செவ்வாய், 16 டிசம்பர், 2025

கண்டோம் பெரியார் திடலை! கலங்கிய கண்களுடன் அய்யாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம்! -பஞ்சாபிலிருந்து...

 


பஞ்சாபிலிருந்து பெரியார் திடல் வந்த தோழர்களின் உருக்கமான மடல்:

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்  மண்டலத் தலைவர்கள் மாநாடு (Chairman Club Convention) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும். கரோனா தாக்கத்தால் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, இம்முறை வட இந்திய முகவர்களுக்காகத் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை வடபழனியில் நடைபெற்றது.

எங்கள் கிளையில் இருந்து நானும், அரவிந்தர் சிங் மற்றும் தலீர் சந்த் ஆகியோரும், ஜலந்தர் கிளையில் இருந்து குல்வீர் சிங் என்பவரும் இணைந்து இந்தப் பயணத்தைத் திட்டமிட்டோம்.

மாநாடு நவம்பர் 24 அன்று இருந்தாலும், எங்கள் வேண்டுகோளின்படி எல்.அய்.சி நிறுவனம் நவம்பர் 22-ஆம் தேதிக்கே பயணச் சீட்டுகளை உறுதி செய்தது. காரணம் எங்களுக்கு வாழ்நாள் ஏக்கமான பெ்ரியார் வாழ்ந்த மண்ணைப் பார்க்கவேண்டும் என்பதே!

சென்னையை நோக்கிப் பயணம்

நவம்பர் 22 அன்று காலை 7:20 மணிக்குச் சண்டிகரில் விமானம் ஏறிய நாங்கள், சரியாக 10:30 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையத்தில் எங்களுக்கான விடுதிக்குச் சென்றோம்.

அங்கு சிலரிடம் பெரியார் வாழ்ந்த இடங்கள் குறித்து கேட்டோம் சிலர் திருச்சி என்றார்கள். சிலர் ஈரோடு என்றார்கள். அது எல்லாம் சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் அங்கு செல்ல முடியாத நிலையில் பீகாரைச் சேர்ந்த எங்கள் விடுதித் தோழர் பெரியார் திடல் குறித்துக் கூறினார்.

பெரியார் இல்லத்தை நோக்கி…

மிகவும் மகிழ்ச்சி அடைந்த நாங்கள், நவம்பர் 23 எங்கள் பயணத்தின் நோக்கமான மாநாட்டுக்கு அப்பால், தமிழ்நாட்டின் தந்தை என்று போற்றப்படும் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் இல்லம் மற்றும் நினைவுச் சின்னத்தைப் பார்க்கத் தீர்மானித்தோம்.

நவம்பர் 24-ஆம் தேதி காலையில் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மதியம் சுமார் 2 மணியளவில் மாநாடு முடிந்ததும், உடனடியாக ஒரு வாடகை வண்டியைப் பிடித்து, பெரியார் அவர்களின் இல்லத்தை நோக்கிப் புறப்பட்டோம். மாநாட்டு முடிவால் ஏற்பட்ட அதிகப் போக்குவரத்து நெரிசலின் காரணமாக, நாங்கள் குறிப்பிட்ட இடத்தைச் சுமார் 5:30 மணிக்குத்தான் அடைந்தோம்.

நினைவிடத்தைப் பார்வையிடல்

பெரியார் இல்லத்தை அடைந்ததும், முழு உருவச் சிலை வடிவத்தில் இருந்த பெரியார் எங்களை வரவேற்றார். அந்தச் சிலையைப் பார்த்தபோது, எனது சிந்தனை 1879-ஆம் ஆண்டிற்குச் சென்றது. மூடநம்பிக்கைகள் மற்றும் சமூக இருள் சூழ்ந்திருந்த காலகட்டத்தில், ”புரட்சிகரமான மற்றும் அறிவியல் சிந்தனை, சமத்துவம்” குறித்து அவர் பேசிய தொலைநோக்குப் பார்வையை எண்ணி நான் வியந்துபோனேன்.

தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு வணக்கம் செலுத்திய பிறகு, வளாகத்தில் உள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களுக்கு மலர் வைத்து மரியாதை செலுத்திக் கவுரவித்தோம். அதற்குப் பின்னால் உள்ள இயக்கப் பணிகளுக்கான உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவிடத்திலும் நின்று அஞ்சலி செலுத்தினோம்.

எங்கள் உள்ளம் தந்தை பெரியார் காலத்திற்குச் சென்றது. எத்தகைய சமூகச் சூழலில் அவர் தனது வாழ்நாளை சாமானிய மக்களின் சுயமரியாதைக்காகவும் அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளை மீட்கவும் சுய மரியாதை இயக்கத்தை உருவாக்கி அதனை வழிநடத்தி, 100 ஆண்டுகள் கழித்து இன்று பெரும் அறிவுச் சமூகத்தை உருவாக அவர் பட்ட பாடுகளை அறிந்துகொண்டோம்.

அதன் பிறகு, அங்கே அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டோம். அங்கு வைத்திருந்த காட்சிப் பொருட் களைக் கண்டு கண்கலங்கி நின்றோம். தன்னுடைய உடல் நலம் சீர் கெட்டதைக் கூட துச்சமெனக் கருதி மூத்திரவாளியைச் சுமந்து கொண்டு தன்னுடைய இறுதி மூச்சு விடும் நாளில் கூட நீண்ட உரையாற்றினார்.

“இனி யாரொருவர் இவர் போல் பிறப்பார்கள்?” என்று என்னுடன் வந்தவர்களோடு நானும் கண்ணீர் வழிய நின்றோம். அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தபோது கனத்த இதயத்தோடு வெளியே வந்தோம்.

எங்களுக்கு எங்கள் தாய்மொழியான பஞ்சாபியிலேயே சரவணா ராஜேந்திரன் அவர்கள், தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எங்களுக்கு விளக்கிக் கூறிய விதம், அவர் பெரியார் அவர்களை எங்களுடன் அழைத்து வந்தது போலிருந்தது. அவரிடம் “அய்யா, உங்களைக் காண ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து சில தொண்டர்கள் வந்துள்ளனர்” என்று நாங்கள் சொல்வது போன்ற ஒரு உணர்வை அளித்தது.

இத்தகைய புரட்சிகரமான சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் இயக்கத் தோழர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

எங்கள் பயணத்தின் முதன்மை நோக்கம் மாநாட்டில் கலந்துகொள்வதாக இருந்தாலும், அங்கு சென்று தந்தை பெரியாருக்கு அவர்கள் வணக்கம் செலுத்திய அந்த அனுபவம், எங்கள் நினைவில் என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

– மோகன்லால் பிக்கா சிங்,

சஹித் பகத்சிங் நகர்,

பஞ்சாப்  972039444

(குறிப்பு: ‘மார்டன் ரேசனலிஸ்ட்’ ஓராண்டு சந்தா அளித்ததுடன் பஞ்சாப் சென்று மடலும் அனுப்பினார்கள். அதன் தமிழாக்கம்தான் இது.)

 - விடுதலை ஞாயிறு மலர்,6.12.25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக