இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் சென்ற ஜெர்மனிக்கு அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. #வீரமணி அவர்களின் தலைமையில் தமிழ் நாட்டிலிருந்து 41 பேராளர்கள் வரும் 26ஆம் தேதி பிற்பகல் புறப்படுகின்றனர்.
எதற்காக? ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்களிலும் நடைபெறும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான் செல்லுகின்றனர்.
எதற்காக? மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று 60 ஆண்டுகளுக்கு முன் பாடினாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அந்தத் தலைவரின் தத்துவத்தை மய்யப் பொருளாக வைத்து நடத்தப்பட உள்ள மாநாட்டில் பங்கு கொள்ளத்தான் செல்லு கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, தமிழ்நாடு, பிரான்சு முதலிய நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் பங்கேற்க இருக் கின்றனர். தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கத் தத்துவம் குறித்து ஆய்வுக் கட் டுரைகளை அளிக்க இருக்கின்றனர்.(Inter National Conference on Periyar Self Respect Movement)
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் ஒரு முறை சொன்னார். “திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லி மெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?” என்று சொன்னார்.
நான்காம் வகுப்புப் படித்த தலைவரின் கொள்கைச் சித்தாந்தங்களை நாடுகளைத் தாண்டிப் பரப்பிட பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar InterNational) அமெரிக் காவின் சிகாகோ நகரில் உருவாக்கப்பட்டது (13.11.1994).
இன்று அமெரிக்கா, லண்டன், பிரான்சு, மியான்மா, சிங்கப்பூர், துபாய், குவைத், ஜெர்மனி முதலிய நாடுகளில் கிளை பரப்பி அய்யாவின் கருத்துக்களைப் பரப்பும் அரும் பணியில், பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஜெர்மனியில் 2014 ஜூன் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளையின் தலைவராக பேராசிரியர் டாக்டர் யுர்லிக் நிக்லசு, துணைத் தலைவராக கவன்வோர்ட், செயலாளராக கிளவுடியா வெப்பர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2014 ஜூன் மாதம் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவ லரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் மானமிகு கி. வீரமணி சென்றார்.
ஜூன் 3ஆம் தேதி மாலை “திராவிட இயக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைத் தத்துவமும்” எனும் தலைப்பில் அரிய உரையாற்றினார்.
மறுநாள் கொலோன் பல்கலைக் கழகத்தில் (4.6.2014) “இந்தி எதிர்ப்பு இயக்கம்” எனும் தலைப்பில் மாணவர் களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் “பவர் பாய்ண்ட்” வழி ஆய்வுரை வழங்கினார்.
ஓர் இணையருக்குச் சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். அங்கு சென்றபோது தான் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளை தொடங்கப் பட்டது.
இந்தப் பெரியார் பன்னாட்டு அமைப்பு தான் ஆண்டுதோறும் “சமூக நீதிக்கான வீரமணி விருதை” வழங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 17 பேருக்கு அளிக் கப்பட்டுள்ளது.
ஜெர்மனி மாநாட்டிலும் இறுதி நாளன்று (29.7.2017) மைக்கேல் செல்வநாயகம் (துணைமேயர், கிராட்டன் மாநகராட்சி இங்கிலாந்து) அவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது.
(விரிவான நிகழ்ச்சி நிரல் 13ஆம் பக்கத்தில் காண்க!)
50 ஆண்டுகளுக்கு முன் இதே ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டைப் பொறுப் பேற்று நடத்தியவர் உலகப் பேரறிஞர் என்று போற்றப்படும் வால்டர் ரூபன்; மாநாட்டின் ஓய்வு நேர இடைவேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட சில இந்திய அறிஞர்களுடன் உரையாடினார்.
அப்பொழுது வால்டர் ரூபன் ஒரு வினாவை முன் வைத்தார்.
“இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமையாளர் யார்? (Who is the Unpreceded Human Personality of the Present India?)என்பதுதான் அந்த அர்த்தமிக்க வினா.
காந்தி என்றனர், நேரு என்றனர். அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை அந்தப் பேரறிஞர்.
“நீங்களே சொல்லி விடுங்கள்” என்றனர் அந்த உரையாடலிலே பங்கு கொண்ட இந்திய அறிஞர்ப் பெரு மக்கள்.
உலகப் பேரறிஞர் வால்டர் ரூபன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி தான்!” என்று பட்டை தீட்டிய வகையில் பதில் அளித்தார் அந்தப் பேரறிஞர்.
இந்தத் தகவலைத் தெரிவித்தவர் யார் தெரியுமா? சாகித்ய அகாடமியின் முக்கியப் பொறுப்பாளரும், பிரபல எழுத்தாளருமான பொன்னீலன் அவர்கள்.
தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் என்பது உலகளாவிய “பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்ற கருப்பொருளைக் கொண்ட தாகும்.
2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மய்ய மாநாட்டுக்குச் செல்லுகிறோம் என்றால் இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அந்நாட்டுக்குச் சென்றதை எண்ணிப் பார்க்கிறோம். 19.5.1932 முதல் 14.6.1932 வரை 27 நாள்கள் ஜெர்மனியிலே எஸ். இராமநாதன், இராமு ஆகியோர்களுடன் தந்தை பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தந்தை பெரியார் சென்ற அம்மண்ணுக்கு தமிழர் தலைவர் தலைமையில் 41 இருபால் தோழர்களும் பயணிக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியதே!
பன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கத் தத்துவத்தின் மீது ஆய்வுரைகளை வழங்க உள்ளனர்.
பெரியார் காணும் சுயமரியாதை எத்த கையது என்பதை படம்பிடிக்கக் காத்திருக் கின்றனர். தந்தை பெரியார் பார்வையில் உலக விழிப்புக்கும், மாற்றத்திற்குமான பல அரிய சிந்தனை வித்துகளை எதிர்ப் பார்க்கலாம்.
26 ஜூலையில் புறப்படும் தோழர்கள் சில அய்ரோப்பிய நாடுகளிலும் (சுவிட்சர் லாந்து, இத்தாலி, பாரீஸ்) சுற்றுப்பயணம் சென்று ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் சென்னை திரும்புவர்.
தந்தை பெரியார்பற்றி பழி தூற்றும் தக்கைகளின் கண்கள் இதற்குப் பிறகாவது திறந்து புத்தி தெளிவு கொண்டால் மகிழ்ச்சியே!
பார்ப்பனர்கள் பதைப்பது புரிகிறது - பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று ஆக்கிக் கொண்டு, அவர்களின் தொங்கு சதைகளாக இருக்கின்றவர்கள் தான் திருந்த வேண்டும். எங்கே பார்ப்போம்!
-கவிஞர் கலி. பூங்குன்றன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக