"ஓ" மறப்போம், மன்னிப்போம்
- சோம.இளங்கோவன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தைகளில் சில முத்திரைகளாகப் பதிந்து விட்டன. அதில் ஒன்றுதான் "மறப்போம், மன்னிப்போம்" என்ற முத்திரை. இன்று விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சியில் ஓ பதிவிடுகின்றார் " மறப்போம், மன்னிப்போம், மகிழ்வுடன் வாழ்வோம்" என்று.
ஓப்ரா தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் சேர்ந்து வானொலி மற்றும் "ஓ" என்ற இதழும் நடத்துகின்றார். அதில் பல கட்டுரைகள் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன. மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் போன்று, நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான வழிமுறைகள் பற்றி வெளியிடுவார். அதிலே சிறந்த ஒன்றுதான் யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம், உங்கள் உடல்நலத்துக்காக! என்ற கட்டுரை.
இதை அமெரிக்க நியூயார்க் சிரக்குயூசு பல்கலைப் பேராசிரியை ஃகேரியட் பிரவுன் எழுதியுள்ளார். அவரும் சிலரும் ஒரு சிறு கூட்டத்தில் உள்ளனர். அங்கே ஒரு ஆராய்ச்சியாளரைப் பார்க்கின்றனர் தங்கள் மன்னிப்புத் தேடுதலுக்காக. அவருக்குப் பல ஆண்டுகளாக அவரது அம்மா மீது கடுங் கோபம். அதை மாற்ற முயலுகின்றார்.
அமெரிக்கா கலிபோர்னியாவில் மிகவும் போற்றப்படும் பல்கலைக்கழகம் ஸ்டான் போஃர்டு பல்கலைக்கழகம். சான்பிரான்சிஸ்கோ அருகே பேலோஆல்ட்டோ என்ற அருமையான நகரிலே அற்புதமான சூழலிலே உள்ள பல்கலைக்கழகம். அதிலே பல வாழ்வியல் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதிலே ஒன்றுதான் " மன்னிப்பு மய்யம்" எனும் ஆராய்ச்சித் திட்டம். அதிலே புகழ் வாய்ந்த பேராசிரியர் முனைவர் பிரட் லசுகின். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலே இதிலே ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
அயர்லாந்தில் நடந்த வன்முறைகளிலே, போரிலே பாதிக்கப்பட்ட இரு சாரரையும் தனித்தனியே சந்தித்துள்ளார். இதுபோன்ற ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்து ஆராய்ந்துள்ளார். நியூயார்க் இரட்டைக் கோபுர இடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந் துள்ளார்.
மனிதருக்கு இயற்கையாக உண்டாகும் உணர்வுகள்தாம் கோபம், அதிலே தோன்றும் வெறி, பழிவாங்கும் மனப்பான்மை போன்றவை மிகவும் ஆழமானவை. பலருக்குப் பல அனுபவங்கள். மற்றவர்கள் செய்த துரோகத்தை, தந்த வேதனையை, மனவருத்தத்தை மறக்க முடியாத வாழ்க்கை. மன அழுத்தமும், மன உளைச்சலும் இல்லாத மனிதரைக் காண முடியுமா? அது நம்மை எப்படித் தாக்குகின்றது? நமது ரத்த அழுத்தத்தை ஏற்றுகின்றது. தூக்கமின்மை, வருத்தம், கோபம் என்று மன அமைதியைக் குலைக்கின்றது. நம்முள்ளே ஒரு புற்று நோய் போல அரித்துத் தின்கின்றது !
இத்தாலியில் லிசா (லிசா சாய்ந்த கோபுரம் உள்ள நகரந்தான்) பல்கலைக்கழகத்திலே மூளை ஆராய்ச்சி செய்து உயிரோட்ட ஸ்கேன் எம்.ஆர்.அய். எடுத்துள்ளார்கள். அதிலே மூளையின் எந்தெந்த பாகங்கள் கோபம், வருத்தம் போன்ற உணர்வுகள் வரும்போது துடிக்கின்றன என்பது தெளிவாகப் பிடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு "மண்டையே வெடித்து விடும்" என்கின்றார்களே, அது உண்மைதான்.
இந்தக் கட்டுரையாளர் பேராசிரியர் பிரட் லசுகின் அவர்களின் மன்னிப்பு மய்ய நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார். எங்கோ விளையாடப் போவது போன்ற காக்கி உடுப்பு. ஆடம்பரமே இல்லாதவர் ஒருவருடைய கதை, அய்ந்து வயதிலிருந்தே தந்தையால் மிகுந்த தொந்தரவிற்கும், பாலியல் வன்முறைக்கும் ஆளானவர். நான் எப்படி மன்னிக்க முடியும் என்று கோபத்திலும் வேதனையிலும் துடிக்கின்றார். பேராசிரியர் அனைத்து உணர்ச்சிகளையும் எழுதச் சொல்கின்றார். எழுதி முடித்ததும் இதில் எது உனக்கு உதவி செய்யப் போகிறது, கெடுதல் செய்யப் போகிறது என்று குறிக்கச் சொல்கின்றார். அனைத்துமே மன அழுத்தம், ரத்த அழுத்தம், படபடப்பு உண்டாக்கக் கூடியவைதான். பேராசிரியர் சொல்கின்றார்:
மன்னிப்பு உன்னைத் துன்புறுத்தியவருக்காக அல்ல. உனக்காக என்பதை உணர வேண்டும். உன் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டுமானால் நீ மனதார மன்னிக்க வேண்டும் என்கின்றார். அதுபோலவே இறந்துவிட்ட தனது தந்தையின் (தந்தை தற்கொலை செய்து இறந்துவிடுகின்றார்) கல்லறையில் ஒரு கூழாங்கல்லை வைத்து மன்னித்துவிடுகின்றேன் என்று மனமார மன்னித்துவிடுகின்றார். மன அழுத்தம் குறைந்துவிடுகின்றது.
தொந்தரவு செய்தவர்கள் தொடர்ந்தும் தொந்தரவு செய்தால் என்ன செய்வது என்று கேட்கின்றார்கள். அதற்குப் பேராசிரியர், கோபமில்லாமல் எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகிச் செல்லுங்கள் என்கிறார்.
இதெல்லாம் சொல்வதற்கு எளிது, செயல்படுத்த முடியுமா?
மேடிசன் விசுகான்சின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் என்ரைட் 26 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மன்னிப்பு ஆராய்ச்சியைத் தொடங்கினார். அப்போது பலர் சிரித்தனர். அவர் சொன்னார், இந்த மன்னிப்பு என்பது மிகச் சாதாரணமானதல்ல. நீ யார்? உண்மையிலேயே உயர்ந்த மனது படைத்தவரா இல்லை போலியா? என்பதை உங்களுக்கே உணர்த்திவிடும் என்ற மிக ஆழமானக் கருத்தை எடுத்துரைத்தார். ஆம், வெறும் நடிப்பாக இல்லாமல் உண்மையாக மனதார மன்னிப்பவர்கள் நல்ல மன அமைதி, மனமகிழ்வுடன் வாழ்கின்றார்கள்.
மன்னிக்கத் தெரியாதவர்கள் நோயாளிகள். அந்த நோய் அவர்களை அரித்துக் கொண்டேயிருக்கும்.
மன்னிப்பு என்பது உண்மையாக இருக்க வேண்டும். கனிவுடன் இருக்க வேண்டும். கிழக்குக் கரோலினா பல்கலைக்கழகப் பேராசிரியை காத்தலீன் லாலர் -ரோ, மன்னிப்பும், உடல்நலமும்" என்ற ஆராய்ச்சி யிலே சிறப்புப் பெற்றவர். ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் , தூக்கமின்மை நீங்கி, மன அமைதி, உடல், உள்ளநலம் முன்னேறுகிறது என்று கூறுகின்றார்.
சரி, இதையெல்லாம் எப்படி நடைமுறைப்படுத்துவது ? நடக்கக்கூடியதா?
இது உடனே திடீரென்று நடந்துவிடாது. இதற்குப் பயிற்சி வேண்டும். என்ன மாதிரிப் பயிற்சி ? வயிற்றால் மூச்சுவிட வேண்டும். இந்தக் கோபம், வருத்தம், வெறி வரும்போது வயிற்றை ஏற்றி இறக்கி வயிற்றால் மூச்சுவிட வேண்டும். நமக்கு மிக மிக அன்பு கொண்டோர் தாய், தந்தை, வாழ்விணையர், உடன்பிறப்பு, நல்ல ஆசிரியர் என்று யாரை நாம் மிகவும் அன்புடன் நினைக்கின்றோமோ அவர்களது அன்பை, அவர்கள் செய்த நல்லவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இதில் இந்த ஆசிரியர் பெண் நினைத்தது யாரைத் தெரியுமா? அவரது மாமியாரை! அவரது அன்பை நினைத்துச் சிந்தித்ததும் அவரது கண்களில் கண்ணீர் வடிந்ததாம்! அந்த நினைவு தரும் மன அமைதி மிக்க நிறைவுடையது, மருந்துகள் தர முடியாதது என்கின்றார். அம்மாவுடன் ஆண்டாண்டு காலமாகக் கோபத்தில் உள்ள இவர் மாமியாரின் அன்பிலே உருகிவிட்டார்! ஒவ்வொருவருக்கும் இப்படி யாராவது இருப்பார்கள். அவர்களை நினைத்தால் அமைதி கிடைக்கும்.
இது நடைமுறைக்கு ஒத்து வருமா? என்று பலர் கேட்கலாம். பல்லாயிரம் பேர் பயனடைந்து மன மகிழ்வு பெற்றுள்ளனர். அவர்களது மன மகிழ்வே இது முடியும் என்பதற்கு அடையாளம். நாம் ஒவ்வொருவரும் மகிழ்வுடன் வாழ்வதற்குப் பெருந்தடைகளில் ஒன்றை எளிதாக ஒழிக்க முடியுமென்றால் அதை முயற்சி செய்து பார்க்க வேண்டியதுதானே ! சில கோபதாபங்கள் குறைவதற்கு நாட்கள் ஆகலாம். எதுவுமே இரண்டு ஆண்டுகளுக்கு மேலே இருக்கக்கூடாது என்கின்றார்கள்.
பேரறிஞர் அண்ணா என்ன செய்தார் என்று பார்ப்போம். முதலமைச்சர் ஆனவுடன் அவர் செய்த முதல் வேலை தந்தை பெரியார் அவர்களைத் திருச்சிக்குச் சென்று பார்த்து மகிழ்ந்ததுதான். தேர்தலிலே பெரியார் அவர்கள் மிகவும் காட்டமான தாக்குதலுடன் பிரச்சாரம் செய்தார். ஆனால் அண்ணா வந்தவுடன் தந்தை பெரியார் அவர்களே வெட்கப் பட்டாராம். மகிழ்ச்சியுடன் வாழ்த்தினாராம். தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட அத்துனைப் பேரையும் மனமாரப் பாராட்டிப் பரிசுகளும், மரியாதையும் செய்தவர் அண்ணா. பெருந்தலைவர் காமராசர் உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்புச் செய்யப்பட்டார்.
காமராசர் என்ன கவிஞரா என்று கேலி பேசியவர்களை வெட்கப்பட வைத்தார் அண்ணா.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசாத, எழுதாத கொடுமையான வார்த்தைகளே இல்லை எனலாம். அவரை நான் கொடுத்து நீங்கள் வாங்கக் கூடாது, என் கை கீழே இருக்கட்டும், நீங்கள் பொற்கிழியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இதுபோன்ற பலர் அண்ணா அவர்களை வன்மையாகத் தாக்கியவர்கள். அவர்கள் பெருமைப்படுத்தப் பட்டதால் அண்ணா மட்டுமல்ல, தமிழினமே உடல்நலமும், உள்ள நலமும் பெற்றது.
ஓப்ராவைப் பலர் விமர்சித்தனர். சில வெள்ளை உள்ளமில்லாத வெள்ளைப் பெரிய மனிதர்கள், சிலர் வெள்ளையாக மாறிவிட்ட ஓப்ரா என்று கேலி பேசிய கருப்பர்கள், அவருடைய அந்தரங்க வாழ்க்கையை அலசியவர்கள், ஒரு நம்பிக்கைக்குள்ள நண்பி அவரது சிறு வயதில் குழந்தை பெற்ற செய்தியை வெளியே சொன்னவர் என்று அனைவரையும் தனது நிகழ்ச்சிக்கே வரச் சொல்லி மன்னித்துக் கட்டித் தழுவியவர் ஓப்ரா! இது உங்களுக்காக மட்டுமல்ல, எனக்காகவுந்தான் என்றார்.
"ஓ" ஒரு அதிசயந்தான் !
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக