பகத்சிங் தூக்கிலிடப்பட்டு எண்பது ஆண்டுகள் கழிந்தபின்னர், லாகூர் காவல்துறை யினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவு களை ஆராய்ந்து, பகத்சிங் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையைக் கண்டறிந்தார்கள் அதில் பகத்சிங் பெயர் இல்லை.
1928இல் பிரிட்டிஷ் போலீஸ் ஆபிசரைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் குறிப்பிடப்படவில்லை. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்து, பகத்சிங்கிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதும், குற்றமற்றவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது..
பகத்சிங் நினைவு ஃபவுண்டேஷன் தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேசி என்பவர், பிரிட்டிஷ் காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸ் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக, பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் சான்றிட்ட நகலைக் கோரி மனுச் செய்திருந்தார்.
பகத்சிங் மேற்படி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 23 வயதாக இருக்கும்போதே, 1931இல் லாகூர் சாத்மான் சௌக் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்டு 80 ஆண்டுகள் கழித்து, ஒரு நீதிமன்ற ஆணையின் கீழ் லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து பார்த்து, சாண்டர்ஸ் கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த முதல் தகவல் அறிக்கை அனார்கலி காவல் நிலையத்தில் 1928 டிசம்பர் 17 அன்று மாலை 4.30 மணிக்கு இரு `அடையாளம் தெரியாத துப்பாக்கி வைத்திருந்தவர் (Unknown gunmen)களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட் டிருந்தது. அனார்கலி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர்தான் இந்த புகாரின் முறையிடுபவரும் கண்ணால் கண்ட சாட்சியு மாவார்.
அவர், சாண்டர்ஸைத் துப்பாக்கியால் சுட்ட நபரை அவர் பின்தொடர்ந்ததாகவும், அவர் 5 அடி 5 அங்குலம் உயரம் உடையவ ராகவும், இந்து முகத்தைக் கொண்டவராகவும், சிறிய மீசையுடன் காணப்பட்டதாகவும், ஒல்லியான மற்றும் வலுவான தேகத்தைப் பெற்றவராகவும், வெள்ளை பைஜாமாவும், சாம்பல் நிற குர்தா அணிந்திருந்ததாகவும், சிறிய கறுப்புநிறத் தொப்பி அணிந்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
நீதிமன்றம் மேற்படி முதல் தகவல் அறிக்கையின் நகலை குரேசிக்குக் கொடுத்திருக்கிறது. குரேசி இது தொடர்பாக, பகத்சிங் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அடங்கிய நடுவர்மன்றம் வழக்கில் 450 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அவர்களை விசாரிக்காமலேயே பகத்சிங்கிற்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதித்தது என்றும், பகத்சிங் சார்பில் வாதாடிய வழக்குரைஞருக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பே அளிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
குரேசி, லாகூர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மீளவும் நடத்தவேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங் அப்பழுக்கற்றவர் என்பதை நிறுவிட நான் விரும்புகிறேன், என்று அவர் கூறினார். லாகூர் உயர்நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விரிவான அமர்வாயத்தை அமர்த்தக்கோரி, தலைமை நீதியரசருக்கு அனுப்பி இருக்கிறது.
-விடுதலை ஞா.ம.,26.3.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக