செவ்வாய், 25 மே, 2021

WE BELONG TO DRAVIDIAN STOCK


 

திராவிட வல்லுநர் மன்றத்தின் (PDF) நிறுவனர் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மன்றத்தின் பொறுப்பாளர்கள் புகழ்காந்தி, தரணீதரன், கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்மருத்துவர் எழிலன், இணைய வழியிலும், முகநூல் வழியிலும் கருத்துகளை செவி மடுத்துக் கொண்டிருக்கும் அருமை நண்பர்கள், அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!

கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், திராவிடம், ஆரியம், தமிழ்த் தேசியம் போன்ற விவாதங்கள் எல்லாம் தேவையா என்று தோன்றும். தேவையில்லைதான். எனினும், திராவிடம் என்று சொன்னவுடனேயே நம் மீது பாய்ந்து குதறும் சிலரைப்பார்க்கும் வேளையில், நாம் விடை சொல்லத்தான் வேண்டியுள்ளது. தி.மு. கழகத் தலைவர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச் சராகப் பொறுப்பேற்றவுடன், தன் ட்விட்டர் பக்கத்தில், தன்னைப் பற்றிய ஓர் அறிமுகமாக, “தமிழக முதல்வர், தி.மு.க தலைவர், திராவிட மரபினத்தவர்’’ என்னும் குறிப்புகளைப் பதிவு செய்தார். அவ்வளவுதான்; உடனே திராவிட ஒவ்வாமையும், திராவிட எதிர்ப்பும் வெளிப்படத் தொடங்கிவிட்டன.

இருப்பினும் முதல்வர் எந்த எதிர்ப்புக்கும் எந்த விளக்கமும் சொல்லவில்லை. விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பதை விட, வேலை செய்து கொண்டிருப் பதே நாட்டிற்குத் தேவையானது என்பதை அவர் புரிந்து வைத்துள்ளார். சற்றுக்கவனித்துப் பார்ப்பவர் களுக்கு இன்னொன்றுபுரியும். கடந்த பத்து நாட்களா கவே, முதலமைச்சர் மிகக் குறைவாகவே பேசுகின்றார். தேவையானவைகளை மட்டுமே பேசுகின்றார். உலக மொழிகளிலேயே ஆகச்சிறந்த மொழி செயல்தான் என்பதை அவர் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார் என்றே கருதுகின்றேன்.

இருப்பினும் நம்மைப் போன்றவர்கள் சரியான சில விளக்கங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. இல்லை யேல் அவர்களின் பொய்யுரைகளே உண்மை என்றாகி விடும்!

“நான் திராவிட மரபைச் சேர்ந்தவன்” என்று நம் தலைவர் குறிப்பிட்டுள்ள அந்த வரி யாருடையது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நம்மில் பலரும் அறிவோம். 1962 ஏப்ரல் மாதம், இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா ஆற்றிய கன்னிப்பேச்சில் அந்த வரி இடம்பெற்றுள்ளது. “I BELONG TO DRAVIDIAN STOCK. I AM PROUD TO CALL MYSELF A DRAVIDIAN”  என்றார் அண்ணா.

அறிஞர் அண்ணாவின் உரையை முழுமையாகப் படிக்கும் போது, இன்னும் ஆயிரம் செய்திகள் அதில் உள்ளடங்கி இருக்கின்றன என்பதை நாம் அறியலாம். அண்ணாவின் உரை பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன், இன்றைய சூழலில் எந்த அடிப்படையில் `திராவிடம்' எதிர்க்கப்படுகிறது என்பதை நாம் பார்த்து விட வேண்டும்.

நம்மை எதிர்ப்பவர்கள் என்ன சொல்லி எதிர்க் கிறார்கள் என்றால், “நீங்கள் ஏன் உங்களை திராவிடன் என்று சொல்லிக் கொள்கின்றீர்கள்? தமிழன் என்பது தானே சரி. திராவிடன் என்று சொல்லிச்சொல்லி, கடந்த ஒரு நூற்றாண்டாகத் தமிழை, தமிழ் முகத்தை, தமிழர் முகவரியை அழிக்கின்றீர்கள்” என்கிறனர்.

திராவிடன் என்று சொல்லிக் கொள்ளும் நாம், தமிழை, தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டை மேம் படுத்தியிருக்கிறோமா அல்லது இழிவுபடுத்தி இருக் கிறோமா என்னும் கேள்விக்கு விடை சொல்ல வேண் டிய கடமை நமக்கு இருக்கிறது.

‘திராவிடம்’ என்ற சொல் எந்தெந்தக் காலகட்டங் களில், என்னென்ன பொருளில் ஆளப்பட்டுள்ளது; இன்று அதன் பொருள் என்னவாக இருக்கிறது என்பதை நாம் விளக்க வேண்டும். “திராவிடன் என்று சொல்லாதே, தமிழன் என்று சொல்’’ எனக் கூறுகின்ற வர்கள், ஏதோ திராவிடமும் தமிழும் எதிரெதிரானவை என்பது போலப் பேசுகின்றனர். உண்மையில் ‘ஆரியம்’ என்பது தான் ‘திராவிடத்தின் எதிர்ச்சொல்’ இவர்கள் ஆரியத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தமிழைக் கொண்டுவந்து வைக்கின்றனர்.

இதற்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. உண்மையான எதிரிக்குப் பதிலாக, அந்த இடத்தில், இணக்கமான ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், எதிரி தப்பித்துச் செல்வதற்கு வழிவகுக்கின்றனர் என்றே இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் `திராவிடம்’ என்ற சொல்லை வரலாற்று அடிப்படையில் நோக்குவோம்.

‘தமிழ்’ என்பது நம் மொழியின் பெயர், ‘தமிழர்’ என்பது நம் இனத்தின் பெயர், `தமிழ்நாடு’ என்பது நம் நிலத்தின் பெயர். நூற்றுக்கு நூறு உண்மை.

அப்படியானால், திராவிட மொழி, திராவிட இனம், திராவிட நாடு என்பன எங்கிருந்து வந்தன என்று கேள்வி சரியானதுதான். இனம் என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள்  (Ethnic Race)இருந்தன. பிறகு அவை தேசிய இனங்களாகப் (National Race) பரிணாம வளர்ச்சி பெற்றன. நம் பழைய மரபினத்தின் பெயர் ‘திராவிடர்’ என்பது. ஆனால் இன்று ‘திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக் குறித்ததிலிருந்து விடுபட்டு, ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது. அதற்கு வரலாற்றில் பலசான்றுகள் உள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், கால்டுவெல், ‘திராவிட மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலை வெளியிட்ட பின்பே, ‘திராவிடம்’ என்னும் சொல் பெருவழக்காயிற்று. ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அச்சொல் ஓர் அமைப்பின் பெயரில் இடம் பெற்றது.

ஆம், 1892 ஆம் ஆண்டு, அயோத்திதாசப் பண்டி தர், “ஆதிதிராவிட ஜனசபை” என்று தன் அமைப்பிற்குப் பெயர் சூட்டினார். அவரைத் தொடர்ந்து, 1894 இல், ரெட்டைமலை சீனிவாசனார், “திராவிட மகா ஜனசபை” என்னும் அமைப்பைத் தொடங்கினார். அங்குதான், திராவிடம் என்பது ஒரு சமூக அமைப்பின் பெயராகி, ஒரு கருத்தியல் வடிவத்தைப் பெறத் தொடங்கியது. தந்தை பெரியார் காலத்தில், அக்கருத்தியல் முழுமை பெற்றது.

அது என்ன கருத்தியல்? சமத்துவத்தை நோக்கிய சமூகநீதிக் கருத்தியல். ஜாதி ஒழிப்பும், பாலின சமத்துவமும் ‘பெரியாரியம்’ என்று பெயர் பெற்றன. அதனையே நாம் ‘திராவிடம்’ என்கிறோம்.

அயோத்திதாசர் ‘திராவிடம்’ என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கினாலும், 1906 இல் அவர் நடத்திய ஏட்டிற்கு “ஒரு பைசா ‘தமிழன்” என்று தானே பெயர் சூட்டினார். திராவிடத்தைக் கைவிட்டு விட்டாரே என்று கேட்கின்றனர். அவர் திராவிடம் என்னும் சொல்லையோ, அதன் கருத்தியலையோ இறுதிவரையில் கைவிட வில்லை என்பதுதான் உண்மை. 1914இல் அவர் இறந்து போகும் வரையில் அந்தச் சொல்லைப் பெருமையுடன் கையாண்டார்.

1910 டிசம்பர் 14 அன்று, மக்கள்தொகைக் கணக் கெடுப்பு பற்றிய செய்தியில், அயோத்தி தாசர், “இத் தேசப் பூர்வச் சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வச் சரித்திரங்கள் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை, சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும் படி யானஉத்தரவளிக்கவேண்டுகிறோம்” (ஞான அலோசியஸ் - “அயோத்திதாசர் சிந்தனைகள்’’ - தொகுதி 1 -பக்.307-08) என்று குறிப்பிடுகின்றார்.

எனவே ஜாதி பேதமற்ற இந்துக்களே திராவிடர்கள் என்பது தெளிவாகின்றது. திராவிடர்களும் தமிழர்களே. ஆனால் ஜாதி பேதமற்ற, பாலினசமத்துவத்தை ஏற்கும் தமிழர்கள் திராவிடர்கள் ஆகின்றனர்.

1913ஆம் ஆண்டு, மறைமலை அடிகளாரும், சென் னையில், “திராவிட நாகரிகம்” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் உரையாற்றியுள்ளார்.

இன்னொரு இடத்திலும் திராவிடர்கள் என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது.

நீதிக் கட்சியின் சார்பில், 01.06.1917 அன்று திராவிடன் என்று ஓர் ஏடு வெளியாகியது. அந்த ஏட்டிற்கு அந்தப் பெயரை எப்படித் தேர்ந்தெடுத்தோம் என்று அந்த ஆசிரியர் குழுவில் இருந்த எஸ்.எஸ். அருணகிரி என்பவர் ஒரு விளக்கம் சொல்லியுள்ளார். “ஏட்டின் ஆசிரியர் பக்தவத் சலம், டி.எம்.நாயர், நான் எல்லோரும் பத்திரிகை யின் பெயர்பற்றிப் பேசினோம். பார்ப்பனர் அல்லாத அனைவரையும் குறிக்கும் ஒரு சொல்லாக இருந்தால் நல்லது என்ற கருத்து பேசப்பட்டது. அந்த அடிப்படையில் தான் திராவிடன் என்ற பெயரைவைக்க முடிவு செய்தோம்’’ என்கிறார். (நீதிக்கட்சி நூற்றாண்டு விழா மலர்)

எனவே இங்கும் பார்ப்பனர் அல்லாதோரைக் குறிக்கும் கருத்தியலாகவே திராவிடம் உருப்பெற்றி ருப்பதை அறிய முடிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி, திராவிடர் கழகம் தொடங்கிய அதே 1944 ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 29-31) கான்பூரில் மூன்று நாள் நடைபெற்ற பிற்படுத்தப் பட்டோர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றியுள்ள உரையில் மேலும் தெளிவான விளக்கம் நமக்குக் கிடைக்கிறது. அந்த மாநாட்டில், “உங்களைத் தீண்டாமையும் ஜாதி இழிவும் அணுகாத வண்ணம் ஏதேனும் ஒரு மதத்திற்கு நீங்கள் மாறுவதாக இருந்தால் மாறிக்கொள்ளலாம். மதம் எதுவும் வேண்டாம், அதே நேரத்தில் தீண்டாமை, ஜாதி இழிவு எங்களை அணு கிடக் கூடாது என்று நீங்கள் சொல்வீர்களேயானால், உங் களை ‘திராவிடன்’ என்று அழைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார் பெரியார்.

இப்போது திராவிடக் கருத்தியல் தெள்ளத் தெளி வாக ஆகிவிட்டது. ஜாதி இழிவையும், தீண்டாமையை யும் ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள் `திராவிடர்கள்’ ஆகின்றனர்.

இத்தனை அடிப்படைகளையும் வைத்துக் கொண்டு தான் அறிஞர் அண்ணா, மாநிலங்களவையில், “நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்’’ என்கிறார். அவருடைய உரையின் அடுத்தடுத்த பகுதிகளையும் நாம் பார்க்கவேண்டும். தான் ஏன் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்கிறார். என்பதையும் அண்ணா அவர்கள் விளக்குகின்றார். “உலகத்தவர்க்குக் கொடுப்ப தற்கு, மிக உறுதியான, மிகத் தெளிவான, மிக வேறு பட்டவை திராவிடரிடம் இருப்பதாலேயே நான் அப்படி அழைத்துக் கொள்கிறேன்” என்கிறார். (`....it's only because I consider Dravidian have got something concrete, something distinct, something different to offer to the world at large”).

ஆம்; திராவிடர்கள் மிகத் தொன்மையான இனத் தினர் என்பதனால் எல்லாம் இல்லை, அவர்களிடம் இவ்வுலகிற்குக் கொடுப்பதற்கு மிக உறுதியான சில கருத்தியல்கள் உள்ளன என்கிறார் அவர். அது மட்டுமல்லாமல், மத நம்பிக்கை, கடவுள் வழிபாடு ஆகியனவற்றைக் கொண்டு ஒரு தேசத்தை வரைய றுத்துவிட முடியாது என்றும் கூறுகிறார்.

“கன்னியாகுமரியிலிருந்து இமாலயம் வரையில் இங்கே ராமரையும் கிருஷ்ணரையும் வணங்குவதால் இதனை ஒரே தேசம் என்று சிலர் கூறுகின்றனர். அப்படிப் பார்க்க முடியாது. அவ்வாறாயின், அய்ரோப்பா முழுவதும் யேசுநாதரை வணங்குகின்றனர். அதனால் அது ஒரு தேசம் ஆகிவிடுமா?” என்றும் கேட்கிறார்.

அண்ணா அவர்கள் தன் பேச்சில் தொடர்ந்து, “நாங்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள் இல்லை. ஒரே உலகம், ஒரே அரசு என்பதைக் கூட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதற்காக எங்கள் தேசிய இன வரையறைகளை மறந்துவிட முடியாது”(we want one world, one government. But we don't forget our national frontiers)என்பதுதான் அண்ணாவின் கூற்று.

இவை அனைத்தையும் வைத்துக் கொண்டுதான்“belong to dravidian stock” என்னும் முதல்வரின் குறிப்பைக் காண வேண்டும்.

எல்லாம் தெரிந்திருந்தும், கற்றறிந்த சிலரே, இதில் உள்நுழைந்து குறுக்குச்சால் ஓட்டுகின்றனர். ஒருவர் ஒரு நேர்காணலில், அன்று அண்ணா சுய நிர்ணய உரிமை(Self determination)  என்பதையும் வலியுறுத் திப் பேசினாரே , அதனை ஏன் இன்றைய முதல்வர் குறிப்பிட வில்லை என்று கேட்கிறார்.

ஆம், அன்று அந்த உரையில் சுய நிர்ணய உரிமை - அதாவது, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி - என்பதை வலியுறுத்தவே செய்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு, அதே அறிஞர் அண்ணா தானே “மாநிலசுயாட்சி” என்னும் கொள்கையையும் நமக்கு வகுத்தளித்தார்! அந்த மாற்றத்திற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைத் தனியாக ஒரு கட்டுரையிலேதான் நாம் பார்க்க வேண்டும்.

 அதே நண்பர், அதே நேர்காணலில், “பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்.....” என்றுதானே பாரதிதாசன் பாடியுள்ளார். பொங்கு திராவிடர்க்கு இன்னல் விளைத்தால் என்று பாடவில்லையே ஏன் என்று கேட்கிறார். இவையெல்லாம் இளைஞர்களைத் திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டுக் கேட்கப்படும் கேள்விகள்.

பாரதிதாசன் திராவிடம் பற்றியோ, திராவிடர் பற்றியோ பாடவே இல்லையா? “வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு” என்று திராவிடர் நாட்டுப் பண் ஒன்றையே பாடியவர் அவர். அது மட்டுமில்லை. இன்னொரு கவிதையில். “இனப்பெயர் என்னென்று பிறர் என்னைக் கேட்டால் / மனத்தினில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சி / நான்தான் திராவிடன் என்று நவில்கையில் / தேன்தான் நாவெல்லாம் வான் தான் என்புகழ்!” என்று பாடியவர் அல்லரோ அவர்!

வேறொரு கவிதையில், திராவிடக் கொள்கை என்பதையும் குறித்துள்ளார். அந்தக் கவிதையின் தொடக்க வரிகள், இன்றைய சூழலுக்கும் பொருந்தும். “கோட்டையில் நாற்காலி இன்றுண்டு நாளை / கொண்டுபோய் விடுவான் திராவிடக் காளை” என்று தொடங்கும் அந்தப் பாடலின் அடுத்த வரிகள், “கேட்டை விளைத்துத் திராவிடக் கொள்கையை / கிள்ள நினைப்பது மடமையின் செயலே” என்று அமைந்துள்ளன.

திராவிடர் கொள்கை என்று ஒன்று இருக்கிறது என்பதை இவ்வரிகள் உறுதிப்படுத்தவில்லையா?

எனவே திராவிடம் என்பது மொழியின், இனத்தின், நாட்டின் பெயரை ஒரு கட்டத்தில் குறித்திருக்கலாம் என்ற போதிலும், இன்று அது ஒரு கருத்தியலாக, சித்தாந்தமாக வளர்ந்து நிற்கிறது என்பதே உண்மை. அந்த உண்மையையும், அந்தக் கருத்தியலையும் ஏற்க விரும்பாதவர்களே, முதலமைச்சரின் அடிக்குறிப்பைக் கண்டு குமுறிக் கொந்தளிக்கின்றனர்.

“ஆரியம் என்னும் அடிமைக் கருத்தியலுக்கு நேர் எதிரான விடுதலைக் கருத்தியல், சமத்துவக் கருத்தியலே திராவிடம் என்பதை மக்களிடம் உரத்துச் சொல்வோம்! ஒவ்வொருவரும் தங்களின் சமூக வலைத்தளங்களில்தங்களைப் பற்றிய குறிப்பில், இப்படி அழுத்தமாக எழுதுவோம்

“WE BELONG TO DRAVIDIAN STOCK.”

- "முரசொலி", 21.5.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக