உலகப் பகுத்தறிவாளர் - ஏரியன் ஸெரீன் - 2
- சு. அறிவுக்கரசு
அமெரிக்காவில் கடவுள் மறுப்பு
இங்கிலாந்தின் பேருந்து விளம்பரம் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனிதநேய அமைப்பினர் தம் நாட்டிலும் நடத்தினர். ஏன் கடவுளை நம்புகிறீர்கள்? நன்மைக்காகவே நல்லவர்களாகவே இருங்களேன்! என்ற வாசகத்தை 2008 டிசம்பரில் வாஷிங்டனில் நடத்தினர். 2009 மார்ச் மாதம் முடியவும் இப்பிரச்சார இயக்கம் அமெரிக்காவில் நடந்தது.
கடவுள் இல்லாமலே நல்லவராக வாழலாம் எனும் விளம்பர இயக்கம் இன்டியானா மாநிலம் புலூமிங்டன் எனும் நகரில் 2009 பிப்ரவரியில் நடந்தது.
கனடாவில்...
தாராளச் சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் கனடா நாட்டில் பிரெஞ்ச் மொழியில் (லண்டனைப் போலவே வாசகங்கள்) விளம்பர வாசகங்கள் எழுதப்பட்டு அனுமதி கோரப்பட்டன. கனடாவின் தலைநகரமான ஒட்டாவா நகரில் அனுமதி முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் ஒட்டாவா நகரமன்றம் அனுமதி அளித்தது.
நியுசிலாந்தில்...
நியுசிலாந்து நாட்டின் பெருநகரங்களான ஆக்லாண்டு, வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச் ஆகியவற்றில் பெரும் பெரும் விளம்பரத் தட்டிகள் லண்டன் விளம்பர வாசகங்களுடன் அமைக்கப்பட்டன. இதற்கென 20 ஆயிரம் டாலர் தொகை இரண்டே நாளில் வசூலிக்கப்பட்டது எனும்போது மக்கள் ஆதரவை அறிந்து கொள்ளலாம்.
இத்தாலியில்...
இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் ஒரு கெட்ட சேதி - கடவுள் இல்லை! நல்ல சேதி - கடவுள் உங்களுக்குத் தேவை இல்லை என்ற வாசகங்கள் விளம்பரப்படுத்திட அனுமதி கோரப்பட்டது. அனுமதிக்கான தயக்கமும் புதிய வழக்கொன்று தாக்குதலான காரணத்தால் வாசகங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஒரு நற்செய்தி - இத்தாலியில் பத்து லட்சக்கணக்கான நாத்திகர்கள் இருக்கின்றனர். மிகமிக நல்ல செய்தி - அவர்கள் கருத்துச் சுதந்திரத்தை விரும்புகின்றனர் என்ற வாசகம் விதிமுறைக்குட்பட்டு விளம்பரப்படுத்தப் பட்டது.
அய்ரோப்பா முழுவதிலும்...
ஸ்பெயின் நாட்டின் பார்க்லோனா, மாட்ரிட், ஸாலன்சியா நகரங்களில் லண்டன் பேருந்து வாசகங்கள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது. கத்தோலிக்கர்களின் எதிர்ப்பை மீறி விளம்பரம் செய்யப்பட்டது.
ஃபின்லாந்தில் தலைநகர் ஹெல்சிங்கி, தாம்பரே நகரங்களில் இதேமாதிரி விளம்பரம் செய்யப்பட்டது.
அயர்லாந்து நாட்டில் தொடர்வண்டி களில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்நாட்டில் இது மிகவும் அவசியத் தேவை எனக் கருதப்பட்டது. காரணம் நீதிபதிகளும், ஊர்க்குழுத் தலைவர்களும் மத உறுதிமொழி (RELIGIOUS OATH) எடுக்கவேண்டும். இதற்குச் சம்மதம் இல்லாத இரண்டரை லட்சம் பேர் இம்மாதிரிப் பதவிகளில் அமராமல் இருக்கும் அவலம் அயர்லாந்தில் உள்ளது.
சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் மெட்ரோ ரயில்களில் லண்டன் நகரைப் போன்றே விளம்பர வாசகங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.
ரஷ்ய கோமாளித்தனம்
லண்டன் நகர விளம்பர வாசகங்கள் ரஷ்ய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு விளம்பரம் செய்ய அனுமதி கோரப்பட்டபோது அதிகாரத்திலிருக்கும் மதவாதிகள் மறுத்து விட்டனர். ரஷிய அரசமைப்புச் சட்டத்தின் 14ஆம் பிரிவு ரஷியக் கூட்டரசு மதச் சார்பற்றது எனும் வாசகத்தையும்கூட விளம்பரம் செய்ய அனுமதிக்கவில்லை. எந்தவித விளம்பரத்தையும் அனுமதிக்க முடியாது என பெரிய, சிறிய விளம்பர நிறுவனங்கள் மறுத்துவிட்டன. என்ன கம்யூனிசமோ? என்ன பொருள்முதல் வாதமோ? என்ன நவம்பர் புரட்சியோ, புடலங்காய்! மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்ததால் வந்த புரட்சி எனப் பாரதி பாடியதுபோல், பக்திப் புரட்சியோ?
டாப் 10 விளம்பரம்
நேர்மாறாக, லண்டன் மாநகரில் செய்யப்பட்ட விளம்பரத்திற்குச் சிறுசிறு எதிர்ப்புகள் வந்தாலும், அது டாப் 10 விளம்பரங்களில் ஒன்றாக இருந்தது என்பது பெருமைப்பட வேண்டியது!
நிச்சயமாக கடவுள் இருக்கிறது என்று கிறித்துவ அமைப்புகள் போட்டிக்குச் செய்த விளம்பரம் மக்களின் பலத்த வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் ஆளானது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டனங்கள் குவிந்தன. மக்கள் எந்தப் பக்கம் என்பதை இதுவே காட்டிடும்.
இன்றைய லண்டனில்...
ஆனாலும் என்ன? லண்டனில் பல இடங்களில் இசுலாமியர்கள் எச்சரிக்கைப் பலகைகள் வைத்து விளம்பரம் செய்கிறார்கள் என்பது இந்த வாரச் செய்தி. அவர்கள் பத்துப்பேர் வசிக்கும் பகுதியில் இது ஷரியத் சட்டம் அமலில் உள்ள பகுதி என எழுதி இதைச் சாப்பிடாதே, அதைக் குடிக்காதே என்று கட்டுத்திட்டங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். ஷரியத் சட்டப்படி தண்டனையும் தருவார்களோ? இங்கிலாந்து நாட்டின் சட்டம் என்ன ஆயிற்றாம்? மதவெறி என்னென்ன செய்கிறது பாருங்கள்.
சோமாலியாவில்...
சோமாலியா ஆப்பிரிக்க நாடு. உலகிலேயே பஞ்சம், பசி, பட்டினிச் சாவு என்று சொல்லொணாக் கொடுமைகள் மலிந்த நாடு. மக்களை மீட்க அரசும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் நம்பி வணங்கும் கடவுளும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருடிக் கொள்ளையடித்துத்தான் வாழ முடியும் என்ற நிலை. சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பற்றி சமீபகாலச் செய்திகள் நிறைய. வரலாற்றில் பதிந்த கரீபியன் கடற்கொள்ளைக்காரர்களைக் காணோம். அந்த இடத்தை இவர்கள் பிடித்துக் கொண்டார்கள். இந்த நிலையில் அந்த நாட்டில் சமோசா சாப்பிடத் தடை! இந்தியத்தின் பண்டமான சமோசா மலிவானது என்பதால் மட்டுமல்லாமல் அதன் ருசியாலும் அங்கே பிரபலம். ஏன் தடை? அதன் முக்கோண வடிவம் - கத்தோலிக்கர்களின் முக்கடவுள் (TRINITY) கொள்கையை நினைவுபடுத்துகிறதாம். ஆகவே, சாப்பிடக்கூடாது என்கிறார்கள் சோமாலிய முசுலிம்கள். எப்படி இருக்கிறது மதவெறி!
சவுதியில்...
சவுதி அரேபியாதான் இசுலாத்தின் தாயகம். மெக்கா, மதினா அங்கேதான். கருப்புக்கல் கட்டடமான காஃபா அங்கேதான். முசுலிம்களின் 5 முக்கியக் கடமைகளில் ஒன்றாகிய ஹஜ் நிறைவேற்ற யாத்திரை போகுமிடமும் அங்கேதான். இந்தப் புனித இடங்களின் காப்பாளர் அந்நாட்டு மன்னர்தான். அந்த மன்னரையும் அவர்தம் மகனையும் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அல்கய்தா அமைப்பின் போர்த்தலைவர் (ஏமன் நாட்டில் இருப்பவர்) அறிவித்திருக்கிறார். என்ன கொடுமையை அவர்கள் செய்தார்களாம்? அவர்கள் இருவரும் மத நெறிக்குப் புறம்பானவற்றைக் கடைப்பிடிக்கிறார்களாம்! (APOSTATES) எனக் குற்றம் சுமத்திக் கொன்றுவிடக் கட்டளையாம்! ஒரே மதத்திற்குள்ளேயே இத்தகைய வேறுபாடு, முரண்பாடு! இதில் தீர்வு காணும் அதிகாரம் யாருக்கு?
ஒரு மதமும் வேண்டாம் - தம்பி
உண்மை உடையார்க்கே - என்ற புரட்சிக் கவிஞரின் கருத்தை ஏற்று பெருமதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும் எனும் நிலை உலக மக்கள் அனைவருக்கும் வரவேண்டும். இதற்குப் பகுத்தறிவு வளர வேண்டும், அதனை வளர்க்க வேண்டும். மதவாதிகளைப் போலவே எல்லா வகையிலும் சேவை மனப்பான்மையுடன் பணி செய்து பரப்ப வேண்டும்.
எப்படிப் பரப்புவது?
பகுத்தறிவு என்பது படித்தவர்கள் சப்ஜெக்ட் என்ற மனோபாவம் மாறவேண்டும். மனிதர்கள் அனைவருக்கும் உரிய, இயல்பான பகுத்தறிவை எல்லா நிலையிலும் அனைவரும் பயன்படுத்திட வேண்டும் என்கிற விழிப்புணர்வைப் பரப்பிட வேண்டும். அந்த வகையில் பரப்புரை மேற்கொண்ட ஏரியன் ஷெரீன் மிகவும் பாராட்டத்தக்கவர்.
தொடக்கப் பாடம் (ALPHA COURSE) என்ற பெயரில் லண்டனில் விளம்பரங்கள் வருகின்றன. மீண்டும் அரிச்சுவடிதான், பாலபாடம்தான்! கர்த்தரை நம்பு, கிறித்துவனாகு, இல்லையேல் கடைசி வரை கடும் நரகம்தான். இந்தக் காடியேறிய கள், புதிய மொந்தையில் புதிய பெயரில் வழங்கப்படுகிறது. இப்படிப் புதுப்புது அவதாரங்கள் எடுத்து மதவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அவர்களை முறியடிக்கும் பரப்புரை முறைகளைப் பகுத்தறிவாளர்கள் பயன்படுத்து கிறார்கள். இதற்கென வலைத்தளத்தை (WEBSITE) உருவாக்கியுள்ளனர். தனிநபர் தொடங்கி நடத்தும் முகநூல் (FACE BOOK) குழுக்கள் அமைக்கப்பட்டு பகுத்தறிவாளர்கள் தம் கருத்தைப் பதிவு செய்கிறார்கள். மற்றவர்களைத் தூண்டுகிறார்கள் தாமும் பதிவு செய்ய! இதன்மூலம் மற்றவர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். சிந்திப்பதே மதத்திற்கு எதிரான குற்றம்தானே! பாபம்தானே! அந்தப் பாபத்தைச் செய்யும்படித் தூண்டினாலே பரிகாரம் கண்டிட முடியுமே!
ஒரு விமர்சகர் எழுதியதைப் போல, பேருந்து விளம்பரப் பெண்மணியான ஏரியன் ஷெரீன் மென்மையாகப் பேசினாலும் ரிச்சர்டு டாகின்ஸ், கிறிஸ்டபர் ஹிட்சன்ஸ் போன்றோரைக் காட்டிலும் உறுதியானவர். அவருடைய நாத்திகம் தவறானது என அவருடைய உறவினர்கள் பலபேர் கூறியபோதுகூட, அமைதியாக நான் நீங்கள் அல்லவே! நான் நானாகத்தானே இருக்க முடியும்? நான் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் எப்படி எனக்குக் கூறமுடியும்? எனப் பதில் கேள்விகள் கேட்டு மடக்கியவர்.
ஆத்திக நம்பிக்கையை வளர்க்கும் பள்ளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார். இசுலாமியப் பள்ளிகளில் அய்ரோப்பியக் கிறித்துவக் குழந்தைகளையும், கிறித்துவப் பள்ளிகளில் ஆசிய முஸ்லிம் குழந்தைகளையும் சேர்த்துக் கற்பித்தால் மதங்கள் பற்றிய தவறான கருத்துகள் மறையும் என்கிறார்.
ரிச்சர்டு டாகின்ஸ் கூறியதைப்போல முசுலிம் பிள்ளை, கிறித்துவப் பிள்ளை எனக் கூறாமல் முசுலிம் பெற்றோருக்குப் பிறந்தது, கிறித்துவப் பெற்றோருக்குப் பிறந்தது எனக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்; எந்த மதம் என்பதை அந்தப் பிள்ளை வளர்ந்தபின் முடிவு செய்யட்டும் என்கிற கருத்தைக் கொண்டிருக்கிறார்.
அவர் வசிக்கும் ஸ்காட்லாந்து பகுதியில் 65 விழுக்காடுப் பேர் கிறித்துவர் என்றாலும் 28 விழுக்காடுப் பேர் மதம் இல்லை என்போராக 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.
புத்தக அலமாரிகளில் மட்டுமே இருந்த பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளைப் பொது இடத்திற்குக் கொண்டு விவாதித்திடும் நிலையை இவரது பேருந்துப் பரப்புரை செய்திருக்கிறது. பாராட்டுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக