வெள்ளி, 22 மே, 2020

ஆந்திர நாத்திகர் டாக்டர் விஜயத்திற்கு நமது வீர வணக்கம்!


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவரும் நாத்திக மய்யத்தின்  நிர்வாக இயக்குநரும், தலைசிறந்த நாத்திகவாதியும், மனிதநேயருமான டாக்டர் விஜயம் அவர்கள் இன்று (22.5.2020) காலை 5 மணி அளவில் Atheist Centre-இல் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறி விக்க மிகவும் வருந்துகிறோம். அவருக்கு வயது 84.

சிறிது காலமாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் இருந்த அவர் மறதி நோய் காரணமாக (Alzheimer's) இயற்கை எய்தினார்.

அவரது வாழ்நாள் பணியாக இந்த நாத்திக மய்யத்தின் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் பரப்பி வந்தவர். பிரபல நாத்திகர் ‘கோரா’ (இராமச்சந்திரராவ்) - சரஸ்வதி கோராவின் இரண்டாவது மகனாவார்.

நமக்கு என்றும் உடன் பிறவா சகோதரராகவே கொள்கைக் குடும்ப உறவாக இறுதி வரை திகழ்ந்தவர். கடந்த ஜனவரி (2020)யில் நாம் விஜயவாடா நாத்திக மய்யத்தின் ஆண்டு விழா மாநாட்டில் கலந்து கொண்ட போது, தோழர்களுடன் சென்று சந்தித்தோம்.

நாம் அழைத்த போதெல்லாம் உறவு உரிமையுடன் தவறாது நம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாத்திக நன்னெறி நானிலமெங்கும் பரப்பும் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்த தொண்டறச் செம்மல்.

அவருடைய உடல் எவ்வித சடங்குகளுமின்றி, விஜயவாடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.
விஜயம் அவர்களுடைய இளையர் டாக்டர் சமரம் அவர்களுடன், திராவிடர் கழகத் தலைவர் தொலைப்பேசியில் தொடர்ப்பு கொண்டு இரங்கல் தெரிவித்து, ஆறுதலைக் கூறினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களும் தொலைப்பேசியின்மூலம் அவரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

அவரது மறைவு நாத்திக உலகத்திற்கும், நண்பர்களுக்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், விகாஸ்கோரா மற்றும் மகள்கள், அவரது சகோதர, சகோதரிகள் டாக்டர் சமரம் போன்ற அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல் - நமது வீர வணக்கம்!

- கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்.

22.5.2020 
சென்னை.

வியாழன், 21 மே, 2020

எந்த மதக் கடவுளும் இல்லை

கடவுள் இல்லை என்கிற போதே அது எந்த மதக் கடவுளும் இல்லை 
என்று தான் பொருள். (இயேசு, அல்லா உள்பட) நாங்கள் எந்தக் கடவுளுக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை. 

உங்களைப் போன்றோருக்குத்  தோன்றவில்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? 

இஸ்லாம் மதத்தை விமர்சித்து குரானை மறுத்து பெரியார் தொண்டர் புவனன் எழுதிய “குரானோ குரான்” 

இஸ்லாம் மதத்தை விமர்சித்துப் பெரியார் தொண்டர் எஸ். டி. விவேகி எழுதிய ”வேதமும் விஞ்ஞானமும்”  

இஸ்லாம் மதத்தை விமர்சித்து “பிரபஞ்சமே கடவுள்” 

இஸ்லாம் மதத்தை விமர்சித்து தோழர் சாகித் எழுதிய “அடிமை - அல்லாவின் ஆணை” 

இஸ்லாம் மதத்தை விமர்சித்து தஜ்ஜால் எழுதிய “ஆத்மாவும் அதுபடும் பாடும்” 

இஸ்லாம் மதத்தை விமர்சித்து டாக்டர் அலி எழுதிய எழுதிய “ஆரம்பத்தை நோக்கி”  

இஸ்லாம் மதத்தை விமர்சித்து சினா எழுதிய ”முகமதுவையும் முஸ்லிம்களையும் அறிவோம்”  
(தமிழில் - சிராஜ் அல் ஹக்) 

இதுபோன்று இஸ்லாத்தை மதத்தை விமர்சித்து தமிழில் ஏராளமான நூல்கள் உள்ளன.

அதேபோன்று இபின் வராக்  எழுதிய “Why I Am Not A Muslim” போன்று ஆங்கிலத்திலும் நிறைய நூல்கள் உள்ளன. 

கிறிஸ்தவ மதத்தை விமர்சித்து ஜார்ஜ் எழுதிய “கிறித்தவர்கள் சிந்தனைக்கு”

”பாதிரியும் பாவமன்னிப்பும்”, 

ஜீன் மெஸ்லியர் எழுதிய 
மரண சாசனம் பாகம் 1, 2, 3 

பெட்ரண்ட் ரசல் எழுதிய நான் ஏன் கிறித்தவனல்ல? 

ஆகிய நூல்களைத் தமிழில் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. 

தோழர் புவனன் எழுதிய ”பைபிளோ பைபிள்” 

தோழர் அருணன் எழுதிய “கடவுளின் கதை - ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லா வரை - 5 தொகுதிகள்,  

ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய “ கடவுள் ஒரு பொய் நம்பிக்கை” (மொழி பெயர்ப்பு கு.வெ.கி. ஆசான்)

தருமி எழுதிய ”மதங்களும் சில 
விவாதங்களும்”. (இது கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை விமர்சிப்பவை) 

"Rationalist Voice", "The Atheist" இதழ்களிலும் வெளிவந்த ஏராளமான கட்டுரைகள்.

உடனடியாக நினைவுக்கு வந்தவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். தேடினால் ஏராளம் கிடைக்கும். 

இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கும் ஏராளமான கட்டுரைகள் பெரியாரிய, மார்க்சிய, முற்போக்கு இதழ்களில் வந்துள்ளன.  

தவிர

www.paraiyosai.wordpress.com

www.pagaduu.wordpress.com

www.senkodi.wordpress.com 

போன்ற இணையங்களிலும், 
You Tube  காணொளிகள் மூலமும் உள்ளன. 

மேலும்

Why i am not a Hindu
Prof.Ramendra

Why i am not a Christian?
Bedraund Russel

Why i am not a Muslim?
Ibin Warrak

இந்நூல்களை எழுதிய 3 ஆசிரியர்களும் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களே!

இஸ்லாம் மதத்தை விமர்சித்து தமிழில் வெளிவந்த “அல்லா - அது அடிமையின் ஆணை”, ”வேதமும் விஞ்ஞானமும்”, ”பிரபஞ்சமே கடவுள்”,  "ஆரம்பத்தை நோக்கி” ஆகிய நூலாசிரியரும் இஸ்லாமியர்களே!

அமெரிக்காவைச் சேர்ந்த நாத்திகர் இராபர்ட் கிரீன் இங்கர்சாலும், இங்கிலாந்தைச்  சேர்ந்த நாத்திகர் பெட்ரண்ட் ரசலும் கிறிஸ்தவ மதத்தைக் கடுமையாக விமர்சித்துப் 
பேசிய போது நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.

அல்பேனியாவைச் சார்ந்த நாத்திகர் அன்வர் ஓட்சா இஸ்லாமிய மதத்தை விமர்சித்துப் பேசிய போது நீங்கள் ஏன் இஸ்லாமிய மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.

எந்த மதம் பெரும்பான்மையாக இருக்கிறதோ, எந்த மதத்தில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களோ அதுதான் அதிகம் பேசப்படும்.

மேலும் எதை அதிகம் விமர்சிப்பது என்பதை அந்தந்த நாட்டின் சூழல் தான் தீர்மானிக்கும். 

- அரசெழிலன்
- வி.சி வில்வம் முகநூல் பதிவு

சனி, 29 பிப்ரவரி, 2020

ஒடிசா மாநில அமைச்சரிடம் தந்தை பெரியார் நூல்கள் அளிப்பு

புவனேசுவர், பிப்.18 ஒடிசா மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு.ரானேந்திர பிரதாப் ஸ்வைன் அவர்களையும், ஒடிசா மாநில முதல்வர் திரு. நவீன் பட்நாயக் அவர்களின் சிறப்பு ஆலோசகர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ். அவர் களையும், 17.2.2020 அன்று காலை ஒடிசா மாநில தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஒடிசா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததற்கும், ஜாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்திட வேண்டும் என மாநிலத்தின் சார்பாக மத்திய அரசுக்கு தெரிவித்ததற்கும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் முயற்சியால் உருவான 69% இட ஒதுக்கீடு சட்டம் போன்று ஒடிசா மாநிலத்திலும் உருவாக்கிடவும் வேண்டு கோள் விடுத்தார்.

"தந்தை பெரியார் பொன்மொழிகள்", "சுயமரியாதை இயக்கம்" மற்றும் "69% இட ஒதுக்கீடு ஏன்" என்ற நூல்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, ஒடிசா மாநில ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நல சங்கத்தின் மேனாள் செயலாளர் பிரபுல்ல குமார் குண்டியா, ஒடிசா மாநில யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத் தின் பொதுச் செயலாளர் மதுசூதன் சமல் ஆகியோரும் உடனிருந்தனர்.

- விடுதலை நாளேடு 18 2 20

வெள்ளி, 10 ஜனவரி, 2020

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்! மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம்!

விஜயவாடா - உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

விஜயவாடா ஜன.6 மானுடத்தை ஒருங்கிணைக்கும் மனிதநேயம் போற்றுவோம்; மக்களை ஆதிக்கம் செலுத்தும் மதவாதத்தை வீழ்த்துவோம் என்றார் விஜய வாடா உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் 80 ஆம் ஆண்டு விழாவினையும் உலக நாத் திகர் மாநாட்டையும் சிறப்பாக நடத்தியுள்ளது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்கள் நிறுவிய நாத்திகர் மய்யம் (1940-2020) கடந்த காலங்களில் பல்வேறு கட்டங்களில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தியுள்ளது. தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகங்களின் ஏற்பாட்டில் திருச்சி மாநகரில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகளை (ஜனவரி  7, 8 மற்றும் 9- 2011 மற்றும் ஜனவரி    5, 6 மற்றும் 7 - 2019) நாத்திகர் மய்யமும் இணைந்து நடத்தியுள்ளது. விஜய வாடாவில்  ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் சிறப்புப் பங்கேற்பாளர்களாக  பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) முதன்மை செயலதிகாரி கேரி மெக்லேலண்ட் (2018 இல் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்றவர்) மற்றும் ஜெர்மனி சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவர் முனைவர்  வோல்கர் முல்லர் (தஞ்சையில் நடைபெற்ற தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்) விஜயவாடா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இரண்டு நாள் மாநாட்டின் நிறை வுரையினை திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறி வாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆற்றி, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து மாநில பகுத்தறிவாளர் அமைப்பின் தோழர்களை, நாத்திகப் பெருமக்களை  எழுச்சி கொள்ளச் செய்தார்.

ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய  ‘Understanding Rationalism'  புத்தகத்தை மாநாட்டில் தமிழர் தலைவர் வெளியிட்டார்.

மாநாட்டில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு நாத்திகர் மய்யத்தின் டாக்டர் சமரம் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினார். உடன் விகாஸ் கோரா உள்ளார்.

தமிழர் தலைவருடன் 80 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விஜயவாடா உலக நாத்திகர் மய்யத்தின் பொறுப்பாளர்களான கோரா குடும்பத்தினர்

இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் நாத்திகப் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். அமெரிக்க - மேரிலாந்து மாநிலத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா, பகுத் தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் அ.த.சண்முக சுந்தரம், நாத்திகம் பற்றிய தங்களது கட்டுரைகள் குறித்து உரையாற்றினர்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

80 ஆம் ஆண்டு விழா காணும் விஜயவாடா - நாத்தி கர் மய்யம் நடத்திட்ட 11 ஆம் உலக நாத்திகர் மாநாட்டு மலரினை தமிழர் தலைவர் வெளியிட, அதனை இங்கிலாந்திலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட், ஜெர்மனி நாட்டிலிருந்து வருகை தந்த முனைவர் வோல்கர் முல்லர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உலக நாத்திகர் மாநாட்டை சிறப்பாக நடத்திய முனைவர் விஜயம், டாக்டர் சமரம் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து  தமிழர் தலைவர் பாராட்டி, சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவர் வெளியிட்ட

நாத்திகப் புத்தகம்

உலக நாத்திகர் மாநாட்டில் ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு எழுதிய ‘Understanding Rationalism' புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட்டார். புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு இணையருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

தமிழர் தலைவரின்

மாநாட்டு நிறைவு எழுச்சியுரை

ஜனவரி 5 ஆம் நாள் பிற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவுரையினை ஆற்றினார். தமிழர் தலைவரின் நிறைவுரை மாநாட்டிற்கு வருகை தந்தோருக்கு எழுச்சியுரையாக அமைந்தது.

தமது உரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:

மதவெறிக்கு ஊக்கம் காட்டும் செயல்கள் அதி கரித்துவரும் நடப்புக் காலகட்டத்தில், விஜயவாடா நாத்திகர் மய்யம் உலக நாத்திகர் மாநாட்டை சரியானபடி நடத்துகிறது. மதவெறிப் பிரச்சாரத்தை மாய்த்து, மனித நேயக் கருத்துகள், மக்களது மனதில் தழைத்தோங்கிட வழி செய்திடும் வகையில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற்று வருகிறது. நாத்திகப் பிரச்சாரத்தைப் பொறுத்த அளவில், நாத்திக அறிஞர் கோரா நிறுவிய விஜயவாடா நாத்திகர் மய்யம் ஓர் எடுத்துக்காட்டு நாத்திக அமைப்பாக - நிறுவனமாக மக்கள் சேவை ஆற்றி வருகிறது. நாத்திக அறிஞர் கோரா, நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் காந்தியார் அவர்களின் சீடர் ஆவார். ஆனால், காந்தியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர். கடவுள் நம்பிக்கை மிகுந்த காந்தியாருக்கு நாத்திகக் கருத்துடைய கோரா சீடராக இருந்தது ஒரு வேறுபட்ட சிறப்பு. மக்கள் சமத்துவத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட புரட்சியாளர் தந்தை பெரியாரும் கடவுள் மறுப்பினை உரிய அணுகுமுறையாகவே கடைப்பிடித்தார்.

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு மலரினை தமிழர் தலைவர் வெளியிட்டார்

தந்தை பெரியாரும், ஒரு காலத்தில் காந்தியாரின் சீடராகவே இருந்தார். மனிதரிடம் நிலவிவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு  அடிப்படையான மனித விரோத வருணாஸ்ரம கொள்கைகளை எதிர்த்தவர் தந்தை பெரியார். வருணாஸ்ரம  தர்மத்திற்கு ஆதரவு அளித் தவர் காந்தியார். காந்தியாரை விட்டு அமைப்பு ரீதியாக முழுமையாக பிரிவதற்கு முன்பு 1927 இல் பெங்களூரில் காந்தியாரைச் சந்திக்கிறார் தந்தை பெரியார். அவர்கள் பேச்சில் வருணாஸ்ரம தருமம்பற்றிய பேச்சு விவாதப் பொருளாக அமைந்தது. வருணாஸ்ரம தர்மத்தை உடனே கைவிட வேண்டிய அவசியமில்லை. நாளா வட்டத்தில் அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம் என காந்தியார் கூறிய கருத்தினை பெரியார் ஏற்றுக் கொள்ள வில்லை. வருணாஸ்ரமம் தூக்கி எறியப்பட வேண்டியது. அதில் படிப்படியாக மாற்றம் என்பது கால விரயம் மட்டுமல்ல, வீணானதும்கூட. அப்படி வருணாஸ்ரமத்தில் மாற்றத்தைக் கொண்டுவர, மதத்தில் மாற்றங்களை உருவாக்க காந்தியார் நினைத்தால், காந்தியாரையே மதவாதிகள் விட்டு வைக்கமாட்டார்கள் என தந்தை பெரியார், காந்தியாரிடமே நேரடியாக தெரிவித்துவிட்டு விடைபெற்று, விலகி தமது கொள்கைகளை நடை முறைப்படுத்த தனியாக இயக்கம் கண்டு வெற்றியினைப் பெற்றார். பெரியார் எச்சரித்தபடி 1948 ஆம் ஆண்டில் மதவெறிக்குப் பலியானார் காந்தியார். கோராவின் நாத்திகக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத காந்தியார், இறுதியில் பெரியார், கோரா கூறிய மனிதநேயம், மனித சமத்துவம் பற்றிக் கூறும் நிலைக்கு வந்தபொழுதுதான்,  அதுவரை காந்தியாரை ஆதரித்துப் போற்றிய மதவாதிகள் - மத வெறியர்கள் காந்தியாரையே சுட்டுக்கொன்றனர். பொது வாக கொள்கை வழிநடக்கும் தலைவரைப் பின்பற்றி சீடர் நடப்பது வாடிக்கை. ஆனால், சீடர்களான பெரியார், கோரா வலியுறுத்திய கருத்துகளின் வழிதான் அவர்களது தலைவராக விளங்கிய காந்தியார் இறுதியில் வர வேண்டிய நிலை வந்தது. சீடர்கள் வழி தலைவர் நடந்து கொண்டார். தொடக்கத்திலேயே  இவர்களது வழி வந்தி ருந்தால், காந்தியார் மேலும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி ஆற்றியிருக்க முடியும். கடவுள் மறுப்பு, நாத்திகக் கொள்கை ஏற்படுத்திய நிலைதான் சீடர் வழி தலைவர் எனும் வரலாற்றுக் குறிப்பு. அத்தகைய மாபெரும் மனிதநேய தத்துவத்துவமான நாத்திக நன்னெறி குறித்து தொடர்ந்து உலக நாத்திகர் மாநாட்டை விஜயவாடா நாத்திகர் மய்யம் நடத்தி வருகிறது.

நாத்திகம் ஒன்றும் புதிய தல்ல!

நாத்திகம் என்பது புதியதல்ல; இயல்பானதுதான். இந்த உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே நாத்திகர்கள்தான்; பிறந்த பொழுது எந்த மத அடையாள மும் தானாக வந்ததில்லை. குழந்தையின் பெற்றோர்தான் தங்களது மத அடையாளத்தை குழந் தையின்மீது திணித்து விடுகின்றனர். இயல்பாகவே குழந்தைகள் வளர்க்கப்பட்டால், மத அடையாளங்களால் உருவாகும் மதவெறிக்கு இடமே இல்லை. இயல்பானதற்கு மாறாகத் தான் மனிதரிடம் மதக் கருத்துகள் இடம் பெறுகின்றன. சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படிப்பட்ட மதவெறியினை எதிர்த்து - அதற்கு அடிப்படையான மத அடையாளமே தேவையில்லை என தங்களது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியாரும், நாத்திக அறிஞர் கோராவும் ஆவார்கள்.

மக்களை ஆதிக்கம் செலுத்தும்

மதவாதம்!

மனிதருடைய ஆற்றல், நேரம், உழைப்பு ஆகிய வற்றை பெரும்பாலும் மதத் தொடர்பான விசயங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மனிதருடைய முழு மையான பங்களிப்பு சமுதாயத்திற்குக் கிடைக்கவிடாமல், மதம் சார்ந்த விசயங்கள் தடையாக இருக்கின்றன. அப் படிப்பட்ட தடை என்பது இருப்பதை உணராமலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் நல்ல நேரம் - கெட்டநேரம் (ராகுகாலம், எமகண்டம்) வகைப்படுத்தி, எந்த ஒரு முனைப்பான செயலையும் கெட்ட நேரத்தில் செய்யக்கூடாது எனும் மனப்பான்மையினை உருவாக்கிவிட்டது மதம். மதம் சார்ந்த பண்டிகைகள் மனிதரது உழைப்புக்கு விடுமுறை என்பதாக மட்டுமல்லாமல், பண விரயம், கடன் வாங்கி பண்டிகைக்கு செலவிட வைத்துவிடும் நிலை என்ப தெல்லாம் மதம் சார்ந்த நடவடிக்கைகாளல் ஏற் பட்டவையே!

இப்படி மனித உழைப்பை மட்டுப்படுத்தும் நிலைமையினை நீக்கிட கடவுள் மறுப்பு, மத மறுப்பு, நாத்திகக் கருத்துகள் மக்கள் மனதில் உறுதிப்பட வேண் டும். மதம் சார்ந்த சிந்தனைகளை, நடவடிக் கைகளை குறைத்துக் கொண்டதால், உலக நாடுகளில் உள்ள பலர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர். தனி நபர் வாழ்வு நிலையும் உயர்ந்து, சமுதாயம் மேம்பாடு அடைந்திட்ட நிலைமைகள் கண்கூடாகத் தெரிகிறது.

உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள்

மதம் சார்ந்த சிந்தனைகளைப் புறந்தள்ளப்பட வேண்டும். மனிதநேயம் சார்ந்த சிந்தனைகள் வளர்த் தெடுக்கவேண்டும். அத்தகைய சமுதாயப் போக்கிற்கு உலக நாத்திகர் மாநாட்டு நடவடிக்கைகள் ஆக்கம் கூட்டும். அந்த மகத்தான பணியில் நாம் அனைவரும் - இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும்  இணைந்து பணியாற்றுவோம். மனித குலம் மேம் பாடடைய பாடுபடுவோம். இறுதி வெற்றி நமக்கே; நாத்திக இயக்கத்திற்கே!

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப் பிட்டார்.

தமிழர் தலைவரின் எழுச்சியுரையினால் உணர்வு வயப்பட்ட அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கால் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தானாக எழுந்த கரவொலி எழுச்சி கலந்த மகிழ்ச்சி வெள்ளமாக அரங்கம் முழுவதும் அதிர்வுகளை எழுப்பியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தமிழர் தலைவருக்கும் - வெளிநாட்டுப் பேராளர்களுக்கும் சிறப்பு

உலக நாத்திகர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தமிழர் தலைவருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கேரி மெக்லேலண்ட் மற்றும் வோல்கர் முல்லர் ஆகியோருக் கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினர்.

நாத்திகர் மய்யத்தின் 80 ஆண்டுகால செயல்பாட் டிற்கு ஆர்வம் கூட்டியவர்கள், குடும்பத்தினர் மற்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பகுத்தறி வாளர் அமைப்புப் பேராளர்களுக்கும் நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து....

அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப் பின்  (FIRA - Federation of Indian Rationalist Association) சங்க அமைப்பினர், தமிழ்நாட்டிலிருந்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் - மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர்கள் அ.த.சண் முகசுந்தரம், ரஞ்சித்குமார், பொறுப்பாளர்கள் - நடராசன், மாணிக்கம் புதுவை குப்புசாமி இணையர் ஆகியோர் மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய தமிழர் தலை வருடன் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பெரியார், பெரியார் சமூகக் காப்பு அணியின் பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் சென்றி ருந்தனர்.

- விடுதலை நாளேடு, 6.1.20

மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர் வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

பினாங்கு, ஜன. 5- மலேசியா திராவிடர் கழகத்தின் சார்பில் மலேசியா - பினாங்கு மாநிலம், பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் குடும்ப விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

25.12.2019 அன்று பட்டர்வொர்த் நகர் - ஜாலான் பாகான் லூவாரில் உள்ள சிறீ ஆனந்த பவன் உணவக அரங்கில் மாலை 7 மணி அளவில் விழா தொடங்கி நடைபெற்றது. 1929ஆம் ஆண்டில் முதன்முதலாக தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணமாக வந்த நாடு அன்றைய மலாக்கா நாடு. அன்னை நாகம் மையார் மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்க ளுடன் கப்பலில் பயணம் செய்து வந்து இறங்கிய இடம் பினாங்கு தீவு. அதையொட்டி அமைந்துள்ள பட்டர்வொர்த் நகரில் தந்தை பெரியார் சுயமரியாதை கொள்கைப் பிரச்சாரம் செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர், தந்தை பெரியாரின் 40ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பட்டர்வொர்த் நகரத்தில் 2013ஆம் ஆண்டில் பங்கேற்று சிறப்புரையாற்றியுள் ளார்.

நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், பினாங்கு மாநிலத் தலைவருமான ச.த.அண்ணாமலை தலைமை வகித் தார். வந்திருந்தோரை வரவேற்று பினாங்கு மாநிலச் செயலாளர் சோ.மருதமுத்து உரையாற்றினார். தேசிய பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் அறிமுக உரையாற்றினார். கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்றிருந்த திராவிடர் கழகத்தின் பொரு ளாளர் வீ.குமரேசன் சிறப்புரையாற்றினார்.

பினாங்கு மாநில அரசால் விருது வழங்கப்பட்டோருக்குப் பாராட்டு

தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பொதுவாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றிய மலேசியா திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மலேசியா திராவிடர் கழக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் செ.குணசேகரன் (PKT, PJK) அவர்களுக்கு DJN (Darjah Johan Negari) விருதி னையும், மலேசியத் திராவிடர் கழகத்தின் பெர்கான் மாத்தாய் பாவ் கிளைத் தலைவர் த.இரவி ஆகி அவர்களுக்கு PJM (Pingat Jasa Masyarakat) விருதினை யும் பினாங்கு மாநில அரசு வழங்கியிருக்கிறது, விருது வழங்கப்பட்ட கவிஞர் செ.குணாளன் அவர்களுக்கு தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ குமரேசன் அவர்களும் மற்றும் த.இரவி அவர்களுக்கு மலேசியா திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர்களும் சால்வை, சந்தன மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். விருது பெற்றோர் பற்றிய குறிப்புகளை சோ.மருத முத்து அவர்கள் எடுத்துரைத்தார்.

திராவிடர் கழகப் பொருளாளரின் உரை

நினைவு நாள் நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொரு ளாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:- மனிதர்களில் உயர்வு, தாழ்வு என்பது இல்லை என வலியுறுத்தி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்க ளின் உயர்விற்கு பாடுபட்ட மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார். மனித சமத்துவத்திற்கு எதிராக எவை எல்லாம் தடைகளாக இருக்கின்றன என்பதை தயவு தாட்சண்யமின்றி உடைத்து எறிந்தவர் தந்தை பெரியார். ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களது சமூக நிலைக்கு - சமூக இழிவுக்கு எவை காரணம் என்பதை தனது பிரச்சாரத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எந்த சாஸ்திர புராணங்கள் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்ததோ, உடல் உழைப்பில் தான் சாகும்வரை அந்த மக்கள் வாழ வேண்டும் என வலியுறுத்தியதோ அவைகளையெல்லாம் தூக்கி குப்பையில் போடச் சொன்னார். பிரச்சாரத்தின் வலிமை, கடுமை, அதிகமாக இருந்தாலும், தனது வழிமுறையில் வன்முறை என்பது கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் பெரியார் பரப்பிய கருத் துக்கள் அவர் மறைந்தும் இன்றும் நீடித்து நிலைத்து இருக்கிறது. வற்புறுத்தலால் சொல்லப்படும் கருத்துக் கள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலைபெற முடியாது. மக்கள் மனங்களில் மனிதரிடம் இயல்பாக இருக்க வேண்டிய சுயமரியாதை, பகுத்தறிவு பண்பு களை தட்டியெழுப்பி முழுமையாக கடைப்பிடிக்கச் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை உயர்த்திய புரட்சியாளர் தந்தை பெரியார். இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள எவரும் தந்தை பெரியாரை நேரில் பார்த்திருக்க முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருந்தாலும் பெரியாரின் பேச்சினை நேரில் கேட்டிருக்க முடியாது. பெரியாரது கருத்தின் வலிமை என்பது இன்று அவரை பார்த்திராத மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தெரியவரும். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் மலேசிய நாட்டுக்கு வாழ்வாதாரம் தேடிவந்த தமிழர்களிடம் ஒரு குறிப் பிட்ட மாற்றத்தை, அவர்களது வாழ்நிலை உயர்விற் கான மாற்றத்தை தந்தை பெரியாரின் கொள்கைகள் உருவாக்கியுள்ளன.

மலேசிய நாட்டுக்கு இரண்டு முறைதான் தந்தை பெரியார் வருகை தந்துள்ளார். இங்கிருந்த மக்களை சந்தித்து உரையாடினார். அவரது மனிதநேயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மக்கள் அமைப்பு ரீதியாக தங்களை ஒருங்கிணைத்து செயல்படத் தொடங்கினார்கள். அப்படி உருவான அமைப்புதான் மலேசியத் திராவிடர் கழகம். அதன் சார்பாக தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. வெறும் நினைவு நாளை துக்கம் கருதி நடத்தப்படும் நிகழ்வல்ல இது. அடக்கப்பட்ட மக்கள் எழுச்சி கொண்டு முன்னேறியதைக் கொண்டாடும் நிகழ்வு பெரியாரின் நினைவு நாள். சமூக இழிவுக்கு ஆளான தமிழன் எழுச்சி பெற்று, சமூக, பொருளாதார அரசியல் என பலதுறைகளிலும் சாதனை புரிந்து மலேசிய நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கம் காட்டியதை கொண்டாடும் நாள் இது. பெரியாரது கொள்கை வழி நடப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க மாட்டார்கள். தொடர்ந்து வெற்றியடைவார்கள். பல்வேறு சோதனைகளை தாண்டி சாதனை புரிவார்கள். அப்படி சாதனை புரிந்த மலேசிய திராவிடர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் இருவர் மலேசியா - பினாங்கு மாநில அரசால் பாராட்டுக்கு உரியவர்களாக அடையாளம் காணப் பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளனர். பொது வாழ்க் கையில் பொது சேவையில் குறிப்பிடத்தக்க பணியாற் றியதற்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கையாளர்கள் இறுதியில் பாராட் டப்படுபவர்களாக, சமுதாயத்திற்கு பயன்தரக் கூடிய வர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளான சுயமரி யாதை உணர்வுடன் மனிதன் வாழ வேண்டும்; வாழ் வில் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினை கடைப் பிடித்திட வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்காக மட்டுமே சொல்லப்பட்டதல்ல; குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியது அல்ல; உண்மையில் தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுமையும் உள்ள மக்களுக்கு பொருந்தக் கூடியவை; பயன்தரக்கூடியவை. பெரியாரது கொள் கைகள் ஓர் உலகத் தத்துவம் சார்ந்தவை. உலக மக் களை மனிதர்களாக வாழ செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அந்த வகையில் தந்தை பெரியார் ஒரு உலகத் தலைவர். தந்தை பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வரும் வேளையில் இங்குள்ள மக்கள், தமது உயர்வுக்குக் காரணமாக இருக்கும் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை இந்த தலைமுறையைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, உணர்த்தி அவர்களையும் வாழ்நிலையில் உரிய மரியாதையுடன் வாழச் செய்திட தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் உறுதி பூணு வோம். என்றும் பெரியார் வெல்வார்; பெரியாரின் கொள்கை மனிதனை வளப்படுத்தும்; மானுடத்தை  தழைத்தோங்க செய்திடும்!

- இவ்வாறு வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டார்.

மறைந்த பொறுப்பாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

மலேசிய திராவிடர் கழகத்தின் பினாங்கு மாநிலப் பொருளாளர் சுப்பிரமணியம் செப்டம்பர் 15, 2019 அன்று மறைந்தார். கழகத்தின் சார்பாக பெறப்பட்ட நிதி உதவியினை மலேசியா திராவிடர் கழகத்தின் தேசியத்தலைவர் ச.த.அண்ணாமலை மறைந்த சுப்பிரமணியம் அவர்களது துணைவியார் பத்மினி அவர்களிடம் வழங்கினார்.

சமூக நல காவலன் விருது

பினாங்கு மாநிலத்தின் கொடை நெஞ்சரும், சமூகவியலாளருமான டாக்டர் ஹாஜி ஹபீப் ரஹ்மான் அவர்களின் எழுத்துப்பணி மற்றும் அவர் ஆற்றிவரும் சமூகப் பணிக்காக தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் சமூக நல காவலன் விருது வழங்கப்பட்டது.

விழாவில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொருளாளர் கு.கிருஷ்ணன், தேசிய செயலவை கணக்காயர் ரவீந்திரன், தேசிய துணைப் பொதுச் செயலாளர் நாகேந்திரன் மற்றும் மாநில பொறுப் பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மகளிர் அணி தோழர்கள் இரா.அமுதவல்லி, பொன்.பரமேஸ்வரி, த.முருகம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிறைவாக பினாங்கு மாநில திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் பெ.இராஜேந்திரன் நன்றி கூறினார்.

மாநிலத்தில் சொந்தமாக கட்டிடம், அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் கழகம் பினாங்கு மாநில திராவிடர் கழகம். கழகம் பினாங்கு மாநிலத்தில் வலுவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆண், பெண், குழந்தைகள் எனப்பலரும் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து தந்தை பெரியாரின் கொள்கையை பிரச்சாரம் செய் திடும் குடும்ப விழாவாக நடைபெற்றது சிறப்புக்கு உரியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

- விடுதலை நாளேடு 5 1 20

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

ஆந்திர கோரா நாத்திக மய்யத்தின் 80ஆவது ஆண்டு விழா - 11ஆவது உலக நாத்திகர் மாநாடு

மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும் நிலைமையினை உருவாக்க உறுதி பூணுவோம்
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டில்  தமிழர் தலைவர் சூளுரை
விஜயவாடா, ஜன.5 ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்றுள்ளார். நாத்திக மய்யத்தின் 80ஆம் ஆண்டு நிறைவில் நடத்தப்படும் 11ஆவது உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் இன்று (5.1.2020) பிற்பகலில் சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதற்கு முன்னர், நாத்திக மய்யத்தின் பொறுப்பாளர் டாக்டர் சமரம் கோரா புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி நூலகத்திற்கு தமிழர் தலைவரை அழைத்துச் சென்று, அதனை மேலும் செழுமைப்படுத்த தமிழர் தலைவரின் ஆலோ சனைகளை கேட்டறிந்தார். தந்தை பெரியாரின்  புத்தகங்களை கணினி மூலம் தொடர்பு கொண்டு படித்திட உரிய அனுமதி தர வேண்டியும் தமிழர் தலைவரிடம் கேட்டார். தமிழர் தலைவரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகமும், விஜயவாடா நாத்திக மய்யமும் இணைந்து உலகம் முழுவதும் நாத்திக மனிதநேய கருத்துகள் பரவிட, பயன்பட செயல்பட வேண்டும்  என்று தமிழர் தலைவர் தமது விருப்பத்தினையும் தெரிவித்தார்.
நாத்திக மய்யத்தில் காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்
முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சிறிய தொரு உரையாற்றிட அழைக்கப்பட்டார். அப் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்ட தாவது: இந்த நாட்டில் ஜாதி மனிதர்களை பிளவு படுத்துகிறது. மதங்கள் மனிதரை வேறுபடுத்து கின்றன. உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருக்கிறது. இந் நிலைக்கு ஒரே தீர்வு மனிதநேயத்தை வலியுறுத்தும் நாத்திகமே, சுயமரியாதை பகுத்தறிவுக் கொள்கைகளே!
தந்தை பெரியார் அரங்கத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழக இலக்கியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலக  மாந்தரையே ஒரே குலமாக கருதிய போக்கு நிலவியது. அப்படிப்பட்ட மனிதநேயம் சார்ந்த மனப்பான்மை, அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்கிட இந்த உலக நாத்திகர் மாநாடு வலு  சேர்க்கும்; நாம் அனைவரும் வலிமை சேர்ப்போம். நாத்திகக் கருத்துகள் தழைத்தோங்கும் பொழுது மதவெறி மறைந்து மனிதநேயம் பெருகிடும். அத்தகைய நிலை மையினை உருவாக்க உறுதி பூணுவோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாத்திகத்தின் பல்வேறு கூறுகள், கடைப் பிடிக்கப்பட தேவையான அணுகுமுறைகள் பற்றிய தலைப்புகளில் உரை வீச்சு ஆற்றப்பட்டு வருகிறது.

உலக நாத்திக மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு விஜயவாடா ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு...

பஞ்சாபிலிருந்து மாநாட்டிற்கு வருகைதந்த நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருடன்...

கோரா உலக நாத்திக ஆராய்ச்சி நூலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்...

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் நாத்திக அமைப்பினர் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்


- விடுதலை நாளேடு,5.1.2020

வியாழன், 2 ஜனவரி, 2020

மலேசியா-பேராக் மாநிலம் ஈப்போ நகரில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

ஈப்போ, டிச. 28- மலேசியா நாட்டு பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவில் தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளை மலேசியா திராவிடர் கழகத்தினர் வெகு சிறப்பாக - கொள்கைப் பிரச்சார விழாவாகக் கொண்டாடினர்.

நிகழ்ச்சி 27.12.2019 அன்று ஈப்போ நகர் மேடான் இஸ்தானா - ரிஷிபவன் உணவக மேல்தளத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் வருகை தந்திருந்தார். மக்கள் நீதிக் கட்சியின் (மலேசியா நாட்டு ஆளும் அரசியல் கூட்டணியில் அங்கம் வகித்து வரும்) சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கூட்டத்திற்கு பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத் தலைவர் இரா.கெங்கையா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மானமிகு இரா.கோபி வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தின் பொழுது, செல்வி.எல்லீஸ் ஏலன் தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையினை வாசித்தார். நிகழ்ச்சி நிறைவின் பொழுது பத்திரிகையாளர் எம்.ஏ.அலி 'யார் இவர்' எனும் தலப்பில் பெரியார் பற்றிய குறுங்கவியினை வாசித்தார். நிகழ்ச்சியில் மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக.பஞ்சு, ஆலோசகர் ரெ.சு.முத்தையா, பேராக் பெரியார் பாசறையின் துணைத் தலைவர் த.சி.முனியரசன், மலேசிய திராவிடர் கழகத்தின் பொருளாளர் கு.கிருஷ்ணன், ஈப்போ நகர் கிளைத் தலைவர் ஏலன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்ரமணியம்

மலேசிய நாடாளுமன்றத்தின் சுங்கை சிப்புட் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்ரமணியம் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:

"நான் தந்தை பெரியாரின் 46ஆம் நினைவு நாள் கூட்டத் திற்கு வேண்டி விரும்பி பங்கேற்றுள்ளேன். தொடக்கத்தில் திராவிடர் கழகத்தைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. 2008ஆம் ஆண்டு சென்னை நகருக்குச் சென்றபொழுது அங்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகள் ஓர் அரங்கில் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி எழுதியுள்ள புத்தகங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றுள் சில புத்தகங்களை வாங்கி வந்து படித்தேன். பெரியாரைப் படிக்க படிக்க என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு ஒருவித புதிய தன்னம்பிக்கை, புதிய துணிச்சல், விரிவாக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு ஏற்பட்டது. தந்தை பெரியாரின் உழைப்பினால் மலேசிய நகர்த் தமிழ்ச் சமுதாயம் சுயமரியாதை உணர்வுடன் வாழ்வில் முன்னேறி இங்கு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். பெரியாருடைய கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டங்கள் வழி வகுக்கும். அடுத்த ஆண்டு தந்தை பெரியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியினை நாங்களே ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திடுவோம்.

இவ்வாறு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் தமது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகப் பொருளாளர் உரை

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் முதன் முதலாக வெளிநாட்டுச் சுற்றுப் பயணமாக மலேசிய நாட்டிற்குத்தான் வந்தார். பினாங்கு நகருக்கு கப்பலில் வந்த பெரியார் அடுத்த நாள் (21.12.1929) இந்த ஈப்போ நகரில் நடைபெற்ற தமிழர் சீர்திருத்த மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது மலேசிய நாடும், இந்தியாவும் பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தன. அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின. இந்தியாவில் இயற்றப்பட்டதைப்போல பால்ய திருமண தடைச் சட்டம் மலேசியாவிலும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், விதவை மணத்தை ஒவ்வொருவரும் ஆதரித்துக் கைக்கொள்ள வேண்டும் எனவும், குடும்ப சமுதாய நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைக் கைவிட்டு சிக்கனமாக நடத்திட வேண்டும் எனவும், மலாய் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமக்குள் நாட்டு வேற்றுமை பாராட்டாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியார் அன்றைய மலாய் நாட்டின் பல ஊர் களில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றினார். மக்களைச் சந்தித்து அவர்களது உயர்விற்கான வழிமுறைகளை வலி யுறுத்தினார். அந்த வருகை ஏற்படுத்திய தாக்கங்களை 1954ஆம் ஆண்டு மீண்டும் மலேயா நாட்டிற்கு பெரியார் வந்த பொழுது நேரடியாக பார்த்தார். 25 ஆண்டுகால இடைவெளியில் தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இன்று அதைவிடப் பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டு, தமிழர்கள் அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் மேம்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலைமைகள் ஏற்பட அன்றே வித்திட்டவர் தந்தை பெரியார். அந்த நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடாக தந்தை பெரியாரின் கொள்கைகளை மேலும் பரப்பிட இந்த நினைவுநாள் கூட்டத்தை மலேசிய திராவிடர் கழகத்தினர் நடத்துகின்றனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகள் எளிதாக நடை முறைக்கு வந்துவிடவில்லை. பலத்த எதிர்ப்புக்களுக்கிடையில் நடைமுறைக்கு வந்தது. பயன்பெற வேண்டிய மக்களே தொடக்க காலத்தில் எதிர்த்தனர். காரணம் அந்த அளவிற்கு பழைமைக்கு ஆட்பட்டு சமூக அடிமை வாழ்விற்குப் பழக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர். படிப்படியாக உண்மை நிலை உணர்ந்து முன்னேறினர். இன்றைக்கு தந்தை பெரியாரின் மனிதநேயக் கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவு உலகம் முழுவதும் வரவேற்கப்படும் நிலை உருவாகி வருகிறது. இதற்கு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டு நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு நிகழ்வுகளாக, உலகினருக்கு எடுத்துக் கூறக்கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது.

மலேசியாவில் தமிழர்கள் பலர் அரசியல் களத்தில் ஆளும் தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் முக்கியமான பங்காற்றி வருகின்றனர். ஏற்கெனவே தந்தை பெரியாரின் சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சட்ட அனுமதியுடன் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால்தான். தமிழ் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலமே பெரியாரின் கொள்கைக் கடைப்பிடித்து மேலும் முன்னேறி வளம் பெற வேண்டும். அதற்கு அமைப்பு ரீதியான பிரச்சாரப் பணிகள் ஆக்கம் பெற வேண்டும். இந்த நினைவு நாள் கூட்டம் அப்படிப்பட்ட நிகழ்வாகும். தொடர்ந்து, அடிக்கடி இத்தகைய நிகழ்வுகள், பலரது பங்கேற்புடன் நடைபெற வேண்டும். இவ்வாறு வீ.குமரேசன் தமதுரையில் குறிப்பிட்டார்.

நிறைவாக மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் ச.நாகேந்திரன் நன்றி கூறினார்.

இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது, பொதுப்படையான தமிழர்கள் பலரும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தது சிறப் புக்குரியதாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகம் நடத்திய தந்தை பெரியாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு முழுமையான கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெற்றது.

- விடுதலை நாளேடு 28 12 19