திங்கள், 22 ஜனவரி, 2018

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு -1





திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு  கோலாகலமாக தொடங்கியது

பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக பங்கேற்பு



திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே,  லண்டன் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைமை செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,  மேனாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர் (அமெரிக்கா) டாக்டர் இலக்குவன்தமிழ், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம், விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம், மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல்தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், கழகப் பொதுச் செயலாளர் 
வீ. அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ. குமரேசன் உள்ளனர்.

திருச்சி, ஜன.5 நாத்திக, மனிதநேய சகோதரத்துவ சிந்தனையாளர்கள் பன்னாட்டளவிலிருந்து வருகை தந்து சிறப்பிக்கின்ற மாநாடாக உலக நாத்திகர் மாநாடு  இன்று (5.1.2018) காலை திருச்சியில் தொடங்கியது.

திருச்சி கே.சாத்தனூர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் என்.எஸ்.கே. அரங்கத்தில் 5.1.2018 அன்று காலை 9 மணியளவில் மாநாட்டுக்கு வருகைதருவோருக்கான பதிவுடன் மாநாடு தொடங்கியது.

உலக நாத்திகர் மாநாடு-2018 இன்று  தொடங்கி (ஜனவரி 5,6,7) மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

2011 ஆம் ஆண்டில் இதே ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாள்களில் உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

இன்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் நாத்திக அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 2018ஆம் ஆண்டின் உலக நாத்திகர் மாநாட்டின் நோக்கம் மனிதநேயமே. இந்த உலக நாத்திகர் மாநாடு மனித நேயத்தை உறுதிப்படுத்தி, சிந்திக்கவும், செயல்படவும் உள்ள உரிமைகளை வலியுறுத்துகிறது.

புத்தக காட்சி திறப்பு

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின்  (அய்.இ.எச்.யூ)ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே புத்தக காட்சியைத்  திறந்துவைத்தார்.

தமிழர் தலைவர் தலைமையில்

மாநாடு தொடக்கம்



திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் (அமெரிக்கா) டாக்டர் லட்சுமண்தமிழ் தொடக்க உரையாற்றினார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடா நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம் மாநாட்டின் நோக்க உரையாற்றினார்.

மாநாட்டில் இந்தியா முழுவதுமிருந்தும், பன்னாட்டளவி லிருந்தும் பேராளர்கள் ஏராளமான அளவில் பங்கேற்றனர்.

அறிஞர் பெருமக்கள் பன்னாட்டளவிலிருந்து உலக நாத்திகர் மாநாட்டு மேடைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்தனர்.

பகுத்தறிவாளர்களின் படத் திறப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்துத்துவ வன்முறைகளுக்கு பலியான, பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளை துணிவுடன் பேசியும், எழுதியும் வந்த அறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் படங்களை திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப்புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் திறந்துவைத்தார். மாநாட்டில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள், பேராளர்கள் அனைவரும் எழுந்து நின்று மறைந்த பகுத்தறிவாளர்களுக்கு மரியாதை செலுத்தும்வண்ணம் முழக்கமிட்டு புரட்சிகர வணக்கம் செலுத்தினார்கள்.

புத்தகங்கள் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆங்கில நூல்களான Bhagavad Gita - Myth or Mirage 
(பகவத் கீதை கற்பனை அல்லது புரட்டு) மற்றும் March of Atheism (நாத்திகத்தை நோக்கிய நடைப்பயணம்) ஆகிய நூல்களுடன், பேராசிரியர் சுரேந்தரா அஜ்நாத் எழுதிய Compilation of ‘Old Testament of Indian Atheism’- 
இந்திய நாத்திக தொன்மையான கருத்துகளின் தொகுப்பு எனும் ஆங்கில நூல், வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் எழுதிய Essays on Matters which Matter (A Rationalist’s Perception)- முக்கியத்துவம் மிக்க கட்டுரைக் கோவை (ஒரு பகுத்தறிவாளரின் பார்வையில்) ஆங்கில நூல், தந்தை பெரியார் 1928, மற்றும் 1929ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட ஆங்கில ஏடு ரிவோல்ட் இதழ்களின் தொகுப்பு நூலாக Compilation of ‘Revolt’-Published by Periyar in 1928 &1929 ஆகிய நூல்கள்  உலக நாத்திகர் மாநாட்டில் வெளியிடப்பட்டன.

மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், அறிஞர் பெருமக்கள்

பன்னாட்டு மனிதநேயம் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் லண்டன் தலைமை செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், மேனாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா,  மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல்தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் சார்பில் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன(நிகர்நிலை பல்கலைக்கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பரிசு அளித்து சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு நன்றி கூறினார்.

பெரியார் உலகமயம்



உலக நாத்திகர் மாநாட்டில் டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் படங்களை திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் திறந்து வைத்தார்


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னெடுத்து தந்தைபெரியார் கொள்கைகளை உலகமயமாக்கும் பணிகளின் வெற்றிப் படிக்கட்டுகளாக   பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. உலகெங்கும் தந்தை பெரியார் கொள்கைகள் பரப்புகின்ற பணிகள் தொய்வின்றி நடந்துவருகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரியாரியம் பரவி வருகிறது.

பன்னாட்டளவில் அறிஞர் பெருமக்கள், பகுத்தறிவு, சுயமரியாதை, மனித நேயம், மனித உரிமைகளைப் போற்றுவோர் உலகத் தலைவர் தந்தை பெரியார் கொள்கைகள், நாத்திகக் கருத்துகள் யாவும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை உலகுக்கு பறைசாற்றும் வண்ணம் உலக நாத்திகர் மாநாட்டில்  ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


திருச்சியில் இன்று (5.1.2018) தொடங்கிய உலக நாத்திகர் மாநாட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் (அய்.இ.எச்.யூ.) ஆலோசனைக் குழு இயக்குநர் எலிசபெத் ஓகாசே புத்தகக் காட்சியை திறந்து வைத்தார். உடன் மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.

படுகொலை செய்யப்பட்ட நாத்திகர்கள் தோழர் கோவிந்த் பன்சாரே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, டாக்டர் நரேந்திர தபோல்கர் ஆகியோரின் படங்களை உலக நாத்திகர் மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்தபொழுது திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள் எழுந்து நின்று புரட்சிகர வணக்கம் செலுத்தினர் (திருச்சி, 5.1.2018)

- விடுதலை நாளேடு, 5.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக