சனி, 15 ஆகஸ்ட், 2015

உலகப் பகுத்தறிவாளர்கள்-அறிவுரைகள்



பேரறிஞர் அண்ணா அவர்கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சி யையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார். - அறிஞர் அண்ணா கூறுகிறார்;
கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!
உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ
பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்
மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்
அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்
முதலாளிகளின் கொடுமைகளை எடுத்துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்
முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்
ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்
துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்
மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்
சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா
உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண் டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்?
(நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
விடுதலை21.11.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக