- சோம.இளங்கோவன்
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடும் இந்த நாட்களில் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது மிகவும் பொருத்தமானது.
அமெரிக்கா பெண்ணுரிமையைப் பொறுத்தவரை பின்தங்கிய நாடாகத்தான் இருந்தது. கடந்த அய்ம்பது ஆண்டுகளில் நடந்த போராட்டங்களில் பெண்ணுரிமைப் போராட்டங்கள் மிகவும் முக்கியமானவை. இவை பற்றி ஓப்ரா தனது "ஓ" இதழில் ஒரு முக்கியப் பெண்மணியை எழுத வைத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கப் பத்திரிகை உலகம் ஆணாதிக்க முத்திரை பதித்த உலகம். அந்த உலகத்திலே ஓப்ரா படைத்த சாதனைகள் வியக்கத்தக்கவை. கெயில் காலின்சு என்ற பெண்மணி முதன் முதலில் உலகப் பெரிய பத்திரிகையான நியூயார்க் டைம்சில் தலையங்கப் பக்க நிருவாக எழுத்தர்களில் ஒருவராகின்றார். இவர் கடந்த அய்ம்பது ஆண்டுகளில் சாதனையாளர்களான அய்ந்து பெண்களைப் பற்றி எழுதியுள்ளார்.
எல்லா ஜோசப்பின் பேக்கர் என்ற கருப்பினப் பெண் 1903இல் பிறந்தவர். கல்லூரி முடித்த உடனேயே 1930இல் பொதுத் தொண்டில் இறங்குகின்றார். அன்றைய கருப்பினத் தலைவர்கள் தென் கிறித்துவத் தலைமைத்துவ அமைப்பு என்ற அமைப்பு மூலமாக இனப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். டுபாயிஸ், தரோகுட் மார்சல், பின்னர் மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களுடன் இவர் வேலை செய்தார். இனப் போராட்டத்துடன் பெண்ணுரிமைப் போராட்டத்தையும் சேர்த்து நடத்தியவர். அப்போது பெண்ணுரிமையென்று ஒன்றுமே கிடையாது, இவருடைய உழைப்பு வெளியே தெரியாது. அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை.
பதவி, புகழ், பணம் பற்றிக் கவலைப் படாமல் மிகவும் ஆர்வத்துடனும் துணிவாகவும் உழைத்தவர். மாணவிகள் பலரையும் ஊக்குவித்துப் போராடச் செய்தவர். பின்னாட்களில் வந்த பேருந்துப் போராட்டக் கதாநாயகி ரோசா பார்க் இவரது மாணவிதான். கருப்பின முன்னேற்றமன்றி மனித நேயத்திற்காகவும் பாடுபட்டவர். .இவருக்காக எல்லா என்ற ஒரு பாடலையே இயற்றிப் பாடியுள்ளனர். அனைத்துப் போராட்டங்க ளுக்கும் ஆதரவு தேடி மக்களைப் பங்கு பெறச் செய்தவர் இவர்.
அமெரிக்கா உழைப்புக்கு ஊதியம் தருவதில் பெண்களுக்குச் சமமாகத் தருவதில்லை. லில்லி லெட் பெட்டர் என்பவர் அலபாமா மாநிலத்திலே குட் இயர் என்ற டயர் நிறுவனத்திலே பல ஆண்டுகளாக வேலை செய்து உயர் பதவி அடைந்து ஓய்வு பெறப் போகின்றார். அப்போது அவருக்கு ஒரு அநாமதேய மடல் வருகின்றது, உங்களுக்கு ஆண்களுக்குத் தருவதில் 71 விழுக்காடு ஊதியம்தான் தருகிறார்கள் என்று. அவர் உடனே வழக்குத் தொடர்கின்றார். நிருவாகம் பணம் கொடுத்து தீர்த்துவிட முயல்கிறது. இவர் விடாமல் கடைசியாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரை செல்கின்றார். ஆனால், வழக்கில் தோற்று விடுகின்றார். அங்கேயிருந்த ஒரே பெண் நீதிபதி ரூத் லேடன் கின்சுபர்க், மிகவும் காட்டமான தனித் தீர்ப்பைப் படித்து இந்தச் சட்டம் உடனே திருத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார். இதை மாற்றி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டம் இயற்றி லில்லி லெட் பெட்டர் சம உரிமைச் சட்டம் என்றே பெயரிட்டு அமெரிக்கத் தலைவர் ஒபாமா கையெழுத்திடுகின்றார் 2009இல். இத்தனை ஆண்டுகளாக ஒரே வேலைக்கு ஆண்களுக்கு உயர்வான ஊதியம் என்பது ஒழிக்கப்பட்டுச் சம ஊதியம் பெற இயற்றப்பட்ட சட்டம் இது. " இது இவ்வளவு பெரிய பிரச்சினை என்று எனக்குத் தெரியாது" என்கின்றார் லில்லி லெட் பெட்டர்.
ஆணாதிக்க அமெரிக்காவில் பெண்கள் வேலைக்குச் செல்வது வரவேற்கப்படவில்லை. வீட்டு வேலையும், குழந்தை வளர்ப்புமே பெண்கள் வேலை. ஏதோ சிறு வேலைகள் செய்யலாம். பெரிய திட்டங்கள் போட்டு நிருவாக வேலைக்கெல்லாம் கூடாது என்பதுதான் நாகரிகமாக இருந்தது. இதை மாற்றி நாட்டின் பெண்கள் அமைப்பை" உருவாக்க உதவியவர் பெட்டி பிரைடன். பெண்கள் குடும்பம் மட்டும் அல்லாமல் தொழில் துறைகளிலும் வளர்ந்து பெருமையுற வேண்டும் என்று போராடியவர். அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை 1920இல்தான் கிடைத்தது. அதன் அய்ம்பதாவது ஆண்டு விழாவில் இந்தப் பெண்ணுரிமை முயற்சியினர் 50,000 பேர் நியூயார்க் நகரிலே ஊர்வலம் போய்க் கொண்டாடி பெண்கள் தொழில் துறை வளர்ச்சிப் போராட்டத்தை அறிமுகப்படுத் தினார்கள் 1970லே! தற்போது பெண்கள் பல நிறுவனங்களிலே கொடிகட்டிப் பறக்கின்றனர். அமெரிக்கத் தலைவர் பதவிக்கே போட்டியிடுகின்றனர். வேலை களிலும் , தொழில் துறையிலும் பெண்கள் பங்குபெறத் தோன்றிய இயக்கம் தொடர்ந்து பாடுபடுகின்றது. ஆனாலும், வால் மார்ட் என்ற பெரிய நிறுவனம் அண்மையில் ஒரு பெரிய வழக்கில் பெண்ணுரிமைக் கெதிராக வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, இது தொடரும் போராட்டந்தான்.
அமெரிக்க விளையாட்டில் பெண்கள் மரியாதையுடன் நடத்தப்படவில்லை. இதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர் பில்லி ஜீன் கிங் எனும் டென்னிசு வீராங்கனை. அவர் விம்பிள்டன் இரட்டையர் ஆட்டத்தில் வென்றவர். ஆனால், கல்லூரியில் ஆண்களுக்கு எளிதாகத் தரும் விளையாட்டு உதவித்தொகையினைத் தர மறுத்து விட்டார்கள். அதனால் பெரிய பல்கலைக் கழகங்களில் படிக்க முடியவில்லை. இவரது தந்தை தீயணைப்புத் தொழிலாளி. கலிபோர்னியாவில் 1970இல் பில்லி ஜீனும் இன்னும் எட்டுப் பெண்களும் பரிசுத் தொகை மிகவும் குறைத்துத் தருவதால் பங்கேற்க முடியாது என்று போராடினர். ஆண்களுக்குத் தந்த பரிசுத் தொகையில் பத்தில் ஒரு பங்குதான் பெண்களுக்குத் தந்து கொண்டிருந்தார்கள். 1972இல் ஸ்போர்ட்சு இல்லஸ்டரேட்டட் என்ற பத்திரிகையில் அந்த ஆண்டின் தலைசிறந்த விளையாட்டாளர் என்ற பெருமையைப் பெற்றவர். இதற்காகப் பெரிய எதிர்ப்பே நடந்தது. இவரைக் கேலி செய்த பாபி ரிக்சு என்ற ஆண் டென்னிசு விம்பிள்டன் வெற்றி விளையாட்டுக்காரரரைப் போட்டிக்கழைத்தார். இந்தப் போட்டியில் வெல்லாவிட்டால் பெண்ணுரிமைப் போராட்டம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும், அதற்காகவாவது நான் வெல்ல வேண்டும் என்று சொல்லி வென்று காட்டினார். டென்னிசு உலகத்திலே விருதுகளாக வாங்கிக் குவித்தவர்.
அமெரிக்கச் சரித்திரத்தில் மிகவும் முக்கியப் பெண்மணி என்று பெண்கள் கொண்டாடினார் கள். அமெரிக்கத் தலைவர் ஒபாமா இவரது பெண்ணுரிமைப் போராட்டத்தைப் பாராட்டி "அமெரிக்கத் தலைவரின் விடுதலை விருது" கொடுத்துச் சிறப்பித்தார். இன்னும் விம்பிள்டனில் பெண்களைச் சரியாக நடத்துவதில்லை, இன்னும் ஆணாதிக்கமும், இன ஆதிக்கமும் இருக்கின்றது என்றார் அண்மையில் வென்ற செரினா வில்லியம்சு.
மாட்டுப் பண்ணையில் வளர்ந்த சான்ட்ரா டே ஓ கன்னார் புகழ் பெற்ற ஸ்டான்போஃர்டு பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் தனது 19 வயதிலேயே 1949இல் சேர்ந்தார். இவருடன் இன்னும் நான்கு பேர்தான் மாணவிகள். மிகவும் சிறப்பாகப் படித்தும் அவருக்கு அப்போதைய கலிபோர்னியா மாநிலத்திலே வழக்குரைஞராக வேலை தர எந்த நிறுவனமும் தயாராக இல்லை. எழுத்தாளராக வேண்டுமானால் வேலை தருகிறோம் என்று சொன்னார்கள். அதுதான் பெண்களுக்குச் சரியாக இருக்கும் என்றார்கள். அரிசோனா மாநிலத்திலே வழக்குரைஞராகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தார். 1981இல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆக்கப்பட்டார். இவர்தான் இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் நடுவே மய்யமாக இருந்தார். இவரது வாக்குத்தான் வழக்கின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்திலே 9 நீதிபதிகள். இவர்கள் வாக்கெடுப்பின் மூலந்தான் தீர்ப்பளிக்கப்படும், அனைவரும் இவருக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தனர். 2009இல் அமெரிக்கத் தலைவர் ஒபாமா இவருக்கு அமெரிக்காவின் தலைசிறந்த விருதான "அமெரிக்கத் தலைவரின் விடுதலை விருதை" வெள்ளை மாளிகையில் கொடுத்துப் பாராட்டினார்.
அமெரிக்காவில் பெண்ணுரிமைகளுக்காகப் பாடுபடுவது மட்டுமன்றி ஆண்களையும் தனது நிகழ்ச்சிகளில் பேசவைத்து அதன் நியாயத்தை நன்கு வெளிப்படுத்துபவர் ஓப்ரா! பல ஆண்களும் பங்கேற்று நிகழ்ச்சிகளில் கருத்துரைத்துள்ளனர். அமெரிக்காவிலே இன்று பெண்களை ஒதுக்கும் எவரும் சட்டத்தின்முன் நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பல ஆண்டுகளாக ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த பல அமைப்புகள் மாறியுள்ளன. மிகவும் புகழ் வாய்ந்த கோல்ப்ஃ மாஸ்டர்சு போட்டி நடத்துபவர்களும் தங்கள் விதிகளை மாற்றியுள்ளனர்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், பெண்ணுரிமை என்று வரும்போது "உங்கள் மனைவியை நினைக்காதீர்கள், ஒன்றும் தரமாட்டீர்கள். உங்கள் தாயை, தங்கையை, மகளை நினைத்துப் பாருங்கள், அப்போது புரியும்" என்றார்.
இதைப் புரிய வைப்பதில் உலக அதிசயம் ஓ' வெற்றி கண்டுள்ளார் ! தமிழகத்து இளைய தலைமுறையும் வெற்றி பெறட்டும் !
அதுவே தந்தை பெரியாரின் பிறந்தநாள் உறுதியாகட்டும் !
- தொடரும்