின் தலைமை நாத்திகர் என்றே தி ஃபைனான்சியல் டைம்ஸ் ஏடு (15.9.2010) வருணித்து எழுதியுள்ளது. நாத்திகத் தலைவர், நம் அறிவு ஆசான், தந்தை பெரியார் பிறந்தநாளில் இப்புகழ் மகுடம் அவருக்குச் சூட்டப்பட்டுள்ளது நமக்கும் மகிழ்வானது தானே! அவரேகூட, தம்மை முரட்டு நாத்திகர் எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுபவர். அறிவியலறிஞரா, நாத்திகரா என்ற கேள்விக்கு பெர்ட்ரண்டு ரசல் தம்மை பண்பான பகுத்தறிவுவாதி எனக் கூறிக் கொண்டார்; நானோ அதற்கும் மேலே போய்ச் சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன் எனக் கூறி தம்மை நாத்திகர் என்றே அழைக்கலாம் என்றார். செக்யுலர் சங்கத்தின் கவுரவ நிருவாகியாகவும் பிரிட்டிஷ் மனிதநேயச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் சர்வதேச மனிதநேய அமைப்பின் விருது பெற்றவராகவும் உள்ளார். அமெரிக்க மனிதநேய அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் ஒப்பமிட்டு, அதனை வழிநடத்துபவராக 2003 முதல் இருந்து வருகிறார்.
பரிணாமக் கொள்கையின் விரிவுபடுத்திய அறிவுதான் நாத்திகம் என்றே அறுதியிட்டுக் கூறுகிறார். டார்வினின் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு வேண்டுமானால் ஒருவர், உயிர்களின் அமைப்பு பற்றி எதுவும் அறியாமல் அனைத்தும் ஆண்டவனின் படைப்பு எனக் கூறலாம்; ஆனால், டார்வின் ஆய்வு முடிவுகளின்படி, சிந்திக்கும் திறன்படைத்த ஒவ்வொருவரையும் நாத்திகராகவே வளர்த்துவிட்டார் எனலாம் என்று தமது பார்வையற்ற கடிகாரம் செய்பவர் (BLIND WATCH MAKER) என்ற நூலில் எழுதியுள்ளார். கிறித்துவமானாலும் இசுலாம் ஆனாலும் அம்மதங்களின் தீவிர வாதங்களை வெறுப்பவர் டாகின்ஸ்.
மதக் கொடுமைகள் பற்றி
2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவின் இரட்டைக் கட்டடங்களை விமானம் மோதி இடித்துத் தள்ளிய சம்பவத்திற்குப்பின் அவர் கூறியது இதுதான்; தீங்கற்ற மடத்தனம்தான் மதம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருந்தார்கள். மனநிம்மதி பெறுவதற்கு ஊன்றுகோல் போல மதத்தைக் கருதிக் கொண்டிருந்தார்கள் என்பதால் விட்டுவைத்தோம். ஆனால், செப்டம்பர் 11 அதை மாற்றிவிட்டது, மத நம்பிக்கை தீதற்ற மடத்தனமல்ல; அபாயமான மடத்தனம் என்பது உறுதியாகிவிட்டது. தங்களைத் தாங்களே கொல்லக்கூடிய அளவுக்கான மன தைரியத்தை மதம் தந்துள்ளது. அதன் காரணமாக மற்றவர்களையும் கொல்லக்கூடிய துணிச்சலை மதம் தந்துவிட்டது. மாற்றுக் கருத்துடைய மக்களைக் கொன்று குவிக்கக்கூடிய அளவுக்கு மனித மனத்தில் வெறுப்பையும் குரோதத்தையும் மதம் ஏற்படுத்திவிட்டது. மதத்திற்கு இதுவரை நாம் அளித்துவந்த மரியாதைக்கு அது தகுதியில்லை. மரியாதை தருவதை நிறுத்திக் கொள்வோம் என்று பிசிறில்லாமல் கூறிவிட்டார்.
மதக் கருத்துகளையும் அவற்றின் நடைமுறைகளையும் பற்றி மனதின் விஷக் கிருமிகள் எனும் கட்டுரையில் குறிப்பிடும்போது, மத நம்பிக்கையற்றவர்கட்கு அளிக்கப்படவிருக்கும் நரக வேதனைகளையும் தண்டனைகளையும் பற்றி எழுதுகிறார். எந்தவித ஆதாரமுமின்றி இப்படியெல்லாம் எழுதப்பட்டிருப்பவை, உலகின் மாபெரும் கொடுமை என்று குறிப்பிட்டுள்ளார். இந்து மதத்தின் கருடபுராணத்தலும், கிறித்துவத்தின் பைபிளிலும், இசுலாத்தின் குரானிலும் எழுதப்பட்டுள்ள தண்டனை முறைகளுக்கு என்ன ஆதாரம்? எவன் பார்த்தான்? பார்த்துவந்து எழுதினான்? அப்பாவி மக்களை அச்சுறுத்தும் ஆயுதங்களாக அவை பயன்படுத்தப்படுகின்றன என்பது அல்லாமல் வேறென்ன?
உலகத்தில் நிலவும் கொடுமைகளுக்கு எது காரணம் என்கிற கேள்வி கிறித்துவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டில் கேட்கப்பட்டது. எபிகியூரஸ் என்பார் கொடுமையின் தோற்றுவாய் எது என்றே (ORIGIN OF EVIL) கேட்டார். பதில் கிடையாது. அனைத்துக்கும் ஆண்டவன் காரணம் என்றால் அதற்கும் ஆண்டவன்தானே பொறுப்பேற்க வேண்டும்? ஆம் என்று கூற மதவாதிகள் இன்றுவரை தயாராக இல்லை. ரிச்சர்டு டாகின்ஸ் எல்லாக் கொடுமைகளின் வேர் (THE ROOT OF ALL EVIL) என்று ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தார். இரண்டுபாகப் படம். தாம் கண்டவை, கேட்டவை, அறிந்தவை அனைத்தையும் ஆவணமாக்கி மதம் கெட்ட விளைவை, கெடுதலை மனித சமுதாயத்திற்குச் செய்துள்ளது என்பதை நிறுவியுள்ளார். மத நம்பிக்கையாளர்களால் நாள்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு அறைகூவல் விடும் ஆதாரப்பூர்வப் படமாக இது அமைந்துள்ளது.
செயல் வீரர்
உலக நாத்திகர்களெல்லாரும் ஒரு குடையின்கீழ் கூடித் தங்கள் கொள்கைகளைப் பரப்பிடவேண்டும் என்கிற நோக்கத்தில் 2007 இல் OUT CAMPAIGN ஆரம்பித்துள்ளார். ஆண் உறவுக்காரர்கள் வெளிப்படையாக வெளியே வந்து, தங்களை அடையாளங் காட்டித் தங்கள் உறவுகளை வெளிப்படுத்தி உரிமைகளுக்காகப் போராடியதைப் பார்த்த உத்வேகத்தில் உதயமானது இந்த அமைப்பு. நாத்திகத்தின் நன்மைகளைப் பகிரங்கப்படுத்தும் போதுதான் மதவாதிகளின் மயக்கும் பிரச்சாரம் மங்கத் தொடங்கும் என்பது இவரின் கணக்கு, கணிப்பு. 2008 ஆம் ஆண்டில் துருக்கி நாட்டின் நீதிமன்றம் அவரது இணைய தளத்தை அந்நாட்டில் யாரும் பார்க்கக் கூடாது, படிக்கக் கூடாது எனத் தடை செய்துவிட்டது. அல்லாதான் உலகையும் உயிர்களையும் படைத்தது எனும் நம்பிக்கை கொண்ட அட்னன் ஒக்டர் என்பவர் போட்ட வழக்கின் அடிப்படையில் இந்தத் தடை. அதுபோலவே, ஆஸ்திரேலியாவில் 2010 இல் மெல்போர்ன் நகரில் நடந்த உலக நாத்திகர் மாநாட்டில்கூட அவர் விமர்சிக்கப்பட்டார் என்பது வியப்பைத் தரும். போப் பயஸ் XII என்பவர் இரண்டாம் உலகப் போரின்போது வாழ்ந்தவர். யூதர்களை இட்லர் கொன்று குவித்த கொடுமை நிகழ்த்தப்பட்டபோது கிறித்துவரான அவரை போப் பன்னிரெண்டாம் பயஸ் கண்டிக்க வில்லை. இதற்காக அவரை நாஜி போப் என்று வருணித்திருந்தார் டாகின்ஸ். இதை ஆஸ்திரேலியாவில் விமர்சனம் செய்து கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட விமர்சனங்களை அவர் ஏராளம் எதிர் கொண்டு வருகிறார். என்றாலும் சோர்வடையாதவர்.
கடவுள் மறுப்புப் பேருந்து
பிரிட்டனில் தொலைக்காட்சியில் நகைச்சுவை எழுத்தாளராக உள்ள அரியன் ஷெரின் எனும் பெண் லண்டன் நகரப் பேருந்துகளில் கடவுள் அநேகமாக இல்லை (THERE’S PROBABLY NO GOD) என விளம்பர வாசகங்கள் எழுதி உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய செய்தி விடுதலை, உண்மை படிப்போருக்குத் தெரிந்ததே. பிரிட்டிஷ் மனிதநேயச் சங்கம் இதற்கு ஆதரவளித்து நன்கொடை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இதில் ரிச்சர்டு டாகின்ஸ் முழுமூச்சாக ஈடுபட்டு 5,500 பவுன்டு தொகை வசூலிக்க உதவினார். ஆனால், ஒருலட்சம் பவுண்டு தொகை வசூலானது. நான்கே நாள்களில் தொகை வசூலானதுதான் சிறப்பு. இந்த வாசகங்கள் படிப்போர் மனதில் கடவுள் உண்டா இல்லையா எனும் சிந்தனையை உறுதியாக உருவாக்கும். இப்படிச் சிந்திப்பதே மதத்திற்கும் மதவாதிகளுக்கும் வெறுப்பை ஏற்படுத்தும் செயல்தானே என்று மிகப் பெருமையாகப் பேசுகிறார் டாகின்ஸ்.
மதங்களுக்கு எதிராகப் போராடி வரும் கிறிஸ்டபர் ஹிட்சன்ஸ் என்பாருடன் சேர்ந்து 2010 இல் தற்போதைய போப் கைது செய்யப்பட்டு மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் எனும் இயக்கம் நடத்தினார். 1998 இல் சிலி நாட்டு சர்வாதிகாரி அகஸ்டோபிரைகெட், இங்கிலாந்து நாட்டுக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, அதே சட்டப் பிரிவுகளின்படி போப் பெனடிக்ட் XVI கைது செய்யப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார். போப் பெனடிக்ட் இங்கிலாந்துக்கு வருகை தந்ததை எதிர்த்துக் கையெழுத்து இயக்கமும் நடத்தினார்.
- தொடரும்
Home -> 2011 உண்மை இதழ்கள் -> ஏப்ரல் 16-30 -> உலகப் பகுத்தறிவாளர் -ரிச்சர்டு டாக்கின்ஸ்
உலகப் பகுத்தறிவாளர் -ரிச்சர்டு டாக்கின்ஸ்
சுதந்திரச் சிந்தனைப் பள்ளிகள் - சு.அறிவுக்கரசு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தன் மனைவியை மணவிலக்கு செய்ய இங்கிலாந்து மன்னர் விரும்பினார். உலகக் கிறித்துவர்களின் தலைவரான போப் அனுமதியின்றி ஓரணுவும் அசையக்கூடாது என்பது அன்றைய மதம். அந்த மதக்கட்டளைப்படி போப்பிடம் மணவிலக்குக்கான அனுமதி கேட்கப்பட்டது. போப் தரவில்லை. இறைவன் போட்ட முடிச்சை மனிதன் அவிழ்க்கக்கூடாது என்று கூறித்தான் கிறித்துவத் திருமணங்கள் செய்து வைக்கப்படுகின்றன. அப்புனிதச் சடங்கைக் கேலிக் கூத்தாக்கும் இங்கிலாந்து மன்னரின் கோரிக்கையைப் போப் மறுத்தார். நீ யார் மன்னனுக்கு மறுப்புச் சொல்ல? நீ என் மதத்தலைவன் இல்லை என்ற ரீதியில் மன்னன், தன் நாட்டுக்குத் தனி தேவாலயம், தனி மதம், தனி மதத் தலைவர் (ஆர்ச் பிஷப்) என்று பிரகடனம் செய்துவிட்டார். ஆர்ச் பிஷப் மூலம் மணவிலக்குப் பெற்றார். மறுமணமும் செய்து கொண்டார் மனம் விரும்பிய மங்கையை. அப்படி உருவானதுதான் புரொடஸ்டன்ட் கிறித்துவம் எனப்படும் கிறித்துவ மதப் பிரிவு. போப் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கத்தோலிக்கக் கிறித்துவர்கள் என்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால், போப்பின் அதிகாரத்தை நிராகரித்துத் தனிமதம் கண்ட நாட்டுக்குப் போப் வருவது வியப்புதான். கம்யூனிச நாடுகளுக்கே போகும் போப், இந்த நாட்டுக்குப் போனதில் வியப்பில்லை. கம்யூனிஸ்டுகளெல்லாமே மத நம்பிக்கை கொண்டவர்கள்தானே என்கிற நம்பிக்கை போப்புக்கு இருக்கலாம், அதிலும் தப்பில்லைதான்.
ஜே.பி. சந்திரபாபு என்கிற குணச் சித்திர நடிகர் ஒருவர் இருந்தார். தூத்துக்குடியைச் சார்ந்த பிரபல காங்கிரசுக்காரர் ஒருவரின் மகன். அவருக்குத் திருமணம் நடந்தபின் முதல்முறையாக இருவரும் சந்தித்தபோது அவரது மனைவி அவரிடம், தான் வேறொருவரைக் காதலித்ததாகவும் பெற்றோர்கள் இந்த விருப்பமில்லாத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டதாகவும் மனம் திறந்து கூறிவிட்டார். தன் மனைவியை அவரின் காதலருடன் சேர்த்து வைப்பதாக சந்திரபாபு உறுதி கூறி, அவரைத் தன் சகோதரியாக நடத்தினார். சில நாள்களில் காதலருடன் குடும்ப வாழ்க்கை நடத்தத் தம் மனைவியை அனுப்பிவைத்தார். அவர் கத்தோலிக்கக் கிறித்துவர் என்பதால் மணவிலக்குக் கிடைக்காது என்று அதற்கான முயற்சி எடுக்கவில்லை. மறுமணமும் செய்து கொள்ளவில்லை. மன உளைச்சலால் மதுப்பழக்கத்திற்கு ஆளாக, மரணத்தை முத்தமிட்டார். மதம் செய்த கொடுமைகளில் இதுவும் ஒன்று,
அப்படிப்பட்ட மதத்தின் கோரப் பிடிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும், சுதந்திரச் சிந்தனையாளர்களாக மாறவேண்டும், அதன் வாயிலாக எதையும் ஏன், எப்படி, எதனால் எனக் கேள்வி கேட்கும் பகுத்தறிவு மனப்பான்மை வளர்ந்து பரவவேண்டும் என்கிற உயரிய நோக்கங்களைக் கொண்டு சுதந்திரச் சிந்தனைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்துக்கு டாகின்ஸ் வலு சேர்க்கிறார். பிறந்த குழந்தைகள் எல்லாமே கடவுள், மத நம்பிக்கையின்றிதான் பிறக்கின்றன; அவற்றின் பெற்றோர்கள்தாம், தங்களின் நம்பிக்கைகளைக் குழந்தைகளிடம் திணிக்கின்றனர். இந்நிலை கூடாது. பள்ளிப்பருவத்திலேயே சொல்லிக் கொடுத்து, சுயமாகச் சிந்தித்து முடிவுக்கு வருமாறு அவர்களை வளர்த்திட வேண்டும் என்பது குறிக்கோள்,
அவர் தொடங்கிய அறக்கட்டளையின் சார்பில் தம் பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளைத் தம் இணையதளம் மூலம் பரப்பி வருகிறார். போலி அறிவியலையும் மாற்று மருத்துவம் போன்றவற்றையும் அவர் கடுமையாகத் தாக்குவார். மூடநம்பிக்கைகளுக்குப் புதுப்புது விளக்கங்களைக் கூறி, அறிவியல் போலக் காட்ட முயற்சிக்கும் அறிவியலாளர் பட்டியலில் அய்சக் நியூட்டனையும் அவர் விட்டு வைக்கவில்லை. வானவில்பற்றிக் கூறிய நியூட்டன் அதன் அற்புதமான அழகுபற்றிக் கூறாமல் மாறான எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார் என்கிறார். ஜான் டயமண்டு என்பார் எழுதிய பாம்பு எண்ணெய் (SNAKE OIL) எனும் நூலுக்கு முன்னுரை எழுதும் போது மாற்று மருத்துவம் (ALTERNATIVE MEDICINE) பற்றிய தம் கருத்துகளை வெளிப்படுத்தினார். இவ்வகை மருத்துவம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்கிறார். தொடு சிகிச்சை, காந்த சிகிச்சை, ஹோமியோபதி போன்ற மருத்துவங்கள் தீதானவை என்பதோடு மக்களுக்குப் பொய் நம்பிக்கைகளைத் தருகின்றன எனக் கூறியுள்ளார். நோயைத் தீர்க்க வேலை செய்யும் மருந்து என்றும் வேலை செய்யா மருந்து என்றும் இருவகைகள் மட்டுமே உள்ளன என்கிறார்.
பகுத்தறிவின் விரோதிகள் எனும் தலைப்பில் 2007 இல் தயாரித்த தொலைக் காட்சிப் படத்தில் ஜோசியம், ஆன்மிகம், ஆவிகள், மாற்று நம்பிக்கைகள், மாற்று மருத்துவமுறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றைச் சாடுகிறார். நம்பிக்கைப் பள்ளிகளின் தொல்லை என ஒரு படம் தயாரித்து கல்வியில் எப்படியெல்லாம் மூட நம்பிக்கைகளைப் புகுத்தி எதிர்காலத் தலைமுறையினர் அறிவைப் பாழடிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
கர்த்தரின் சம்மதத்தைப் பெற்றே ஈராக் மீது போர் தொடுத்தேன் என்று உளறிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சைக் கண்டித்து நாளேடுகளில் நிறைய எழுதினார். இவை போன்றவை (A DEVIL’S CHAPLAIN) சாத்தானின் பாதிரி எனும் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் அரசாட்சி முறையில் அரசியை அகற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவரைக் கொண்ட குடியாட்சி முறை வரவேண்டும் என்று எழுதியுள்ளார். 1970 முதல் தொழிற்கட்சிக்கு வாக்களித்து வந்த டாகின்ஸ், தாராள ஜனநாயகக் கட்சி (LIB -ERAL DEMOCRATS) தொடங்கப்பட்டதிலிருந்து அதன் ஆதரவாளராக இருந்து வருகிறார். நம்பிக்கை என்பதற்கு எதிரான கொள்கை களையும், மத நிந்தனைச் சட்டங்களுக்கு எதிர்ப்பாகவும், மாற்று மருத்துவமுறைக்கு எதிராகவும், பள்ளி களில் (கடவுள், மத) நம்பிக்கைகளுக்கு ஆதரவான பாடங்களைக் கற்பிப்பதற்கு எதிராகவும் கொள்கைகளைக் கொண்ட கட்சியாக அது இருப்பதால் அக்கட்சியைத் தாம் ஆதரிப்பதாக அக்கட்சியின் மாநாட்டில், 2010 தேர்தலின் போது பேசும்போது குறிப்பிட்டார்.
ஆக, அவர் கொண்டிருக்கும் எல்லாக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் அடிப்படை பகுத்தறிவு, நாத்திகம், மனித நேயம் ஆகியவையே! அவருக்கும் நமக்கும் பெருமை தரக்கூடிய செய்தி இது.
பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூல்களை எழுதியிருக்கிறார். எட்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார். ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதிக் குவித்திருக்கிறார். கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்ற நூல் மட்டுமே 20 லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன. இந்நூல் 31 மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு உலகின் எல்லா நாடுகளிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. என்கார்டா என்சைக்ளோபீடியா, என்சைக்ளோபீடியா ஆஃப் எவல்யூசன் (பரிணாமம்) ஆகியவற்றின் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி அவற்றைத் தொகுத்துள்ளார்.
1967 இல் தன்னுடன் பணிபுரிந்த அறிவியல் பேராசிரியர் மரியன் ஸ்டாம்ப் என்பாரை மணந்து கொண்டார். 1984 இல் மணவிலக்குப் பெற்ற இவர்களுக்குக் குழந்தை இல்லை. பின்னர் ஈவ்பர்ஹாம் என்பாரை ஆக்ஸ்போர்டில் மணந்து ஜூலியட் எம்மா டாகின்ஸ் எனும் பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆயினர். அவர் மனைவி புற்றுநோயால் இயற்கை அடைந்த பிறகு லல்லா வார்ட் எனும் நடிகையை 1992 இல் மணந்துள்ளார்.
அவர் எழுதிய (SELFISH GENE) சுயநல மரபணு எனும் நூல் மிக அற்புதமான நூல் என அறிவியல் உலகம் பாராட்டும் நூல். மரபணுக்கள் அடிக்கடி பிரிந்தும், பிறகு இணைந்தும் செயல்படும் ஆற்றல் கொண்டவை என்கிறார். அவை தனித்து இருக்க இயலாதவை; பிறவற்றுடன் இணைந்து ஒன்றை உருவாக்கியவை என்கிற கருத்துகள் அவைபற்றிய நிலையை அறிய உதவுகின்றன.
அதுபோலவே பூமியின் பெரிய நாடகம் (THE GREATEST SHOW ON EARTH) எனும் நூல் உயிர்களின் பரிணாமத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் நூல்.
பல்கிப் பெருகுவாயாக என்று கர்த்தர் ஆசிர்வதித்தார் என்று கூறிக்கொண்டே - கருத்தடை கர்த்தருக்கு எதிர்ப்பானது எனச் சொல்லிக் கொண்டே செயல்படுவதால் உலகம் மக்கள் தொகையால் நிரம்பி வழிவதைக் கண்டு மனம் வெதும்புகிறார். கத்தோலிக்கர் கிறித்துவத்தின் அணுகுமுறையைக் கண்டிக்கிறார்.
மதவாதிகளின் கொள்கைகளுக்கும் வெகுமக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிர்ப்பான கருத்துகளை வெளிப்படுத்திச் செயல்படும் நாத்திக அறிவியல் அறிஞரான ரிச்சர்டு டாகின்ஸ்சுக்கு 1989 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவியல் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. ஹடர்ஸ்பீல்டு, வெஸ்ட்மினிஸ்டர், டர்வராம் போன்ற பல்கலைக்கழகங்களும் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியுள்ளன. தொடர்ந்து வரல், ஆன்ட்வெர்ப், அபர்டீன், பிரஸ்ஸலில் உள்ள வ்ரிஜ், வாலன்கியா ஆகிய பல்கலைக்கழகங்களும் இதே பெருமையைத் தந்துள்ளன. டி.லிட் பட்டங்களை செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவை அளித்தன.
இவரது எழுத்துப் பணிகளைப் பாராட்டி பலப்பல பாராட்டுகளும் விருதுகளும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன - இவர் பெற்ற மெடல்கள் எண்ணிலடங்காதவை. உலகெங்கும் பரவியுள்ள ஏடுகள் தங்கள் அமைப்புகளின் சார்பாக இவரது அறிவியல் இலக்கியப் பணியைப் பாராட்டி, பாராட்டு விருதுகள் அளித்துத் தங்களை உயர்த்திக் கொண்டுள்ளன. பிரிட்டிஷ் பிரபஞ்ச நூல் விருது, டைம் ஏட்டின் விருது, தி டெய்லி டெலிகிராப் போன்ற ஏடுகளின் விருதுகள் குறிப்பிடத்தக்கவை. பிரிட்டனின் முக்கிய 100 பேர்களில் முதல்வராக இவர் 2004 இல் கணிக்கப்பட்ட பெருமையும் உண்டு, உலகில் வாழும் பெரும் மேதைகள் 100 பேர்களில் 20 ஆம் இடத்தை இவர் பெற்றது டெய்லி டெலிகிராப் ஏட்டின் கருத்துக் கணிப்பில்.
2003 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாத்திகக் கட்டமைப்பின் சார்பில் சிறப்பு மிகு நாத்திகச் செம்மலுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதின் பெயர் ரிச்சர்டு டாகின்ஸ் விருது என்பதாகும். இதுஒன்றே, இவரின் அறிவை, ஆற்றலை, பணிவை மொத்த உலகமும் பாராட்டிக் கொண்டிருப்பதைப் பறைசாற்றும்.
நோயாளிகள் தம் ஆழ்மனதில் சிலவற்றை உண்மை, சரியானவை என்று நினைத்துக் கொண்டு அதற்கான ஆதாரங்களைத் தேடிப் போகாமல் திருப்தி அடைகிறார்கள். அத்தகைய எண்ணத்தை மருத்துவர்களாகிய நாங்கள் நம்பிக்கை (FAITH) என்கிறோம் எனக் கூறி கடவுள், மத நம்பிக்கையாளர்களைத் தோலுரிக்கிறார்.
கணினியைத் தாக்கும் வைரஸ் போல, கண்டறிவதற்குக் கடினமானவையாக இத்தகைய எண்ணங்கள் இருக்கின்றன. பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இவை தெரியாதவை மட்டுமல்ல, அவை இல்லையென்று மறுத்திடும் மனோபாவமும் இப்படிப்பட்டவர்கட்கு உண்டு என்கிறார் டாகின்ஸ். கடவுள் பற்றிய பக்தர்களின் கணிப்பு தவறானது என அறிவியல் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் ஏற்க மறுக்கிறது இத்தகைய மக்களின் மனம்.
தேவாலயங்களின் கம்பீரம், அங்கு இசைக்கப் படும் இனிய இசை, கூறப்படும் அற்புதக் கதைகளும் அவற்றின் வசனங்களும் உங்கள் மதத்தை நிர்ணயிப்பது ஓரளவே. உங்களுக் கான மதத்தை நிர்ணயிப்பது நீங்கள் குறிப்பிட்ட பெற்றோர்களுக்குப் பிறந்த விபத்தே ! கிறித்துவப் பெற்றோருக்குப் பிறந்ததால் குழந்தையும் கிறித்துவக் குழந்தையாக்கப்படுகிறது. அதுபோலவே இந்து, இசுலாம், பவுத்தம், யூதம் போன்ற மதக் குழந்தைகளின் நிலையும்.
கலிலியோவுக்கு மன்னிப்பளித்த கத்தோலிக்கம் அதைவிட மின்னல் வேகத்தில் டார்வினியக் கொள்கையின் உண்மையை அங்கீகரிக்கிறது என்று கூறி மதவாதிகளைப் பரிகாசம் செய்கிறார்.
உலகம் இருப்பதற்கும் உயிர்கள் வாழ்வதற்கும் கடவுள் தேவைப்படுகிறார் என்று பலரும் நினைக்கிறார்கள். அது மிகவும் தவறான கருத்து. ஆனால், நமக்களிக்கப்படும் கல்வி, அந்த உண்மையை நமக்குத் தெரிவிப்பதாக அமையவில்லையே! என வருந்துகிறார் ரிச்சர்டு டாகின்ஸ். உலகமெங்கும் கல்வித்திட்டம் மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுப்பதாகவே உள்ளன. மூடநம்பிக்கைகளிலேயே பெரும் கொடுமையான மூடநம்பிக்கை என்பது கடவுள் நம்பிக்கையே என்றார் தந்தை பெரியார். அத்தகைய நம்பிக்கையைக் கல்வித்திட்டம் வளர்க்கிறது, எல்லா நாடுகளிலும்!
இது அழிக்கப்படவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக