இந்தியாவில் பிறந்து இங்கிலீசில் எழுதிய, எழுதும் எழுத்தாளர்களில் பகுத்தறிவாளர்கள் எனக் கருதப்படக்-கூடியவர்கள் சிலரே. அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் டாக்டர் முல்க் ராஜ் ஆனந்த். பஞ்சாப்காரர். மற்றவர் குஷ்வந்த் சிங். இவரும் பஞ்சாபிதான். மூன்றாவதாகக் குறிப்பிடக்கூடியவர் சல்மான் ருஷ்டி. பம்பாய்க்காரர். 1947 ஜூன் 19 ஆம் நாளில் பிறந்தவர். இந்திய சுதந்திரமும் இவரும் ஒரே வயதுக்காரர்கள். இருவருமே புகழ் பெற்றவர்கள் வெவ்வேறு வகையில்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வழக்குரைஞர் பட்டம் பெற்ற அனீஸ் அகமது ருஷ்டி வணிகராக மாறியவர். நெகின்பட் எனும் ஆசிரியையை அவர் மணந்து பெற்றெடுத்த பிள்ளைதான் சல்மான் ருஷ்டி. பம்பாயில் தொடக்கக் கல்வியைக் கற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்-கழகத்தின் மன்னர் கல்லூரியில் வரலாறு படித்துப் பட்டம் பெற்-று எழுத்-தாளரானவர். பட்டம் பெற்றவுடன் இரு விளம்பர நிறுவனங்களில் சிறிதுகாலம் பணியாற்றி, பிறகு எழுத்தையே தம் முழு நேரத் தொழிலாகக் கொண்டார்.
ஓர் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், தாம் என்றுமே இசுலாமிய மார்க்கப்படி வாழ்ந்தவரில்லை என அவரே தெளிவாக்கியுள்ளார். அவரது எழுத்துகளில் மதங்களின் மோதல், மதக் கொள்கைகளின் இடையே நிலவும் முரண்கள், மோதல்கள் விரிவாக அலசப்-படும். மத நம்பிக்கை கொண்டோரின் எண்ணங்களுக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களின் கருத்துகளுக்குமிடையே உள்ள முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வரும் வகையில் அவரது எழுத்துகள் அமைந்துள்ளன. மத நம்பிக்கையற்றவர் கருத்து என்று அவரே தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். இந்த வகையில் அவர் கையாளும் பாணி பலராலும் பாராட்டப்-படுகிறது. அன்னியில், அவரை அடையாளமும் காட்டுகிறது.
வெளிப்படையாகவே, தன்னை ஒரு நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டவர் சல்மான் ருஷ்டி. பிரிட்டன் மனித நேய அமைப்பின் ((BRITISH HUMANIST ASSOCIATION) புகழ்பெற்ற ஆதரவாளர். அதேபோல, அமெரிக்காவின் மதச்சார்பற்ற கூட்டமைப்பின் (SECULAR COALITION FOR AMERICA) ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்காவிலுள்ள எல்லா நாத்திக அமைப்புகள், மனித நேய அமைப்புகள் ஆகியவற்றிற்கு வாதாடும் போர்க்குணமிக்க கூட்டமைப்பாகும் இது. அதன் ஆலோசகராக உள்ளார் என்பது இவரைச் செயல்வீரராகவும் அடையாளம் காட்டுகிறது.
உலகின் மூன்று பெரிய மதங்களின் பொருந்தாக் கூற்றுகளைத் தோலுரித்து எழுதுகிறார். ஆழ்ந்த படிப்பறிவு மட்டு-மல்லாமல், நேரடி அனுபவ அறிவும் சேர்ந்தவர். இசுலாமிய மதக்கல்வி கற்பிக்கப்பட்டவர். இவரைத் தாதியாக இருந்து வளர்த்தவர் கிறித்துவப் பெண் செவிலி. தொடக்கநிலைப் பள்ளிப் பாடங்கள் படித்தது கிறித்துவ மிஷினரிப் பள்ளிகளில். வாழ்ந்தது இந்துக்களின் மத்தியில்.
18 நூல்களுக்குமேல் எழுதிப் புகழ் பெற்ற சல்மான் ருஷ்டி 1975 இல் எழுதிய முதல் நாவலான கிரிமஸ் (GRIMUS) இவருக்கு எதையும் தரவில்லை. பத்தோடு ஒன்றாகப் படிப்போர் மனதில் இருந்தது. ஆனால், 1981 இல் இவர் எழுதிய நள்ளிரவுக் குழந்தைகள் (MIDNIGHT’S CHILDREN) உலகப் புகழைப் பெற்றுத் தந்தது. வெளிவந்த ஆண்டின் சிறந்த நூலுக்கான புக்கர் பரிசைப் பெற்றது. கடந்த 100 ஆண்டுகளில் வெளிவந்த நாவல்களிலேயே சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. 1993, 2008 ஆகிய ஆண்டுகளில் புக்கர் பரிசு பெற்ற நாவல்களிலேயே சிறந்த நாவல் எனும் பரிசுகளை ஈட்டியுள்ளது. நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு இந்தியாதான். அதற்குக் காரணம் மூடநம்பிக்கை. ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை, வானுலகக் கிரகங்களின் நிலை நாட்டுக்கு நன்மை பயப்பதாக இல்லை என்றெல்லாம் ஜோசியர்கள் பயமுறுத்தவே, பயந்துபோன இந்திய தேசியக் காங்கிரசுத் தலைவர்கள் நள்ளிரவைத் தேர்ந்தெடுத்தனர். சூரியன் மறைந்து மறுநாள் உதயம் ஆகும்வரை உள்ள 12 மணி நேரத்திற்குப் பஞ்சாங்கப் பலன்கள் கிடையாது. நல்ல நேரம் கெட்ட நேரம் கிடையாது. ஆனால், அவர்கள் குறிப்பிட்ட கிரகங்கள் இரவு நேரமானாலும் அங்கேயே-தானே இருக்கும்? கிரகங்கள் படுக்கைக்கா போய்விடும்?
இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட்ட நள்ளிரவில் பிறந்த சலீம் சினாய் எனும் குழந்தையின் கதையைக் கூறும் நாவல் இது. அற்புத சக்திகள் கொண்டு பிறந்த சலீம் சினாய் தனது தொலைஅறிவு (டெலிபதி) எனும் ஆற்றலைக் கண்டு ஏனைய நள்ளிரவுக் குழந்தை-களுடன் தொடர்பு வைத்ததாகக் கற்பனை போகும். கற்பனைக் கதைகளினூடே கடவுள், மதப் பொய்மைகள் அலசப்படும். குறிப்பாக இசுலாம், பவுத்தம், கிறித்துவம் ஆகிய மூன்று மதங்களின் ஸ்தாபகர்களைத் தோல் உரிக்கும்.
மதக் கதைகளில் அளக்கப்பட்ட நம்பமுடியாத கற்பனைகளை, அற்புதங்களை, கதா பாத்திரங்-களின் செயல்பாடுகளாகக் காட்டி நையாண்டி செய்யும் நேர்த்தி பாராட்டுக்குரியது. கதைப் பாத்திரங்களின் பெயர்கள், சம்பவங்கள் நடக்கும் இடங்கள் எல்லாமே இசுலாமிய, கிறித்துவ மதங்களில் குறிப்பிட்டிருப்பவைகளை ஒத்ததாக இருக்கும். சலேம் என்று ஓர் இடம் கதையில் வரும். இன்றைய ஜெருசலத்தின் அன்றைய பெயர் சலேம் (SALEM) என்பதுதான். பத்துக் கட்டளைகளைக் கர்த்தர் வெளிப்படுத்தியதாக பைபிளின் பழைய ஏற்பாடு குறிப்பிடும் சினாய் மலை கதாநாயகனின் பெயரிலேயே அமைந்-திருக்கும். கதாநாயகன் தாயின் பெயர் ஆமினா என்பது. முகமது நபியின் தாயின் பெயரும் அதுவே. கதாநாயகனின் பிறப்புபற்றி இந்துமதச் சாமியார் முன்னதாகவே தீர்க்க தரிசனம் கூறுவார் எனக் கதை. முசுலிம்களின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பயந்த இந்து ஒருவர் ஆமினாவின் வீட்டுக்குள் புகுந்து விடுகிறார். அவரைக் காட்டிக் கொடுக்க விரும்பாத ஆமினா, தான் பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பதைக் கூறி கும்பலை விரட்டிவிடுகிறார். இந்தச் சம்பவத்தைக் கதாநாயகன், தன் அவதாரம் ஓர் உயிரைக் காப்பாற்றியது என்று பீற்றிக் கொள்வான் என்பது கதை. கிறித்துவத்தில் அவதாரம் சிறப்பாகக் கருதப்படுகிறது. கன்னிமேரியின் அவதாரதினம் (ANNUN CIATION) மார்ச் 25 இல் கிறித்துவ மதத்தவரால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதனை நையாண்டி செய்திட இந்த வாசகத்தை நாவலில் இடம்பெறச் செய்துள்ளார்.
இறைவசனம் தம் மூலம் இறக்கப்பட்டதை முகமது நம்பவில்லை. தனக்கு மூளை சரியில்லை என்றே எண்ணினார். கதீஜாவும், அபுபக்கரும் இறை அழைப்பை உறுதி செய்து கூறியபின் அவர் நம்பினார்...... கல்லறையிலிருந்து கிறித்து உயிர்த்து எழுந்தாரா? .... உலகம் மாயை என்பதை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள மறுதலிக்கின்றனரா? என்றெல்லாம் நாவலின் வரிகள் அமைந்து மும்மதங்களையும் விமர்சிக்கின்றன.
இத்தகைய நள்ளிரவுக் குழந்தைகள் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. இந்திய இயக்குநர் தீபா மேத்தா தயாரிக்கிறார். தனது தீ (FIRE), நீர் (WATER) போன்ற திரைப்-படங்களுக்காக இந்து மதச் சனாதனிகளால் கண்டிக்கப்பட்டவர், தாக்கப்பட்டவர்; இந்தியாவில் படப்பிடிப்பு நடத்திட அனுமதி மறுக்கப்பட்டவர். ஆனால் என்ன? அவர் உலகப் புகழ் பெறுவதை இவர்களால் தடுக்க-முடியவில்லை. புகழ்பெற்ற ஷப்னா ஆஸ்மி, நந்திதாதாஸ், சீமா பிஸ்வாஸ், இர்ஃபான்கான் முதலியோர் நடிப்பில் படம் உருவாகிறது. சல்மான் ருஷ்டியே திரைக்கதை எழுதி வருகிறார்.
சல்மான் ருஷ்டியின் மூன்றாவது நாவல் வெட்கம் (SHAME) என்பது பாகிஸ்தானின் பின்னணியில் எழுதப்பட்டது, அந்நாட்டின் தலைவர்களான புட்டோ, ஜியாவுல்ஹக் ஆகியோர்பற்றிய செய்திகள் கதாபாத்திரங்கள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும் கற்பனை. பிரான்சு நாட்டின் வெளிநாட்டு நூலுக்கான உயர்ந்த இலக்கியப் பரிசு பெற்றது இது.
அவருடைய நான்காவது நாவல்தான் சாத்தானின் கவிதை (THE SATANIC VERSES) எனும் நூல். இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூல். 1988 இல் வெளிவந்தது. இசுலாமிய வழக்கத்தில் நம்பப்படும் ஒன்றைப்பற்றி சர்ச்சைக்கு இடமான வகையில் இவர் எழுதியிருக்கிறார் என்பது இவர் மீது கூறப்படும் குற்றச்சாற்று.
இதனை முதலில் கூறி அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று மதக் கட்டளை பிறப்பித்தவர் ஈரானின் மதத் தலைவர் காலஞ்சென்ற அயாதுல்லா கொமேனி என்பவர். இதனால், பெரும்பாலான இசுலாமிய நாடுகளிலும் இசுலாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் இந்நூல் தடை செய்யப்பட்டு-விட்டது. இந்தியா, வங்காளதேசம், சூடான், தென்ஆப்பிரிக்கா, சிறீலங்கா, கென்யா, தாய்லாந்து, தான்சானியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், வெனிசுலா ஆகிய 11 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.
1989 பிப்ரவரி 14 இல் ஈரான் நாட்டு டெஹரான் வானொலி நிலையம் மதக் கட்டளையை ஒலிபரப்பியது. வாலன்டைன் டே எனப்படும் காதலர் தினமான அந்நாளில் வாழ்த்து அட்டைபோல, புதுப்பிக்கப்பட்ட மதக் கட்டளை இன்றளவும் அவருக்கு ஈரானிலிருந்து அனுப்பப்படுகிறது. இந்த மதக் கட்டளையின் காரணமாக பிரிட்டனுக்கும் ஈரானுக்கும் ராஜீய உறவே முறிந்துபோனது. சல்மான் ருஷ்டி பலத்த காவலில் இருக்கும் இடம் தெரியாமல் பிரிட்டிஷ் அரசால் வைக்கப்பட்டுக் காப்பாற்றப்-பட்டார். அந்தத் தலைமறைவு வாழ்க்கையால் வெறுப்புற்ற அவர் மனைவி அவரை விவா-கரத்து செய்துவிட்டார். வேறென்ன சோகம் வேண்டும்? ஆனாலும், அவர் மன்னிப்புக் கேட்கவுமில்லை; தம்மை மாற்றிக் கொள்ளவும் இல்லை.
- (தொடரும்)
உலப்பகுத்தறிவாளர்
சல்மான் ருஸ்டி
சாத்தானின் கவிதைகள் படிக்கும்போது முதலில் விளங்காததுபோல் தெரியும்; குழப்பமாகத் தோன்றும். மறுமுறை படிக்கும்போது தெளிவாகப் புரியும். என்ன கருத்தைச் சொல்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். கதை ஒன்பது பாகங்களைக் கொண்டது. கதைப்போக்கு ஒற்றைப்படை எண்களைக் கொண்ட அய்ந்து பாகங்களில் சொல்லப்படுகிறது. இரட்டைப்படை எண்களைக் கொண்ட 2,6 பாகங்கள் முகமது நபியின் செயல்பாடுகளை விவரிக்கிறது. தொடக்க நிலையில், மெக்கா என்றழைக்கப்படும் ஜாகிலியா எனும் பாலைவன நகரில் அவரது செய்கைகளையும், 4,8 பாகங்கள் ஆயிஷா எனும் ஏழைப் பெண்ணின் கதையையும் கூறுகிறது. வலிப்பு நோயால் பீடிக்கப்பட்ட ஆயிஷா தன்னை கபிரியேல் எனும் தேவதூதனின் தூதுவராகக் கருதிக் கொண்டு அரபிக் கடலைக் கடந்து மெக்கா செல்ல முயலும் கதையைச் சுவைபட விவரிக்கிறது.
இந்நூலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தடையும், மதக் கட்டளையும் வந்ததற்குக் காரணம் இதுதான்; குர்ஆன் வசனங்கள் இறைத்தூதரான முகமது நபிக்குத் தெரிவிக்கப்பட்டன, எழுதப் படிக்கத் தெரியாதவரான முகமது அவற்றைக் கேட்டுத் திருப்பிக் கூற அவையே குர்ஆன் ஆகத் தொகுக்கப்பட்டன என்பது இசுலாமிய நம்பிக்கை. இவற்றில் மூன்று வசனங்கள் (சூரா) மெக்காவில் கடவுள்கள்ஆக வணங்கப்பட்ட மூன்று கடவுளச்சிகள் தொடர்பானவையும் சேர்ந்து உள்ளன. மறுநாள், இம்மூன்று சூராக்களும் சாத்தானின் வேலையால் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுவிட்டன என்று முகமது நபி அறிவித்துவிட்டதால் அவை சாத்தானின் வரிகள் எனக் கருதப்படுகின்றன.
பல கடவுள் வணக்கங்களைக் கைக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த அரபிக்களின் மத்தியில் ஒரே கடவுள் எனும் கொள்கையைப் பரப்பி நிறுவிட முகமது நபி மிகவும் பாடுபட்டார் என்பது வரலாறு. அத்தகைய அரபிக்களின் முக்கிய வணக்க இடமாக மெக்காவில் உள்ள காபா விளங்குகிறது. அங்கே காதல் கடவுளான உஜ்ஜா (UZZAH) தலைவிதிக் கடவுள் மனத் (MANAT) தாய்க்கடவுளான இலாத் (ILAT) ஆகிய மூன்றும் மிக முக்கியமாக வணங்கப்பட்டன. இப்பெண்கடவுள்களை வணங்கிய மக்களின் வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாகாத வகையில், அவர்களை அனுசரித்துப்போய், தம் கொள்கையைப் பரப்பிடும் எண்ணத்தில் அவர்களின் கடவுள் நம்பிக்கையைக் கண்டிக்கவில்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால், மறுநாள் சைத்தானின் விஷம வேலையை இறைத்தூதர் கபிரியேல் சுட்டிக்காட்டிய பின்னர், குர்ஆனின் சூராக்கள் திருத்தி அமைக்கப்பட்டன.
(சூரா 53_19, 20).
இலாத் மனித உருவிலும், உஜ்ஜா மரம் உருவிலும், மனத் வெள்ளை நிறக் கல் உருவிலும் இருந்ததாகக் குறிப்பிடப் படுகிறது. இவையெல்லாம் இந்நூலில் குறிப்பிடப்படுகின்றன. அதுவே தலைப்பாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. நாவலில் வரும் சல்மான் எனும் கதாபாத்திரம் சாத்தானின் கவிதைவரிகளைக் காரணம் காட்டி நபிகளிடமிருந்து விலகிப்போய் விட்டதாகக் கதையை அமைத்துள்ளார். என்னுடைய சொற்களுக்கும் இறைத்தூதரின் சொற்களுக்கும் வேறுபாடு கண்டுபிடிக்கக்கூடச் சக்தியற்றவர் என்றால், என்ன அர்த்தம்? தெய்வீகச் செய்யுளின் தன்மையைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? இங்கே பாருங்கள்! இதனால் என் மனம் ஆடிப்போய்விட்டது என்று ஒரு கதாபாத்திரம் (சாத்தான்) கூறுவதுபோல உரையாடலை அமைத்துள்ளார்.
இந்த மனிதன் இசுலாத்தை அவமதித்துவிட்டான்; இவன் சாகடிக்கப்படவேண்டும் என்று இதனால்தான் கொமேனி கூறினாரோ?
சலாவுதின் எனும் பாத்திரம் நடிகராக விரும்பி விநாயகன், அனுமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழ் பெறுகிறது (என்.டி.ராமராவைப்போல). நாளடைவில் ரசிகர்கள் சலாவுதினையே இந்துக் கடவுளாகக் கருதிக் கும்பிடுகிற நிலையையும் வருணிக்கிறார். தேவதூதன் எனும் பொருள்படும் ஃபரிஷ்டா என்று தன் பெயரை மாற்றிக் கொள்கிறார். விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் இருக்கும்போது (தன் மத அடிப்படையில்) தனக்கு இந்தத் தண்டனையை அல்லா வழங்கும் அளவுக்குத் தான் செய்த பாவம் என்ன என்று அல்லாவிடம் இறைஞ்சுகிறார். அல்லாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை! (எப்படி வரும்? இருந்தால்தானே! கேட்டால்தானே! பேசினால்தானே!) விரக்தியும் கோபமும் அடைந்த சலாவுதீன் _ ஃபரிஷ்டா _ ஓட்டலுக்குப் போய் பன்றிக்கறி சாப்பிடுகிறார். (பன்றிக்கறி இசுலாத்தில் சாப்பிடக்கூடாதது). இதன்மூலம் கடவுள் இல்லை என்ற முடிவுக்குத் தாம் வந்துவிட்டதை வெளிப்படுத்துகிறார்.
இப்படியாகத் தம்முடைய கடவுள் நம்பிக்கையற்ற கொள்கையை இந்நாவலின் கதாபாத்திரங்களின் மூலம் நகைச்சுவையாக, அதே சமயத்தில் மிகவும் வலிமையாக வெளிப்படுத்திக் கையாள்கிறார். மதக் குப்பைகளைக் கிளறி குறிப்பாக இசுலாமிய மதக் குப்பையைக் கிண்டி - அதன் பயங்கரங்களையும் அதிலிருந்து விடுதலை பெறும் வழிகளையும் விவரிக்க முயற்சி செய்துள்ளார், மதச்சார்பற்றவர் என்ற தன்மையில் தன் இலக்கியப் படைப்புகளை வெளிக் கொணர்ந்துள்ளார். கட்டுரை எழுதுபவர் நேரிடையாகத் தம் கருத்துகளைப் பதிவு செய்ய முடியும். பேச்சாளர் தம் எண்ணங்களை நேருக்கு நேராக எடுத்துக் கூறமுடியும். ஆனால் கதை சொல்லும் படைப்பாளி, தாம் படைக்கும் கதை நாயகர்களின் வாய்களின் மூலம்தான் தனது கருத்துகளைத் தெரிவிக்க முடியும். அந்த உத்தியைத்தான் சல்மான் ருஷ்டி கையாண்டு வருகிறார்_மிகவும் வெற்றிகரமாக! அதுதான் மதவாதிகளை உறுத்துகிறதோ?
உருவ வணக்கம் செய்பவர்களைக் கண்டால் வெட்டுங்கள், கொல்லுங்கள் என உபதேசம் செய்கிறது இசுலாம். தங்கள் மதத்தை எதிர்ப்பவர்களை விசாரித்து மரண தண்டனையைக் காட்டுவிலங்காண்டித் தனமான கொடூர வழிகளில் நிறைவேற்றிட ஓர் அமைப்பையே வைத்திருந்தது அந்நாள்களில் கத்தோலிக்க மதமும் அதன் தலைவர் போப்பும். தங்கள் கடவுள்களை நம்பாதவர்களை மட்டுமல்ல, தங்கள் வேதங்களை மறுப்பவர்களையும் நாத்திகர் எனக்கூறி அவர்களின் தலையை ஆங்கே அறுப்பதே கடமை என வலியுறுத்துகிறது இந்து மதம். முரண்பாடுகளைக் கொண்டுள்ள இம்மதங்கள், தங்களுக்குள் பகைமை பாராட்டி வெறுத்து எதிர்க்கின்றன. இரண்டு மதங்களை மூன்றாம் மதம் எதிர்க்கிறது. அந்த மூன்றாம் மதத்தையும் எதிர்ப்பவர்களை - மதக் கட்டளையின் பேரில் கொல்ல முயலும் கொடுமை!
நஜீப் மாபுஸ் (NAGIB MAHFUZ) எனும் எகிப்திய எழுத்தாளர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1988 ஆம் ஆண்டில் பெற்றவர். 1981 இல் அவர் எழுதிய கெபலவியின் பிள்ளைகள் எனும் நாவலில் இசுலாமியக் கருத்துகளுக்கு மாறாக எழுதிவிட்டார் என்று அவரைக் கொல்லும்படி எகிப்தின் மன்னர் ஷேக் உமர் அப்துல் ரஹ்மான் பகிரங்கமாகவே பேசினார். பசவண்ணா எனும் பசவரேஸ்வராவைப்பற்றி எழுதினார் என்பதற்காக சரித்திர ஆய்வாளர் கல்பர்கி (KALBURGI) இந்துக்களால் அண்மையில் மிரட்டப்பட்டார். கம்யூனிச நாடான சீனாவில் திருமணங்கள், உடல்உறவு பற்றிய ஆய்வு நூலை எழுதிய கிலீ மற்றும் சங்யா ஆகிய இருவரும் இசுலாமியர்களால் மிரட்டப்பட்டு, 4000 பேர் கொண்ட கும்பல் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தால் அவர்கள் மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டது. 3 விழுக்காடு உள்ள சீன முசுலிம்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டதன் விளைவு இது.
ஈரான் நாட்டு மதத் தலைவராக இருந்த காலஞ்சென்ற கொமேனி, ஏறத்தாழ 20 ஆயிரம் (பாட்வா) மதக் கட்டளைகளைப் பிறப்பித்த பெருமைக்குரியவர். 1947 இல் முதன்முதலாகப் பிறப்பிக்கத் தொடங்கி தன் ஆயுள்காலம் வரை இதே தொழிலாக இருந்துள்ளார். அகமது கஸ்ரவி எனும் ஈரானியர் இசுலாமிய முல்லாக்களைப் பற்றிய தம் கருத்தைக் கூறினார் என்பதற்காக அவரது கழுத்தை அறுத்துக் கொன்றவர் கொமேனி. மதம் மக்களின் சிந்தனையை அடக்குகிறது. கருத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மறுக்கிறது. இவற்றின் மூலம் எதைச் சாதித்தன மதங்கள்? மக்களுக்காக மதமா? மதங்களுக்காக மக்களா?
-தொடரும்
உலப்பகுத்தறிவாளர் - 3
சல்மான் ருஷ்டி
ஒடுக்குமுறைகள் சல்மான் ருஷ்டியை அசைக்க முடியவில்லை. இலக்கியத்திற்காக அவர் செய்துவரும் தொண்டினைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும்வகையில் பிரிட்டிஷ், அரசி இரண்டாம் எலிசபெத் அவருக்கு சர் பட்டம் கொடுத்துக் கவுரவித்துள்ளார். 2007 ஜூன் முதல் அவர் சர். அகமது சல்மான் ருஷ்டி என அழைக்கப்படுகிறார். பிரான்சு நாட்டின் கலைத் தளபதியாக ஆக்கப்பட்ட பெருமையும் எமோரி பல்கலைக்கழகத்தின் சார்பில் போற்றுதலுக்குரிய எழுத்தாளர் எனும் பெருமையும் இதே ஆண்டில் அவரைத் தேடி வந்தன. 1945 முதல் இதுவரையிலான 50 மிகவும் புகழ் பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் ஒருவர் எனும் பெருமை, அமெரிக்க கலை, எழுத்தாளர் அகாடெமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை ஆகியவையும் 2008 ஆம் ஆண்டில் அவர் பெற்ற பல சிறப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
அவர் பாடலாசிரியரும்கூட. இசை பற்றிய அவரது அவள் காலுக்கடியிலுள்ள நிலம் எனும் நூல் புகழ் பெற்றது. பல சிறப்பான இசைப்பாடல்கள் இடம்பெற்ற நூல் இது. இந்தியா, இங்கிலாந்து, டப்ளின், இத்தாலி, அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன், ஜெர்மனி போன்ற எண்ணற்ற நாடுகளின் பரிசுகளும் விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்க எழுத்தாளர் அமைப்பான றிணிழி அமைப்புக்கு 2004 முதல் 2006 வரை தலைவராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டவர், மதக் கட்டளை எனும் கரைச்சேற்றால் இந்தத் தாமரையின் வாசம் போகவில்லை. அந்தக் காரிருள் இந்த நாத்திகக் கதிரவனின் கதிர் வீச்சுகளை மறைக்கவும் முடியவில்லை. முடியாது.
ஆலிவுட் நடிகராக விரும்பிய சல்மான் ருஷ்டி, நிறைவேறாத தம் ஆசையை இரு படங்களில் தலையைக் காட்டி நடித்திருக்கிறார். ஒரு திரைப்படத்தில் மருத்துவராகவும் நடித்திருக்கிறார்.
அவர்மீது பிறப்பிக்கப்பட்ட மதக் கட்டளை கொமேனி 1989 இல் இறந்த பிறகும் உயிருடன் இருக்கிறது. அய்தொல்லா அலி கமேனி எனும் தற்போதைய மதத் தலைவர் அக்கட்டளையைப் புதுப்பித்துள்ளார். திரும்பப் பெறவேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை இவர் மறுத்துவிட்டார். யார் போட்டாரோ, அவரேதான் திரும்பப் பெறமுடியும். அவர்தான் இறந்துவிட்டாரே! எனவே, திரும்பப் பெறும் வாய்ப்பே இல்லை எனக் கூறிவிட்டார். அவரைக் கொல்ல முயன்றவர்கள்தான் இறந்துபோனார்கள்.
முகமது நபியைப்பற்றி கார்ட்டூன் வெளிவந்தபோது ஒரு மதப் பிரிவுத் தலைவர் கூறினார்; மதத்தைவிட்டு ஓடிய சல்மான் ருஷ்டியை எந்த இசுலாமியனாவது கொன்று போட்டிருப்பானேயானால், தீர்க்கதரிசியைக் கார்ட்டூன் போடும்நிலை டென்மார்க், நோர்வே, பிரான்சு நாடுகளில் வந்திருக்குமா என்று அங்கலாய்த்துக் கொண்டார். ஏன் அவரே அதனைச் செய்திருக்கக்கூடாது எனும் கேள்விக்கு ஹிஸ்புல்லா பிரிவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா என்ன பதில் கூறுவார்? இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் முயன்று, முடியாமல் செத்துப்போனதை லண்டன் இடுகாடும் டெஹ்ரானின் இடுகாடும் சாட்சியம் கூறிக்கொண்டிருக்கின்றன.
அவருக்கு சர் பட்டம் தந்ததை மலேசிய, பாகிஸ்தானிய முசுலிம்கள் எதிர்த்தனர். அல்கொய்தா அமைப்பு எதிர்த்தது. இசுலாத்திற்குச் செய்யப்படும் அவமரியாதை என்று வருணித்தது.
அவர் செய்த குற்றம் என்ன? இசுலாம் மதத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென விரும்புவதாக வாஷிங்டன் போஸ்ட், தி டைம்ஸ் ஆகிய ஏடுகளுக்கு ஆகஸ்ட் 2005 இல் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது என்ன குற்றம்? இது என்ன பாவம்?
பழக்க வழக்கங்களுக்கு அப்பால், நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கைகள் கொண்டுவரப்படவேண்டும், இருளடைந்த இறுக்கமான மதப் பாடசாலைகளில் இருப்போர் தூயகாற்றை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டும்...இசுலாமிய வேதம், ஒரு சம்பவம் மட்டுமே என்ற எண்ணமும் இயற்கைக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றினால் அல்ல எனும் எண்ணமும் மதக் கல்வியைக் கற்கத் தொடங்குவோருக்குத் தெரிவிக்கப்படவேண்டும்...சகிப்புத் தன்மையும், பரந்த எண்ணங்களும், வெளிப்படையாக அமைதியை விரும்பும் தன்மையும், மதப் போர்களுக்குத் (ஜிகாத்) தூண்டும் கருத்துகளுக்கு எதிர்ப்பும்... தேவைப்படுகின்றன... என்கிற ரீதியில் அவரது கருத்துகள் அமைந்திருந்தன.
பிரான்சு நாட்டு இடதுசாரி ஏடான, கார்லி ஹெப்டோவில் 2006 மார்ச் மாதத்தில் அவர் எழுதி வெளியிட்ட பிரகடனம், மதத் தீவிரவாதங்களையும் மதம் மட்டுமே முக்கியம் எனும் தத்துவத்தையும் முறிப்பதாக அமைந்திருந்தது. பிரிட்டனின் மக்கள் சபைக் கட்சித் தலைவர் ஜாக் ஸ்ட்ரா என்பவர் இசுலாமியப் பெண்கள் முகம் முழுவதையும் மூடிக் கண்களுக்கு மட்டும் ஜன்னல் வைத்து அணியும் நிகாப் முறையை எதிர்த்துப் பேசியதை சல்மான் ருஷ்டி ஆதரித்தார். தம் சகோதரிகள் மூவருமே முகமூடி ஏதும் அணிவதில்லை எனப் பகிரங்கப்படுத்தினார். இம்முறை பெண்களின் சுதந்திரத்தைக் குறுக்கும் செயல் என்பதால் தாம் ஜாக் ஸ்ட்ராவை ஆதரிப்பதாகக் கூறினார்.
ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். சல்மான் ருஷ்டி மதங்களை எதிர்த்தார். ஏன்? மதங்கள் மனிதர்களை மதிப்பது கிடையாது. மனித உரிமைகளை மதிப்பது கிடையாது. மனிதநேயத்தை மதிப்பது கிடையாது. மனித சுதந்திரத்தை _ கருத்துக் கொள்ளவோ வெளியிடவோ உள்ள சுதந்திரத்தை மதிப்பது கிடையாது. பெண்களை மானுடப் பிரிவுகளாகவே கருதுவது கிடையாது. பெண்களுக்கு எந்த உரிமையும் தருவதற்கு எண்ணமே கிடையாது. இத்தகைய கிடையாதுகள் அவரிடம் கிடையாது என்பதால் அவர் மதத்தை மதிப்பது கிடையாது. எதிர்த்தே வந்துள்ளார், வருவார். மதத்தை எதிர்க்கும் கடவுள் மறுப்பாளர் என்பதால் மதவாதிகள் மத்தியில் அவருக்கு இடம் கிடைக்காமல் இருக்கலாம். மதவாதிகளின் புளுகான மறு உலக வாழ்க்கையில் இடம் இல்லாது_ மகிழ்ச்சி இல்லாது போகலாம். ஆனால், மானுடப் பற்றாளர்களின் மனதில் அவர் பெற்றுள்ள இடத்தை எந்த மதவாதியாலும் அசைக்க முடியாது. அவர் வாழ்க்கை கற்பிக்கும் பாடம் இது.
- சு. அறிவுக்கரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக