சு. அறிவுக்கரசு
மலேசியாவில் தமிழ்பேசி வாழும் திராவிடர்களின் "மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்" சார்பில் உலகத்தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. ஜூன் 24, 25 ஆகிய இரு நாள்களில் நடைபெற்ற இம்மாநாட் டில் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டிலிருந்து பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர் களில் நானும் ஒருவன். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஒப்புதல் பெற்று கலந்து கொண்டேன். என்னுடன் இராம. அன்பழகன், மஞ்சை வசந்தன் ஆகியோ ரும் கலந்து கொண்டனர். தவிரவும் இள.புகழேந்தி, வே.மதிமாறன், அ.மார்க்சு ஆகியோரும் பங்கு பெற்றனர்.
24.6.2017 அன்று காலை 11 மணியளவில் மாநாட்டுத் தொடக்க விழா நடந்தது. மலேசிய நல்வாழ்வுத்துறை அமைச்சர் டத்தோஸ் டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். தமிழ்மொழி, தமிழர் பெருமை பற்றியும், தந்தை பெரியார் வளர்த்தெடுத்த மூடநம்பிக்கை ஒழிப்பு முதலிய கொள்கை வழி வாழ்வதன் சிறப்பு பற்றியும் பெருமிதத்துடன் பேசிய அமைச்சர், மலேசிய அரசு தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் செய்துவரும் செயல்கள், திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டு, மாநாட்டின் கொள்கை களான "இனத்தால் திராவிடன் - மொழியால் தமிழன் - உலகத்தால் மனிதன்" எனும் நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மாநாட்டின் அமைப்பாளர்களுடனும், பேராளர்களு டனும் தேநீர் அருந்திப் பேசிக் கொண்டி ருந்து விட்டுச் சென்றார்.
மாநாட்டின் முதல் நிகழ்வாக மாநாட்டின் தலைவரும் மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவருமான பெரியார் பெருந் தொண்டர் பெரு.அ. தமிழ்மணி தமது தலைமையுரையை மிகச் சுருக்கமாக நிகழ்த்தினார்.
மனித குலம் தோன்றியது முதல் திராவிடர் இனமே உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தது என்றும், அவர்கள் இன்றைய நிலையில் உலகத்தில் 250 கோடி என்ற அளவில் உள்ளனர் என்றார். திராவிடர் இனத்தின் முதல் தாய் மொழி தமிழே என்று பெருமை பொங்கப் பேசினார். 1856இல் அறிஞர் கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி 12 திராவிட மொழி களை இனம் காட்டினார் என்றும், பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சிகளுக் குப்பிறகு சற்றொப்ப 30 மொழிகள் இனங் காணப்பட்டுள்ளன என்பதையும் எடுத் துரைத்தார். எனவே இனத்தால் திராவிடர், மொழியால் தமிழர், உலகத்தால் மனிதர் என்கின்ற உயரிய தத்துவத்தை உயர்த்திப் பிடிப் போம் என்று முழங்கினார்.
அதன்பிறகு மலேசியப் பிரதமர் துறைத் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ் வி.தேவமணி அவர்கள் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட களஞ்சியம் மலரை வெளியிட்டுப் பேசினார். மாநாட்டு மலரை நான் பெற்றுக் கொண்டேன். என்னைத் தொடர்ந்து பேராளர்கள் பலரும் பெற்றுக் கொண்டனர்.
மதிய உணவுக்குப் பின்னர், கருத் தரங்கு தொடங்கியது. பேராசிரியர் அ.மார்க்சு, மஞ்சை வசந்தன், இள.புகழேந்தி, இராம. அன்பழகன் ஆகியோர் உரை யாற்றினர். நகைச்சுவைப் பேச்சாளர் என அறிமுகம் செய்யப்பட்ட இராம.அன்பழகன் பேசும் போது, பார்ப்பனர் ஆதிக்கத்தால் எப்படியெல்லாம் மொழி, பண்பாடு, வாழ்க்கை முறைகள் கெடுக்கப்பட்டன என்பதையும், தந்தை பெரியாரின் பகுத் தறிவுப் பரப்புரையால் இன்றைய திரா விடர்கள் தமிழ்நாட்டில் முன்னேறியிருப் பதையும் விளக்கிக் காட்டினார்.பெரிதும் பெரியார் பற்றாளர்களாகவே நிறைந் திருந்த கருத்தரங்க மண்டபம் அவரது உரையை மிகவும் ரசித்துக் கேட்டது.
மறுநாள் 25.6.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் நாள் மாநாடு தொடங்கியது. கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மலேசியக் கல்வித் துறைத் துணை அமைச்சர் டத்தோ. ப.கமலாநாதன் பேசி னார். வே.மதிமாறன் உரைக்குப்பின், நான் பேசினேன். தமிழ்மொழியின் சிறப் புகள் சிலவற்றைக் குறித்துப் பேசியபின் அம் மொழியின் ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றைக் குறிப்பிட்டுக் கூறினேன். சோழ, பாண்டிய அரசர்கள் எவ்வாறு தமிழைப் புறக் கணித்து சமஸ்கிருதத்தை வளர்த்தனர் என்பதை விளக்கினேன். பக்தி இலக்கிய காலத்தில் பக்தியும், மூடநம்பிக்கை களுமே வளர்ந்தன என்பதை எடுத்துக் காட்டினேன். தமிழிசை, தமிழ் சித்த மருத் துவம், தமிழ்க்கலைகள் எப்படி வடமொழி மயமாக்கப்பட்டன என்பதையும் எடுத்துக் கூறினேன். தமிழர்களின் உயரிய வாழ் வியல் முறைகள் ஒழித்துக்கட்டப்பட்டு ஆரியப் பழக்க வழக்கங்கள் திணிக்கப் பட்ட விவரங்களை விவரித்தேன். பார்ப் பனர் அல்லாத மக்களுக்கு கல்வி மறுக்கப் பட்டதால் வேலை வாய்ப்புகளும் மறுக் கப்பட்ட அவலத்தைக் கூறினேன். 1916இல் தோன்றிய பார்ப்பனரல்லாதார் எழுச்சி, திராவிடர் இனஉணர்வு தோன்றிய சூழ் நிலையைக் கூறினேன். சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் ஊட்டிய திராவிட இன உணர்வு, எவ் வகையில் பார்ப்பனர் அல்லாதாரை முன் னேற்றியது என்பதை ஆதாரங்களோடு பேசினேன். ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி என எல்லாத் துறையிலும் எல்லா நிலைகளிலும் இயங்கினால்தான் தமிழ் மொழி வாழும் என்பதால் தமிழ் மொழி காக்க, வளர்க்க திராவிடர் இயக்கம் பாடு பட்டதை விளக்கிப் பேசினேன்."எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லி சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம் - குறை களைந்தோமில்லை" என்று புரட்சிக் கவிஞர் பாடியதை எடுத்துக் கூறி தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப கணினித் தமிழை வளர்த்திட தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்த்திருத்தம் உதவி வருவதை எடுத்துக் காட்டினேன். இத்தாலி நாட்ட வரான வீரமாமுனிவருக்குப் பின் தமிழ் எழுத்தைச் சீர்மைப்படுத்தியவர் பெரி யாரே என்பதை நிறுவினேன்.
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்பதைக் கூறி
வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித் தார் என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளின் படி திராவிடர் எனும் இன உணர்வு ஒன்றேதான் நம் இன மேன்மைக்கும், உயர்வுக்கும் உதவும் என்பதாக தந்தை பெரியாரும் பாடு பட்டார் என்று கூறி அவர் வழியிலேயே திராவிடர் கழகம் தமிழ் நாட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் செயல்படுகிறது என்பதைக் கூறி முடித்தேன்.
இரவு 7 மணிக்கு மேல் பேராளர் களுடன் கலந்துரையாடல் நிகழ்வு தொடங் கியது. வா.மு.சே.திருவள்ளுவர் தொடக்க வுரையாற்றினார். பலரின் கருத் துரைக்குப் பின் உலக திராவிட இன உணர்வாளர் மாநாட்டை ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றில் நடத்துவதென முடி வெடுக்கப்பட்டது. இதற்கென உலக திராவிட இன உணர் வாளர் பேரவை ஒன்று தொடங்குவதென வும் முடிவானது. அதன் தலைவராக பெரு. அ.தமிழ்மணி அவர்களே செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவருக்குத் துணைபுரிய செயலவை ஒன்றினை அமைத்துக் கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டின் இறுதியில் மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், மாநாட்டின் துணைத் தலைவருமான, எஃப்.காந்தராசு நன்றி தெரிவித்தார்.
27.6.2017 முதல் 1.7.2017 வரை மலேசியா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் பேசுவதற்காக அனுப்பப்பட்டோம். 1929இல் தந்தைபெரியாரின் முதல் மலேசியப் பயணத்தின்போது நிகழ்வு களை ஏற்பாடு செய்து பேராக் மாநிலம், ஈப்போவில் நடைபெற்ற அகிலமலாயா தமிழர் மாநாட்டிற்காகத்தான் அழைக்கப் பட்டார். அந்த மாநிலப்பகுதிகளில் பேசு வதற்காக நானும், இராம.அன்பழகனும் அனுப்பப்பட்டோம்.
முதல் நிகழ்ச்சி சித்தியவான் நகரில், சித்தியவான் வட்டார பொது அமைப்பு களான தமிழ் இளைஞர் மன்றம், மக்கள் சக்தி, வீர திராவிடர் கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து "மக்கள் ஓசை" நாளேட் டின் செய்தியாளர் ம.விசுவநாதன் ஏற்பாடு செய்திருந்தார். "சித்தர் குடில்" எனும் பெயர் தாங்கிய மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடாகி யிருந்தது. எம்.எல்.மணிவண் ணன் தலை மையில் ம.விசுவநாதன் வரவேற்புரையாற் றினார். எங்களுக்கான நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான மாநாட்டுத் துணைச் செயலாளர் மு.விந் தைக்குமரன் அறிமுக உரையாற்றினார். இராம.அன்ப ழகன் 50 நிமிடங்களும், நான் ஒரு மணி நேரமும் உரையாற்றினோம். கூட்ட முடிவில் ஒருவர் அய்ய வினா எழுப் பினார். சோழ மன்னர்கள் சமஸ்கிருதத்தைக் கற் பித்தனர் என்றால் அவர்களின் கல் வெட்டுகள் தமிழில் இருப்பது எப்படி என்று கேட்டார். "அந்தக் கல்வெட்டுகளைப் படித்தால் தெரியும் எவ்வளவு தப்பும் தவ றுமாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன என் பதை! எழுதித்தந்தவரும் கல்லில் பொறித் தவரும் அதனைச் சரி பார்த்த வருமே தமிழ்மொழி அறிவற்றவர்கள் என்பது புரியும்" என்பதை எடுத்துக் கூறி விளக்கம் அளித்தேன். கூட்டம் இரவு பத்தேகால் மணிக்கு முடிவுற்றது. அதன் பின்னர் வீராசாமி (அரக்கோணம்) என்ப வரின் விருந்து உபசரிப்பு, சீனர் உணவு கடையில் அளிக்கப்பட்டது.
அடுத்து 29.6.2017 அன்று பேராக் மாநிலம் சுங்கை சிட்புட் நகரில் மலேசியத் திராவிடர் கழகத்தின் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. பேராக் மாநில திராவிடர் கழகத் தலைவர் இரா.கெங்கையா தலைமையில், சுங்கைசிட்புட் நகர தி.க. தலைவர் க.ஏலன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் பணியிலிருக்கும் மாவட்ட காவல் துறை ஆணையர் அ.பரமேசுவரன் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாட்டில் காணக்கிடைக்காத அபூர்வ நிகழ்வு என்று இதனைப் பாராட்டிப் பேசி னேன். எங்கள் இருவரின் உரைக்குப்பின் கூட்டம் இரவு 10 மணிக்கு முடிந்தது. பேராக் மாநில திராவிடர் கழகச் செய லாளர் இரா.கோபி கூட்ட நிகழ்ச்சிகளை ஒருங் கிணைத்துப் பேசி நன்றி கூறி முடித்து வைத்தார்.
"மக்கள் தொண்டு என்பது மக்களை மோட்சத்திற்கு அனுப்புவது அல்ல. மக்கள் கொண்டிருக்கும் தவறான கருத் துகளை, எண்ணங்களைத்திருத்தி அவர் களைச் செம்மையான வாழ்க்கை முறை களுக்கு அழைத்துச் செல்வது ஆகும்" என்கிற தந்தை பெரியாரின் கருத்தை கூட்ட அழைப்பிதழில் அச்சிட்டது மிகவும் பொருத்தமானதாக அமைந்திருந்தது குறிப் பிடத்தக்கது.
- தொடரும்
- தொடரும்
-விடுதலை,28.7.17
நேற்றைய தொடர்ச்சி....
மறுநாள் 30.6.2017 அன்று பேராக் மாநில பெரியார் பாசறை சார்பில், பானீர் கிராமத்தில் "பெரியார் உணர்த்திய வாழ் வியல்" எனும் தலைப்பில் உரையாற்றிட ஏற்பாடாகியிருந்தது. சிறிய கிராமமாக இருந்தாலும் பெரிய மண்டபம். பெரியார் தொண்டரும், பெரியார் பாசறை நிறுவன ருமான வாசு தலைமையேற்றார். முனிய ரசன் வரவேற்றுப் பேசினார். ஈப்போ நகரத் தமிழர் தன்மான இயக்கத்தைச் சேர்ந்த இலட்சுமணன், நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மு.விந்தைக்குமரன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் நானும், இராம.அன்பழகனும் உரையாற்றிட கூட்டம் இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது. பக்கத்திலுள்ள காம்பார் நகரில் இரவு உணவை முடித்துக் கொண்டு ஈப்போ நகருக்குத் திரும்பினோம்.
1.7.2017 அன்று மாலை ஈப்போ நகரம், புந்தோங் பகுதியில் அருளொளி மன்றத் தில் மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் தமிழ் உணர்வாளர் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார் இலட்சுமணன். அன்று மதியம் அவரின் இல்லத்தில் உணவு அளித்து உபசரித்தார். உணவு உண்டு, சற்றே ஓய்வுக்குப்பின் நிகழ்ச்சிக்கு வந்தோம். கூட்டத்தின் தலைவரும், மேனாள் மாநில அமைச்சருமான டத்தோ கோ.ராஜூ அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
கூட்டம் 7.30 மணிக்குத் தொடங்கியது. தலைவர் டத்தோ கோ.ராஜூ 10 நிமிடங் களுக்குமேல் மலேசியத் தமிழர்களின் நிலை பற்றியும், மொழிவளர்ச்சிக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் சிறப்பாகப் பேசினார். இலட்சு மணன் வரவேற்புரை ஆற்றும்போது தமிழர்கள் மூட நம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவு நெறியில் வாழவேண்டும் எனப்பேசினார். பெரியார் பாசறைறைச் சார்ந்த முனியராசன் இணைப்புரை வழங்கினார். ஈப்போ மு.விந்தைக்குமரன் எங்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
இராம.அன்பழகன் தமிழர்களிடையே நிலவியுள்ள பல்வேறு மூடநம்பிக்கை களை நகைச்சுவை மிளிர எடுத்துரைத்தார். ஈப்போ நகரில் வாழ்ந்திருந்த அழ.சிதம் பரம் (செட்டியார்) அவர்களின் மருமக னாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இருப்பதையும், தமிழவேள் கோ.சாரங்கபாணி போன்ற வர்கள் தமிழ்ப்பணி ஆற்றியதையும் நினைவு கூர்ந்து உரையைத் தொடங் கினேன். ஊருக்குள் நுழையும் போதே, அங்குள்ள தமிழ்ப்பள்ளியின் சுற்றுச் சுவரில் தந்தை பெரியார் அவர்களின் அழகிய உருவப்படமும், பொன் மொழி களும் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டிப் பாராட்டிப் பேசினேன். பெருமை மிக்கத் தமிழ்மொழி அயல் கலாச்சாரப் படையெடுப்பால் எவ்வாறு சிதைக்கப் பட்டது என்பதனை எடுத்துச் சொல்லி, தந்தை பெரியார் ஊட்டிய சுயமரியா தையும், திராவிட இனமான உணர்வும் எந்தெந்த வகைகளில் தமிழ்ச்சமு தாயத்தை மேம்பாடடையச் செய்தது என்பதையும் தக்க ஆதாரங்களுடன் கூறிப் பேசினேன். இறுதியாக முனிய ராசன் நன்றியுரைக்குப்பின் கூட்டம் முடி வுற்றது. கூட்டத்திற்கு வருகை தந்திருந்த உள்ளூர் பெரியவர்களுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டபின் இரவு உணவுக்கு விடைபெற்றோம்.
மலேசியாவின் பல மாநிலங்களில், பல ஊர்களில் 22 பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். கோலாலம்பூர் நகரில் இருநாள் மாநாடு முடிந்ததும் தமிழகப் பேச்சாளர்கள் இருவர் இருவ ராகப் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று திரும்பினோம். மொத்தம் 20 கூட்டங்கள் நடைபெற்றன. கிள்ளான் எனும் ஊரில் நடைபெற்ற கூட்டத்தின் இடையே சில இளைஞர்கள் இடையூறு செய்ததாலும், இதன் காரணமாக மற்றொரு ஊரில் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட தாலும் இரு கூட்டங்கள் நடைபெறாத நிலை.
மறுநாள் காலையில் ஈப்போ நகரி லிருந்து புறப்பட்டு கோலாலம்பூர் வந்த டைந்தோம். அழகான அரங்கம் ஒன்றில் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற் றது. மாநாட்டுத் தலைவர் பெரு. அ.தமிழ் மணி அவர்கள் தம் நிறைவுரையை நிகழ்த்தித் தொடங்கி வைத்தார். மாநாட் டுப் பொறுப்பாளர்கள் சிலர் தத்தமது நன்றியுரையை நிகழ்த்தினர். அதன்பின் தமிழ் நாட்டிலிருந்து மாநாட்டிற்கு வருகை தந்திருந்தோர் உரையாற்ற அழைக்கப் பட்டனர். இறுதியில் அழைக்கப்பட்ட நான் விரிவாகவே பேசும் நிலை ஏற்பட் டது. சிலர் குழப்பம் விளைவித்ததால் கிள்ளான் பகுதியில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்படாத நிலையை மனதில் கொண்டு, தமிழ்த்தேசம், தமிழ்த்தேசியம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு மத, ஜாதி உணர்வுகளுக்கு உயிர் கொடுக் கும் செயலில் ஈடுபடுவதைக் குறித்து விளக்கம் தந்தேன். தமிழ் விரிவுரை யாளராகப் பணிபுரிந்த மறைமலை அடிகள் - இந்தியப் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின் காரணத்தால் - தமிழ் மொழி வட்டாரப்பேச்சு மொழி என்று தகுதியிறக்கம் செய்யப்பட்டு அதற்கெனத் தனியே துறை தேவையற்றது என்றாக்கப் பட்ட, பழைய வரலாற்று செய்திகளை எடுத்துச் சொல்லி, திராவிட நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி இழந்த பெருமையை மீண்டும் தமிழ் பெற்றது என்ற வரலாறையும் நினைவுப் படுத்தினேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1948ஆம் ஆண்டில் தான் தமிழ்த்துறை ஏற்படுத்தப்பட்டது என் பதைக் குறிப்பிட்டு அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஏற்பாடு செய்தவர் லாசரஸ் எனும் கிறித்துவப் பாதிரியாரே தவிர தமிழ் வளர்க்க என்று ஏற்படுத் தப்பட்ட திருப்பனந்தாள், திருவாவடு துறை, தருமபுரி, திருவண்ணாமலை, மதுரை சைவ சமய மடங்களல்ல எனும் உண்மையை எடுத்துக்கூறினேன். எல்லீஸ், கால்டுவெல், ஹீராஸ் போன்ற அய்ரோப்பிய அறிஞர்களின் தொண்டி னால் தமிழும், திராவிட உணர்வும் தோன்றி தந்தை பெரியாரால் வளர்க்கப் பட்டு திராவிடர் இயக்கங்களால் கட்டிக் காக்கப்பட்டு வரும் நிலையையும் விளக் கினேன். போலித் தமிழ்த் தேசியங்களால் பேசப்படும் பொய்மைகளைத் தமிழ் பேசும் திராவிடர்கள் சரியாகவே விளங் கிக் கொண்டனர்.
மறுநாள் சுமார் நூறுபேர் அமரக்கூடிய மண்டபத்தில் பகுத்தறிவு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 25 பேருக்கு மேல் பயிற்சியாளராகப் பதிவு செய்திருந்தனர். காலை 11.30 மணிக்கு பட்டறை தொடங் கியது. இப்பட்டறையின் அவசியம் குறித்து பெரு. அ.தமிழ்மணி சுருக்கமாக உரை நிகழ்த்தினார். உலக உற்பத்தி, உயிர்களின் தோற்றம் பற்றி வகுப்புகள் நடத்தினேன். கடவுள் என்ற கற்பனைக்கு வேலையேயில்லை என்பதை அறிவியல் அறிவும், ஆய்வு முடிவுகளும் நிரூபித்து வருவதை எடுத்துரைத்தேன். சோதிடம் பற்றிய பொய்யுரைகளை எடுத்துக் காட்டு களுடன் மறுத்தேன்.
இராமாயணம், மகாபாரதம் எனும் இந்து இதிகாசங்களின் பொய்ம்மைத் தன்மையை விளக்கிக் கூறினேன். உயிர் களின் தோற்றம், வளர்ச்சி, மாறுதல்கள் பற்றிய சார்லஸ் டார்வினின் ஆய்வு முடிவுகளின் மெய்த்தன்மையை விரிவாகக் கூறினேன். டைவர்ஜன்ஸ் (விலகல்) கோட்பாடு என்பதன் அடிப் படையில் குரங்கு விலகியதால் ஏப், கொரில்லா, சிம்பன்சி, உராங் ஊடான், கிப்பன் எனும் மனிதக் குரங்குகள் படிப் படியாக உருவாகி, உருமாறி, மனிதனாக வளர்ந்த விதம் பற்றி விளக்கினேன். நியான்டர்தால் மனிதனும், ஹோமியோ, சேப்பியன் மனிதனும் 30-40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தே வாழ்ந்து வந்ததையும், நியான்டர்தால் மனிதனின் அழிவுக்குப் பின் தற்போதைய மனிதன் உருமலர்ச்சி பெற்று வளர்ந்த விதம் குறித்தும் விளக்கினேன். ஆப்ரிக்க நாடுகளில் தோன்றியது முதல் மனிதன் அல்ல; முதல் தாய், அந்த ஒரு தாயின் மக்கள் தான் உலகில் உள்ளோர். முதல் தாயின் பயணம், மனிதர்களின் பயணம், அவரவர் வாழ்ந்த பகுதிகளின் தட்ப வெப்ப நிலைகட்கு ஏற்ப தோலின் நிறம் ஏற்பட்டவை குறித்தெல்லாம் விளக்க மளித்தேன்.
மதிய உணவுக்கு அரைமணி நேரம் இடைவெளி தவிர, மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெற்றன. பங்கு பெற் றோரில் இருவர் ஆர்வமுடன் அய்யங் களைக் கேட்டு விளக்கம் பெற்றுத் தெளிவு பெற்றனர்.
4.7.2017 அன்று கோலாலம்பூரில் விமானம் ஏறி அன்றிரவு 11 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தோம். பயனுள்ள பயணம் - கொள்கை விளக்கப் பயணம் - 1929, 1954 ஆகிய ஆண்டுகளில் தந்தை பெரியாரின் பிரச்சாரப் பயணங்களுக் கடுத்து, கழகத்தலைவர் ஆசிரியர் அவர் களின் சுற்றுப்பயணப் பிரச்சாரத்துக்குப் பிறகு, வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது நல் வாய்ப்பே! மகிழ்ச்சியும், நிறைவும் தந்த வாய்ப்பாக அது அமைந்தது!
-விடுதலை,29.7.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக