செவ்வாய், 31 ஜூலை, 2018

அறிவுலக மாமேதை இங்கர்சால்

நினைவு நாள்: ஜூலை 21

வை.கலையரசன்

 


இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833-ஆம் வருடம் ஆகஸ்டு 11-ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தில் ட்ரெஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தையான ரெவரெட் ஜான் என்பவர் ஒரு பாதிரியார். அவருடைய தந்தை வேதப் புத்தகத்தின் (ஙிவீதீறீமீ) ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறவராய்க் கடவுள் நம்பிக்கையோடு இருந்தவர். இங்கர்சாலை அவர் கண்டிப்புடனேயே வளர்த்தார்.

இங்கர்சாலும் தகப்பனார் கட்டளைப்படி பைபிளை வரிவரியாகவே வாசித்தார். அவர் மிக்க அறிவாளியாக  இருந்தபடியால், படிக்கப் படிக்கச் சந்தேகங்கள் அவருக்கு அதிகமாகவே ஏற்பட்டன. ஆனாலும், அவரது தந்தை இவ்விஷயத்தில் அவரை அடித்துத் தொந்தரவு செய்து, அவரது மூளையைக் கெடுக்காமல், அவரது மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும்படிச் சொல்லிவிட்டார்.

இங்கர்சாலுக்குப் பள்ளிப் படிப்பு குறைவு. ஆனால், நினைவாற்றல் மிக்கவர், பேசுவதிலும், கதை சொல்வதிலும், மொழிகளைச் சரியாக உபயோகிப்பதிலும் அதிகத் திறமைவாய்ந்தவர். தானாகவே நூல்களைப் படிக்க ஆரம்பித்து அவருடைய அரிய நினைவாற்றலால் சகல செய்திகளையும் அப்படியே சேமித்து வைத்துக் கொண்டார். இருபதாம் வயதில் தாமாக ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளித்தார். அப்பொழுது ஞானஸ்நானத்தைப் பற்றி அவருடைய அபிப்பிராயத்தைச் சில பாதிரிகள் கேட்டபொழுது அவர் விளையாட்டாக, “என்னுடைய அபிப்பிராயத்தில் சோப்போடு (கீவீtலீ ஷிஷீணீஜீ) ஞானஸ்நானம் செய்வது நல்ல காரியந்தான்’’ என்றார்.பின்னர் அவர் சட்டங்களைப் படித்துத் தன்னை 1854ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞர் (ஙிணீக்ஷீ-ணீt-றீணீஷ்)ஆக ஆக்கிக் கொண்டார். அவர் ‘இல்லினாய்’ மாநிலத்தில் ‘பியோரியா’ என்ற நகரில் தன்னுடைய வக்கீல் தொழிலை நடத்தி, அதிகப்பேரும் புகழும், வருமானமும் பெற்றார்.

1862-ஆம் ஆண்டு பகுத்தறிவாளரான ஈவா பார்க்கரை காதலித்து மணந்தார்.  சண்டைக் காலத்தில் போர்வீரனாக இருந்த படியால், ‘கர்னல்’ இங்கர்சால் என்ற பட்டமும் பெற்றார். அதன் பின்னர்த் திரும்பவும் 1863ஆம் வருடம் முதல், வக்கீல் தொழிலை அதிகச் செல்வாக்குடன் நடத்தினார்.

அவர் 34-ஆம் வயதிலேயே இல்லினாய் மாநிலத்திற்கு, ‘அட்டர்னி ஜெனரல்’ என்ற பெரிய பதவியை இரண்டு வருடங்கள் வகித்து நடத்தினார். அவருக்குக் கவர்னர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பிருந்தும், அவர் தன்னுடைய கொள்கைகளைச் சிறிதளவும் விட்டுக் கொடுக்காததால்  விலகச் சொன்னது.  “என்னுடைய நம்பிக்கை என்னைச் சேர்ந்தது. அது இல்லினாய் மாநிலத்தைச் சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கே மன்னராக ஆவதாயினுங்கூட என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்டமுடியாது’’ என்று சொல்லி அப்பதவியை நிராகரித்து விட்டார்.

அரசியல் விஷயங்களில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அப்படியே கேட்பார் இதயங்களை இளகச்செய்து இழுத்து, அவர் வயப்படச் செய்தன. 1877-ஆம் வருடத்தில், “ஆண், பெண், குழந்தை, அவர்தம் சுதந்திரம்’’ எனும் தலைப்பில் ஓர் அரிய சொற்பொழி வாற்றினார். ‘சொல்லினைத் தேனிற் குழைத்து உரைக்கும்’ இவர்தம் ஆற்றல் வியக்கத்தக்கது.

1884_-85-ஆம் ஆண்டுகளில் இவர், ‘வைதிகம்’, ‘அறவழி’, ‘பொய்யும் அற்புதமும்’ என்ற விஷயங்களைப் பற்றிச்  சொற்பொழிவுகள் செய்தார். 1894-ஆம் வருடத்தில், ‘ஆபிரகாம் லிங்கன்’, ‘வால்ட்டேயர்’, ‘வேதப்புத்தகம்’ என்பவைகளைப் பற்றிய இவரது சொற்பொழிவுகள் வெளியாயின. 1897-ஆம் வருடத்தில், ‘நான் ஏன் கடவுள் கவலையற்றவன்’, ‘மனிதரை சீர்திருத்தும் விதம்‘  என்பவை பற்றிய இவரது பெரும் சொற்பொழிவுகள் உலகிற்குக் கிடைத்தன.

இவரது ‘உண்மை’, ‘கடவுள்கள்’ போன்ற எண்ணற்ற சொற்பொழிவுகளும், கொள்கைகளும் இவருக்கு ஏராளமான விரோதிகளை உண்டுபண்ணி விட்டன. இவரை உண்மையாகத் தெரிந்துகொள்ள முயன்றவர் சிலர். ஒன்றும் தெரியாமலே ‘நாத்திகர்’ என்று தூற்றியோர் பலர். மத நம்பிக்கையுடைய பெரிய கலைவாணர்கள் எல்லாம் இவருக்கு எண்ணற்ற மறுப்புகள் எழுதி எழுதி வெளியிட்டனர். அவைகளுக்கெல்லாம் ஆணித்தரமான பதில்களை இடைவிடாது சரமாரியாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இவர் கடைசியாக ‘மதமென்றால் என்ன?’ என்ற விஷயத்தைப் பற்றி 2.6.1899-இல் பாஸ்டன் நகரத்தில் சொற்பொழிவு செய்தார். சாதாரணப் போக்கிரிகள் முதல் கிளாட்ஸ்டன் (நிறீணீபீ ஷிtஷீஸீமீ) போன்ற பெரிய அறிவாளிகள் வரை இவருக்கு எதிர்ப் பிரச்சாரங்கள் செய்தனர்.

இங்கர்சால் வருடத்திற்கு 20,000 பவுன்கள் வீதம் பல வருடங்கள் சம்பாதித்தார். இதில் நாலில் ஒரு பாகம் அறச்செயல்களுக்காகச் செலவழிக்கப்பட்டு வந்தது.

தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பதினான்கு வருடங்களை இங்கர்சால் நியூயார்க் பட்டணத்திலேயே கழித்தார். அவர் 21.7.1899இல் அமைதியாக உயிர் நீத்தார். அவருக்கு மரணச் சடங்குகள் நடக்கவில்லை. அவருடைய புத்தகங்களிலிருந்து சில பாகங்களை அவருடைய நண்பர்கள் வாசித்தனர். அவருடைய மரணத்தைக் கேட்டு அமெரிக்கா முழுவதுமே துக்கமடைந்தது.

1911-ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் அவருடைய உருவச்சிலை ‘பியோரியா’ என்ற ஊரில் திறக்கப்பட்டது. அவர் உலகில் தோன்றி நூறாண்டுகளாயிற்று.

இவரது அனைத்து நூல்களையும் தந்தை பெரியார் இலண்டன் பகுத்தறிவாளர் சங்கத்திடமிருந்து அனுமதி பெற்று 1930களிலேயே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- உண்மை இதழ், 16-31.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக