திங்கள், 22 ஜனவரி, 2018

பெரியார் வாழ்க! நாத்திகம் வாழ்க! இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம், ஒடிசா மொழிகளில் முழக்கம்!



7.1.2018 உலக நாத்திகர் மாநாட்டின் மூன்றாம் நாள் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் 190 அடி உயரத் தந்தை பெரியார் சிலை, நூலகம், சிறுவர் பூங்கா, உணவு மய்யம் அமையு மிடத்தில் கேட்ட ‘பெரியார் வாழ்க! நாத்திகம் வாழ்க!' என்னும் முழக்கம் - எழுப் பப்பட்ட மொழிகள் தமி ழல்லாத இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, ஒடிசா, மலையாளமாக இருந்த போதிலும் நாத்திக உலகம் ஒன்றிணைந்து இருப்பதை அடையாளம் காட்டியது. இந்த முழக்கம் கேட்ட வேளை கூடக் காலை 7 மணி. அதுவும் மார்கழிப்  பனி குளிர் நிறைந்த காலை வேளை. ஏறக்குறைய மாநாட்டுக்குப் பேராளர்கள் எல்லோருமே வந்து சேர்ந்து விட்டனர். அவ்வாறு வந்து சேர்வதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்த திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டுக்குரியவர்.

இதைவிட அந்தக் காலை வேளையில் தமிழர் தலைவர் ஆசிரியர் குறித்த நேரத்தில் வந்ததோடு, கரடுமுரடான அந்தக் கட்டாந்தரையில் கால் பதித்துப் பெரியார் சிலை அமையும் இடத்திற்குச் சென்று பேராளர்களுக்குக் தந்தை பெரியார் சிலை அமைக்கும் இடத்தைக் காட்டியதோடு, பொறியாளர் பேராசிரியர் டாக்டர் சுந்தராஜூலுவை அழைத்துச் சிலையின் உயரம், தோற்றம், அமைப்பு ஆகியவற்றை விளக்கிச் சொல்லும்படி கேட்டுக் கொள்ள அவர் வரைபடத்தை வைத்து விளக்கியபோது ஆர்வத்துடன் கேட்டவர்கள், அதிலும் குறிப்பாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்தும், அயல் மண்ணில் இருந்து வந்தவர்களும் வியப்பில் ஆழ்ந்ததுடன் ஆசிரியரின் அரும்பெரும் முயற்சியையும், அதற்காகத் திட்டம் உருவாக் கியதையும் வாய்விட்டுப் பாராட்டியதுடன் மிகவும் உணர்ச்சிப் பெருக்கில் அவர்களாகவே ‘தந்தை பெரியார் வாழ்க!' நாத்திகம் வாழ்க' என்று பல மொழிகளில் உரத்த குரலில் முழங்கவும் செய்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் தந்தை பெரியார் சிலை அமையவிருந்த இடத்திலிருந்த மாபெரும் பள்ளத்து அடித்தளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வீரமணி ஜி! வீரமணி ஜி! என்று அவருடன் நின்று படம் எடுக்கக் காட்டிய ஆர்வம் பெருமைக்குரியது.

அதன்பின் பன்னாட்டுப் பேராளர்கள் பன்னாட்டு மனிதநேய ஒன்றிய முதன்மைச் செயல் அலுவலர் கேரேமெக்கலாண்ட், ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓ'காசே, மகாராஷ்டிரா அந்தராஷ்டிரதா நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல் ஆகியோர் பல்வேறு மொழிகளில் கொள்கை முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண் டனர். தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி கழகக் கொடியை உயர்த்திப்பிடித்து அசைக்க பெரியார் உலகத்திடலில் 190அடி உயரத்தில் அமையவுள்ள பெரியார் சிலை நினைவாக 190 மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டனர்.

மாநாட்டின் நிறைவு விழாவிற்கு முன் 7.1.2018இல் நடை பெற்ற மூன்றாம் நாள் ஆய்வு அமர்வினை ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானே சுவர்சாகுவின் தலைமையில், விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் விகாஷ் கோரா நடுவராக இருந்து அமர்வை நடத்தியபோது, பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் "கல்வியில் திறனாய்வுச் சிந்தனையும், தடையற்ற தேடலும்" எனும் தலைப்பில் ஆய்வு உரையும், மும்பையிலிருந்து வருகை புரிந்த கல்வியாளர் சந்திரம்மா மஜூம்தார், "ஆத்திகத்திலிருந்து நாத்திகத்திற்கு" எனும் தலைப்பிலும், திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் "பெரியாரின் பகுத்தறிவாளர் மக்கள் இயக்கம்" எனும் தலைப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அடித்தள மக்கள் குறித்த ஆய்வாளர் ஒய். சீனிவாசராவ் "பெரியாரின் பொருத்தப்பாடு" எனும் தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கினர்.

உலக நாத்திகர் மாநாடு சமத்துவப் பொங்கலுடன், பொங்கல் விழாவுடன் நிறைவு பெற்றது. பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டு கோலமிட்டு ஆங்காங்கே கரும்பை நட்டு வைத்து அந்த வளாகத்தையே அழகு மிளிர எழிலோங்கச் செய்தனர். பொங்கல் பானையைச் சுற்றிலும் பஞ்சாப், மராட்டியம் முதலிய பகுதிகளிலிருந்து வந்த பேராளர்கள் உடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் கரகாட்டம் நடந்து கொண்டிருந்தது.

அவ்வேளையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கட்டுரை யாளர்களையெல்லாம் மேடைக்கு அழைத்துச் சால்வை  அணி வித்துச் சிறப்புச் செய்தார்.

இந்த மாநாடு சிறக்கக் கழகத் தோழர்கள் நிதியளித் தும், விளம்பரம் செய்து ஒத் துழைத்த போதும் இரண்டு பேர் சிறப்பிக்கப்பட வேண்டிய வர்கள். ஒருவர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். திருச்சியிலும், தஞ்சை யிலும் மாநாட்டுக்குரிய ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்து முடித்த வீ.அன்புராஜ் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்த வந்த பேராளர்களுக்குத் தக்க வகையில் தங்குமிடம், போக்குவரத்து குறைவில்லாமல் கவனித்துக் கொண்டார்.

அடுத்துக் கடந்த இரண்டு மாத காலமாகவே சென்னையில் மாநாட்டுப் பணிகளை, பேராளர்களைத் தொடர்பு கொள்வதை, தகவல் அளிப்பதைச் செம்மையாகச் செய்தமையால் பாராட்டுக்குரியவர் வீ.குமரேசன் ஆவார்.

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு யாரை எப்படிச் சிறப்பிக்க வேண்டும், பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்பது நன்கு தெரியும். ஆதலால் நிறைவுநாளன்று மாநாடு சிறக்க உழைத்த திரு. வீ.அன்புராஜ், திரு. வீ.குமரேசன் ஆகியோரை விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் கோ.விஜயம் சால்வை அணிவித்துப் பாராட்டி மகிழ்ந்தார்.

எல்லா நாடுகளையும் பார்க்கிறோம். அமெரிக்காவில் ஒரே மதம், கறுப்பர், வெள்ளையர் என நிறவேற்றுமை. அய்ரோப்பாவில் ஒரே மதம், ஒரே இனம். ஆனால் இந்தியாவில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பதாயிரம் ரிஷிகள், கின்னார், கிம்புருடர், அட்டதிக்குப் பாலகர்கள், 64 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், ஆயிரத்து எட்டு ஜாதிகள் அதில் பல உட்ஜாதிகள், சாஸ்திரம், சம்பிரதாயம் என்று மதத்தின் அடிப்படையில் எல்லாம் ஒரே ஜாதி, ஒரே கடவுள், ஒரே மதமில்லை. இத்தகைய இந்தியாவில் ஜாதியை, மதத்தை அழிக்கப் புறப்பட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று இரண்டு பட்டம் பெற்றவர்கள், ஒரு பட்டம் பெற்றவர்கள், வெறும் நான்காம் வகுப்புப் படித்த தலைவர் பின் நின்றார்கள்.

அந்தத் தலைவன் வழியில் சற்றும் அடிபிறழாது, அக்கொள்கையில்  சற்றும் வழுவாது, உடலில் பல உடல் நோவுகளுக்கு ஈடுகொடுத்து உழைக்கும் ஒரே தலைவராகத் திகழும் ஆசிரியர் தமிழர் தலைவர் பின்னே இன்று பல்லோரும் கூடி நிற்பது அவர் கொண்ட கொள்கையின் வெற்றி. அந்தக் கொள்கையின் அடிச்சுவட்டில் நடைபெற்ற மாநாடுதான் நாத்திகர் மாநாடு - உலக நாத்திகர் மாநாடு

உலக நாடுகளைப் பொருத்தவரையில் நாத்திகம் என்றால் அது கடவுள் மறுப்பு, கடவுளே இல்லை என்பதோடு முடிந்து விடுகிறது. ஆனால்  தமிழ் மண்ணில் நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்புமட்டுமல்லாமல் சாதி ஒழிப்பு, இன உணர்வு, சமத்துவம், வகுப்புரிமைக் கோட்பாடு, பெண்ணடிமை ஒழிப்பு, இடஒதுக்கீடு எனும் பல ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வாழ்வை உயர்த்தும் உன்னத நோக்கங்கள் உடையது. அதனாலேயே தான் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில், சீக்கிய சமயத்தவரான, சீக்கிய நெறியைப் பின்பற்றி, தலைப்பாகை, கையில் கங்கணம், தாடி முதலாய சீக்கிய அடையாளங்களை உடையவர்களும், பஞ்சாபிலிருந்து வந்த பேராளர்களும், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இக்கட்டுரையாசிரியர் போன்று பல பேராசிரியர்கள், அறிஞர்கள், பிற அரசியல் இயக்கத்தவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. இல்லையெனில் இம்மாநாடு திராவிடர் கழக மாநாடுகளில் ஒன்றாக அமைந்திருக்குமேயன்றி உலக நாத்திகர் மாநாடு என்று தனி முத்திரை பதித்துத் தந்தை  பெரியாரை உலகமயமாக்குவதில் பெரும் பங்கு பெற்றிருக்க முடியாது. எனவே தான் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் இம்மாநாட்டின் வெற்றி, சிறப்பைக் கூறுகையில் திராவிடர் கழகத்தின், தமிழர் தலைவரின் சாதனை மகுடத்தில் ஒரு மணிக் கல் என்று குறிப்பிட்டோம். நாடுகள் பலவற்றிலிருந்து வந்தவர்களெல்லாம் தந்தை பெரியாரின் கோட்பாடு அரங்குக்குள்ளே முடங்கி விடாமல் மக்களிடையே ஒருங்கிணைந்து உயிர் பெற்று மிகப் பேரளவில் துடிப்புடன் விளங்குவது கண்டு வியந்து போனார்கள்.

- விடுதலை நாளேடு, 20.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக