செவ்வாய், 25 மே, 2021

WE BELONG TO DRAVIDIAN STOCK


 

திராவிட வல்லுநர் மன்றத்தின் (PDF) நிறுவனர் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மன்றத்தின் பொறுப்பாளர்கள் புகழ்காந்தி, தரணீதரன், கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்மருத்துவர் எழிலன், இணைய வழியிலும், முகநூல் வழியிலும் கருத்துகளை செவி மடுத்துக் கொண்டிருக்கும் அருமை நண்பர்கள், அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!

கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், திராவிடம், ஆரியம், தமிழ்த் தேசியம் போன்ற விவாதங்கள் எல்லாம் தேவையா என்று தோன்றும். தேவையில்லைதான். எனினும், திராவிடம் என்று சொன்னவுடனேயே நம் மீது பாய்ந்து குதறும் சிலரைப்பார்க்கும் வேளையில், நாம் விடை சொல்லத்தான் வேண்டியுள்ளது. தி.மு. கழகத் தலைவர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச் சராகப் பொறுப்பேற்றவுடன், தன் ட்விட்டர் பக்கத்தில், தன்னைப் பற்றிய ஓர் அறிமுகமாக, “தமிழக முதல்வர், தி.மு.க தலைவர், திராவிட மரபினத்தவர்’’ என்னும் குறிப்புகளைப் பதிவு செய்தார். அவ்வளவுதான்; உடனே திராவிட ஒவ்வாமையும், திராவிட எதிர்ப்பும் வெளிப்படத் தொடங்கிவிட்டன.

இருப்பினும் முதல்வர் எந்த எதிர்ப்புக்கும் எந்த விளக்கமும் சொல்லவில்லை. விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பதை விட, வேலை செய்து கொண்டிருப் பதே நாட்டிற்குத் தேவையானது என்பதை அவர் புரிந்து வைத்துள்ளார். சற்றுக்கவனித்துப் பார்ப்பவர் களுக்கு இன்னொன்றுபுரியும். கடந்த பத்து நாட்களா கவே, முதலமைச்சர் மிகக் குறைவாகவே பேசுகின்றார். தேவையானவைகளை மட்டுமே பேசுகின்றார். உலக மொழிகளிலேயே ஆகச்சிறந்த மொழி செயல்தான் என்பதை அவர் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார் என்றே கருதுகின்றேன்.

இருப்பினும் நம்மைப் போன்றவர்கள் சரியான சில விளக்கங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. இல்லை யேல் அவர்களின் பொய்யுரைகளே உண்மை என்றாகி விடும்!

“நான் திராவிட மரபைச் சேர்ந்தவன்” என்று நம் தலைவர் குறிப்பிட்டுள்ள அந்த வரி யாருடையது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நம்மில் பலரும் அறிவோம். 1962 ஏப்ரல் மாதம், இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா ஆற்றிய கன்னிப்பேச்சில் அந்த வரி இடம்பெற்றுள்ளது. “I BELONG TO DRAVIDIAN STOCK. I AM PROUD TO CALL MYSELF A DRAVIDIAN”  என்றார் அண்ணா.

அறிஞர் அண்ணாவின் உரையை முழுமையாகப் படிக்கும் போது, இன்னும் ஆயிரம் செய்திகள் அதில் உள்ளடங்கி இருக்கின்றன என்பதை நாம் அறியலாம். அண்ணாவின் உரை பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன், இன்றைய சூழலில் எந்த அடிப்படையில் `திராவிடம்' எதிர்க்கப்படுகிறது என்பதை நாம் பார்த்து விட வேண்டும்.

நம்மை எதிர்ப்பவர்கள் என்ன சொல்லி எதிர்க் கிறார்கள் என்றால், “நீங்கள் ஏன் உங்களை திராவிடன் என்று சொல்லிக் கொள்கின்றீர்கள்? தமிழன் என்பது தானே சரி. திராவிடன் என்று சொல்லிச்சொல்லி, கடந்த ஒரு நூற்றாண்டாகத் தமிழை, தமிழ் முகத்தை, தமிழர் முகவரியை அழிக்கின்றீர்கள்” என்கிறனர்.

திராவிடன் என்று சொல்லிக் கொள்ளும் நாம், தமிழை, தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டை மேம் படுத்தியிருக்கிறோமா அல்லது இழிவுபடுத்தி இருக் கிறோமா என்னும் கேள்விக்கு விடை சொல்ல வேண் டிய கடமை நமக்கு இருக்கிறது.

‘திராவிடம்’ என்ற சொல் எந்தெந்தக் காலகட்டங் களில், என்னென்ன பொருளில் ஆளப்பட்டுள்ளது; இன்று அதன் பொருள் என்னவாக இருக்கிறது என்பதை நாம் விளக்க வேண்டும். “திராவிடன் என்று சொல்லாதே, தமிழன் என்று சொல்’’ எனக் கூறுகின்ற வர்கள், ஏதோ திராவிடமும் தமிழும் எதிரெதிரானவை என்பது போலப் பேசுகின்றனர். உண்மையில் ‘ஆரியம்’ என்பது தான் ‘திராவிடத்தின் எதிர்ச்சொல்’ இவர்கள் ஆரியத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தமிழைக் கொண்டுவந்து வைக்கின்றனர்.

இதற்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. உண்மையான எதிரிக்குப் பதிலாக, அந்த இடத்தில், இணக்கமான ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், எதிரி தப்பித்துச் செல்வதற்கு வழிவகுக்கின்றனர் என்றே இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் `திராவிடம்’ என்ற சொல்லை வரலாற்று அடிப்படையில் நோக்குவோம்.

‘தமிழ்’ என்பது நம் மொழியின் பெயர், ‘தமிழர்’ என்பது நம் இனத்தின் பெயர், `தமிழ்நாடு’ என்பது நம் நிலத்தின் பெயர். நூற்றுக்கு நூறு உண்மை.

அப்படியானால், திராவிட மொழி, திராவிட இனம், திராவிட நாடு என்பன எங்கிருந்து வந்தன என்று கேள்வி சரியானதுதான். இனம் என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள்  (Ethnic Race)இருந்தன. பிறகு அவை தேசிய இனங்களாகப் (National Race) பரிணாம வளர்ச்சி பெற்றன. நம் பழைய மரபினத்தின் பெயர் ‘திராவிடர்’ என்பது. ஆனால் இன்று ‘திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக் குறித்ததிலிருந்து விடுபட்டு, ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது. அதற்கு வரலாற்றில் பலசான்றுகள் உள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், கால்டுவெல், ‘திராவிட மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலை வெளியிட்ட பின்பே, ‘திராவிடம்’ என்னும் சொல் பெருவழக்காயிற்று. ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அச்சொல் ஓர் அமைப்பின் பெயரில் இடம் பெற்றது.

ஆம், 1892 ஆம் ஆண்டு, அயோத்திதாசப் பண்டி தர், “ஆதிதிராவிட ஜனசபை” என்று தன் அமைப்பிற்குப் பெயர் சூட்டினார். அவரைத் தொடர்ந்து, 1894 இல், ரெட்டைமலை சீனிவாசனார், “திராவிட மகா ஜனசபை” என்னும் அமைப்பைத் தொடங்கினார். அங்குதான், திராவிடம் என்பது ஒரு சமூக அமைப்பின் பெயராகி, ஒரு கருத்தியல் வடிவத்தைப் பெறத் தொடங்கியது. தந்தை பெரியார் காலத்தில், அக்கருத்தியல் முழுமை பெற்றது.

அது என்ன கருத்தியல்? சமத்துவத்தை நோக்கிய சமூகநீதிக் கருத்தியல். ஜாதி ஒழிப்பும், பாலின சமத்துவமும் ‘பெரியாரியம்’ என்று பெயர் பெற்றன. அதனையே நாம் ‘திராவிடம்’ என்கிறோம்.

அயோத்திதாசர் ‘திராவிடம்’ என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கினாலும், 1906 இல் அவர் நடத்திய ஏட்டிற்கு “ஒரு பைசா ‘தமிழன்” என்று தானே பெயர் சூட்டினார். திராவிடத்தைக் கைவிட்டு விட்டாரே என்று கேட்கின்றனர். அவர் திராவிடம் என்னும் சொல்லையோ, அதன் கருத்தியலையோ இறுதிவரையில் கைவிட வில்லை என்பதுதான் உண்மை. 1914இல் அவர் இறந்து போகும் வரையில் அந்தச் சொல்லைப் பெருமையுடன் கையாண்டார்.

1910 டிசம்பர் 14 அன்று, மக்கள்தொகைக் கணக் கெடுப்பு பற்றிய செய்தியில், அயோத்தி தாசர், “இத் தேசப் பூர்வச் சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வச் சரித்திரங்கள் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை, சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும் படி யானஉத்தரவளிக்கவேண்டுகிறோம்” (ஞான அலோசியஸ் - “அயோத்திதாசர் சிந்தனைகள்’’ - தொகுதி 1 -பக்.307-08) என்று குறிப்பிடுகின்றார்.

எனவே ஜாதி பேதமற்ற இந்துக்களே திராவிடர்கள் என்பது தெளிவாகின்றது. திராவிடர்களும் தமிழர்களே. ஆனால் ஜாதி பேதமற்ற, பாலினசமத்துவத்தை ஏற்கும் தமிழர்கள் திராவிடர்கள் ஆகின்றனர்.

1913ஆம் ஆண்டு, மறைமலை அடிகளாரும், சென் னையில், “திராவிட நாகரிகம்” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் உரையாற்றியுள்ளார்.

இன்னொரு இடத்திலும் திராவிடர்கள் என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது.

நீதிக் கட்சியின் சார்பில், 01.06.1917 அன்று திராவிடன் என்று ஓர் ஏடு வெளியாகியது. அந்த ஏட்டிற்கு அந்தப் பெயரை எப்படித் தேர்ந்தெடுத்தோம் என்று அந்த ஆசிரியர் குழுவில் இருந்த எஸ்.எஸ். அருணகிரி என்பவர் ஒரு விளக்கம் சொல்லியுள்ளார். “ஏட்டின் ஆசிரியர் பக்தவத் சலம், டி.எம்.நாயர், நான் எல்லோரும் பத்திரிகை யின் பெயர்பற்றிப் பேசினோம். பார்ப்பனர் அல்லாத அனைவரையும் குறிக்கும் ஒரு சொல்லாக இருந்தால் நல்லது என்ற கருத்து பேசப்பட்டது. அந்த அடிப்படையில் தான் திராவிடன் என்ற பெயரைவைக்க முடிவு செய்தோம்’’ என்கிறார். (நீதிக்கட்சி நூற்றாண்டு விழா மலர்)

எனவே இங்கும் பார்ப்பனர் அல்லாதோரைக் குறிக்கும் கருத்தியலாகவே திராவிடம் உருப்பெற்றி ருப்பதை அறிய முடிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி, திராவிடர் கழகம் தொடங்கிய அதே 1944 ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 29-31) கான்பூரில் மூன்று நாள் நடைபெற்ற பிற்படுத்தப் பட்டோர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றியுள்ள உரையில் மேலும் தெளிவான விளக்கம் நமக்குக் கிடைக்கிறது. அந்த மாநாட்டில், “உங்களைத் தீண்டாமையும் ஜாதி இழிவும் அணுகாத வண்ணம் ஏதேனும் ஒரு மதத்திற்கு நீங்கள் மாறுவதாக இருந்தால் மாறிக்கொள்ளலாம். மதம் எதுவும் வேண்டாம், அதே நேரத்தில் தீண்டாமை, ஜாதி இழிவு எங்களை அணு கிடக் கூடாது என்று நீங்கள் சொல்வீர்களேயானால், உங் களை ‘திராவிடன்’ என்று அழைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார் பெரியார்.

இப்போது திராவிடக் கருத்தியல் தெள்ளத் தெளி வாக ஆகிவிட்டது. ஜாதி இழிவையும், தீண்டாமையை யும் ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள் `திராவிடர்கள்’ ஆகின்றனர்.

இத்தனை அடிப்படைகளையும் வைத்துக் கொண்டு தான் அறிஞர் அண்ணா, மாநிலங்களவையில், “நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்’’ என்கிறார். அவருடைய உரையின் அடுத்தடுத்த பகுதிகளையும் நாம் பார்க்கவேண்டும். தான் ஏன் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்கிறார். என்பதையும் அண்ணா அவர்கள் விளக்குகின்றார். “உலகத்தவர்க்குக் கொடுப்ப தற்கு, மிக உறுதியான, மிகத் தெளிவான, மிக வேறு பட்டவை திராவிடரிடம் இருப்பதாலேயே நான் அப்படி அழைத்துக் கொள்கிறேன்” என்கிறார். (`....it's only because I consider Dravidian have got something concrete, something distinct, something different to offer to the world at large”).

ஆம்; திராவிடர்கள் மிகத் தொன்மையான இனத் தினர் என்பதனால் எல்லாம் இல்லை, அவர்களிடம் இவ்வுலகிற்குக் கொடுப்பதற்கு மிக உறுதியான சில கருத்தியல்கள் உள்ளன என்கிறார் அவர். அது மட்டுமல்லாமல், மத நம்பிக்கை, கடவுள் வழிபாடு ஆகியனவற்றைக் கொண்டு ஒரு தேசத்தை வரைய றுத்துவிட முடியாது என்றும் கூறுகிறார்.

“கன்னியாகுமரியிலிருந்து இமாலயம் வரையில் இங்கே ராமரையும் கிருஷ்ணரையும் வணங்குவதால் இதனை ஒரே தேசம் என்று சிலர் கூறுகின்றனர். அப்படிப் பார்க்க முடியாது. அவ்வாறாயின், அய்ரோப்பா முழுவதும் யேசுநாதரை வணங்குகின்றனர். அதனால் அது ஒரு தேசம் ஆகிவிடுமா?” என்றும் கேட்கிறார்.

அண்ணா அவர்கள் தன் பேச்சில் தொடர்ந்து, “நாங்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள் இல்லை. ஒரே உலகம், ஒரே அரசு என்பதைக் கூட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதற்காக எங்கள் தேசிய இன வரையறைகளை மறந்துவிட முடியாது”(we want one world, one government. But we don't forget our national frontiers)என்பதுதான் அண்ணாவின் கூற்று.

இவை அனைத்தையும் வைத்துக் கொண்டுதான்“belong to dravidian stock” என்னும் முதல்வரின் குறிப்பைக் காண வேண்டும்.

எல்லாம் தெரிந்திருந்தும், கற்றறிந்த சிலரே, இதில் உள்நுழைந்து குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். ஒருவர் ஒரு நேர்காணலில், அன்று அண்ணா சுய நிர்ணய உரிமை(Self determination)  என்பதையும் வலியுறுத் திப் பேசினாரே , அதனை ஏன் இன்றைய முதல்வர் குறிப்பிட வில்லை என்று கேட்கிறார்.

ஆம், அன்று அந்த உரையில் சுய நிர்ணய உரிமை - அதாவது, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி - என்பதை வலியுறுத்தவே செய்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு, அதே அறிஞர் அண்ணா தானே “மாநிலசுயாட்சி” என்னும் கொள்கையையும் நமக்கு வகுத்தளித்தார்! அந்த மாற்றத்திற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைத் தனியாக ஒரு கட்டுரையிலேதான் நாம் பார்க்க வேண்டும்.

 அதே நண்பர், அதே நேர்காணலில், “பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்.....” என்றுதானே பாரதிதாசன் பாடியுள்ளார். பொங்கு திராவிடர்க்கு இன்னல் விளைத்தால் என்று பாடவில்லையே ஏன் என்று கேட்கிறார். இவையெல்லாம் இளைஞர்களைத் திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டுக் கேட்கப்படும் கேள்விகள்.

பாரதிதாசன் திராவிடம் பற்றியோ, திராவிடர் பற்றியோ பாடவே இல்லையா? “வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு” என்று திராவிடர் நாட்டுப் பண் ஒன்றையே பாடியவர் அவர். அது மட்டுமில்லை. இன்னொரு கவிதையில். “இனப்பெயர் என்னென்று பிறர் என்னைக் கேட்டால் / மனத்தினில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சி / நான்தான் திராவிடன் என்று நவில்கையில் / தேன்தான் நாவெல்லாம் வான் தான் என்புகழ்!” என்று பாடியவர் அல்லரோ அவர்!

வேறொரு கவிதையில், திராவிடக் கொள்கை என்பதையும் குறித்துள்ளார். அந்தக் கவிதையின் தொடக்க வரிகள், இன்றைய சூழலுக்கும் பொருந்தும். “கோட்டையில் நாற்காலி இன்றுண்டு நாளை / கொண்டுபோய் விடுவான் திராவிடக் காளை” என்று தொடங்கும் அந்தப் பாடலின் அடுத்த வரிகள், “கேட்டை விளைத்துத் திராவிடக் கொள்கையை / கிள்ள நினைப்பது மடமையின் செயலே” என்று அமைந்துள்ளன.

திராவிடர் கொள்கை என்று ஒன்று இருக்கிறது என்பதை இவ்வரிகள் உறுதிப்படுத்தவில்லையா?

எனவே திராவிடம் என்பது மொழியின், இனத்தின், நாட்டின் பெயரை ஒரு கட்டத்தில் குறித்திருக்கலாம் என்ற போதிலும், இன்று அது ஒரு கருத்தியலாக, சித்தாந்தமாக வளர்ந்து நிற்கிறது என்பதே உண்மை. அந்த உண்மையையும், அந்தக் கருத்தியலையும் ஏற்க விரும்பாதவர்களே, முதலமைச்சரின் அடிக்குறிப்பைக் கண்டு குமுறிக் கொந்தளிக்கின்றனர்.

“ஆரியம் என்னும் அடிமைக் கருத்தியலுக்கு நேர் எதிரான விடுதலைக் கருத்தியல், சமத்துவக் கருத்தியலே திராவிடம் என்பதை மக்களிடம் உரத்துச் சொல்வோம்! ஒவ்வொருவரும் தங்களின் சமூக வலைத்தளங்களில்தங்களைப் பற்றிய குறிப்பில், இப்படி அழுத்தமாக எழுதுவோம்

“WE BELONG TO DRAVIDIAN STOCK.”

- "முரசொலி", 21.5.2021

விஜயவாடா-நாத்திக மய்ய கோ.விஜயம் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் போற்றுதல் உரை

‘நாத்திகம் என்பது மனித நேயமே' விஜயவாடா-நாத்திக மய்ய கோ.விஜயம் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் போற்றுதல் உரை

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் தலைவர் முனைவர் கோ.விஜயம் மறைந்து ஓராண்டு நிறைவு நாள் காணொலி நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று விஜயம் அவர்களின் நினைவுகளைப் போற்றி உரை ஆற்றினார். நாத்திக மய்யத்தின் நிறுவனர் கோரா வலியுறுத்திய நேர்மறை நாத்திகம் (Positive atheism) மனித நேயம் சார்ந்ததே என கருத்து விளக்கத்தினை தமதுரையில் வழங்கினார்.

22.5.2021 அன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடை பெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியினை நாத்திக மய்யத்தினர் காணொலி மூலம் ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல நாத்திகர் - மனிதநேயர் தலைவர்களும். செயல்பாட்டாளர் களும் பங்கேற்று விஜயம் அவர்களின் மனிதநேய பணிக்கு புகழாரம் சூட்டினர். தந்தை பெரியார் காலத்திலிருந்து - இராமச்சந்திரா கோரா நாத்திக மய்யத்தை நிறுவிய நாளிலிருந்து மூன்று தலைமுறைகளாக திராவிடர் கழகமும், விஜயவாடா-நாத்திக மய்யமும் இணைந்து நாத்திக நன்னெறியினை  தொடர்ந்து பிரச்சாரப் பணியினை மேற்கொண்டு வருவதை நினைவு கூர்ந்து தமிழர் தலைவர் உரையாற்றினார்.

நாத்திக நன்னெறி

நாத்திகக் கொள்கை உலகெங்கிலும் அந்தந்த பகுதி களில் நிலவிடும் சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு பரப்புரை செய்யப்படுகிறது. நாத்திகம் என்பது வறட்டு சித்தாந்த மல்ல; அது வாழ்வியல் நெறி. மனிதரை மனிதராக வாழ்ந்திட வழி ஏற்படுத்திடும் ஒரு நன்னெறி. ஆனால் பொதுவெளியில் ‘நாத்திகம்' என்பது கடவுள் மறுப்பு என கருதப்படுகிறது. இந்த விளக்கம் உண்மை என்றாலும், அதையும் தாண்டி உண்மை நிலை - அதன் அவசியம் இருக்கிறது.

‘கடவுள் மறுப்பு' பற்றிக் கூறிய தந்தை பெரியார் ‘கடவுளை மற' என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. நிறுத்தியிருந்தால் ‘நாத்திகம்' என்பது ஒரு மறுப்புக் கொள்கையாக, எதிர்மறையாக இருந்திருக்கும். ஆனால் தந்தை பெரியார் கடவுள் மறுப்பையும் கடந்து ஆக்கரீதி யான, மனித குல மேம்பாட்டிற்கான நேர்மறை கருத்தாக ‘மனிதனை நினை' என மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.

தமது வாழ்நாள் காலத்திற்கு பின்பும் அந்தப் பிரச் சாரம் தொடர வேண்டும் என்று ஒரு அமைப்பினையும் உருவாக்கினார். இந்து மதம் என்று அழைக்கப்படத் தொங்கிய காலம் வரை பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட நிலைமை இருந்தது. அந்த நம்பிக்கைகள் பல ஒன்றுக்கொன்று முரணாக இருந்தது - இப்பொழுதும் தொடருகின்ற நிலைமைகள் உள்ளன.

அப்படிப்பட்ட பலவித நம்பிக்கை, வழிபாட்டு முறை களை உள்ளக்கிய கலவைதான் இந்து மதம். ‘நாத்திகர்' என அறியப்படுபவர்களையும், உள்ளடக்கியது. இந்து மதத்தைப் பொறுத்த அளவில் ‘நாத்திகம்' என்பது கடவுள் மறுப்பு அல்ல; வேத மறுப்புகள், வேதங்கள் கூறும் சடங்குகள் மறுப்புதான்.

இப்படி பலவித நம்பிக்கைகளின் கலவையாக உள்ளது, ஓர்மைத்தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. இவைகளை யெல்லாம் தாண்டி, பல்வேறு நம்பிக்கை களையும் தாண்டி மனிதரை, மனித குலத்தை நினைத்து சமுதாயப் பணியைத் தொடங்கினார் பெரியார். மனித நேயம் அற்ற சமத்துவமின்மையை நீக்கிட பாடுபட்டார். பெரியாரின் ‘நாத்திகம்' என்பது சமத்துவத்திற்கு எதிரான அத்துணை தடைகளையும் தகர்த்து மனித நேயம் நிறைந்த சமுதாயத்தைப் படைப்பதே.

மேற்கத்திய நாடுகளில் ‘நாத்திகம்' என்பது 'atheism' எனும் பெயரில் அறியப்படுகிறது. ‘Atheism' எனும் ஆங்கிலச் சொல்லாக்கம் எதிர்மறை அடிப்படையிலா னது. ‘Atheism' என்று சொல்லப்படும் ஆங்கிலச் சொல் லாக்கத்தின் எதிர்மறை நிலையே ‘atheism'. ஒரு நேர் மறையான கருத்து எதிர்மறை நிலையில் அறியப்படு கிறது. இதன் விளக்கமாக நாத்திகத்தை (atheism), நேர்மறை நாத்திகம் (positive atheism) என பரப்புரை செய்து வந்தார் நாத்திகர் மய்யத்தை நிறுவிய கோரா. அவர் கூறிய நேர்மறை நாத்திகம், மனித சமத்துவத்தை வலியுறுத்துவதே என விஜயம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றும் பொழுது தமிழர் தலைவர் குறிப்பிட்டுக் கூறினார்.

தந்தை பெரியார் பரப்புரை செய்த நாத்திகம் என்பது மனித சமத்துவம், மனிதநேயம் என்பதை மேற்கத்திய கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டு நேர்மறை நாத்திகம் (positive atheism) என விளக்கமளித்தார்.

கோரா பரப்புரை செய்த நேர்மறை நாத்திகம், தந்தை பெரியார் கூறிய மனித நேயத்தை மய்யப்படுத்திய நாத்திகமே என்பதை தமிழர் தலைவர் தமது 13 நிமிட உரையில் கூறினார்.

தமிழர் தலைவர் உரை

விஜயம் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

கோ.விஜயம் அவர்களின் முதலாமாண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி  நினைவில் நிலைத்து நிற்கும் நிகழ்ச்சி ஆகும். துயரம் நிறைந்த நெஞ்சத்துடன், விஜயம் அவர் கள் ஆற்றிய பணியினை நினைத்துப் பார்க்கிறோம். விஜயவாடா நாத்திக மய்யத்தின் நிறுவனர் கோரா, பின்னர் அவரது துணைவியார் சரஸ்வதி கோரா, அவரது மூத்த சகோதரர் லவனம் ஆகியோருக்குப் பின் நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநராக பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் விஜயம் சிறப்பாகப் பணி ஆற்றி வந்தார். திராவிடர் கழகத் தோழர்களுக்கு மிகவும் அறிமுகமான, பழக்கமுள்ள நாத்திக மய்யத்தின் தலைவர் விஜயம் “நாமெல்லாம் சக போராளிகள்" (co-fighters) எனச் சொல்லுவார். அவர் ஆற்றிய பணி வெறும் சமூகச் செயல்பாடு மட்டுமல்ல, அதற்கும் மேலே சமூகப் போராட்டம் என்பதை மய்யப்படுத்தியதாக இருந்தது.

கரோனா தொற்று பரவி வரும் காலத்தில் நாம் இருக் கிறோம். தொற்றைத் தடுப்பதற்கு - கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ சூழலில் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஆட்சியில் உள்ள பழமை வாதிகளால் அறிவியலுக்குப் புறம்பான பல செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

‘நாட்டு மாட்டு மூத்திரம்' குடித்து வந்தால் கரோனா தாக்காது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பரப்புரை செய்து வருகிறார். அந்த உறுப்பினரே கரோனா தொற் றின் முதல் அலையில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் பேசுகிறார்.

போலி அறிவியல் ஆட்சி அதிகார வலிமையோடு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கும் பணியில், பரப்புரை செய்யும் நிலையில் நாம் உள்ளோம். அத் தகைய பணிகளை ஆற்றி வந்தார் விஜயம்.

விஜயம் ஆற்றிவந்த நேர்மறை நாத்திகம் என்பது மனித குலத்தை, மனிதர் நலம் சார்ந்ததே. விஜயம் அவர் கள் தனது இறுதி மூச்சு வரை நாத்திகராக, மனிதநேய மாண்பாளராக வாழ்ந்தார். அப்படிப்பட்டவர்களுக்கு ‘மறைவு' என்பது இல்லை. இந்த நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர், பிஞ்சுக் குழந்தைகள் நாத்திகம் பற்றிப் பேசியதன் மூலம் விஜயம் கொள்கை ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திராவிடர் கழகம் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டு ஏற்பாட்டில் உறுதுணையாக விளங்கியவர் விஜயம். வேண்டும் பொழுதெல்லாம் சென்னை - பெரியார் திடலுக்கு உடனே வருகை புரிவதை வழக்கமாகக் கொண்டவர்.

தற்போதைய நிர்வாகப் பொறுப்பில் உள்ளோர் விஜயம் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் சிறப் பாகச் செய்து வருகின்றனர்.

நாத்திகம் என்பது உண்மை நிலை. அதை உரக்கச் சொல்லி, சமத்துவ, மதச்சார்பற்ற மனிதநேயம் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க பணியாற்றுவதே நாம் விஜயம் அவர்களுக்கு செய்திடும் போற்றுதல் ஆகும் நாத்திக, மனிதநேயப் பணியில் தொடர்ந்து பயணிப்போம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப் பிட்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

விஜயம் நினைவுநாள் நிகழ்ச்சியில் சோன்ஜா எக் கெரிக்ஸ், (சுவிட்சர்லாந்து, மேனாள் தலைவர், பன் னாட்டு மனிதநேய நாத்திகர் ஒன்றியம் - International Humanist and Ethical Union) வோக்ஸ் முல்லர், ஜெர்மனி பகுத்தறிவாளர் கழகம், பேராசிரியர் தானே சுவர் சாகு (தலைவர், ஒடிசா பகுத்தறிவாளர் மன்றம்), கே.நந்தேசு சேனாபதி, ரமணமூர்த்தி, கோரா குடும்பத் தினர், டாக்டர் சமரம், நியாயந்தா, டிமாஸ் கோரா, அரிசுப்பிரமணியம், ஜசுதி கோரா மழலையர் சன்ஜால் கோரா, ஏலோஸ் கோரா மற்றும் ஷரிப் கோரா பங் கேற்றனர்.

பார்வையாளர்களாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, பெங்களூரு முல்லைகோ மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை விஜயம் அவர்களின் புதல்வர் விகாஸ் கோரா ஒருங்கிணைத்து நடத்தினார்.

தொகுப்பு: வீ.குமரேசன்

செவ்வாய், 18 மே, 2021

ஏரியன் ஷெரீன் - 2 கெட்ட சேதி - நல்ல சேதி

வியாழன், 29 ஏப்ரல், 2021

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு, சென்னை பெரியார் திடல் 10.1.1996


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு சென்னை பெரியார் திடலில் 10.1.1996 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. மாநாட்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பெரியார் பிஞ்சுகள், இளைஞரணி, மகளிரணியினர், மாணவரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர்கள் என அனைவரும் கழகக் கொடியினை உயர்த்திப் பிடித்தவண்ணம் கலந்துகொண்டனர். ‘தீ மிதி’ நிகழ்வும், மாநாட்டு மேடையில் நடைபெற்றது. திராவிடர் கழக அமைப்பாளர் பேபி சமரசத்தின் மகன் செல்வன் எழிலனுக்கும், ஒசூர் மாணிக்கவாசகம் தனலட்சுமி ஆகியோரின் செல்வி செந்துவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து திருமணம் நடத்தி வைத்தேன்.

மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நடிகர் இனமுரசு சத்யராஜ், எம்.டி.கோபால கிருட்டினன், ஆந்திர மாநிலம் விஜயவாடா, கோரா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் இலவணம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாத்திக அமைப்பின் அதிகாரப் பூர்வப் பங்கேற்பாளரான நார்மன் டெய்லர், அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி பார்பராஸ் டாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஷீட், லண்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஹுமனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஹாரி ஸ்டோப்ஸ் ரோப் ஆகியோர் உரையாற்றினார்கள். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தலைமை உரையாற்றுகையில், “ஒரு காலத்தில் ரசல், இங்கர்சால் போன்றவர்களை நாம் இங்குக் கொண்டு வந்தோம். இன்று தந்தை பெரியாரை பிற நாட்டவர்கள் கொண்டு செல்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சிக்குரிய திருப்பம்! தந்தை பெரியாரின் தத்துவம். தலைமுறை இடைவெளி யில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய இயக்கம், தமிழகத்தைத் தாண்டி, எல்லைகளைக் கடந்து உலக மானிட இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’’ என்பன போன்ற தந்தை பெரியாரின் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டினைத் தொடர்ந்து, 11.1.1996 அன்று தஞ்சை வல்லத்தில் பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் Lasse Siren (Finland), Harie Bols (Holland), Robyn Johannes (Belgium), Robert Morgan (U.S.), Pertti Holopa Nien (Sweedish), Herma Mittendorff (Holland), Eric Jacob (Germany), Norman Taylor (Australia), G.Lavanam (Vijayawada), Everelt Cross ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாகத் தந்தை பெரியார் முழு உருவச் சிலையினைத் திறந்து வைத்தனர். அறிஞர்களின் ஆங்கில உரையினை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் மொழிபெயர்த்துக் கூறினார். நிகழ்வில் நிறைவுரையாற்றுகையில், “சிலை அமைப்புக் குழுவினருக்கும், கழகத் தோழர்களும், சிலையினை அன்பளிப்பாக வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கு.தங்கமுத்து, ஏணிப்படி அமைத்துத் தந்த கல்வி வள்ளல் ‘வீகேயென் கண்ணப்பன், சிலையின் அடிபீடத்தை சிறப்பாக உருவாக்கித் தந்த ஈஸ்வரனார், வேழவேந்தன் ஆகியோருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தேன். நமது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட பன்னாட்டு நாத்திகர்களுக்கு நினைவுப் பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்து, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் காலத்தைக் கடந்து என்றும் நாட்டிற்குத் தேவை’’ என பல கருத்துகளை கூறினேன். பன்னாட்டு நாத்திகர்களை வழி நெடுக கழகத் தோழர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16- 30 .21

சனி, 24 ஏப்ரல், 2021

நான்காவது நான்காவது உலக நாத்திகர் மாநாடு!


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

நான்காவது உலக நாத்திகர் மாநாடு ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நாத்திக கேந்திரத்தில் 4.1.1996 அன்று துவங்கியது. மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாத்திகர்களும், அறிஞர்களும் வந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து நம் கழகத் தோழர்கள் உள்பட 108 நாத்திகர்களுடன் கலந்து கொண்டோம். முதல் நாள் நிகழ்வில் வரவேற்புரையாற்றுகையில், “தந்தை பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை விரிவாக எடுத்துரைத்தேன். மனித நேயத்தை வலியுறுத்தி பெரியார் ஆற்றிய தொண்டினை விளக்கிப் பேசினேன். இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான சாதனங்களை தமக்குச் சாதகமாக்கி அஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினேன். அந்த வரவேற்பு உரையோடு மாநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்திற்கு மாநாட்டில் முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ள பத்து யோசனைகளையும் முன்வைத்து அதனை இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.’’ அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு வந்திருந்த இங்கிலாந்து மனிதநேய சங்கத்தின் தலைவர் சர்.ஹெர்மன் பான்டி தலைமை உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளர் அபு ஆபிரகாம், வி.சோபனதிரீஸ்வரராவ், சரசுவதி கோரா, கே.சுப்பாராஜு, விஜயவாடா நகர மேயர் டி.வெங்கடேசுவரராவ், பன்னாட்டு மனிதநேய கழகத்தின் தலைவர் ஜேன் லைன் வில்சன், அமெரிக்காவின் நாத்திகத் தலைவர் லீபேக்கர், ஆஸ்திரேலிய நாத்திக சங்கத்தின் பிரதிநிதி நார்மன் டைலர், அய்ரோப்பிய நாத்திக சங்கத்தின் உபதலைவர் ராபின் ஜோகன்னஸ் எனப் பல முக்கியமானோர் வந்திருந்தனர். அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தையும் செய்துகொண்டோம்.

இரண்டாம் நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நாத்திக அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டின் குறிக்கோளாக, “நம்பிக்கையான எதிர்காலத்திற்குப் பயனுள்ள நாத்திகம்’’“Positive Atheism for a Positive Future” என்கிற குறிக்கோளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. கழகத்தின் சார்பில் வந்திருந்த ராஜதுரை, அருள்மொழி, சுனந்தா சேத், டாக்டர் நடராசன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ஒரிசாவிலிருந்து வந்து உரையாற்றிய பேராசிரியர் ந.ராமச்சந்திரா தந்தை பெரியாரின் கருத்துகளால் நாத்திகவாதி ஆனதைச் சுட்டிக்காட்டினார். தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை, தான் மேற்கொண்டதாகக் கூறினார்.

மாநாட்டின் இறுதி நாளில் நிறைவுரையாற்றுகையில், “மாநாட்டில் பங்கு கொண்டு உரையாற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியைப் படித்து மிகவும் வியந்து அதனை பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். தந்தை பெரியார் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு மிகவும் நிதானமாக, “மூடநம்பிக்கை என்பது இந்திய நாட்டிற்கு மட்டுமே உரித்தானது அல்ல; அது அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது’’ என என்னிடம் குறிப்பிட்டார். ஆகவே, இந்த மாநாட்டின் தத்துவமாக, மனித நேயத்தை, நாத்திகத்தைப் பரப்புகின்ற ஒளிவிளக்குகளாக நாம் செல்ல வேண்டும். சுயமரியாதை கொண்ட வாழ்க்கையை அமைத்திட நாம் அனைவரும் கூட்டுப் போராளிகளாக இருப்போம். என்னிடம் பல வெளிநாட்டு நண்பர்கள், திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்டனர். இந்தச் சமுதாயம் இன்றும் இருளில் உள்ளதை உலகுக்குத் தெரிவிக்கின்ற வகையில் நாங்கள் கருஞ்சட்டை அணிகிறோம் என்றேன். நாம் ஒரு அமைதியான புரட்சியைச் செய்கிறோம். பெரியார், கோரா, எம்.என்.ராய் ஆகியோரது கருத்துகளே நம்மை வழிநடத்துகின்றன.

சுயமரியாதை, மனிதநேயம், பகுத்தறிவுச் சிந்தனைகள் ஆகிய இவையே உலகுக்கு வழிகாட்டக்கூடியவை! புதிய உலகை உருவாக்குவோம். இந்தப் பணியில் திராவிடர் கழகம் தனது முழு ஈடுபாட்டையும் செலுத்தும். வாழ்க பெரியார்!’’ என்பன போன்ற பல கருத்துகளை மாநாட்டில் தெரிவித்து நிறைவு செய்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16-30.21

புதன், 21 ஏப்ரல், 2021

சார்லஸ்_பிராட்லா பிரிட்டனில் மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.

.நாத்திகம் பேசியதால் 
பதவியேற்பு நிறுத்தப்பட்டு 
நான்கு முறை நடந்த 
மறுதேர்தல்களிலும் வென்ற
#பிடிவாத_பிராட்லா 

இவரின் பிடிவாதத்தால் பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது தெரியமா...??*

சார்லஸ்_பிராட்லா பிரிட்டனில் மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.

அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத்
தேர்வு செய்யப்பட்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்டபோது, #கடவுளின்_சாட்சியாக என்று சொல்லிப் பதவி ஏற்குமாறு கூறினார்கள்.  ஆனால் அவரோ,

"இல்லாத கடவுளை நான்
சாட்சிக்கு அழைத்துவர முடியாது" 

என்று கூறி, கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உறுதியாக மறுத்துவிட்டார்.

"உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை; இந்தப் பேரவை நம்புகிறது, இந்த நாட்டின் அரசியல்சாசனம் நம்புகிறது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதற்கு நீங்கள் மறுப்பீர் களேயானால் உங்கள் தேர்வு ரத்து செய்யப்படும்" 

என்றார்கள். அதற்கு சார்லஸ் பிராட்லா,

"இந்த அவையின் ஆயுள்காலம் ஐந்து
ஆண்டுகள்தான்; இந்த ஐந்து ஆண்டுக ளுக்காக என் ஆயுள்முழுவதும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை
விட்டுவிடமுடியாது; என் தேர்வை நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால், தாராளமாக நீங்கள் ரத்து செய்து
கொள்ளுங்கள்" 

என்று கூறிவிட்டார். கொஞ்சமும் தயவுதாட்சண்யம் இல்லாமல், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட  அவரது தேர்வை ரத்து செய்தார்கள். அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; மீண்டும் வெற்றிபெற்றார்; மீண்டும் அதே பிரச்சனை!

"எனக்கென்று ஒரு கொள்கை - ஒரு நம்பிக்கை இருக்கிறது அதை எந்தக்
காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது"

என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா. மீண்டும் அவர்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் அவர்
தொகுதிக்குத் தேர்தல் நடந்தது; மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிட 
அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிராட்லா!

இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்கள்: 

"தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்"

என்றார்கள்; பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார், 

"நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என்
தொகுதிமக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்; என் தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்;
அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்; அவர்களுடைய தன்மானத்திற்கே சவால் விடுகிறீர்கள்"

என்று கடுமை காட்டிய பிராட்லா, "இதற்குமேல் பேச என்னிடம் எதுவுமில்லை"  

என்று கூறி அமர்ந்துவிட்டார். இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது. 

"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டுமன்றி மனசாட்சியின் பெயராலும் பதவிஏற்கலாம்" 

என்று பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. இன்று பகுத்தறிவுவாதிகள் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சாரலஸ் பிராட்லாதான் காரணம். 

🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾
-வெற்றிவேந்தன் முகநூல் பக்கம், 21.4.20

வெள்ளி, 12 மார்ச், 2021

உலகப் பகுத்தறிவாளர் - ஏரியன் ஸெரீன்