வெள்ளி, 22 மே, 2020

ஆந்திர நாத்திகர் டாக்டர் விஜயத்திற்கு நமது வீர வணக்கம்!


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவரும் நாத்திக மய்யத்தின்  நிர்வாக இயக்குநரும், தலைசிறந்த நாத்திகவாதியும், மனிதநேயருமான டாக்டர் விஜயம் அவர்கள் இன்று (22.5.2020) காலை 5 மணி அளவில் Atheist Centre-இல் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறி விக்க மிகவும் வருந்துகிறோம். அவருக்கு வயது 84.

சிறிது காலமாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் இருந்த அவர் மறதி நோய் காரணமாக (Alzheimer's) இயற்கை எய்தினார்.

அவரது வாழ்நாள் பணியாக இந்த நாத்திக மய்யத்தின் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் பரப்பி வந்தவர். பிரபல நாத்திகர் ‘கோரா’ (இராமச்சந்திரராவ்) - சரஸ்வதி கோராவின் இரண்டாவது மகனாவார்.

நமக்கு என்றும் உடன் பிறவா சகோதரராகவே கொள்கைக் குடும்ப உறவாக இறுதி வரை திகழ்ந்தவர். கடந்த ஜனவரி (2020)யில் நாம் விஜயவாடா நாத்திக மய்யத்தின் ஆண்டு விழா மாநாட்டில் கலந்து கொண்ட போது, தோழர்களுடன் சென்று சந்தித்தோம்.

நாம் அழைத்த போதெல்லாம் உறவு உரிமையுடன் தவறாது நம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாத்திக நன்னெறி நானிலமெங்கும் பரப்பும் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்த தொண்டறச் செம்மல்.

அவருடைய உடல் எவ்வித சடங்குகளுமின்றி, விஜயவாடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.
விஜயம் அவர்களுடைய இளையர் டாக்டர் சமரம் அவர்களுடன், திராவிடர் கழகத் தலைவர் தொலைப்பேசியில் தொடர்ப்பு கொண்டு இரங்கல் தெரிவித்து, ஆறுதலைக் கூறினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களும் தொலைப்பேசியின்மூலம் அவரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

அவரது மறைவு நாத்திக உலகத்திற்கும், நண்பர்களுக்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், விகாஸ்கோரா மற்றும் மகள்கள், அவரது சகோதர, சகோதரிகள் டாக்டர் சமரம் போன்ற அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல் - நமது வீர வணக்கம்!

- கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்.

22.5.2020 
சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக