பெரியார் நூல்கள் ஜெர்மன் மொழியில் வெளிவர உதவிய ஆராய்ச்சி வல்லுநர்கள் கிளாடியா வாடர், ஸவென் வொர்ட்மன் ஆகியோருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்
evolt ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆங்கில நூலான 'Periyar Self-Respect Movement'வெளியிட்ட காட்சி
கொலோன், ஜூலை 28 தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவப் பரப்பலின் முயற்சிகளில் ஒன்றாக ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு நடைபெறுகிறது.
ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழா" 27.07.2017 அன்று மாலை 4.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8 மணி) எழுச்சியுடன் துவங்கியது.
மாநாட்டினை நடத்திடும் அமெ ரிக்க பெரியார் பன்னாட்டு மய் யத்தின் ஜெர்மனி நாட்டு கிளையின் தலைவர் பேராசிரி யர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் மாநாட்டுக்கு வருகை தந்தோர் அனைவரையும் வர வேற்றுப் பேசினார். பன்னாட்டு மாநாடு கொலோனில் நடைபெறுவதற்கு எடுத்த முயற்சிகள் பற்றி எடுத்துரைத்த அவர், அதற்காகப் பெருமைப்படுவதாகவும் தமதுரையில் குறிப்பிட்டார்.
தொடக்கம்
லண்டன் நகர கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வ நாயகம் மாநாட்டை திறந்து வைத்து சிறப்பானதொரு உரையினை வழங் கினார். பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டினை தொடங்கி வைப்பது தமது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு எனவும், பெரியாரின் மனிதநேய தத்துவம் உலகமெலாம் பரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பெரியார் தம் கொள்கைகளை உலகமயமாக்குப் பணியில் தாமும் இணைந்து பணியாற்றிட அணியமாக இருப்பதாகவும் கூறினார்.
புத்தக வெளியீடு
பன்னாட்டு மாநாட்டில் வெளியிட ஜெர்மன் மொழியாக்கத்தில் இரண்டு நூல்களும், மூன்று ஆங்கில நூல்களும் அச்சிடப்பட்டன. 'கடவுளும் மனிதனும்' (Gott und Mensch) எனும் தந்தை பெரியாரின் தமிழ் உரையினை உள்ளடக்கிய நூலினை கொலோன் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர் கிளாடியா வெப்பர் ஜெர்மனியில் மொழி பெயர்த்துள்ளார். 'பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்" (Periyar E.V. Ramasamy - Eine Kurzbiographie) நூலினை கொலோன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸவென் வொர்ட்மேன் ஜெர்மனியில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு ஜெர்மனி மொழியாக்கங்களை பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் வெளியிட, முதல் நூலினை ஸ்வீடன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உப்சல் மற்றும் கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஸல்க் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் அ. அய்யாசாமி எழுதிய "பெரியார் சுயமரியாதை" (Periyar Self-Respect) எனும் ஆங்கில நூலினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட முதல் நூலினை ஜெர்மனியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் ராகுலன் - ஒலிவியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
"பெரியார் நினைவிடம்: கல்வெட்டுப் பொன்மொழிகள்" (Inscriptions at Periyar Memorial) (தமிழ், ஆங்கிலம்) நூல்களை திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி வெளியிட பல்கலைக் கழக மாணவர் பாஸ்கல் பெற்றுக் கொண்டார்.
'ரிவோல்ட்' ஏட்டில் வெளிவந்த சுயமரியாதை தத்துவம், இயக்கம்பற்றிய கட்டுரைகளின் தொகுப்பான 'பெரியார் சுயமரியாதை இயக்கம்' (Periyar Self-Respect Movement) எனும் ஆங்கில நூலினை தமிழர் தலைவர் வெளியிட, வியட்நாம் நாட்டைச் சார்ந்த கொலோன் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் சினா முதல் நகலினைப் பெற்றுக் கொண்டார். ஜெர்மன் மொழியாக்க நூல்களைப் படைத்த கிளாடியா வெப்பர், ஸ்வென் வொர்ட்மேன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார்.
புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் அமெரிக்க நாட்டு மருத் துவர் சித்தானந்தம் சதாசிவம் மாநாட்டு வாழ்த்துரை வழங்கினார். அமெரிக்க பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டு சிறப்புரை
நிறைவாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி மாநாட்டு சிறப்புரையினை ஆற்றினார். சுயமரியாதை தத்துவம் பற்றி ஆங்கிலத்தில் அரியதொரு சொற்பொழிவினை வழங்கினார். தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களுக்குப் பயன்பட்டன. ஆனால் பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் அனைத்து நாட்டினருக்கும், ஒட்டு மொத்த மானிடருக்கும் உரியது. பெரியார் சுயமரியாதைத் தத்துவம், உலகளாவிய தத்துவம் எனக் குறிப்பிட்டு கூறி தமது உரையில் விரிவாக விளக்கிப் பேசினார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர அய்ரோப்பிய நாடுகளிலிருந்து பேராளர்கள் பலரும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.
-விடுதலை,28.7.17.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக