திருச்சி, ஆக.19 திருச்சி - பெரியார் மாளி கையில் 18.8.2017 அன்று மாலையில் திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மண்டலத்தினைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் திருச்சியில் 2018ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாள்களில் உலக நாத்திகர் மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
உலக நாத்திகர் மாநாடு
உலக நாத்திகர் மாநாடு ஏற்பாடுகள் மற்றும் நடைபெறும் விதம் பற்றி தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஆகிய பெரியார் இயக்க அமைப்புகளுடன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாத்திகர் கோரா நிறுவிய நாத்திகர் மய்யமும் இணைந்து உலக நாத்திகர் மாநாட்டினை நடத்திட உள்ளன. மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், நாட்டின் அனைத்து மாநிலஙகளிலிருந்தும் நாத்திக அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நாத்திக அமைப்பினர் மிகப் பலராக கலந்து கொள்ள விருக்கின்றனர்.
நாத்திகத்தை நன்னெறி என சிந்தித்து, இயக்கம் கண்டு, அதனையே வாழ்க்கை முறை யாக கடைப்பிடிக்கச் செய்தவர். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார். உலகின் பல பகுதிகளில் உள்ள நாத்திக அமைப்புகளுக்கும் இந்த மண்ணில் தந்தை பெரியார் தோற்றுவித்த நாத்திகர் இயக்கத்திற்கும் செயல்பாட்டில் மாறுபாடு உள்ளது. பிறநாடுகளில் கடவுள் மறுப்பு எனும் ‘நாத்திகம்‘ கொள்கை அளவில் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நாட்டுச் சமூகச் சூழலில், கடந்து வந்த வரலாறு முற்றிலும் வேறானது. பிறப்பின் அடிப்படையில் மனிதர் களை பேதப்படுத்தி, ஏற்றத் தாழ்வுகளை உரு வாக்கி அதனையே நிலைப்படுத்திட, எதிர்ப்பு ஏதுமின்றி பெரும்பாலான உழைக்கும் மக்கள் கடைப்பிடித்திட ‘கடவுள் கொள்கை’ கடைப்பிடிக்கப்படுகிறது. பிறவி பேதத்தை தான்தான் ஏற்படுத்தியதாக கடவுள் பிரகடனப் படுத்தியதாக கற்பிக்கப்பட்டது. இந்தப் பிறவி பேதம் கடவுள் ஏற்படுத் தியதாகக் கற்பிக்கப் பட்டது. அந்தப் பேதத்தை நீக்கிடும் ஆற்றல் தனக்கு இல்லை என கடவுளே ஒப்புதல் அளித்த தாகவும் வலியுறுத்தப்பட்டது. சமூக ஏற்றத் தாழ்வுகளை நிலைப்படுத்திட, தொடர்ந்திட இந்த மண்ணில் கடவுள் கொள்கை கற்பிக்கப் பட்டு வளர்க்கப்பட்டது. ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி சமூகத்தில் சமத்துவத்தை, சம வாய்ப் பினை அனைவருக்கும் வழங்கிட நாத்திகக் கொள்கைகளை தந்தை பெரியார் வலியுறுத் தினார்.
எத்தனையோ பேர் நாத்திகக் கொள்கை களை எடுத்துச் சொன்னாலும், அதனை வாழ் வியல் நெறியாக, மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டி சமூகப் புரட்சியினை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் ஆவார். அப்படிப்பட்ட தத்துவ நெறியாளர் தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற உள்ளது.
நாத்திகம் - மேற்கிற்கும் முன்னோடி கிழக்கு
நாத்திகத் தத்துவம் என்பது மேற்கத்திய நாடுகளில் உருவானதாக கருதப்படுகிறது. அது குறித்த நூல்களும் அதிக அளவில் மேற்கத்திய அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மை வரலாறு அதுவல்ல; மேற்கத்திய நாடுகளிலெல்லாம் நாத்திகர் கொள்கை உருவாவதற்கு முன்பே - இந்த நாட்டில் - ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே - கவுதம புத்தர் பிறப்பதற்கு முன்னரே நாத்திகக் கொள்கைகள், கடவுள் மறுப்பு வலியுறுத்தப்பட்டடு வந்துள்ளது. புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, கபிலர் எனும் நாத்திக அறிஞர் பெயரால் அமைந்தது. ஓர் ஊரின் பெயரையே நாத்திக அறிஞர் பெயரால் ஏற்படுத்துவது எனும் நிலையில் அந்தக் காலத்தில் நாத்திகக் கருத்துகள் எந்த அளவுக்கு பலப்பட்டிருக்க வேண்டும்; பரவலாக் கப்பட்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது.
மேலும் சார்வாகர் வலியுத்திய நாத்திகக் கருத்து பரந்துப்பட்டு சமூகத்தில் கோலோச்சி யுள்ளன. இன்றும் கருத்துச் செறிவுடன் விளக்க மாய் பேசுபவரை ‘பிரகஸ்பதி’ என விளித்திடும் வழக்கம் நிலவிவருவது, அந்த நாள்களில் ‘பிரகஸ்பதி’ எனும் நாத்திக அறிஞர் பெற்றிருந்த பெருமையினை, சமூகத்தினர் நாத்திக கொள்கை யினைப் போற்றிய செயலாக கருதப்படல் வேண்டும். அந்த வகையில் உலகிற்கே நாத்தி கத்தை தொடக்க காலம் முதலே வலியுறுத்திய மண் இந்த மண் என்பதை பறை சாற்றும் வகையில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டு நிகழ்ச்சிகள்
மூன்று நாள்கள் நடைபெறவுள்ள உலக நாத்திகர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெறும். முதல் நாள் தொடக்க விழா மற்றும் பன்னாட்டு நாத்திக அறிஞர்கள், ஆய்வறிஞர்களின் கட்டுரை வாசிப்பு, அதைத் தொடர்ந்து கட்டுரைச் செய்திகள் குறித்த விவாதம் நடைபெறும்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி முற்பகலில் தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெறும். மாநாட்டு பேராளர்கள் மாநாட்டு நினைவாக சுற்றுச் சூழலுக்கு ஆக்கம் கூட்டுகின்ற வகையில் மரக்கன்றுகளை பல்கலைக்கழக வளாகத்தில் நடுவார்கள். பல் கலைக் கழகத்தினை பார்வையிடும் அவர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கட்டுரை அரங்கம், பல்கலைக்கழகத்தில் நடைபெறும். பிற்பகல் நிகழ்வாக திருச்சியில் மாலையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்தின் நிறைவில் திறந்த வெளி அரங்கில் பன்னாட்டு நாத்திக அறிஞர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
மூன்றாம் நாள் நிகழ்வில் ஆய்வுக்கட்டுரை வாசிப்பு மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாள்களும் தொடர் நிகழ்ச்சிகளுக்கிடையே நாத்திகக் கருத்துகளை வலியுறுத்திடும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாநாட்டினை ஒட்டி அறிவியல் கண்காட்சி மற்றும் திருச்சி - சிறுகனூரில் அமைந்திட உள்ள ‘பெரியார்’ உலகம் பற்றியகாட்சி அரங்கமும் ஏற்பாடு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ் வாக மாணவர் அரங்கம் மற்றும் இளைஞர் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இளைய தலை முறையினர் பங்கேற்கும் நிகழ்ச்சியும் உண்டு.
பன்னாட்டு கட்டுரைப் போட்டி
உலகின் பல பகுதிகளிலிருந்தும் மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் ‘பன்னாட்டு கட்டுரைப் போட்டியும்‘ உலக நாத்திக மாநாட்டினை ஒட்டி நடைபெறும். முப்பாலாரும் பங்கேற்கும் கட்டு ரைப் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும். வெற்றி பெற்றோருக்கு மாநாட்டு அரங்கிலேயே பரிசுத்தொகை வழங்கப்படும்.
மாநாட்டு சிறப்பாக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் உறுதுணையுடன் நடைபெற பல்வேறு ஏற்பாடு மற்றும் நிர்வாகக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கழகத் தோழர்கள் தங்களது பங்களிப்பினை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றியோர்
தமிழர் தலைவரது உரைக்குப் பின்னர், உலக நாத்திகர் மாநாட்டில் தங்களது பங்கேற்பு மற்றும் பங்களிப்பு பற்றி பொறுப்பாளர்கள் உரை யாற்றினர்.
திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மண்டலப் பொறுப்பாளர்கள்: திருச்சி தலைவர் மு.நற்குணன், திருச்சி செயலாளர் ப.ஆல்பர்ட், தஞ்சை செயலாளர் மு.அய்யனார், புதுக்கோட்டை தலைவர் பெ.இராவணன், அரியலூர் தலைவர் சி.காமராசு, மாநில மகளிரணிச் செயலாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட பொறுப்பாளர்கள் திருச்சி தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தஞ்சை தலைவர் சி.அமர்சிங், புதுக்கோட்டை தலைவர் அறிவொளி, கரூர் தலைவர் ப.குமாரசாமி, பெரம்பலூர் தலைவர் தங்கராசு, குடந்தை தலைவர் .................., பட்டுக்கோட்டை செயலாளர் பெ.வீரய்யன், அறந்தாங்கி தலைவர் க.மாரிமுத்து, லால்குடி தலைவர் தே.வால்டர், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள்: மாநில செயல் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மாநில துணைத் தலைவர் வடசேரி வ.இளங்கோவன், மாநில பொதுச்செயலாளர் அழகர்சாமி, மாநில ஆசிரியரணி அமைப்பாளர் இரமேசு ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் பங்கேற்ற பிற பொறுப்பாளர்கள்
அரியலூர் மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்டப் பொறுப்பாளர்கள்: திருச்சி செயலாளர் இரா.மோகன்தாசு, தஞ்சை செயலாளர் அ.அருணகிரி, லால்குடி செயலாளர் ஆ.அங்கமுத்து, கும்பகோணம் செயலாளர் உள்ளிக்கடை துரைராஜன், அரியலூர் தலைவர் நீலமேகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்: தஞ்சை தலைவர் காமராசு, பெரம்பலூர் தலைவர் தங்கராசு, பெரம்பலூர் மாநகரம் மருதை, பெரம்பலூர் தலைவர் நடராசன், புதுக்கோட்டைதலைவர் சரவணன், தருமபுரி தலைவர் கதிர்.செந்தில், அரியலூர் தலைவர் தங்க.சிவமூர்த்தி, திராவிடர் கழக மாநில இளைஞரணி, துணைச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஜெர்மன் மாநாடு பன்னாட்டு கட்டுரைப் போட்டி வெற்றியாளர் - பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கடந்த 2017 ஜூலை 27, 28 & 29 ஆகிய நாட்களில் ஜெர்மனி - கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநட்டினை ஒட்டி நடைபெற்ற இளைஞர்களுக்கான பன்னாட்டு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றியாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டனர்.
திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் மூன்றாம் பரிசு பெற்ற பவதாரணி மற்றும் பங்கேற்ற 11 மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும், நினைவுப்பரிசாக Collected Works of PERIYAR E.V.R. எனும் ஆங்கில புத்தகமும் வழங்கப்பட்டன. பன்னாட்டு கட்டுரை போட்டியினை நடத்திய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவனின் சிறிய உரைக்குப் பின்னர், சான்றிதழினை அவர் வழங்கிட தமிழர் தலைவர் நினைவுப் பரிசாக புத்தகத்தினை மாணவர்களுக்கு வழங்கினர். பங்கேற்ற மாணவர்களுள் 10 பேர் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், ஒருவர் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆவார். மருந்தியல் கல்லூரி மாணவர்களை ஊக்கப்டுத்தி, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க துணைபுரிந்த பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.செந்தாமரை மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் கடவுள் மறுப்பு முழக்கத்தினை கூறி திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் தொடங்கிட, பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார். நிறைவாக திருச்சி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இரா.மோகன்தாசு நன்றி கூறினர். கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் உணவருந்திச் சென்றனர்.
-விடுதலை,19.8.17