'ஓ' நூலைப் படி!
சங்கத் தமிழ் நூலைப் படி ! காலையில் படி, மாலையில் படி என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இதை முழுதும் ஆதரித்து நூலைப் படிப்பதன் அவசியத்தை எடுத்துச் சொல்லிப் பரப்பியவர் ஓப்ரா வின்ஃபிரி.
அவருடைய குழந்தைப் பருவம் மிகவும் தாங்க முடியாத துன்பத்திலிருந்தது. தனது பதினான்காவது வயதிலே அவரது தந்தை என்று கருதப்பட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மிகவும் கண்டிப்பானவர். இராணுவத்திலிருந்தவர். முடி திருத்துபவராகப் பணிபுரிபவர். அவர் ஓப்ரா நனறாகப் படிக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். பள்ளி நிகழ்ச்சிகளில் பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமூட்டியவர்.
வாரம் ஒரு புத்தகம் கட்டாயம் படித்து அதைப் பற்றி எழுதி அவரிடம் காண்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். பள்ளிப் படிப்பிலும், பேச்சிலும் நல்ல திறமைசாலியாக வந்தார் ஓப்ரா. அதுவே அவர் பின்னாட்களில் இந்தத் துறையில் வெற்றி பெற வழி வகுத்தது.
பெண்களுக்குக் கல்வி வேண்டுமென்று பாடுபட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17. பாருங்கள் அதிசயத்தை. அந்த நாளிலேதான் பல அதிசயங்களைச் சாதித்த ஓப்ரா 1996 ஆம் ஆண்டு அவரது நூலைப் படி நிகழ்ச்சியை ஒரு நாவலைப் பற்றி அறிமுகப்படுத்தித் தொடங்கி வைத்தார்.
அமெரிக்காவிலே பல புத்தகக் குழுக்கள் உள்ளன. மாதம் ஒரு புத்தகம் என்ற மிகவும் பிரபலமான புத்தகக் குழு 1926 ஆம் ஆண்டு முதல் உள்ளது. சேரும் பொழுது ஒரு டாலருக்கு நான்கு நல்ல புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். மாதந்தோறும், அவர்கள் நல்ல புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து உறுப்பினர்களுக்கு அனுப்புவார்கள். வேண்டாமென்றால் முதலில் சொல்ல வேண்டும்.
அந்த மாதப் புத்தகத்தை அனுப்ப மாட்டார்கள். அல்லது புத்தகத்தைத் திருப்பி அனுப்பலாம். அதில் உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்து வருபவர்கள் பலர். 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இன்னும் பல குழுக்கள் அமெரிக்க மக்கள் தொலைக்காட்சி நிறுவனம், ரேடியோ நிறுவனங்கள் என்றும் உண்டு. பொதுவாகவே அமெரிக்காவில் புத்தகங்கள் வாங்குவோரும் படிப்போரும் அதிகம். இதில் ஓப்ராவின் புத்தகக் குழுவிற்கு அப்படி என்ன சிறப்பு?
ஓப்ரா தேர்ந்தெடுப்பது மிகவும் பிரபலமான எழுத்தாளர்களை அல்ல. மக்களின் ஆர்வம், புத்தகம் படிக்க வேண்டும் என்று தூண்டுமாறு உள்ள புத்தகங்கள், மக்களுக்குப் பயன் தரும், உற்சாகம் தரும், முன்னேற வைக்கும் அல்லது மகிழ்ச்சியூட்டும் என்று பல முறைகளை வைத்துத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆசிரியர்களை அழைத்துப் பேசுவார். அவர் தேர்ந்தெடுத்த 70க்கும் மேற்பட்ட புத்தகங்கள் 5 கோடிகளுக்கு மேலே விற்கப்பட்டுள்ளன. அவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால் உடனே பல்லாயிரக்கணக்கான அதிக நூல்கள் அச்சிடப்பட வேண்டும்.
முக்கியமாக பெண்களும், புத்தகம் படிக்கும் பழக்கமில்லாதவர்களுமே அழைக்கப்பட்டுப் பேசுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். ஆகமொத்தம் மக்கள் புத்தகம் படிக்கும் நல்ல பழக்கத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்; வாழ்வில் மகிழ்ச்சியடைய வேண்டும்; இதற்கு அவரது நிகழ்ச்சி பயன்பட வேண்டும்; இதுதான் அவர் குறிக்கோள். இதில் வெற்றி கண்டு பல பாராட்டுகளும் பெற்றுவிட்டார்.
இதில் என்ன அதிசயம் என்றால் புத்தகங்களும், தொலைக்காட்சியும் போட்டி நிறுவனங்களாகக் கருதப்பட்டன. ஆனால், தொலைக்காட்சி மூலமாகவே புத்தகங்களை அறிமுகப்படுத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியும் வெற்றி பெற்றது, புத்தக நிறுவனங்களும் வெற்றி பெற்றன என்பது அவரால்தான் சாதித்துக் காண்பிக்கப் பட்டது. இதை நல்ல அறிஞர்களையும், பேராசிரியப் பெண்மணிகளையும் வைத்து தமிழகத் தொலைக்காட்சிகள் பயன் பெறலாம், பயன் பெற வைக்கலாம்.
சிகாகோவின் சிறந்த பல்கலைக் கழகங்களின் ஒன்றான டீ பால் பல்கலைக் கழகப் பேராசிரியர் காத்தலீன் ரூணி அம்மையார் இதை எடுத்துச் சொல்கின்றார். ஆண்டாண்டு காலமாக உடன்பட்டுச் செயல்பட முடியாத புத்தக நிறுவனங்களையும், வியாபார நோக்கமே கொண்ட தொலைக்காட்சியையும் வெற்றிகரமாக இணைத்து வெற்றி கண்டவர் ஓப்ரா என்றார். அவரது நூல் ஓப்ரா- அமெரிக்காவையே மாற்றிவிட்ட புத்தகக் குழு இதை எடுத்துச் சொல்கின்றது. புத்தகங்களைப் பற்றிப் பேசாதவர் களை யெல்லாம் புத்தகங்களைப் பற்றிப் பேசும் நடைமுறையை உண்டாக்கியவர் ஓப்ரா என்கின் றனர். அதாவது தமிழகத்திலே சினிமாவையும், தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சிகளையும் பற்றிப் பேசிக் கொள்கின் றார்களே அதைப் போல. ஒரு கிழவர் இறந்ததற்குத் தமிழகமே அழுததே அதே போல ஓப்ரா லியோ டால்ஸ்டாயின் 19ஆம் நூற்றாண்டின் துயரமான காதலோவியம் ஆனா காரனினா பற்றி அறிமுகப்படுத்தியதும், அந்தப் புத்தகம் விற்பனையில் முதலிடத்திற்கு வந்து விற்றது. அது போல பழையன, புதியன என்று பல்வேறு நூல்களை விற்பனையில் உயரச் செய்து அந்த ஆசிரியர்களின் அடுத்த நூல்களும் சிறந்து விற்றுள்ளன.
இதில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஒரு ஆசிரியர் பொய்யான தகவல்களைக் கொண்டு நூலை வெளியிட்டுவிட்டார். அதை ஓப்ராவும் அறிமுகப்படுத்தி விட்டார். தவறை அறிந்ததும் அந்த ஆசிரியரை வரவழைத்து மன்னிப்புக் கேட்க வைத்தார். சில நூல்கள் விற்பனை ஆகாது என்று தெரிந்தாலும் அதன் சமுதாயத் தாக்கத்திற்காக, மக்கள் மேம்பாட்டிற்காக அவைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். குடி, போதைகள் அவற்றிலிருந்து மீளுதல் போன்றவை அவருக்கு மிகவும் பிடித்த, மக்களுக்கு வேண்டிய நூல்களாக விவாதிக்கப்பட்டன.
ஓப்ரா புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது நமக்கு மிகவும் வேண்டிய நண்பர் நம்மிடம் புத்தகத்தைப் பற்றிப் பேசுவதுபோல உள்ளது என்கின்றார்கள் அவரது நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பல லட்சம் பேர். அதுவே பெரிய உற்சாகமாகப் பேசப்படவும், மற்றவர்கள் படிக்கவும் நேர்ந்து ஒரு இயற்கைத் தன்மை வாய்ந்த விளம்பரம். ஆனால், விளம்பரத்திற்காக அல்ல நமக்காக என்று எண்ணப்பட்டு விடுகின்றது.
ஆங்காங்கே புத்தகக் குழுக்கள் உருவாகவும், முக்கியமாக மகளிர் பங்கேற்று தன்னம்பிக்கை, மன உளைச்சல்களிலிருந்து விடுதலை, வாழ்க்கையில் மகிழ்ச்சி, முன்னேற்றம் பெறுவதாகவும் பங்கு பெறுவோர் கூறி வருகின்றனர்.
நமக்குத் தமிழகத்தின் இன்றைய முக்கியத் தேவை இந்த மாதிரியான புத்தகக் குழுக்களே! தொல்லைக்காட்சிகளின் அடி,உதை, சூழ்ச்சி, மாமியார் மருமகள் சண்டைகள், சின்ன வீட்டு நிகழ்ச்சிகள் என்று சமுதாயத்தையே சீர்குலைக்கும் போதையிலிருந்தும், குடி போதையில் வாடும் குடும்பங்களுக்கு வழி முறைகள் காட்டவும் இந்தப் புத்தகக் குழுக்கள் கட்டாயம் உதவும். முக்கியமாக மகளிர் தன்னம்பிக்கை, தன்முனைப்பு, மகிழ்ச்சியான உறவுகள், நல்ல குழந்தை வளர்ப்பு, நல்ல உணவு உடற்பயிற்சி, மன அமைதி வழிமுறைகள் என்று வாழ்வின் அனைத்து முன்னேற்றங்களும் வளர வழி வகுக்கும்.
மிக எளிதாக மூன்று, நான்கு பேர் அமைத்த புத்தகக் குழுக்கள் எல்லாம் வளர்ந்து அவர்களுக்கு உதவுவதை ஓப்ராவின் வாசகர்கள் உணர்ந்து பாராட்டுகின்றனர். இதில் திராவிட மகளிர் அணி முன்னோடியாக இருந்து, எந்தப் புத்தகத்தையும் படிக்கலாம் என்று பொதுவாக இருந்து ஆரம்பித்துக் காட்ட வேண்டும்.
இது நமது பண்பாட்டுச் சீரழிவைத் தடுக்கும். மக்கள் மகிழ்வுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழக் கட்டாயம் வழி வகுக்கும்.
நடுவிலே ஓராண்டு நிறுத்தி வேறு மாதிரியாக நூலாசிரியர்கள் பங்கேற்காமல் நடத்தினார். இப்போது OWN (Oprah Winfrie Network) என்று அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே கொண்டு வரவுள்ளார்.
இந்த மாதிரி தமிழகத்துத் தொலைக்காட்சிகளில் வரும் நாள் எந்நாளோ ?
ஓ வைப் பாராட்டுவோம். அவரிடமிருந்து மக்கள் பயன் பெற்றதை அறிமுகப்படுத்துவோம்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக