செவ்வாய், 10 அக்டோபர், 2017

சிகாகோவில் சிந்தனைக்கு விருந்தான அய்யா, அண்ணா பிறந்த நாள் விழா



சிகாகோ, அக்.7 "திரை கடலோடினும் சுய மரியாதை பயில்" எனும் தமிழர் கூட்டம் தங்களது தலைவர்களின் பிறந்த நாள் விழா எடுக்க சிகாகோ நகரில் இணைந்தது. கடந்த 23 செப்டம்பர்- 2017 அன்று சிகாகோ அருகில் உள்ள ப்ரொசுபெக்ட் அய்ட்ஸ் (Prospect Heights) 
) எனும் நகரில் தந்தை பெரியாரின் 139ஆவது மற் றும் அறிஞர் அண்ணா அவர்களின் 109ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

தந்தை பெரியார் பன்னாட்டு மய்யச் செயலர்  அருள்செல்வி பாலு அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றுக்  கலந்துரையாடல் நிகழ்வினை தொடங்கி வைத்தார். தோழர்கள் அனைவரும் தாங்கள் அறிந்திருந்த மற்றும் பயனடைந்த தலைவர் களின் கொள்கைகளைப் பகிர்ந்து கொண் டனர். அவற்றில் சில துளிகள்:

-பெண்கள் முன்னேற்றம் பற்றி அன்றே உரக்க கூறியவர் தந்தை பெரியார். இன்றும் சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அதற்குப் பெரியாரின் எழுத்துக் களும், முழக்கங்களும் உதவுகின்றன. -

இன்றும் பல மூட நம்பிக்கைகள் புரை யோடி உள்ளன. பகுத்தறிவினைப் பயன் படுத்துவதன் வழி இதனை நாம் அறியலாம். அத்தகைய மூட நம்பிக்கைகளை திடமாக மறுப்பதுடன், இளையோர் உள்ளம் தெளிவு பட உரைக்க வேண்டியது நமது கடமை.

- மாநில சுயாட்சி, அனைவர்க்கும் சம உரிமை என்று உலகிற்கு உரக்க கூறி வந்தவர் அறிஞர் அண்ணா! அவர்களை நாம் என்றென்றும் நினைத்திட வேண்டும். இந்தி திணிப்பு, கல்வி உரிமை பறிப்பு என இன்றும் நம் மீது திணிக்கும் ஆதிக்க சக்தி களை நாம் அனைவரும் அறிந்திட வேண்டும். அதனை எதிர்த்து வென்றிட என்றும் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளை நினைவில் நிறுத்திட வேண்டும்.

சிறப்புப் பேச்சாளர்கள்

இந்த ஆண்டு விழாவினில் சிந்தனையைத் தூண்டும் சிறப்புப் பேச்சாளர்களாக திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும், கவிஞர் நந்தலாலா அவர்களும் தங்களது வாழ்த்து செய்திகளையும், உரையினையும் பகிர்ந்து இருந்தனர். அந்த வாழ்த் தும், உரையும் அனைவரின் உள்ளங்களையும் பெரிதும் கவர்ந்தன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், திராவிட கொள்கைகளின் அடிப்படையான "இன, மொழி உணர்வை பாதுகாத்தல்; சமூக நீதியை காத்தல்; பகுத்தறிவினைப் பரப்புதல்" ஆகியவற்றை பற்றி விளக்கமாக மனதில் பதியும்படி கூறினார். மேலும் இன்றைய சூழலை அழகாகப் படம் பிடித்து, எவ்வாறு ஆதிக்க சக்திகள் நம்மை வஞ்சிக்கின்றன; அதனை முறியடிக்க தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கொள்கைகள் நம்மை வழி நடத்தும் என தனது உரையில் பாடமாக நயம்பட எடுத்துரைத்தார். கவிஞர் நந்தலாலா அவர்கள், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களது வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய பண்புகளைக் கூறினார்கள். தோழர் திருவாட்டிவினோப்ரியா அவர்கள் தாம் படைத்த "எம் மரமண்டைக்கு உரைக்கும் படி ஒன்று போடும் தந்தையே!" என்ற எழுச்சிமிகு கவிதையினை வாசித்தார். கலந்துரையாடல் மட்டும் அல்லாது சிந்தனை சீர்படுத்தும் பயிலரங்கமாக விழா அமைந்தது என்றால் அது மிகையாகாது.

இந்த சீர்மிகு விழாவினில் பங்குபெற்ற தோழர்கள்: வ.ச.பாபு, சோம.வேலாயுதம், கலைச்செல்வி வேலாயுதம், பொன்மலர், தமிழ்மணி, வீரசேகர், ஆனந்தன், ராஜேஷ் சுந்தர்ராஜன், சுதாகர், அறிவரசன், அன்பழ கன், திருமதி. அன்பழகன், ரத்தினகுமார், பாலசுப்ரமணியன் நடராசன், சுரேஷ், சாந்த குமாரி அம்மா, ரவிக்குமார் வைத்திலிங்கம்,  யாழினி, செல்வன் பிரபாகரன், மணி குண சேகரன், ரமேஷ் பாப்பண்ணன், முத்துவேல், ரத்தினசாமி, ஸ்கந்தகுமார்,சரவணக்குமார், பாலு.

இனிதாய் அமைந்த விழாவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் இன்றும் என்றும் தேவை என்பதை மனதில் இருத்திக் கொண்டு விடை பெற்றனர் தோழர்கள் - அடுத்த ஆண்டு விழாவினை எதிர் நோக்கியும், அதுவரை தாம் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பணியினை எண்ணியும்!

செய்தியாளர் : சரவணக்குமார்

- விடுதலை நாளேடு-7.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக