வியாழன், 31 ஜனவரி, 2019

பிப்.5 இல் புதுடில்லியில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கும் விழா



புதுடில்லி, ஜன.30 புது டில்லியில் நாடாளுமன்றம் எதிரில்  கான்ஸ்டிடியூசனல் கிளப்சபாநாயகர் அரங்கில் 5.2.2019 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது' வழங்கும் விழா நடைபெறுகிறது. மத்திய அரசின் சமூக நலத்துறை மேனாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.



சமூகநீதிக்கான


கி.வீரமணி விருது


அமெரிக்காவில் சிகாகோ இல்லினாய்சில் பெரியார் பன்னாட்டு மய்யம் 13.11.1994இல் தொடங்கப் பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் மேனாள் மத்திய அமைச்சரும், புதுடில்லி சமூகநீதி மய்யத்தின் தலைவருமாகிய (மறைந்த) சந்திரஜித்யாதவ் தொடங்கிவைத்தார்.

சீர்திருத்த செம்மல், புரட்சியாளர் தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி வருகின்ற வெளிநாடுவாழ் தொண்டர்களால் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ அளிக்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்களத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பணிகளை மதிக்கும் வண்ணம், அவர் பெயரில் ஆண்டுதோறும் சமூக நீதி விருது அளிக்கப்பட்டு வருகிறது.

சமூகநீதிக்காகபங்களிப்பும், பணியும் ஆற்றி வந்துள்ளவர்களை அடையாளம் கண்டு, அப்பணி யில் அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தவும், சமூக நீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விருது அளிக்கப்பட்டு வருகிறது.

சமூக சமத்துவம், மரியாதை, மனிதப்பெருமை களை மறுத்து வருகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இந்தியாவில் களம்கண்டுவருபவராகிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், சமூக நீதிக்காக பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார் பன்னாட்டு மய்யம் சிகாகோ சார்பில் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

நாடு, மதம்,  ஜாதி,  மொழி, பாலினம், மாற்றுத் திறனாளி பொருளாதார நிலை, குடும்பப் பின் னணி, அரசியல் பார்வை என சமூக அரசியல், பொரு ளாதாரம் உள்ளிட்ட எவ்விதத்திலும் பேதங்களின்றி விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ அளிக்கப்பட்டு வருகிறது.



இதுவரை


விருது பெற்றவர்கள்


மேனாள் பிரதமர் வி.பி.சிங், அகில இந்திய காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் சீதாராம் கேசரி, மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், உத்தரப்பிரதேச மேனாள் முதல்வர் செல்வி மாயாவதி, சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.டி.மூர்த்தி, தமிழ்நாடு காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் ஜி.கே.மூப்பனார், ஆந்திர உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி, மியான்மா யாங்கூன் வீராமுனுசாமி, மேனாள் முதல்வர் கலைஞர், கருநாடக மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார், குவைத் சமூக சேவகர் செல்லபெருமாள், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, சிங்கப்பூர் பெரியார் கம்யூனிட்டி சர்வீஸ் கலைச்செல்வன், பிற்படுத்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் விஅனுமந்த ராவ், மராட்டிய மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன்புஜ்பல், ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் தானேஸ்வர்சாகு, பீகார் முதல்வர் நித்திஷ்குமார், இலண்டன் கிரோய்டான் துணை மேயர்,  மைக்கேல் செல்வநாயகம் ஆகியோருக்கு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழா புதுடில் லியில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சமூக நலத்துறை மேனாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது.

- விடுதலை நாளேடு, 30.1.19

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பிற மாநிலங்களில் தந்தை பெரியார் விழா

தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில்  தந்தை பெரியார் 45ஆம் நினைவு நாள் கூட்டங்கள்




விசாகப்பட்டினம், ஜன.4 தெலங்கானா மாநிலத்தில் நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 45ஆம் நினைவு நாள் கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

விசாகப்பட்டினம்


நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில் ஜீடி சாரய்யா பேசும்போது, இந்துமதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் சமத்துவமின்மைக்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, பெண்களின் உரிமைகளுக்காக போராடி வென்றவர் தந்தைபெரியார் என்று குறிப்பிட்டார்.  அதன்காரணமாகவே, தந்தை பெரியாரை அய்க்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பு போற்றிப்பாராட்டி, நவீன சாக்ரட்டீசாக, மனித உரிமைப் போராளியாக அடையாளப்படுத்தியது

வடஇந்தியாவில் சமூகப்பணிகளுக்கான அமைப்புகள் மற்றும் பகுத்தறிவு நாத்திக இயக்கங்கள் சமுதாய மாற்றத்துக்கான அடித்தளமிட்டு முன்னேற்றமடையச் செய்து வந்துள்ளன. சுயமரியாதை இயக்கத்தை நிறுவி பரப்புரை மேற்கொண்டவர் தந்தை பெரியார் என்று கூட்டத்தில் பேசிய பல்வேறு அமைப்பினரும் குறிப்பிட்டனர்.

நாட்டின் பாதுகாப்பு என்கிற பெயரால், இந்துத்துவ வன்முறைகள் அதிகரித்து ஜனநாயகத்தை அழிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  நாத்திக மக்கள் சங்கம் சார்பில் கூறுகையில், மதமற்றவர்களாக லட்சக்கணக்கானவர்கள் தங்களை அறிவித்துக்கொள்வதற்கு தந்தைபெரியார் வழிகாட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். பெண்கள் முற்போக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் லட்சுமி பேசுகையில், கவுரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே போன்றவர்களை இந்துத்துவம்தான் கொலை செய்துள்ளது. அதுதான் இந்துத்துவப் பாசிசத்தின் உச்சமாக உள்ளது. தலித்தா முத்தி அமைப்பின் சார்பில் வெங்கடரமணா கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில், மராட்டிய மாநிலத்தில் கோரேகான் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்மீது நடத்திய மோசமான தாக்குதலுக்கு மதத்தின் தீமையாகிய ஜாதிமுறையே ஆணிவேராகும். மூடநம்பிக்கைகள் மற்றும் ஜாதிக்கு எதிராக நாம் போராடவேண்டும் என்று கூறினார்.

ஜம்மிகுண்டா


தெலங்கானா மாவட்டத்தில்  கரீம் நகரிலுள்ள ஜம்மி குண்டாவில் நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில்  தந்தை பெரியார் 45 ஆம் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. நாத்திக மக்கள் சங்கத்தின் கரீம் நகர் மாவட்டச் செயலாளர்  ராஜூ மற்றும் பாரத், ராஜூ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பெதாபள்ளி


கோதாவரிகனி மாவட்டம் பெதாபள்ளியில்  தந்தை பெரியார் 45ஆம் நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது.

கோதா வரிகனி மாவட்டத் தலைவர் ராஜலிங்கம் சிறப் புரையாற்றினார். செயலாளர் சுசித்ரா, ராஜமவுலி, மல்லண்ணா உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு, 4.1.19

புதன், 28 நவம்பர், 2018

மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)



சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.



மாநாட்டில் திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார்.



மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பெரியார் & அம்பேத்கர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயனாடை அணிவித்து தந்தை பெரியார் சிலையினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மகாத்மா ஜோதிபா ஃபுலே அறக்கட்டளை நீதாபாய் புலே ஆகியோர் வழங்கினர்.

-  விடுதலை நாளேடு, 25.11.18

* நீதித்துறையிலும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை - தேவை!

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் படம் திறந்திடுக!

சமூகநீதி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.

புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா ஃபுலேவின் அய்ந்தாம் தலைமுறையினரான நீதாபாய் புலே அவர்களுக்கு கழகத்தின் சார்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்பித்தார். வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மும்பை ரவிச்சந்திரன் உடன் உள்ளனர்.

மும்பை, நவ.27 தனியார் துறைகளில் இடஒதுக்கீடு, தந்தைபெரியார் படம் நாடாளுமன்றத்தில் திறப்பு உள்ளிட்ட ஒன்பது (நவமணி) அரிய தீர்மானங்கள் மும்பையில் நடை பெற்ற சமூக நீதி மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன. அனைத்து தீர்மானங்களையும் மகளிரணியினர் முன்மொழிந்தனர்.

மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  (24-11-2018 சனிக் கிழமை மாலை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

சமுக நீதி தொடர்பான இடஒதுக்கீடு முறைமைகளைச் சட்டமாக்கி 9-ஆம் அட்டவணையில் சேர்த்திடுக :-

நடுவணரசில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 60 (அறுபது) ஆண்டுகளுக்கும் மேலாகவும், பிற்படுத்தப்பட் டோருக்கு 1993ஆம் ஆண்டு முதலும் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருப்பினும், பல மாநிலங்களிலும், மத்திய ஆட்சியிலும் வெறும் அரசின் ஆணை மூலமாக மட்டுமே இந்த இடஒதுக்கீடு தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பு வந்தாலும், உடனே நீதிமன்றம் தலையிடும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, அவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. சிறீவள்ளி தயாளன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு இ.அந்தோணி,

தீர்மானம் 2

தனியார் துறையில் இடஒதுக்கீடு:-

புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக, மத்திய மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தனியார் துறை அரசாங்கத்தால் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, அதிகம் பாதிக்கப்படுவோர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட, பழங்குடியின மக்கள் தான்.  தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில், உயர் பதவிகளில் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பே என்ற நிலைதான் உள்ளது.

தனியார் துறை என்றாலும், அரசின் அனைத்துச் சலுகைகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவே சமூகப் பொறுப்பு தனியார் துறை நிறுவனங்களுக்கு கட்டாயம் உண்டு என்பதால் மேலைநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இடஒதுக்கீடு நேர்மறை செயல்பாடு நடைமுறையில் உள்ளது. அதே போன்று, இந்தியாவிலும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முறையே 27, 15, 7.5 விழுக் காடு இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியு றுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பொன்மாலா ஆரிய சங்காரன்

தீர்மானம் வழிமொழிந்தவர்: மானமிகு அ.கண்ணன்

தீர்மானம் : 3

நீதித் துறையில் இட ஒதுக்கீடு :-

நீதிபதிகள் நியமனங்களில் கீழமை நீதிமன்றங்களில் தற் போது இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் இட ஒதுக்கீடு முறை இல்லை. தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ள 28 நீதிபதிகளில் (மொத்தம் 31 பதவிகள்) ஒருவர் கூட தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிற்படுத்தப்பட்ட சமுகத்திலிருந்து ஒரே ஒருவர் மட்டும் நீதிபதியாக பதவி வகிக்கின்றார்.  இந்திய நாட்டு மக்கள் தொகையில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் தொகை 80 விழுக்காடு என்ற நிலையில் உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் இதுகாறும் வழங்கபட வில்லை.

உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் பெரும் பான்மையினர் மேல்ஜாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது ஓர் அதிர்ச்சியானத் தகவலாகும். எனவே இந்தியாவின் அனைத்து நீதி மன்றங்களிலும் இந்திய அரசமைப்பில் வழங்கப் பட்டி ருக்கும் இட ஒதுக்கீடு முறை காழ்ப்புணர்வின்றி நடைமுறைப் படுத்தப் பட்டு, உரிய விகிதாச்சார அடிப்படையில் நியமனங்கள் செய்யப் பட  வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. நங்கை குமணராசன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு வெ.சித்தார்த்தன்

தீர்மானம் : 4

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு

நிரந்தர விலக்கு வேண்டும்:-

சூத்திரனுக்கு கல்வி மறுக்கும் மனு சாஸ்திரத்தின் புதிய வடிவம் தாம் நீட் தேர்வு. பணம் படைத்தவன் வீட்டுப் பிள் ளைகள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற  நிலையை உருவாக்கியதன் மூலம் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை நிரந்தர மாக்கி சமூக நீதிக்கு எதிரான செயலின் வடிவமே நீட் தேர்வு.

நீட் தேர்வு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தன் 92 ஆவது அறிக்கையில் விருப்பமில்லாத மாநிலங்களை விட்டுவிட்டுக் கல்வி நீட் தேர்வை அமல் படுத்தலாம் என்று அறிக்கை அளித்தப் பின்னரும் நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குக் கோரியும் கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்கவும் உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன் மொழிந்தவர் : திருமதி ஜூலியட் இரவிச் சந்திரன்.

வழிமொழிந்தவர்கள்: மானமிகு ஜே.வில்சன்; அ.இராதா கிருட்டிணன்

தீர்மானம்- 5

வெளிமாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு:-

இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சமுக நிலையின் காரணமாக வாழ்வாதரம் தேடி 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். எனினும், இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப் பட்டுள்ள கல்வி, வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு இந்த மக்களுக்கு புலம் பெயர்ந்த மாநிலங்களில் மறுக்கப் படுகிறது. இது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான ஓர் உரிமை மறுப்பு என்று கூடச் சொல்லலாம்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்கள் கலைஞர் மு. கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் மகராஷ்ட்ரா மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இது மட்டுமின்றி மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள் பி.சவுந்திர ராஜன், சி.குப்புசாமி ஆகியோர் நாடாளு மன்றத்திலும் பேசியுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத்தின் ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களும் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் குரல் எழுப்பியதுடன், முதல்வரிடமும் பல முறை வலியுறுத்தியுள்ளார். இவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவிப்பதுடன், வெளிமாநிலங்களில் வாழும் மக்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின் படி இட ஒதுக்கீடு முறையை அமல் செய்திட உரிய சட்டத் திருத்ததை முன்னெடுக்குமாறு மகராஷ்டிர மாநில அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பேரரசி காமராசு

வழிமொழிந்தவர்கள்: மானமிகு சங்கர் திராவிட். மு.சசிகுமார்

தீர்மானம்: 6

ஆணவப் படுகொலைகளுக்கு முடிவு கட்டுக.

காதல் திருமணங்கள் சாதி மறுப்பு திருமணங்களாகும் போது ஆதிக்கச் சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடு கின்றனர். தமிழகத்தில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகள் வன்மையாக கண்டிக்கத் தக்கன. அச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர் : திருமதி. உமா கணேசன்

வழிமொழிந்தவர்கள்: மானமிகு இசக்கிப் பாண்டியன், பரமசிவம்

தீர்மானம்: 7

கிரீமிலேயர் முறையை நீக்குக:-

மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப் பட வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்த பிறகும் இதுவரை பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு 12  விழுக்காடு அளவிலேயே உள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) புகுத்தப்பட்டதும் இதற்கொரு முக்கிய காரணமாகும். அர சமைப்புச் சட்டத்தில் எங்கும் காணப் படாத இந்த கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-8

நாடாளுமன்றத்தில்

தந்தை பெரியார் படத்தினைத் திறந்திடுக !

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பாடுபட்டதற்காக இந்திய அரசால் தாமிரப் பட்டயம் அளித்தும் அவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டும், 125 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டும், மதிப்பளிக்கப்பட்டவரும் அய்.நா,வின் யுனஸ்கோ அமைப்பின் சார்பில் பாராட்டு விருது அளிக்கப்பட்டவரும், மக்கள் மத்தியில் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பரப்புரை செய்து பெருவெற்றி கண்ட புரட்சியாளரும் பெண்ணுரிமைக்கான உயர் சிந்தனை களைக் கூறியவரும், போராடிப் பல உரிமைகளை அவர் களுக்கு ஈட்டித் தந்தவரும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு இந்திய அரசமைப்புச்சட்டத்தில் முதல் திருத்தம் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தவரும்,  பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் உருவப் படத்தினை நாடாளுமன்றத்தில் திறக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும்  தந்தை பெரியார் பெயரில் ஆய்வுத்துறை ஒன்று தொடங்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

நீதி மன்ற தீர்ப்புகளை

மத ஈடுபாடுகளின்றி நிறைவேற்றிடுக!

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று பாலினப் பாகுபாடு இன்றி வழிபடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தனது    தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்புக்கு எதிராக சட்டத்தினை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு கோவிலுக்கு வழிபட வரும் பெண்களை வழிமறித்து  உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்துச் செயல்பட மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, காங்கிரசு உள் ளிட்ட கட்சிகள் மற்றும் இந்துமத அமைப்புகளின் அண்மைக் கால நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக மத உணர்வுகளைத் தூண்டி சட்டத்தைக் கையிலெடுக்கும் போக்கும் அதற்குத் துணைபோகின்ற அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசியக் கட்சிகள் என்று பறைசாற்றிக்கொள்ளும் பா.ஜ.க.; காங்கிரசு, நடவடிக்கைகள் இந்தியாவின் மதச் சார்பற்ற கொள்கைக்கும், மாநிலங்களின் இறையாண்மைக்கும் பெரும் தீங்காக அமையும் என்பதையும் இம்மாநாடு கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் அவ்வாறு செயல் படும் அரசியல் கட்சிகள் இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கருதி இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்திடுமாறு வேண்டுகின்றது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மும்பையில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்றோர்

-  விடுதலை நாளேடு, 27.11.18

திங்கள், 19 நவம்பர், 2018

மும்பையில் நவ. 24 மாநில சமூகநீதி மாநாடு



மும்பை, நவ.17 மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்  மாநில மாநில சமூகநீதி மாநாடு 24.11.2018 அன்று நடைபெறுகிறது.

மும்பை செம்பூர் ஆர்.சி.மார்க் பைன் ஆர்ட்ஸ் ஆடிட்டோரியம் சிவசாமி குளிர் அரங்கத்தில் 24.11.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சமூகநீதி மாநாடு தொடங்குகிறது.

சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.அன் பழகன்  நினைவரங்கத்தில் மும்பை பகுத் தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலைமையில் மாநில சமூக நீதி மாநாடு (ஜாதி தீண்டாமை ஒழிப்பு) நடைபெறுகிறது.

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் புதிய மாதவி நெறியாள்கையில், மும்பை புறநகர் திமுக சொற்பொழிவாளர் முகமது அலி ஜின்னா  மாநாட்டின் தொடக்க வுரையாற்றுகிறார்.

புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை நீதிபாய் புலே, நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், எம்அய்டிசி தலைமை நிர்வாக அதிகாரி பொன்.அன்பழகன் அய்.ஏ.எஸ், மும்பை சயான், கோலிவாடா தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன், மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ்.அண்ணாமலை, மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் அமைப்புச்செயலாளர் து.ஆ.கனகராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

‘ஏன் அவர் பெரியார்?’ தலைப்பில் தலை மைக்கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் கருத்துரையாற்றுகிறார்.

படத்திறப்பு


தந்தை பெரியார் படத்தை இரத்தினம் தொல்காப்பியன், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை புஷ்பம் பொற்கோ, மகாத்மா ஜோதிபா ஃபுலே படத்தை சற்குணம் ஆரிய சங்காரன், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் படத்தை தவமணி சண்முகராசன் ஆகியோர் திறந்துவைக்கிறார்கள்.

பரிசளிப்பு


பெரியார், அம்பேத்கர் வினா விடைப் போட்டியில் பங்கேற்ற மும்பை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்களுக்கு மும்பை திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டுகிறார்.

விருது அளிப்பு


திராவிடப் பெருந்தகை விருது நிகழ்வில் மும்பை புறநகர் திமுக முன்னாள் அவைத் தலைவர் வி.தேவதாசன் கலந்துகொள்கிறார்.

மாநாட்டுத் தீர்மான அரங்கம்


சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா ஆரிய சங்காரன், உமா கணேசன், ஜூலியட் இரவிச்சந்திரன், பேரரசி காமராசு ஆகியோர் தீர்மானங்களை முன்மொழி கிறார்கள்.

ஜாதி, மத வாதத்தை முறியடிப்போம்,


சமூக நீதிக் கொடியை உயர்த்திப்


பிடிப்போம் உரைவீச்சு


கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை புறநகர் மாவட்டச் செயலாளர் அலிசேக் மீரான், மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச் சாமி, மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேரா.சமீரா மீரான், விடுதலை சிறுத் தைகள் கட்சி மும்பை மாநகர செயலாளர் த.சு.சாலமன் இராசா ஆகியோர் உரையாற்று கின்றனர்.

மாநாட்டின் சிறப்புரை


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மாநாட்டின் முடிவில் ஆர்.பரமசிவம், மு.சசிகுமார்  நன்றி கூறுகின்றனர்.

நவ.25 இல்


‘இடஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’-கருத்தரங்கம்


மும்பை மாத்துங்கா சி.ஆர். புதிய பூக்கடை, தெலங் சாலையில் குஜராத்தி சேவா மண்டலில் மும்பை பகுத்தறிவாளர் கழகம், மும்பை திராவிடர் கழகம் சார்பில் ‘இட ஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஏ.இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார்.

மராட்டிய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் டாக்டர் பி.அன்பழகன் அய்.ஏ.எஸ்., நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், குஜராத் வருமான வரித்துறை இணை ஆணையர் நாத்திகர் மற்றும் பவுத்த நெறியாளர் அரவிந்த் சொந்தாக்கே அய்.ஆர்.எஸ், மும்பை தமிழ் எழுத்தாளர்கள் சங்க அமைப்புச் செயலாளர் அமலா ஸ்டான்லி, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மும்பை டாடா சமூக அறிவியல் பயிலகம் பேராசிரியர் ஏ.ராமய்யா ஆகியோர் கருத்தரங்க உரையாற்றுகின்றனர்.

கருத்தரங்க முடிவில்மும்பை யூனியன் வங்கி முதன்மை மேலாளர் (ஓய்வு) எஸ்.நல்லசேகரன் நன்றி கூறுகிறார்.

மராட்டிய மாநில திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கம், மும்பை எழுத்தாளர்கள் சங்கம், புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சமூக நீதி மாநாடு மற்றும் இடஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் பெருந் திரளாக கலந்துகொள்கின்றனர்.

- விடுதலை நாளேடு, 17.11.18

செவ்வாய், 13 நவம்பர், 2018

மலேசியா பள்ளிகளில் பெரியார் நூல்கள் இடம்பெறுகின்றன!



மலேசியா, செரம்பான் நகரத்தில் டான்சிறீ மாணிக்கவாசகம் சாலையில் அமைந்துள்ள லோபாக் தமிழ்ப்பள்ளியில் சுமார் நூறு மாணவர்களுக்கு தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், டாக்டர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய நூல்களை அன்பளிப்பாக திராவிட இயக்க பணியாளரும், தோட்ட தொழில்துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை நிறைமலி மேனகை, பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.கிருட்டிணன் மற்றும் பல ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

-  விடுதலை நாளேடு, 13.11.18

வியாழன், 1 நவம்பர், 2018

மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞருக்கு சிங்கப்பூரில் வீரவணக்கம்



சிங்கப்பூர், நவ.1 மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு சூவா சுகாங் வட்டாரத்தில் உள்ள பன்னோக்கு மண்டபத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி காலை நடைபெற்றது.

வீ. கலைச்செல்வம் குடும்பத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிங்கப்பூர் தமிழ் எழுத் தாளர் கழக தலைவர்  நா. ஆண்டியப்பன் தலைமை தாங்கினார். அவர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் முத்தமிழறிஞரின் தமிழ் இலக்கியப் பணிகளைப்பற்றி பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழறிஞர் முனைவர் சுப.திண் ணப்பன் அவர்களின் உரையை தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் திரு சுப. அருணாச்சலம் அவர்கள் வாசித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்மொழி பண்பாட்டுக்கழக தலைவர் மு. ஹரிகிருஷ்ணன், கவிமாலை அமைப்பின் தலைவர் இறை மதியழகன், காப்பாளர்  அன்ப ழகன்,பெரியார்பெருந்தொண்டர் நாகராசன், சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக சேவை அமைப்பின் தலைவர் மு.ஜஹாங்கீர், மக்கள் கவிஞர்மன்ற தலைவர் உத்தி ராபதி, கவிஞரேறு அமலதாசன், கவிஞர் இளங் கோவன், பொன்சுந்தராசு, ஜெகதீசன், ஜாகூர் உசேன்,  விசுவலிங்கம், மதியழகன், மணிமாலா,  சாரதா, மீனா, ரேணு, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின்  மாறன்,  கவிதா, ராஜராஜன், தமிழ்ச் செல்வி, பூபாலன், பல்கலைக் கழக மாண வர்கள் குந்தவை, வானதி, வளவன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் உறுப்பினர்கள், வெளி நாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு மறைந்த தலை வருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இறுதியாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.11.18