நமது சிறப்புச் செய்தியாளர்
பிரிந்த அமைப்புகள் சேர்ந்த பெரியாரிய கூட்டமைப்பு பிறந்தது!
மலேசிய திருநாட்டில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியரின் வரலாற்றுப் பெருமைமிகு சாதனை
மலேசியாவில் பெரியார் பன்னாட்டமைப்பு
Periyar International உருவாக்கம்
அமெரிக்க சிகாகோவைத் தலைநகரமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டு, டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், டெக்சாஸ் பேராசிரியர் டாக்டர் இலக்குவன்தமிழ், சிகாகோ பாபு, பேராசிரியர் டாக்டர் அரசு செல்லையா ஆகியோரின் அரிய முயற்சியால் தொடங்கப் பெற்று, இன்று பல மாநிலங்களிலும், பல நாடுகளிலும் அமைப்புகளை உருவாக்கி சமூகத் தொண்டு நிறுவனமாக நடக்கும் பெரியார் பன்னாட்டமைப்பு மலேசியாவிலும் ஆசிரியர் முன்னிலையில் 24.11.2019 அன்று உருவாக்கப்பட்டது.
மானமிகு தோழர் மா.கோவிந்தசாமி எம்.ஏ., அவர்கள் தலைவராகவும், மானமிகு கே.ஆர்.ஆர்.அன்பழகன் பி.ஏ., அவர்கள் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். விரிவாக்கம் தொடரவிருக்கிறது என்பதும் கூட்டம் முடிந்த பின் அமைந்த முடிவில் ஒன்றாகும்.
கோலாலம்பூர் (கோலக்கிள்ளான்), நவ.26- 24.11.2019, ஞாயிறு காலை 11 மணியளவில் மலேசிய திராவிடர் இயக்க வரலாற்றில் ஓர் புதிய அத்தியாயம் இணைக் கப்பட்டது. மறக்க முடியாத பொன்னாளாகும் அந்நாள்!
ஆம்! புரட்சிக்கவிஞர் அவர்கள் கொட்டிய கவிதை முரசொலிக்கு விளக்கம் அளிக்கும் இலக்கிய மாக இயக்க நடவடிக்கைகள் அமைந்தன!
‘‘இங்குள திராவிடர் ஒன்றாதல் கண்டே எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்'' என்று கூவி முழங்கும் வண்ணம் சில ஆண்டுகளாகப் பிரிந்து கிடந்த கழகக் கொள்கைக் குடும்பத்தினர் மீண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் பல அமைப்புகளாக இருப் பவர்கள் ஓர் அணியில் நிற்க - பெரியாரிய கூட்ட மைப்பை உருவாக்க அனைவரும் இசைந்தனர், ஒன்று கூடினர்.
கழகத் தலைவர் ஆசிரியர் தங்கியிருந்த கோலக் கிள்ளான் (Port klang) துறைமுக நகரின் கிரிஸ்டல் கிரவுன் பிளாசா ஓட்டலில் இரண்டாம் தள அரங்கத்தில் மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களான தேசியத் தலைவர் பினாங்கு அண்ணாமலை, பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் மற்றும் பொறுப் பாளர்கள் இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் இயக்க செயல் வீரர்கள் - மானமிகு சுயமரியாதைக்கா£ரர்கள் என அனைத்து அமைப்பினரும் முதல் முறையாக கிரவுன் பிளாசா ஓட்டலில் Harbour Crew No.217, Persiaran Raja Muda musa, 4200 Pelabuhan Klang - Selangor என்ற அரங்கில் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இந்தக் கலந்துறவாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளை ஒத்த குரலில் பரிமாறிக் கொண்டு புதிய சரித்திரத்தின் - முதல் வரிகளை எழுதத் தொடங்கினர்.
அதற்குமுன் கோலக் கிள்ளான் நகரில் பல ஆண்டு காலமாக சிறப்பாக நடைபெற்றுவரும் திருவள்ளுவர் மண்டபம் - மன்றம் நூலகம் சென்று காலை 10 மணி யளவில் திருவள்ளுவர் சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்தார். அதன் முக்கிய பொறுப்பா ளர்கள் திரு.இராமன் தலைமையில் ஆசிரியரை வரவேற்றனர்.
சுமார் 20, 25 ஆண்டுகளுக்குமுன் இதே மண்ட பத்தில் வந்து பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டதையும், நடிகவேள் எம்ஆர்.இராதா அவர்களை அழைத்து திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி இதே மண்டபத்தில் உரையாற்றிட வைத்ததுமான பழைய நினைவுகள்பற்றி சிறிது நேரம் உரையாடி ஆசிரியரை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து விடை பெற்றார். ஆசிரியருடன் கே.ஆர்.ஆர்.அன்பழகன், வெற்றி முனியாண்டி, சிங்கப்பூர் இராஜா ராமன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
அதேநேரத்தில் கிரவுன் பிளாசா ஓட்டலின் இரண் டாவது தளமான அதே அரங்கத்தில் மலேசிய திராவிடர் கழகத்தின் மத்திய செயலவைக் கூட்டம் அதன் தேசியத் தலைவர் மானமிகு ச.த.அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் அவர் கள் மலேசிய திராவிடர் கழகத்தின் முக்கிய செயல வைப் பொறுப்பாளர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பின், கடந்த கூட்ட குறிப்புகளை முன்வைத்தும், தேசிய பொருளாளர் கு.கிருட்டிணன் அவர்கள் கணக்கறிக்கை தாக்கல் செய்தும், கழக நிலை குறித்து கலந்து உரையாடியும், கழகப் பொருட் கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும், கழக செயல் நடவடிக்கை குறித்து முடிவெடுத்தும் பல்வேறு கருத்து களைப் பரிமாறிக் கொண்டனர். தேசிய துணைப் பொதுச்செயலாளர் மானமிகு ச.நாகேந்திரன் அனை வருக்கும் நன்றி கூறி, காலை 11 மணியளவில் அந்தக் கலந்துறவாடல் நடவடிக்கைகளை முடித்துக் கொண் டனர்.
அதன் பிறகு அதே அரங்கில் சிறப்பு வருகை தந்த தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் ஒன்று திரண்டு அரங்கில் கூடி வரவேற்றனர்.
1. மலேசிய திராவிடர் கழகம் சார்பில்...
மானமிகு தோழர்களான
1. ச.த.அண்ணாமலை, தலைவர்
2. சா.பாரதி, துணைத் தலைவர்
3. பொன்.பொன்வாசகம், பொதுச்செயலாளர்
4. வீ.இளங்கோ, உதவித் தலைவர்
5. கு.கிருட்டிணன், பொருளாளர்
6. மு.இராதாகிருட்டிணன், அமைப்புச் செயலாளர்
மற்றும் முன்னாள் துணைத் தலைவர், பொருளாளர் தாப்பா கெங்கையா, அர்ச்சுனன், மகளிரணி தோழர் கள், முதுபெரும் பெரியார் தொண்டர் பெரியசாமி மற்றும் தோழர்கள்.
2. மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகம்
மானமிகு தோழர்கள்
1. இ.ரெசு.முத்தய்யா, ஆலோசகர்,
2. நாக.பஞ்சு, தலைவர்
3. ச.அன்பரசன், பொதுச்செயலாளர்
3. பேராக் மாநில பெரியார் பாசறை
மானமிகு தோழர்கள்
1. வா.அமுதவாணன், தலைவர்
2. த.சி.முனியரசன், துணைத் தலைவர்
3. அ.அல்லிமலர், பொருளாளர்
4. க.மணிமாலா, மகளிர் தலைவி
4. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம்
மானமிகு தோழர்கள்
1. கெ.வாசு, தலைவர்
2. மரு.கிருட்டிணன், உதவித் தலைவர்
3. மு.மணிமாறன், செயலவை உறுப்பினர்
4. ம.பத்துமாலை, செயலவை உறுப்பினர்
5. சிறப்பு அழைப்பாளர்கள் (மேலே காட்டிய) ம.தி.க.வின் பல உறுப்பினர்கள், பெரியாரிஸ்டுகள் கூடுதலாக
மானமிகுவாளர்கள்
1. கோவிந்தசாமி
2. கே.ஆர்.ஆர்.அன்பழகன்
3. வெற்றி முனியாண்டி மற்றும் பல மகளிரணித் தோழர்கள்
கூட்டத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியரை ம.தி.க.வின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் வரவேற்றும், இந்தக் காலகட்டத்தில் மலேசிய மண்ணில் பெரியார் கொள்கைக்கு எதிரான பிற்போக்கு ஜாதி, மதவாத சக்திகளும் மற்றும் பல போலி தேசியங்களும் கழகப் பிரச்சாரத்திற்கு எதிராக வும், தந்தை பெரியார் கொள்கை முதன்முதலாக வேரூன்றிய மலேசிய மண்ணிலிருந்து அகற்றிட முயன்றும், அவற்றை முறியடித்து எவரும் கனவுகூட காண முடியாதபடிச் செய்வோம். நாம் அனைவரும் இந்த பெரியாரிய கூட்டமைப்புப்பில் பங்கேற்ற திராவிடர் இயக்கங்கள் ஓர் அணியில் திரண்டு கொள்கை பரப்பும் தொண்டறப் பணியில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகும் என்பதைக் கூறி, இந்தத் திட்டத்தை முன்மொழிந்தார்; அதனை அத்துணை அமைப்புகளின் சார்பிலும் தோழர்கள் நாகபஞ்சு, ரெசு.முத்தய்யா, அமுதவாணன், கெ.வாசு, கிருட்டி ணன் முதலிய அனைவரும் ஒத்த குரலில் அதே கருத்தைப் பிரதிபலித்து சிறு சிறு விளக்க உறுதி உரையாற்றினர்.
தனியாக வந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பெரியசாமி அவர்களும், மற்ற நண்பர் களும் பிசிறு தட்டாமல், ஒரே குரலில் இந்த ஒருங் கிணைப்பை வரவேற்றார்கள்.
அதன்பின் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலை வரும், ‘விடுதலை' ஆசிரியருமான கி.வீரமணி அவர் கள் மிகுந்த மகிழ்ச்சித் ததும்பும் உற்சாகத்துடன் உரையாற்றினார்.
‘‘இன்று தான் அடையும் மகிழ்ச்சியை என்றும் அடைந்ததில்லை என்றும், வரும் டிசம்பர் 2 இல் 86 வயதுடன் செல்லும் தான், 26 வயது இளைஞனைப் போல திரும்பக் கூடிய தெம்பையும், பலத்தையும், மகிழ்ச்சியையும் நீங்கள் இந்த ஒற்றுமை உணர்வின் மூலம் தந்துள்ளமைக்கு எனது தலைதாழ்ந்த நன் றியை, பாராட்டை உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு அமைப்பினருக்கும் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.
‘‘நீரடித்து நீர் விலகாது'' என்ற பழமொழியை உண்மை என்று காட்டியுள்ளீர்கள். நடந்தவைகள் நடந்தவைகளாகவும், கடந்தவைகளாகவும் இருக்கட் டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக அமை யட்டும்.
நம்முடைய பிரிவுகள்பற்றி யாரும் இனி கவலைப் படத் தேவையில்லை. இன்று வளர்ந்து பக்குவப்பட் டுள்ளோம் மீண்டும் காலம் கனியும் - அப்போது ஒரே கழகமாகவும் மீண்டும் இந்த பெரியாரின் பெரும் கொள்கைக் குடும்பம் ஒன்று சேருவது நிச்சயம் - உறுதியும்கூட!
நம்மிடையேயான சிறு கருத்து மாறுபாடுகள் பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஓர் குடும்பம் என்றால், எல்லாம் இருக்கும்; அப் பனுக்கும், மகனுக்கும், அண்ணனுக்கும், தம்பிக்கும், ஏன் கணவனுக்கும், மனைவிக்கும், துணைவனுக்கும், துணைவிக்கும்கூட கருத்து மாறுபாடு வரத்தானே செய்கிறது?
அதனால், உறவு பறிபோய்விடுமா?
உறவை யாராவது பறித்துத்தான் விட முடியுமா?
பெரியார் பெருந்தொண்டர்களாகிய நாம் அனை வரும் இதை மனதில் நிறுத்தினால் எல்லாம் நொடிப் பொழுதில் மறைந்துவிடும்!
கருத்து மாறுபாடுகள் என்பவை எப்போதும் மறையக் கூடியவை, கருத்து வேறுபாடுகளின் தன் மையோ வேறு.
நமக்குள்ளே வந்து தலையை நீட்டியது கருத்து மாறுபாடுகளே தவிர, வேறுபாடுகள் அல்ல தோழர்களே!
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நமது தொண்டை மானம் பாராத தொண்டு என்றும், நன்றி எதிர்பாராத் தொண்டு என்றும் கூறிடு வார்.
1330 குறள்களிலேயே அய்யாவுக்கு மிகவும் பிடித்த குறள்,
‘‘குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்''
என்ற குறள்தான் என்பதை நன்கு அறிந்தவர் கள்தான் நீங்கள் அனைவரும்.
நம் கொள்கை எதிரிகளின் துள்ளலும், எள்ளலும், கிள்ளலும்பற்றி மட்டுமே யோசியுங்கள். நம்முள் வீரமும், செயல் திறனும் பன்மடங்கு பெருகி ‘விஸ்வ ரூபம்' எடுப்பது உறுதி!
அதன்முன் எவரும் வாலாட்ட முடியாது! அய்யா சொன்ன அறிவுரையை என்றும் மனதில் நிறுத்துங்கள்.
‘‘எது நம்மைப் பிரிக்கின்றதோ அதை அலட்சி யப்படுத்துங்கள் - பொருட்படுத்தாதீர்கள்.
எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப் படுத்துங்கள், ஆழப்படுத்துங்கள்!
வெற்றி நம் மடியில் வந்து தானே விழும்!''
எனது அன்பான வேண்டுகோளை ஏற்று ஒருங் கிணைந்து - முதல் கட்டமாக செயல்பட முன்வந்த அனைவருக்கும் எமது நன்றி.
இந்நாட்டில் பழைய அந்த சுயமரியாதைச் சுடரொளிகள் 70 ஆண்டுகளுக்கு மேலே தங்களது தியாகத்தால், துன்பத்தால், எதிர்ப்புகளை உரமாக்கி, நம் கொள்கைப் பயிர்களைச் செழிக்க வைத்தனர்.
அவர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்! வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தந்தை பெரியாரின் 46 ஆவது நினைவு நாளை நீங்கள் அத்துணை அமைப்புகளும் ஓர் மேடையில் - ஓர் குடையின்கீழ் நின்று நடத்தி கொள்கைப் பிரகடனத்தை முழங்கி, பணியைத் திட்டமிட்டு செய்யத் தொடங்குங்கள்.
தமிழ்நாடு என்றும் உங்களுக்கு, உங்கள் பணிக்கு உறுதுணையாக நிற்கும். என்றும் தொடர்புடன் இருங்கள் - வளர்த்துக் கொள்ளுங்கள் - பயிற்சி முகாம் தேவை என்றால், எங்கள் விருந்தினர்களான இளைஞர்களை அழைத்து வாருங்கள் - இருகரம் ஏந்தி உங்களை வரவேற்போம் - ஏற்பாடு செய்வோம் - என்றும் நாம் ஒரே குடும்பம், சுயமரியாதைப் பல்கலைக் கழகக் குடும்பம்!'' என்று உருக்கமுடன் பேசினார்கள்.
‘‘வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தந்தை பெரியாரின் நினைவு நாளை நடத்த மாந்த நேய திராவிடர் கழ கத்தினர் கேட்டனர்; மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித் தோம்.
எங்கே, எந்த கழக நிகழ்ச்சி என்றாலும், கொள்கைப் பிரச்சாரம் என்றாலும், ஓர் அணியாய் திரண்டு அங்கே சென்று பெரியாரின் இராணுவ சிப்பாய்களாக நிற்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஒருவரை ஒருவர் விமர் சிக்கவே கூடாது என்பதில் உறுதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள்'' என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அனைவரும் வழிமொழிந்து வரவேற்று, அய்யா நினைவு நாளையே, கொள்கைப் பிரச்சாரத்தின் திருப்ப நாளாகும் என்றனர்.
இறுதியில் மலேசியக் கழகத் தலைவர் ச.த.அண்ணாமலை தமிழ்நாடு கழகத்தின் பெரியார் உலக முயற்சிகளைப் பாராட்டினார்; விளக்கிக் கூறு மாறு ஆசிரியரைக் கேட்டுக்கொண்டார்.
‘‘கொள்கை விளக்க இயக்க வெளியீடுகளை, இந்நாட்டுக்குத் தேவையான நூல்களை - பகுத்தறிவு வெளியீடுகளைப் பரப்பும் திட்டத்தைக் கைக்கொள் ளும், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல் போன்ற கருத்துள்ள நூல்களை பெரியார் எழுத்து, பேச்சுகளையும், கழக வெளியீடுகள் பரப்பும் திட்டத் தையும் சிறப்புற செயல்படுத்தவேண்டும்'' என்றார்.
‘‘அடிப்படையில் நமது இயக்கம் ஒரு பிரச்சார இயக்கமே! வன்முறையிலோ, தீவிரவாதத்திலோ, பயங்கரவாதத்திலோ, இரகசிய வழிகளிலோ நம்பிக் கையில்லா அமைதிப் புரட்சி இயக்கம், அறிவுப் புரட்சி இயக்கம் என்பதை பிரச்சாரத்தில் தெளிவுபடுத்துங்கள்'' என்று விளக்கமாக எடுத்துரைத்தார். வந்திருந்த அத்துணைத் தோழர்களுக்கும் பகல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தய்யன், தமிழ்நாடு கழக வெளியீடுகளை முதல் நாள் திருமண வீட்டிலும், கழகக் கலந்துறவாடலிலும் பரப்பும் கடமையை சிறப்பாகச் செய்தார்.
- விடுதலை நாளேடு, 26.11.19