- சோம. இளங்கோவன்
'ஓ' தனது இருபத்தைந்தாண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடங்களை மற்றவர்கள் அறிந்து பயன்பட வேண்டும் என்று நினைத்தார். தனது " ஓண் " தனித் தொலைக்காட்சியில் அதைப் பாடங்களாக வகுப்பு நடத்துகின்றார். தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது என்று யாராவது கேட்டீர்களானால், எனக்கு எந்தத் தகுதியுமில்லை. கல்லூரி சென்று பட்டம் வாங்க வில்லை. எனக்கு உள்ள ஒரே தகுதி என்னவென்றால் வேறு யாரும் இதைச் செய்ய முன் வரவில்லை என்பதுதான் என்றார். அதே நிலைதான் ஓப்ராவிற்கும். அமெரிக்கா ஒரு பணக்கார நாடாகத் தோற்றமளிக்கின்றது. ஆனால், எவ்வளவு பேர் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்? ஏன் மகிழ்ச்சியுடன் வாழவில்லை? இதற்குப் பதிலென்ன? படித்துச் சொல்வது இதற்குச் சரியான பதிலாகாது. வாழ்க்கையில் பட்டு அறிந்து சொல்வதுதான் நல்ல பதிலாக இருக்க முடியும். இதைச் சொல்ல யாரும் இல்லாததால் ஓப்ரா சொல்கின்றார். ஆனால் மிகவும் அருமையாக பயனுள்ள வகையில், இன்றைய தொலைக்காட்சி, இணையம், அறிவியல் முன்னேற்றம் அனைத்தையும் பயன்படுத்தி அனைவரும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் வகுப்பறையை நடத்துகின்றார். அவர் நோபல் பரிசு பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அவரின் முதல் பாடம் "ஆணவம்", "திமிர்". அதிலும் "வறட்டுத் திமிர்" !!!
நாம் எவ்வளவு பேரைப் பார்க்கின்றோம். பிறரை மட்டந்தட்டுவதும் தற்பெருமை அடித்துக் கொள்வதுமே அவர்கள் வாழ்க்கையாக இருப்பதைப் பார்க்கின்றோம். சிந்தித்துப் பார்த்தால் நமக்கே இந்த நோய் இருப்பது புரியும். நம்மைக் கண்னை மூடிக் கொண்டு சிந்திக்கச் சொல்லுகின்றார். நம்மில் இருவர் இருப்பது தெரியும். மனதில் நல்ல எண்ணங்கள்தாம் இருக்கும். ஆனால், பேச்சில் அந்த எண்ணங்கள் வருகின்றனவா? பேச்சு ஏன் ஆணவத்துடன் வருகின்றது ? அதிலும் யாரிடம் நாம் ஆணவத்தைக் காட்டக் கூடாதோ அவர்களிடம் மிக்கத் திமிருடன் பேசுவது ஏன்?
ஓப்ரா மிகவும் குண்டாகிவிட்டார். ஆனால், விடாது முயற்சி செய்து பல மாதங்கள் எந்த உணவுகள் பறிமாறப்படும் இடங்களுக்கும் செல்லாமல், நல்ல விடுமுறை இடங்களுக்கும் செல்லாமல் இருந்து 65 பவுண்டுகள் இளைத்தார். அதை உலகுக்கே பறைசாற்றித் தனது சிறு வயது சின்ன 10ஆவது அளவில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்து நிகழ்ச்சியை நடத்தினார். அது தற்பெருமையாக முடிந்ததே தவிர அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இல்லாத ஒரு உருவமாக, ஆனால் உள்ளத்திலே மகிழ்ச்சியே இல்லாத உடலாக இருந்தார். அதுவா வாழ்க்கை?
நம்மில் பலர் இல்லாத ஒருவராக நாம் இருக்க வேண்டும் என்று நினைத்து நடித்து மகிழ்வற்ற வாழ்க்கை வாழ்கின்றோம். ஏன், பல மாமியார்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் தங்கள் மகளுக்கு அன்னையாக இருக்க முடிகின்றதே, ஏன் மருமகளுக்கு அன்னையாக இருக்க முடிவதில்லை ? மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?
மிகச் சிறந்த நூலான "தி பவர் ஆஃப் நௌ" என்ற " இந்த நேரத்தில் வாழ்" என்ற நூலை எழுதியவர் எக்கார்ட் டோல் எனும் எழுத்தாளர். ஒரு குழந்தை ஒரு அழகான பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த பொம்மைதான் நான் என்று நினைக்கும் போதே "ஆணவம் " ஆரம்பமாகிவிடுகிறது என்கின்றார். நீங்கள் யார்? உயரமானவர், அழகானவர், பெரிய வேலையிலிருப்பவர், நல்ல குடும்பத் தலைவர்? மாமியார்?
வீட்டிலே, வேலையிலே, உலகில் நீங்கள் யார்? மற்றவர்கள் யார்? நண்பர்களா? அடிமைகளா? மரியாதை தருகிறீர்களா?
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் ? மற்றவர்கள் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும், அதுதானே முக்கியம்?
உண்மையான நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? பெருமைப்படக்கூடியதா, இல்லையா? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று செய்தீர்களா?
இவையெல்லாம் நம்மைப் பற்றிய ஆணவத்தை அறிய வைக்கும் சிந்தனைகள் என்கின்றார்.
ஆணவத்தால் நாம் அடைவது என்ன?
புகழ் பெற்ற ஒருவர் தனது மனைவியை அடிமை போல நடத்தியுள்ளார். ஆனால், உண்மையிலேயே அவர் மனைவியை மிகவும் விரும்புகின்றவர். ஆனால், மனைவி விலகிவிட்டார். அவரது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கின்றார். ஆனால் அந்தப் பெண் என்னால் மன்னிக்க முடியாது என்று உண்மையாகச் சொல்கின்றார். அவர் மனமுடைந்து அழுகின்றார். ஆனால் பயன் என்ன?
நம்மில் பலர் வெளித் தோற்றத்திற்காக குடும்பத் தலைவர்களாகக் கண்டிப்புடன் இருக்கின்றோமா? அதனால் உண்மையான பயன் உண்டா? யார் மகிழ்வுடன் இருக்கின்றார்கள் ? கடமையுடன் கூடிய கண்டிப்பா ? இல்லை நான்தான் என்ற ஆணவத்துடன் உள்ள கண்டிப்பா?
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" என்ற குறள் ஆணவத்துடன் பேசப்பட்ட வார்த்தைகளின் விளைவுகளோ?
நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது பல முறை நடக்கின்றதா?
தன்னுடைய 25 ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகளில் சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்த்துக் காட்டி அதில் தான் என்ன பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்று சொல்கின்றார், பலரை அழைத்து அவர்கள் செய்த செயல்கள் அவற்றால் விளைந்த விளைவுகள் என்ன என்று சொல்ல வைக்கின்றார். இப்போது அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள், எப்படி மாறியுள்ளீர்கள் என்று கேட்கின்றார்.
சில கேள்விகள் நமக்குக் கன்னத்தில் விழுந்த அறை போல உள்ளன.
நாமே நமக்கு எதிரியாக இருந்துள்ளோம், மற்றவர்களையும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளோம் என்பதே முக்கியப் பாடமாக இருக்கின்றது.
உலகெங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்கள். முன்னரே பதிவு செய்து கொண்டவர்கள் கேள்விகளை இணையத்தில் அனுப்புகின்றனர்.
உலகிலேயே மிகப் பெரிய வகுப்பறை இதுதான்.
இதனால் பலரது வாழ்க்கை முன்னேறி மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும் என்பது திண்ணம்.
"ஓ' என்னும் அதிசயம் படைக்கும் பாடம் தொடரும். தானும் பயனடைந்து, பணமும் அடைந்து, மற்றவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றுப் பயனடையச் சொல்லும் பாடங்களாக அமைக்கின்றார்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக