வியாழன், 25 டிசம்பர், 2025

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம்- வீ. குமரேசன் (!-4)

பெரியார் சுயமரியாதை மனிதநேயத் தேவையைப் பறைசாற்றியது

 ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும், அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து மெல்போர்ன் நகரில் 4-வது மனிதநேய பன்னாட்டு மாநாட்டை சிறப்பாக நடத்தின.

ஆஸ்திரேலியா – விக்டோரியா மாநிலம், மெல்போர்ன் நகர் – கிளன் எய்ரா டவுன் ஹால், கால்ஃபீல்ட் (Glen Eira Town Hall, Caulfield, Victoria) இடத்தில் நவம்பர் 1 & 2 ஆகிய இரு நாள்களில் உலகின் பல நாடுகளிலிருந்து – அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், கத்தார் மற்றும் இந்திய நாட்டிலிருந்து கருநாடக மாநிலம் பெங்களூரிலிருந்தும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் பேராளர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினர்.

மனிதநேயம் – சுயமரியாதை, மற்றும் சமூகப் பிணைப்பு (Humanism-Self Respect-Social Cohesion) ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாநாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்தியா

2ஆவது பன்னாட்டு மாநாடு. 2019-அமெரிக்கா

தந்தை பெரியாரின் தத்துவத்தின் அடிப்படையே மனிதநேயம்தான்; மனிதர்களனைவரும் சமமானவர்கள் என்பதுதான் இதன் பொருள். இந்த சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கு பெரியார் வலியுறுத்தியது இரண்டு கூறுகளைத்தான்.  ஒன்று சுயமரியாதை மற்றது பகுத்தறிவு. சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையே இவை. சுயமரியாதையை எந்த ஒரு மனிதரும் இழந்துவிட சம்மதிக்க மாட்டார். பகுத்தறிவு தங்களுக்கு தொடர்பு இல்லாத ஒன்று எவரும் கூறிவிட முடியாது. ஆனால் எளிமையான இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்திட தந்தை பெரியார் கடுமையாகப் போராட வேண்டி வந்தது. இயக்கம் அமைத்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. சுயமரியாதையை இழக்க விரும்பாத மனிதன் தனக்குரிய சுயமரியாதையை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ற வகையில் வாழ்ந்திட முடியாதா? பகுத்தறிவு தனக்குரியது என்று உணர்ந்தவர்கள் அதனை தங்களது அணுகுமுறையில் நடவடிக்கைகளில், காட்டிட முடியாதா? இதற்கு எது தடையாக இருக்கிறது? அதனை தகர்த்திட முயன்றார் தந்தை பெரியார். தடை செய்வது எவ்வளவு பெரிய சக்தியாக கருதப்பட்டாலும் அதனை எதிர்க்கும் துணிச்சலை வளர்த்தெடுத்தவர் பெரியார்.

இந்தியா

3ஆவது பன்னாட்டு மாநாடு, 2022-கனடா

தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றல் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல நேரங்களில் சுட்டிக் காட்டிப் பேசுவார். கடவுளை எதிர்ப்பது பெரியார் இயக்கத்தின் கொள்கை அல்ல; கடவுள் கோட்பாடு, சடங்கு, வழிபாடு – இவை அனைத்தும் மனிதரிடையே சமத்துவத்தைக் கொண்டு வர மாபெரும் தடையாக இருக்கிறது. எனவே அதன் மீதான நம்பிக்கை நீக்கப்பட வேண்டும். சமுதாய சீர்திருத்தத்தைக் கொண்டு வர முனைந்த புரட்சியாளர் பலர் சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு கற்பித்த கடவுளை மறுக்க முன்வரவில்லை. அதனால், அவர்கள் முனைந்து பாடுபட்ட சீர்திருத்தங்கள் காலப்போக்கில் கரைந்து போய்விட்டன. நோயை நீக்கிட, நோயை ஏற்படுத்திடும் கிருமிகள் அழிக்கப்படுவதுதான் அறிவியல் சார்ந்தது. எனவே, பெரியார் கடவுள் மீதான நம்பிக்கையினை தகர்த்திட தொடர்ந்து பரப்புரை செய்தார். “கடவுள் இல்லை……” முழக்கத்தினை தனது இயக்கத்தின் செயல்பாட்டு முழக்கமாக்கினார். பகுத்தறிவு சார்ந்து மனிதர் தம்மை வளர்த்துக் கொள்வது சமத்துவத்திற்கு இட்டுச் செல்லும். பகுத்தறிவு நிலையின் தெளிவுதான் கடவுள் இல்லை என்பது. பகுத்தறிவு என்பது இயற்கையில் ஒவ்வொரு மனிதருக்கும் வாய்க்கப் பெற்றது. கடவுள் இல்லை என்பது பகுத்தறிவு. இது மனித சமத்துவத்திற்கான ஓர் அணுகுமுறையே. பெரியார் இயக்கத்தவர்கள் தாங்கள் கடைப்பிடித்திடும் பகுத்தறிவு அணுகுமுறையில், ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்கள் என அடையாளம் காட்டப்படுவதே தந்தை பெரியாரின் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். மனித சமத்துவத்தை அடையவே பல நாடுகளில் பலவகையில் மனிதநேயம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் முதலில் மனிதர்களாக வாழ முனைந்திட வேண்டும். மேலை நாடுகளில் அந்த மனிதநேயத்திற்கு எதிராக மதங்களின் ஆதிக்கம் இடைப்பட்ட காலங்களில் (Medieval age) இருந்து வந்தது. மதகுருமார்கள் அரசியல் ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தனர். மதத்தின் ஆதிக்கத்திலிருந்து அரசியலை மீட்டு எடுத்து, மனிதநேயம் வலியுறுத்தப்பட்டது. அதனை மதச்சார்பற்ற மனிதநேயம் (Secular Humanism) ஒன்றே மேலைநாடுகளில் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்தியா

4ஆவது பன்னாட்டு மாநாடு, 2025-ஆஸ்திரேலியா

ஆனால், நம் மண்ணில், மனிதருக்கு இழிவு நிலையை ஏற்படுத்திடுவதில் மதத்தின் பிடி மேலோங்கி இருந்தது; இன்றைக்கும் அந்த நிலை முற்றிலும் நீங்கியபாடில்லை. மனிதர் மீது சுமத்தப்பட்ட இழிவை நீக்கிட, இழிவு நிலையினை ஏற்படுத்தியது ‘கடவுள் கோட்பாடு’ என்ற நிலையில் அதனை துடைத்திடுவதும் சுயமரியாதை உணர்வு கொண்டு, பகுத்தறிவு அணுகுமுறையினை கைக்கொள்வதும் ஒவ்வொரு மனிதரின் இயல்பான கடமையாகும். அந்த இயல்பு நிலையினை கொண்டு வர தந்தை பெரியார் வலியுறுத்தியது சுயமரியாதை, மனிதநேயத்தையும்தான். அதை Self-Respective Humanism என்ற சொல்லாக்கத்தின் மூலம் தமிழறியாத மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் தமிழர் தலைவர் அவர்கள்.

1925இல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு கடந்து பீடு நடைபோடுகிறது. ‘சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தது ஏன்?’ என்ற கேள்விக்கு தந்தை பெரியார் அளித்த விளக்க உரையில் – இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ள சுயமரியாதை இயக்கம் சிறிய பரப்பளவு வெளியில் செயல்பட்டு வருகிறது. இயக்கத்தின் எதிர்காலச் செயல்பாடு இந்த அளவோடு நின்று விடாது. உலகம் முழுவதும் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள் பரவிட வேண்டும். சுயமரியாதையும், பகுத்தறிவும் மனிதருக்கு மட்டுமே சொந்தமானவை. மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பரவிட வேண்டிய, பயன்பெற வேண்டிய நிலையினைக் கொண்டது சுயமரியாதை இயக்கம். ஒவ்வொரு நாட்டிலும் மனிதர் சுயமரியாதை உணர்வை முழுமையாக உணர்ந்து கொண்டால், பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையை தங்களது வாழ்வில் கடைப்பிடித்தால் மனித சமுதாயத்தில் சமத்துவம் நிலவிடும் வாய்ப்பு ஏற்படும் என்ற பொருளில் விளக்கம் அளித்தார். தந்தை பெரியாரின் இந்த தொலைநோக்குப் பார்வையை நடைமுறையாக்குவதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ (Globalise Periyar Mission; Periyarize the Globe) என்ற முழக்கத்துடன் தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளுக்கு பயணித்து பரப்பி வருகிறார். பெரியாரை உலகமயமாக்கும் பணியின் ஒரு அணுகுமுறையாக, ‘பெரியார் பன்னாட்டு மாநாடு’ பல நாடுகளில் நடைபெறுவதற்கு அரும்பணியினை ஆற்றி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரியார் பன்னாட்டு மாநாட்டை நடத்திட அடிப்படைப் பணிகளை தொடங்கி அதன்படி ஒருங்கிணைத்து வருகிறார்.

இதுவரை நடைபெற்ற மாநாடுகள்

அனைத்து மாநாடுகளும் அமெரிக்கா-பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றன. பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு ஜெர்மன் நாட்டு கொலோன் நகரில் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று நாள்களும் (27, 28 & 29 ஜூலை 2017) கொலோன் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் முன்னெடுப்பில் ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் நடந்தேறியது. உலகின் பல நாடுகளிலிருந்து பல்வேறு மனிதநேய அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள், அமைப்பைச் சார்ந்தோர் கலந்து கொண்டனர்.

2019-ஆம் ஆண்டில் அமெரிக்கா – மேரிலாந்து மாநிலத்தில் ஸ்பிரிங்பீஃல்ட்-ல் இரண்டாவது பன்னாட்டு மாநாடு 21 & 22 செப்டம்பர் 2019ல் நடைபெற்றது. மாநாட்டின் நோக்கமாக சுயமரியாதை, மனிதநேயம் ஆகியவற்றைக் கொண்டு நடந்தேறியது. பெரியார் பன்னாட்டு மய்யத்துடன், அமெரிக்க மனிதநேயர் அமைப்பு (American Humanist Association) இணைந்து மாநாட்டை நடத்தினர். மாநாட்டில் அமெரிக்க நாட்டு மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அறிஞர்கள், பல்வேறு வகையான ஊடகவியலாளர்கள் பங்கேற்று மாநாட்டைச் சிறப்பித்தனர்.

அடுத்த மாநாடு கரோனா பாதிப்பில் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில், இரண்டு ஆண்டு இடைவெளியில் நடத்தப்பட வேண்டிய மாநாடு உரிய காலத்தில் நடத்தப்பட முடியாமல் போயிற்று. 2022-ஆம் ஆண்டில் கனடா நாட்டு டொரண்டோ நகரில் மூன்றாவது பன்னாட்டு மாநாடு செப்டம்பர் 24 & 25 ஆகிய நாள்களில் நடைபெற்றது.  இந்த மாநாட்டை கனடா மனிதநேயர் (Canada Humanist) மற்றும் உலகளாவிய அமைப்பான விசாரணை மய்யத்தின் (Centre For Inquiry) கனடா நாட்டு கிளை (Canada Chapter) ஆகியவற்றுடன் பெரியார் பன்னாட்டு மய்யமும் சேர்ந்து நடத்தின. இந்த மாநாட்டில், பெரியார் மனித நேயத்தை பரப்பிடும் பணிகளை ஆற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை Canada Humanist அமைப்பினர் வழங்கினர்.

2025ஆம் ஆண்டு நவம்பர் 1 & 2 ஆகிய நாள்களில் ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் நடந்து முடிந்தது 4ஆவது பன்னாட்டு மனிதநேய மாநாடு. இதனை ஒருங்கிணைத்து நடத்தியது ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும், அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பினரும். PATCA-எனும் சிந்தனை வட்டம் மனிதநேய மாநாட்டை நடத்திட விரும்பிய வேளையில் அதற்கான ஆலோசனைகளைப் பெற்றிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்திருந்தனர். திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் உடன் சென்றிருந்தார். PATCA அமைப்பினர் அங்குள்ள தலைவர்களை பல ஊர்களில் சந்தித்து, கலந்துரையாடி, பின்னர் சில நகரங்களில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதிலும் உரையாற்றிவிட்டு திரும்பினர்.  ஆசிரியர் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் கடந்த நான்கு மாதங்களாக காணொளி வாயிலாக PATCA அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு அனுபவப் படிப்பினை பகிர்ந்து ஒருங்கிணைத்தார். PATCA அமைப்பின் தலைவர் முனைவர் மகிழ்நன் அண்ணாமலை, துணைத்தலைவர் மருத்துவர் ஹாரூண், பொதுச்செயலாளர் சுமதி விஜயக்குமார், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அரங்க மூர்த்தி மற்றும் தோழர்கள் தாயுமானவர், பொன்ராஜ், சரவணன் என பலரின் கடுமையான உழைப்பு, மெல்போர்ன் மாநாடு சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக அமைந்தது.  ஒவ்வொரு பொறுப்பாளரும் தமக்கு அளிக்கப்பட்ட பணியினை செம்மைப்படுத்தி நடத்திக்காட்டியது அனைவரது பாராட்டுதலைப் பெற்றது.

– தொடரும்

- விடுதலை நாளேடு,18.11.25

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் பெரியார் பன்னாட்டு மெல்போர்ன் மாநாடு தொடங்கியது (2)

 – வீ. குமரேசன்

முதல்நாள் நவம்பர் 1ஆம் நாள் காலை 8.00 மணியிலிருந்து மாநாட்டில் நேரடியாக வந்து பங்கேற்க விரும்பியவர்கள் (பெரிதும் மெல்போர்ன் நகரைச் சார்ந்தவர்கள்) தங்களைப் பதிவு செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களாகவே பல நாடுகளிலிருந்து இணைய வழியாகப் பலர் பதிவு செய்திருந்தனர்.

நாட்டின் முன்னோடி மூத்தோருக்கு மரியாதை

ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் அந்தக் கண்டத்திற்கு ஆங்கிலேயர்களின் குடியமர் வுக்கு முன்பாகவே வாழ்ந்து வந்தோருக்கு மரியாதை தெரிவித்து நிகழ்ச்சியினை தொடங்குவது அந்த நாட்டின் வழக்கம். அந்த வகையில் அந்த முன்னோடிக் குடிகளின் வரும் தலைமுறையினருக்கும் மரியாதை செய்து அவர்களையும் வரவேற்றனர். அடுத்து ஆஸ்திரேலியாவின் கீதம் இசைக்கப்பட்டது. அடுத்ததாக மொழி வாழ்த்து பாடப்பட்டது. அனைவரும் எழுந்திருந்து மரியாதை செலுத்தினர்.

முனைவர் அண்ணாமலை மகிழ்நன்

மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்கள், பார்வை யாளர்கள் மற்றும் பல நாட்டுத் தலைவர்கள், ஆஸ்தி ரேலிய நாட்டு மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் வரவேற்று உரையாற்றினார்.

தமிழ்நாடு

மாநாட்டில் ஆ.இராசா

தமிழ்நாடு முதலமைச்சரின் தொடக்கவுரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரியார் பன்னாட்டு மாநாட்டிற்கு வழங்கிய தொடக்க உரையினை பதிவு செய்து அனுப்பிய அந்த பதிவுக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. கடல் கடந்து பெரியாரின் மனிதநேய பன்னாட்டு மாநாடு ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் நடைபெறுவது குறித்து தனது மகிழ்ச்சியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஒளிபரப்பப்பட்டது.

ஆஸ்திரேலிய நாட்டு மாண்பமை செனட்டர்

மாநாட்டின் தொடக்க உரையினை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் புதிய தெற்குவேல்ஸ் செனட்டர் டேவிட் ஸூபிரிட்ஜ் (David Shoebridge) வழங்கினார்.

தமிழர் தலைவரின் முதன்மை உரை

தொடக்க நிகழ்ச்சியின் முதன்மை உரையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி வழியாக வழங்கினார். ஆசிரியர் அவர்களது பேச்சின் ஒரு பகுதி:

சமூக நெருக்கத்திற்கும், ஒருங்கிணைப்பிற்கும் எங்கள் நாட்டில் மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பதே ஜாதி அமைப்புதான். ஜாதிகள் எப்போதுமே எல்லோரையும் பிரித்துப் பார்ப்பவை. பாகுபாடற்ற நெருக்கம் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கும். ஜாதிப் பாகுபாடுதான் எங்கள் நாட்டில் அதைத் தடுத்து வந்துள்ளது; இன்றும் தடுத்து வருகிறது.

தமிழ்நாடு

அரங்கமூர்த்திக்குப் பாராட்டு

சமூக நெருக்கத்தின் அடிப்படையாக விளங்கக் கூடியது சுயமரியாதை. நாம் ஏன் அடிமைகளாக வாழவேண்டும் என்றும் பழமைவாத சிந்தனைகளை நாம் ஏன் ஏற்கவேண்டும் என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைக்கிறது நம் சுயமரியாதை. நீண்டகாலமாகவே ஒரு சிலர், பலரை அடிமைப்படுத்தி வாழும் அவலநிலை எங்களுக்குத் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இதன் விளைவாகவே தந்தை பெரியாரின் அயராத முயற்சிகளின் பலனாக 1925இல் சுயமரியாதை இயக்கம் துவங்கியது. அவருடைய உயர்ந்த கொள்கையை உளமாற வரவேற்றார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒருமித்த கருத்துடன் போராடி வாழ்ந்தவர்கள் அவர்கள் இருவரும்.

தந்தை பெரியார் – பாபா சாகேப்
அம்பேத்கர் படங்கள் திறப்பு

மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியில் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான மனிதநேய தத்துவத்தினை வழங்கிய சமூகப் புரட்சியாளர்கள் தந்தை பெரியார் – பாபா சாகேப் அம்பேத்கர் படங்கள் திறக்கப்பட்டன.

தந்தை பெரியாரின் ஒளிப்படத்தினையும், பாபாசாகேப் அம்பேத்கரின் ஒளிப்படத்தினையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் இந்திய ஒன்றிய மேனாள் அமைச்சர், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை ஆ. ராசா அவர்களும், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் திறந்து வைத்தனர்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார
நிறுவனத்தின் நூல்கள் வெளியீடு

மாநாட்டில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பதிப்பித்த நூல்கள் வெளியிடப்பட்டன.

  • ‘ஆஸ்திரேலியாவில் பெரியார்’ – திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் 4-ஆம் பெரியார் பன்னாட்டு மாநாட்டின் முன்னேற்பாடு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு 2025, மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றது பற்றியும், மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பேசியவை ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது.
  • ‘Death’ – பெரியார் மருத்துவ சேவை மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள், ‘மரணம் எதனால் ஏற்படுகிறது?’ என்பது பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘மருத்துவ அறிவியல் கட்டுரைகளின்’ தொகுப்பு நூல் இது.

இந்த இரண்டு நூல்களும் மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் மூன்று சுயமரியாதை மாகாண மாநாடுகளில் (செங்கல்பட்டு, ஈரோடு, விருதுநகர்) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழக்குரைஞர்
அ.அருள்மொழி அவர்கள் தமிழில் தொகுத்த ‘திராவிடப் பேராணை – சட்டங்களாகிய தீர்மானங்கள்’ மற்றும் ஆங்கிலத்தில் தொகுத்த ‘Dravidian Charter – Resolutions to Legislation’ புத்தகமும் வெளியிடப்பட்டன.

‘புதிய குரல்’ அமைப்பின் சார்பாக ஓவியா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘On Rationalism’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.

சமூகநீதி – அமர்வு

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பேராளர்கள் அரங்கிற்குள் வந்து அமர்ந்தனர்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமூகநீதி அமர்வின் தொடக்கவுரையினை ஆற்றினார். அடுத்து ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் பால்லாங், ‘இல்லச் சூழல், தொடக்கநிலை மற்றும் தனி மனித உருவாக்கத்தில் பண்பாட்டு நீதி (Cultural Justice in Home made, Amateur and Do it Yourself Creativitiy) என்ற தலைப்பில் உரையாற்றினார். பண்பாட்டில் நீதி என்பது சொந்த விருப்பு வெறுப்பு உள்ளிட்ட தளங்களையும், உள்ளடக்கும் என்ற பொருளில் சுருக்கமாகப் பேசினார்.

நவீன அடிமைத்தனம் (Modern Slavery) என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் மேனாள் செனட்டர் மாண்பமை லீ ரோகிஅன்னான் (Lee Rohiannon) உரையாற்றினார். ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ஆட்சியினரால் கைது செய்யப்பட்டவர் அவர். அடுத்து “உலக முன்னேற்றத்திற்கு ஜாதி ஒரு தடை” (Caste as a Barrier to Global Progress) எனும் தலைப்பில் மெல்போர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹரிபாபுஜி உரையாற்றினார். இந்தியாவிலிருந்து படித்து வெளியேறி பல நாடுகளில் சிறந்த பணிநிலையில் இருப்பவர்கள் இந்தியாவில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டை தாங்கள் செல்கின்ற நாட்டுச் சூழலிலும் கடைப்பிடித்து வருகின்ற அவலநிலையைச் சுட்டிக்காட்டினார். பாகுபாடு காட்டுவதற்கு எதிராகச் சட்டங்கள் சில நாடுகளில் நிலவி வந்தாலும் அதனையும் மீறி ஜாதிப் பாகுபாடு தலைதூக்கி வருகிறது. இந்த ஜாதிப் பாகுபாட்டினால் பல நாடுகளின் முன்னேற்றம் தடைப்படுகின்ற நிலைமைகள் நீடிக்கின்றன. ஜாதிப் பாகுபாடு உலகளாவிய அளவில் ஆபத்தினை விளைவிக்கவல்லது. இதனை எதிர்த்து அந்தந்த நாடுகள் கடுமையான சட்டத்தினை இயற்றி ஜாதிப் பாகுபாட்டினை ஒழிக்க முன்வரவேண்டும் என்ற எச்சரிக்கையினை தெரிவித்து உரையாற்றினார்.

நல்வாழ்வும் பகுத்தறிவும் -அமர்வு

அடுத்த அமர்வு நல்வாழ்வு மற்றும் பகுத்தறிவும் (Health and Rationalism) என்ற தலைப்பில் துவங்கியது. ஆஸ்திரேலிய நாட்டின் செனட்டர் மாண்பமை டாக்டர். மைக்கேல் ஆனந்தராஜா அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். தமிழ் பூர்வீகத்துடன் ஆஸ்திரேலியாவில் செனட்டராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் அவர். அடுத்து முதன்மை உரையினை ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் துணைத் தலைவர் டாக்டர். முகம்மது ஹாரூண் காசிம் அவர்கள் வழங்கினார். மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் அவர்.

அடுத்ததாக மனிதநேயமும், மருத்துவ நெறியும் (Humanism and Medical Ethics) என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் டாக்டர் கார்த்திக் தங்கராஜ் உரையாற்றினார். தனது உரையின் ஊடாக ‘மனிதநேயம் என்பது பகுத்தறிவும், ஒத்தறிவும் சேர்ந்த இயல்பு’ (Humanism is the combination of rationalism and empathicism) என வெகுநேர்த்தியாக மாநாட்டு நோக்கத்தினை வெளிப்படுத்தினார். பின்னர் பெரியார் மருத்துவ சேவை மய்யம் (Periyar Medical Mission) அமைப்பின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் ‘பகுத்தறிவும் மருந்துப் பொருள்களும்’ (Rationalism and Medicines) என்ற தலைப்பில் உரையாற்றினார். தந்தை பெரியாருக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்கள் கூறியதை நினைவுகூர்ந்து பேசினார். தஞ்சையில் ஒருமுறை மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றிட பெரியாரை அழைத்திருந்தனர். தனது உரையின் பொழுது, ’மனிதருக்கு ஏற்படும் நோய்கள் என்பவை கடவுள் கொடுத்த தண்டனை என்ற உண்மை மக்களிடம் பரவலாக நிலவுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களைக் குணப்படுத்துவதால் மருத்துவர்கள் கடவுள் விதித்த தண்டனைக்கு எதிராக நடப்பவர்கள் என்று கருதப்படலாம். நானும், எனது இயக்கமும் ‘கடவுளின் செயலுக்கு’ எதிராக செயல்படுபவர்கள் என்பதாக அறியப்படுகிறோம். எனவே அந்த வகையில் நாங்களும், மருத்துவர்களும் ‘கடவுளுக்கு எதிரானவர்கள்’ என்று உரையாற்றி நகைச்சுவையுடன் பகுத்தறிவு கருத்தாழமிக்க பேச்சை வழங்கினார்.

மெல்போர்ன் மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் இரா.கவுதமன் அவர்கள், இன்றைக்கும் மனிதருக்கு அம்மை நோய் வந்துவிட்டால், ‘மாரியாத்தாள் (தண்டனை) வந்து விட்டாள்’ என்று நம்பி உரிய மருத்துவ சிகிச்சையினை மறுக்கும் மக்களும் உள்ளனர் என்று நடைமுறையில் உள்ளதை எடுத்துக் கூறினார். மருத்துவச் சேவையும், மருந்துப் பொருள்களும் பகுத்தறிவு சார்ந்த பயன்பாட்டிற்கு உரியவை என்பதை சுட்டிக் காட்டினார். அடுத்ததாக ‘இடையூறு காலங்களில் மருத்துவச் சேவைகளின் பங்கு’ (Role of Doctors during Distruptive Times) எனும் தலைப்பில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற டாக்டர் ஆர்.கோகுல் கிருபா சங்கர் உரையாற்றினார். இடையூறு ஏற்படும் காலங்களில் மனிதர்களின் செயல்பாடுகளில் பகுத்தறிவு அணுகுமுறை மங்கி விடுகிறது. அந்த நிலையிலிருந்து மனிதர்களை பகுத்தறிவு சார்ந்த மருத்துவ சேவையினால் அவர்களை மீட்டெடுக்கும் பணியில் மருத்துவர்கள் மகத்தான பங்கினை ஆற்றி வருகின்றனர். நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் அடுத்த அமர்வு தொடங்கியது.

மனித நேயமும், சட்டமும் – அமர்வு

‘புதிய குரல்’ அமைப்பின் தலைவர் ஓவியா அவர்கள் அமர்வின் தொடக்க உரையினை ஆற்றினார். அமர்வின் முக்கிய உரையினை கருநாடக மாநில அரசின் மேனாள் தலைமை வழக்குரைஞரும், சமூகநீதி செயற்பாட்டாளருமான வழக்குரைஞர் முனைவர் பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்கள் வழங்கினார். தனது உரையின் பொழுது இனப் பாகுபாடும் (racial discrimination), ஜாதிப் பாகுபாடும் (caste discrimination) ஒழிக்கப்பட வேண்டியவையே எனக் குறிப்பிட்டு விட்டு அமர்ந்திருந்த பேராளர்களை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். இனப்பாகுபாட்டைவிட ஜாதிப் பாகுபாடு எந்த வகையில் மோசமானது எனக் கேட்டார். பேராளர்கள் பக்கமிருந்து எவரும் பதிலளிக்க முன்வராத நிலையில், பேராளராகப் பங்கேற்ற திராவிடர் கழக மகளிர் அணியின் மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் எழுந்து நின்று பதிலளித்தார்.

“ஒடுக்கப்பட்ட மக்களை இழிநிலைப்படுத்திடும் போக்கு இனப்பாகுபாட்டில் கிடையாது. ஜாதிப் பாகுபாட்டின் தனித்தன்மையே ஒடுக்கப்பட்டோரை இழிநிலைக்கு ஆளாக்கும் போக்கு இருப்பதுதான். இனப் பாகுபாட்டைவிட மோசமானது ஜாதிப்பாகு பாட்டில் சுமத்தப்படும் இழிநிலையே” என்றார் அவர்.

தகடூர் தமிழ்ச் செல்வியின் பதிலைக் கேட்டு வழக்குரைஞர் ரவிவர்மகுமார், ‘மிகவும் சரி’ எனக் கூறி பாராட்டு தெரிவித்தார். பெரியார் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் கொள்கைத் தெளிவில் மிகவும் சரியாக உள்ளனர் என்பதைப் பறைசாற்றுவதாக தகடூர் தமிழ்ச்செல்வியின் பதில் இருந்தது.

அடுத்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக வாதிடும் முனைவர் ஆதித்ய சொந்தி அவர்கள் ‘இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் அம்பேத்கர் – ஓர் அதிகாரப்பூர்வமான ஆய்வு’ (Ambedkar in Judgments of the Supreme Court of India : An Authenticity Audit) எனும் தலைப்பில் உரையாற்றினார். சமூகநீதி மற்றும் சமூகசீர்திருத்தம் குறித்த வழக்குகளில் அம்பேத்கரின் கூற்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது குறித்து விரிவாகப் பேசினார்.

அடுத்து ஆஸ்திரேலியாவின் தினகரன் செல்லையா ‘ஸநாதன கோட்பாடுகளில் ஜாதிப்பாகுபாட்டின் வேர்கள்’ (Roots of Caste Discrimination in Sanadan Laws) என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘இந்திய சமூகத்தில் ஜாதிப் பாகுபாடு நிலைத்து விட்டதற்கு நிரந்தரமானது’ என்று பொருள்படும் ஸநாதனம் தான் அடிப்படைக் காரணம் என்றும், அதுவே பல நூற்றாண்டுகளாக ஜாதியப் பாகுபாடு இந்திய மண்ணில் நிலைத்துவிட்டதற்கு மூல காரணம் எனவும் எடுத்துரைத்தார்.

அடுத்ததாக, இங்கிலாந்து – ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்வி மாணவி இனியா பிரபு வசுமதி ‘இந்திய சமூக அரசியல் தளத்தில் ஒரு விசாரணை’ (An Enquiry into India’s Socio-Political Landscape) எனும் தலைப்பில் உரையாற்றினார். இதே தலைப்பில் இவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கி அண்மையில் சென்னை – அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அந்தப் புத்தகத்தினை வெளியிட்டு வாழ்த்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்வின் இறுதி உரையாக ‘ஆதிக்க தலைமைப் பண்பு மிக்க ஆண்களின் மனித உரிமை மீறல்கள்’ (Human right violations, Alpha Males) எனும் தலைப்பில் ஜப்பான் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஆர்.செந்தில்குமார் பேசினார். ஆல்பா ஆண்கள் என்பவர்கள் தலைமைப்பண்பு மிக்கவர்களாகவும். ஒத்தறிவு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  அதே சமயம் ஆதிக்க மனப்பான்மையுடன் சரியாக நடந்து கொள்கிறோம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடுவார்கள். எனவே, தன்னளவில் நியாயம் என்பதை எவ்வளவு சரியாகக் கணித்தாலும், உரியவரின் வெளிப்படுத்தலின் அடிப்படையில் செயல்படுதல் ஆகச் சிறந்தது என்பதே அவருடைய உரையின் கருப்பொருள் ஆக இருந்தது.

மனித நேயமும் ஊடகங்களும் – அமர்வு

தேநீர் இடைவேளைக்குப் பின்னர், ‘மனிதநேயமும் ஊடகங்களும்’ (Humanism and Media) எனும் தலைப்பில் அமர்வு நிகழ்வுகள் நடந்தன. அமர்வின் முதன்மை உரையினை இந்திய நாடாளுமன்ற – மாநிலங்களவை மாண்பமை உறுப்பினர் கவிஞர் ராஜாத்தி சல்மா வழங்கினார்.  அடுத்து ‘மனித நேயமும் இலக்கியங்களில் பகுத்தறிவும்’ (Humanism and Rationalism in Literature) எனும் தலைப்பில் சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் மா. அன்பழகன் பேசினார். தனது பேச்சில், கோவாவின் விடுதலைக்காகப் போராடி போர்ச்சுகல் நாட்டு சிறையில் அல்லல்பட்ட ராணடே, விடுதலைக்குப் பின்னர், தனது விடுதலைக்கு வித்திடும் வகையில், போப்பாண்டவரை அறிஞர் அண்ணா வாடிகன் நகரில் சந்தித்தபொழுது, வைத்த வேண்டுகோளை நன்றி பெருக்குடன் வெளிப்படுத்தி, சென்னைக்கு வந்து அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தியதை தனது (மா.அன்பழகன்) திரைப்படத்துறை சார்ந்த பன்முக ஆற்றலுடன் அனைவரும் ஆர்வமுடன் கேட்கும் வகையில் உணர்ச்சிகரமாக எடுத்துரைத்த பாங்கு பாராட்டுதலைப் பெற்றது.

அடுத்து, கத்தார் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த மோகித் பலகிரி அவர்கள் ‘பெரியார் சிந்தனையின் பல்வகைப் பரிமாணங்கள்’ (Periyar Intersectionality) எனும் தலைப்பில் உரையாற்றினார். பெரியார் சிந்தனைகளின் பல்வகைப் பரிமாணங்களின் மய்ய ஓட்டம் என்பது மனிதநேயமும், மனித சமத்துவமுமே என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

‘ஆஸ்திரேலியாவில் ஜாதியத்தை தடுத்தல்: ஒரு விவரணம்’ (Documentary : Resisting Casteism in Australia) எனும் தலைப்பில் சீன நாட்டு நெய்போ – நாட்டிங்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் விக்ரந்த் கிஷோர் விவரணப் படத்துடன் விளக்கமும் தந்து உரையாற்றினார்.

முதல்நாள் மாநாட்டின் நிறைவுக் குறிப்பினை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவர் அரங்கமூர்த்தி அவர்கள் வழங்கினார். மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு நிறைவடைந்தது.

– தொடரும்

- விடுதலை நாளேடு,19.11.25

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் ‘திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சி’ – கருத்து பரவியது (3) — வீ. குமரேசன்

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 9.00 மணிக்குத் தொடங்கின. திறந்தவெளி அமர்வில் மூன்றுவித தொடக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. முதல் உரையினை கிஸ்ஃபுலோ (Kiss Flow) அமைப்பின் நிறுவனரும் – தலைமைச் செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் அவர்கள் ஆற்றினார்.

திராவிட மாடல் ஆட்சியில்
வளர்ச்சி – சிறப்பு அமர்வு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைக் கூறுகள் எந்த அடிப்படையிலானவை என்பதை விளக்கிக் கூறிவிட்டு தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி நிலை குறித்து, நாட்டின் பிற மாநிலங்களின் வளர்ச்சியுடனும் பல நாடுகளின் வளர்ச்சியுடனும் ஒப்பிட்டுப் பேசினார். மற்றப் பகுதிகளின் வளர்ச்சியிலிருந்து தமிழ்நாடு எப்படிப்பட்ட நிலையில் தனித்து நிற்கிறது என்பதையும், சிறப்பாக இருக்கிறது என்பதையும் புள்ளி விபரக் குறிப்புகளடங்கிய ஒளிப்பதிவினைக் காட்டி பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கினார்.

திராவிடர் கழகம்

அடுத்த உரையினை ஆற்றிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் ஓர் அருமையான தளத்தில் திராவிடர் வரலாற்றினை – வெளியில் இருந்து வந்தோர் காலம் தொடங்கி இன்று வரை உள்ளதை 10 நிமிட விவரணப் படமாக – விளக்கப்படமாக வெளியிட்டு உரையாற்றினார். அந்த விவரணப் படம் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றினை காட்சிப் பதிவுகளாக விளக்கியது ஒரு புதிய அணுகுமுறையாகவும், அதில் பல்வேறு நிலைகளைச் சென்றடையலாம் என்பதற்கு ஆக்கப்பூர்வ நம்பிக்கையினைத் தருவதாகவும் அமைந்திருந்தது.

மூன்றாம் உரையினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி வழங்கினார்.

திராவிடர் கழகம்

மனித நேயமும் பகுத்தறிவும்

தேநீர் இடைவேளைக்குப்பின் மாநாட்டின் அய்ந்தாம் அமர்வு தொடங்கியது. அமர்வின் தலைப்பு – ‘மனிதநேயமும் பகுத்தறிவும்’ (Humanism and Rationalism) என்பதாகும்.

முதன்மை உரையினை அய்க்கிய நாடுகள் அவையின் மேனாள் முதன்மை அரசியல் அதிகாரி ஆர். கண்ணன் வழங்கினார். அடுத்து கருநாடக மாநிலத்தில் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி பணிநிறைவு பெற்ற அர்கேஷ் கவுடா ‘இந்தியாவில் மனிதநேயமும் ஜாதிப் பாகுபாடும்’ (Humanism and Caste Discrimination in India) என்ற தலைப்பில் உரையாற்றினார். உலகில் அமைதி நிலவுவது அதற்கு முன்பு அனைவருக்கும் சமத்துவ நீதி வழங்கப்படும் நிலையில்தான் சாத்தியப்படும் (Justice must be prior to peace) எனும் உண்மைத் தேவையை பேச்சின் ஊடே சொல்லிச் சென்றது அரங்கில் உள்ளோரை சிந்தனை வயப்படச் செய்தது.

திராவிடர் கழகம்

‘ஹ்யூமனிஸ்ட் ஆஸ்திரேலியா’

அடுத்ததாக ஹ்யூமனிஸ்ட் ஆஸ்திரேலியா (Humanists Australia) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மேரி அன்னி கோஸ்குரோவ் (Mary – Anne Cosgrove) ஒன்பது மனிதநேய நெறிகள் (9 Humanist Values) என்ற தலைப்பில் உரையாற்றினார். மாநாடு தொடக்கம் முதல் நிறைவு வரை இரண்டு நாள்களும் முழுமையாக அமர்ந்திருந்து மாநாட்டின் நிகழ்ச்சிகளை அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர் ஹ்யூமனிஸ்ட் அமைப்பின் பொறுப்பாளர்கள். மாநாடு நிறைவடைந்த பின்பு அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் ‘நாங்கள் இந்த மாநாட்டின் ஏற்பாடுகள், நிகழ்ச்சிகள் நடந்த விதத்தைப் பார்த்து நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். நிச்சயம் எங்களது அமைப்பு சார்ந்த நிகழ்வுகளையும் நடத்துவோம்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திராவிடர் கழகம்

அடுத்ததாக ‘தமிழ், ஜப்பான் மொழிகளில் பகுத்தறிவு இலக்கியங்கள் (Rationalistic Literature in Tamil and Japanese Language) என்ற தலைப்பில் ஜப்பான்–டோக்கியோ நகரிலிருந்து பங்கேற்ற எஸ். கமலக்கண்ணன் உரையாற்றினார். சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்தும், ஜப்பான் இலக்கியங்களிலிருந்தும் பகுத்தறிவுக் கருத்துகளை, நடைமுறைகளை தேர்ந்து எடுத்து கருத்து விருந்தளித்தார். காட்சிப் பதிவுகளுடன் இலக்கிய வரிகளைப் பற்றிய விளக்கம் அளித்தது அனைவருக்கும் விளங்கும் வகையில் இருந்தது.

திராவிடர் கழகம்

‘மலேசியாவில் திராவிடர் இயக்கங்கள்’ (Dravidian Movements in Malaysia) என்ற தலைப்பில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் – மலேசியா கிளையின் தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமி அவர்கள் உரையாற்றினார். 19 & 20-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்வாதாரம் வேண்டி பிரிட்டிஷாரின் ஏற்பாட்டில் அன்றைய மலேயாவிற்கு அனுப்பப்பட்ட தமிழர்கள்பட்ட அவலங்கள் பற்றியும், அந்த நிலையிலிருந்து மீண்டு மேம்பட தந்தை பெரியார் இரண்டு முறை (1929&1954) மலேயாவிற்குச் சென்று அவர்களைச் சந்தித்து உரையாற்றியதையும் விவரித்தார். அதற்குப் பின்னர் திராவிடர் இயக்கங்களின் பெருந்துணை அந்தத் தமிழர்களின் உரிமை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது இன்றைக்கு மலேசிய மண்ணுடன் அய்க்கியமாகி அந்தநாட்டு அமைச்சரவையிலும் தமிழர்கள் பங்கேற்றிடும் நிலைக்கு திராவிடர் இயக்கங்கள் அடித்தளத்தினை உருவாக்கியுள்ளன எனவும் தனது உரையில் எடுத்துக் கூறினார். அன்றைய காலத் தமிழர்கள் வாழ்ந்த சூழ்நிலைகளை படக் காட்சிகளாக காண்பித்தது தமிழர்கள் பட்ட இன்னல்களைப் புரிய வைத்தது.

திராவிடர் கழகம்

அடுத்ததாக, திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், ‘பெரியார் ஒரு அங்கக அறிஞர் – சுயமரியாதைத் தத்துவம்’ (Periyar, an Organic Intellectual and Philosophy of Self-Respect) எனும் தலைப்பில் உரையாற்றினார். சமுதாயப் புரட்சிக்கு வித்திட்ட அறிஞர்கள் இருவகைப்படுவர். ஒருவகையினர் – அனங்கக அறிஞர்கள் (inorganic intellectuals); மற்றவர் அங்கக அறிஞர்கள் (organic intellectuals). ‘அனங்கக அறிஞர்’ என்பது முறையாக பள்ளி, கல்லூரி மற்றும் உயர் ஆராய்ச்சி படிப்பு என்று கற்ற நிலையில் ஒருவர் கருத்தும், செய்திகளும் அடங்கிய புரிந்துணர்வுடன் கூடிய அறிவு நிரம்பப் பெற்றவராவது.

திராவிடர் கழகம்

‘அங்கக அறிஞர்’ என்பது முறையாகக் கல்வி கற்காதவர். சுற்றியுள்ள சமூகம், கேள்விப்படும் செய்திகள் பார்க்கப்படும் நிகழ்வுகள்மூலம் கருத்து நிரம்பப்பெற்ற அறிவை பெற்றவர்.

தந்தை பெரியார் முறையாக பள்ளி சென்று பயிலாதவர். தொடக்கக் கல்வியினை தொடராதவர். கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிட்டாதவர். தன்னுடைய சுயமுயற்சியில் எழுத்தை படிக்கவும், எழுதவும் கற்றவர். ‘சமூகநீதி பயிலும் பாடமாகக்’ கருதியவர். இத்தகைய மாறுபட்ட தன்மையினால் ‘அங்கக அறிஞர்’ என்று கருதப்பட வேண்டியவர். அங்கக அறிவு நிரம்பப் பெற்றவர்கள் ஒரு சமூகப் பிரச்சினை குறித்து கருத்து, மற்றும் தீர்வு சொல்வதில் கூட மிகவும் எதார்த்தமாக பேசுவார்கள். நடைமுறைப் படுத்துவதற்கான தெளிவு நிலையை உருவாக்குபவர்கள் எனலாம். எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான உரிமை பற்றிப் பேசுவது ஒரு முற்போக்குத் தன்மை வாய்ந்தது. பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளைப் பற்றி அனங்கக அறிஞரிடம் கேட்டால் ஒன்று, இரண்டு என பட்டியல் போடுவார்கள்.

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரிடம் அந்த அங்கக அறிவுநிலை என்பது, ஒருமுறை செய்தியாளர்கள் ‘பெண்களுக்கு எந்தெந்த உரிமைகள் வேண்டும்’ எனக் கேட்கிறீர்கள் என வெளிப்படுத்தியபொழுது பெரியாரின் அங்கக அறிவுநிலை கூறியதாவது: “அதிகமான உரிமைகள் எவையும் வேண்டாம். ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளதோ அந்த உரிமைகளைக் கொடுத்தால் போதும்” என ‘பளிச்’ என பதிலளித்தார். எவ்வளவு பெரிய ஆழமான கருத்தினை பெரியாரின் அங்கக அறிவு நிலை எளிமையாக வெளிப்படுத்தியது.  மேலும், உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்த புரட்சிகர அறிஞர்கள் மனிதநேயம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்த மனிதநேயத்திற்கு பலவகையான அடிப்படைகள் உண்டு. ஆனால் பெரியார் வலியுறுத்திய மனிதநேயமானது சுயமரியாதையை உணர்ந்து நடைமுறையாக வேண்டியது. மனித சமத்துவம் நோக்கிய பயணத்திற்கானது. இதைத்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சுயமரியாதை மனிதநேயம்’ (Self-Respective Humanism) என உலகம் முழுவதும் பரப்பிட வழி ஏற்படுத்தி வருகிறார். சுயமரியாதை சார்ந்த மனிதநேயம் உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் மனிதரும் மறுக்கமுடியாத தத்துவமாகும்.

திராவிடர் கழகம்

‘மனிதநேயமும் உளவியலும்’ – அமர்வு

நண்பகல் உணவுக்குப் பின்னர் ‘மனிதநேயமும் உளவியலும்’ (Humanism and Psychology) எனும் தலைப்பிலான அமர்வு தொடங்கியது. அமர்வின் தொடக்கவுரையினை அமெரிக்கா – மிக்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராம். மகாலிங்கம் வழங்கினார். சுயமரியாதை என்பது கண்ணில் காட்ட முடியாததாக இருந்தாலும் மனிதரின் நன்மைக்கு அடிப்படை ஆதாரமாகும். அப்படிப்பட்ட சுயமரியாதையை அந்த பெயரைக் கொண்ட சுயமரியாதை இயக்கம் வளர்த்து வருகிறது.  அதன் அருமையை பறைசாற்றி வருகிறது எனக் கூறினார்.

அடுத்ததாக, இங்கிலாந்தின் லீசெஸ்டரிலிருந்து வந்து பங்கேற்ற டாக்டர் செந்தில்குமார், ‘மதம், அறிவியல் மற்றும் பகுத்தறிவு பற்றி மனித மூளை’ (Human Brain on Religion, Science and Rationalism) எனும் தலைப்பில் பல அறிவியல் சார்ந்த விளக்கங்களை எடுத்துரைத்தார்.

இலண்டனிலிருந்து பங்கேற்ற ஹாரிஷ் மாரிமுத்து ‘பகுத்தறிவும் மகிழ்ச்சி அளவீடும்’ (Rationalism and Happiness Index) எனும் தலைப்பில் உரையாற்றினார்.  தனது உரையில் மனிதரின் நல்ல நிலைமை என்பது அவரது உள்நோக்கிய மனநிலையிலானது. மனித வாழ்வின் தரம் என்பது அவரவர் அனுபவப்படுவதில்தான் உள்ளது. (Well being is your inner subjective state; the quality of life is as you experience it) என்பதை பல அறிவியல் புள்ளி விபரங்களுடன் கூடிய பட விளக்கங்களுடன் எடுத்துரைத்தார்.

அடுத்ததாக, ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் தங்கமணி– ஆஸ்திரேலியாவில் ஜாதியப் பாகுபாடு – வாழ்ந்த அனுபவங்களும் அதன் வெளிப்பாடுகளும் (Caste Discrimination in Australia – Lived Experience, Findings) எனும் தலைப்பில் உரையாற்றினார்.

கலை நிகழ்ச்சிகள்

தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்த சிறார்கள் மேடையேறி தமிழ் பாடல்களை பெரிதும் மனம் கனிந்து ரசித்துப் பாடினார்கள். 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாடு – கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டையொட்டி, வெளியிடப்பட்ட ‘செம்மொழியான தமிழ்மொழியாம்…’ பாடலையும், பாரதி, பாரதிதாசன் பாடல்களையும் பாடிக் காட்டினர். அச் சிறுவர்கள் பாடிய விதம், மிகுந்த பயிற்சி எடுத்தபின்பு பாடுவதுபோல, அவர்கள் பாடிய இசைத்தொனி தெரிவித்தது.

அமிர்தவர்ஷினி & லிடியன் நாதஸ்வரம் குறளிசைக் காவியம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் பியானோ இசைக் கருவியை வாசிப்பதில் அமெரிக்க நாட்டில் நடந்த போட்டியில் பங்கேற்று முதல் பரிசான ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வென்றவர். அவரது அக்கா அமிர்தவர்ஷினியும் நல்ல பாடகி. இருவரும் இணைந்து திருக்குறளின் 1330 பாக்களையும் இசையுடன் பாடி ”குறளிசைக் காவியம்” என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டு வருகின்றனர். அதன் 3–ஆம் பாகம் வெளியீடு மெல்போர்ன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியின் பொருட்டு அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்தனர். அவர்களை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அரங்கத்திற்கு அழைத்து வந்து பியானோ கருவியை வாசிக்கச் செய்தும், சில குறட்பாக்களை பாடச் செய்தும் மாநாட்டு பேராளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். குறட்பாக்களை இசைவடிவில், இனிய குரலில் பியானோ இசைக் கருவி பின்னணியில் பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திருக்குறளை உலகெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு புது அத்தியாயத்தை தொடங்குவதாக இருந்தது. கலைஞர்கள் இருவரையும் மாநாட்டு மேடையில் விருந்தினர் முன்னிலையில் பாராட்டினர்.

மாநாட்டில் திராவிடர் கழகத்தினர்

மாநாட்டிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக 21 பேராளர்கள் வந்திருந்தனர். பெரியார் மருத்துவ சேவை மய்யத்தின்  இயக்குநர் – மருத்துவர் இரா.கவுதமன், மாநில ஒருங்கிணைப்பாளர் – ஊமை. ஜெயராமன், மகளிரணி மாநிலச் செயலாளர் – தகடூர் தமிழ்செல்வி, புதுச்சேரி மாநிலத் தலைவர் – சிவ.வீரமணி, காப்பாளர் – சடகோபன் (குடியாத்தம்) மாவட்ட தலைவர்கள் – முனைவர் ம. சுப்பராயன் (கள்ளக்குறிச்சி), வீரமணி ராஜீவ் (சேலம்) அவரது இணையர் வாசந்தி, வழக்குரைஞர் அமர்சிங் (தஞ்சை), மகளிரணி கலைச்செல்வி, மருத்துவர் த. அருமைக்கண்ணு – சண்முகநாதன் இணையர், மருத்துவர் எழில் – அன்பழகன் இணையர், பேராசிரியர் முனைவர். பிரபாகரன் (கும்பகோணம்), மணிவண்ணன் (குளித்தலை), பன்னீர்செல்வம் (தமிழ்நாடு மூதறிஞர் குழு), பேராசிரியர். கலியபெருமாள், திராவிடர் கழகத் தோழர்கள் தங்கமணி – தனலட்சுமி இணையர் ஆகியோர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

– தொடரும்

 - விடுதலை நாளேடு,20.11.25

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் ‘மனித உரிமைகள்–சமத்துவம்–சமூகநீதி’ பரவிட உறுதி ஏற்பு (4)

– வீ. குமரேசன்

நிறைவரங்கம்

இரண்டு நாள் மாநாட்டின் நிறைவரங்க உரையினை அமெரிக்கா – பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் வழங்கினார். பெரியார் பன்னாட்டமைப்பு ஆற்றி வரும் பெரியாரை உலகமயமாக்கிடும் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

மாநாட்டுத் தீர்மானம்

4–ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் மனிதநேயம் குறித்தும் அதனை உலகெங்கும் கொண்டு சென்று சட்டபூர்வமாக்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆஸ்திரேலியா பெரியார் -அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் முன்மொழிய, மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் அனைவரும் வழிமொழிந்திடும் வகையில் ஒன்று சேர எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

தீர்மான எண் 1:

மனித உரிமைகள், சமத்துவம், சமூகநீதி – இம்மூன்றையும் மேலும் செழித்தோங்க வைத்து உலகம் முழுவதும் பரவிப்படரச் செய்வது

நிறைவேற்றிய நாள்:  நவம்பர் 2 – 2025

இடம்:க்ளென் எய்ரா டவுன் ஹால், கால்ஃபீல்ட், விக்டோரியா, ஆஸ்திரேலியா

திராவிடர் கழகம்

முன்னுரை:

உலகளாவிய நற்பண்புகளான பகுத்தறிவு, கழிவிரக்கம், சமத்துவம், மானுட கண்ணியம் ஆகியவற்றை நீடித்து நிலைக்கச் செய்யும் நோக்கத்தில் 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு நடத்தப்பட்டது. மனிதர்கள் எல்லோருமே சுதந்திர ஜீவிகளாகப் பிறந்தவர்கள். கண்ணியத்திலும், மரியாதையிலும், உரிமைகளிலும் அனைவரும் சமமானவர்கள். இதை இந்த மாநாடு நன்கு உணர்ந்துள்ளது. பல்வேறு பாகுபாடுகளை மிகப்பெரிய சவால்களாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். பல விசயங்களில் சகிப்புத்தன்மையற்ற மனநிலை பரவலாக காணப்படுகிறது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சீரமைக்க கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

திராவிடர் கழகம்

சமத்துவம், கண்ணியம், சமூகப் பிணைப்பு – இவை மூன்றுமே ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் ஜாதி சார்ந்த பாகுபாடு, மதப்பற்று சார்ந்துள்ள வெறுப்பு, சகிப்புத்தன்மையின்மை மற்றும் இன்ன பிறவகை தவறான கணிப்புகள்.

திராவிடர் கழகம்

கல்வித் துறை அமைப்புகளும், பொது நிறுவனங்களும், நீதி, நியாயம், கருணை, மனித உரிமைகள் மற்றும் உரத்த சிந்தனைகளை பேணிக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அனைத்துப் பாடத்திட்டங்களிலும் மதங்கள் சார்ந்த சிறப்புப் போதனைகளிலும், ஜாதிவெறி, பாலினப் பாகுபாடு, ஓரினப்பற்று, மதவெறிக் கலப்பு போன்றவை இல்லாதபடி அவை பார்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் இவை எந்த வடிவிலும் இடம்பெறக்கூடாது. பாடத்திட்டங்கள் அனைத்தும் சமத்துவக் கொள்கையையும், சிறார் நலத்தையும் கருத்தில் கொண்டு அமைக்கப்படவேண்டும்.

திராவிடர் கழகம்

அய்க்கிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் உட்பட பல மனித உரிமை அமைப்புகள் எல்லாவிதமான பாகுபாடுகளும் அழிக்கப்படவேண்டியது அவசியமும் அவசரமும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன; உணர்ந்துள்ளன. ஜாதிபாகுபாடுகள், மதம், பாலினம் அல்லது இன்ன பிற வகைபாகுபாடுகள் உட்பட அனைத்துமே அழிய வேண்டும் என்பதை எல்லா மனித உரிமை மய்யங்களும் வலியுறுத்தி வருகின்றன.

திராவிடர் கழகம்

எனவே – 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு கீழ்கண்டவாறு தீர்மானிக்கிறது:

  1. ஜாதி அமைப்பையே பாகுபாடுகளின் ஆணி வேராக கருதும்படி ஆஸ்திரேலியாவின் அனைத்து நீதித்துறை மன்றங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கத் தீர்மானம்.
  2. மதங்களும், இனங்களும் இழிவுப்படுத்தப் படுவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றும்படி தேசிய, மாநில, உள்ளாட்சி அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்கத் தீர்மானம்.

அனைவரையும் உள்ளடக்கிய வகையில் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். அடிப்படைப் பண்புகளான மானுட கண்ணியம், மதச்சார்பின்மை, நீதி – இவை மூன்றும் காக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களும் அனைத்து பொது அமைப்புகளும் மேற்கண்டவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தத் தீர்மானம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

ஒத்திசைவுடன், ஒருமனதாக மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு

பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் –

ஆஸ்திரேலியா / பெரியார் பன்னாட்டு அமைப்பு

யு.எஸ்.ஏ. (அமெரிக்கா)

தேதி : நவம்பர் 2, 2025

இடம் : கால்ஃபீல்ட், விக்டோரியா, ஆஸ்திரேலியா

 

Resolution No.1

Advancing Human Rights, Equality, and Social Justice

Adopted: 2nd November 2025

Venue: Glen Eira Town Hall, Caulfield, Victoria, Australia.

Preamble

The 4th International Humanist Conference, convened to uphold the universal values of reason, compassion, equality, and human dignity, recognising that all human beings are born free and equal in dignity and rights, and mindful of the continued challenges posed by discrimination and intolerance in all their forms, hereby adopts the following resolution.

Resolution

Whereas caste-based discrimination, religious hatred, intolerance, and other forms of prejudice continue to undermine equality, dignity, and social cohesion in Australia and across the world.

Whereas education systems and public institutions play a vital role in fostering fairness, compassion, human rights, and critical thinking, and must ensure that all curricula and special religious instruction materials are free from casteism, sexism, homophobia, and religious chauvinism, in full alignment with the principles of equality and child safety;

Whereas numerous human rights bodies—including the United Nations and the Australian Human Rights Commission—have recognised the urgent need to eliminate all forms discrimination, including those based on caste, religion, gender, or other status.

Therefore, be it resolved that the 4th International Humanist Conference:

  1. Calls upon all Australian jurisdictions to recognise caste as a protected attribute under anti-discrimination law.
  2. Urges national, state, and local governments to strengthen legal protections against religious and racial vilification; and
  3. Reaffirms the responsibility of all educational and institutional frameworks to uphold equality, inclusion, and the fundamental values of human dignity, secularism, and justice.

தமிழர் தலைவரின் சிறப்புரை

நிறைவரங்கத்தின் தமிழர் தலைவரின் சிறப்புரையானது ‘மனித நேயத்தின் எதிர்காலம்’ (Future of Humanism) என்ற தலைப்பில் பதிவு செய்து அந்தப் பதிவு ஒளிபரப்பபட்டது. மனிதநேயம் எதிர்காலத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறையில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு யுகத்தில்  எப்படியெல்லாம் பரிணாமம் பெற இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு உலகம் முழுவதும் உள்ள மனிதநேய, நாத்திக, பகுத்தறிவாளர் அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றார். மேலும் தனது பேச்சில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏன் இந்த மாநாடு ஆஸ்திரேலியாவில்?

பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் இவ்வாண்டு இந்தச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்த ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

மனிதநேயமும், சமத்துவமும் இங்கே செழித்தோங்கி இருப்பதே காரணம். அவற்றின் மகத்துவத்தை இந்த நாட்டினர் உணர்ந்திருப்பதே காரணம். ஆனால் வருந்தத்தக்க ஒரு விசயமும் மனதை உறுத்தாமல் இல்லை. எங்கள் நாட்டில் பிற்போக்குத்தனமான சிந்தனைகளை வளர்த்தபடி மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்த சில விஷமிகள் புலம்பெயர்ந்து வாழ்வாதாரம் தேடி உங்கள் மண்ணில் குடியேறியுள்ளனர். உளமாற அவர்களை வரவேற்று ஆதரவளித்தவர்கள் நீங்கள். எல்லாவிதத்திலும் அவர்களுக்கு உதவியவர்கள் நீங்கள். அவர்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர்கள் நீங்கள். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. அவர்கள் இங்கே வளமுடன் வாழ்வது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால், அவர்கள் தங்களுடன் ஜாதி அமைப்பையும், வர்ணாஸ்ரமத்தையும் கொண்டு வந்து உங்கள் மண்ணை பாதிக்க முனைவது வேதனையளிக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் குடியேறிய பின் அவர்கள் நம்பிக்கை துரோகம் இழைக்கலாமா தஞ்சமளித்த மண்ணிற்கு? நீண்ட காலமாக இல்லாமல் இருந்த ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் உங்கள் நாட்டில் மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது. அப்படிப்பட்ட பேராபத்தைத் தடுக்கும் நோக்கத்தில்தான் PATCA அமைப்பு இந்த மாநாட்டிற்கு இந்த மண்ணையே இந்த ஆண்டு தேர்வு செய்துள்ளார்கள். இந்தியாவில் எங்களுக்கு ஏற்பட்ட அவலநிலை உங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, இந்த பன்னாட்டு மாநாடு இங்கே நடைபெறுவதே மிகவும் அவசியமானது! முக்கியமானதும் கூட. ஆஸ்திரேலிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்த மாநாடு ஓர் எச்சரிக்கை நிகழ்வாகவே இருக்கட்டும். வரும்முன் காப்பதே விவேகம் அல்லவா?

ஆ. ராசா – நிறைவுரை

மாநாட்டின் நிறைவுரையினை இந்திய ஒன்றியத்தின் மேனாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமாகிய ஆ.ராசா அவர்கள் வழங்கினார். கடந்த 40 ஆண்டுகளாகப் பொருளாதார அடிப்படையிலான உலகமயமாக்கம் மானுட மேம்பாட்டில் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மனிதருக்கான வளர்ச்சி என்று சொல்லி விட்டு அதில் மனிதமுகத்தை தேட வேண்டி உள்ளது. தொலைந்து போன மனித முகத்தை தேடிப்பிடித்து வளர்ச்சியில் மனித நேய அணுகுமுறையினை கொண்டு வரவல்லது தந்தை பெரியாரின் கொள்கைகளே. அதற்கு இந்த மாநாடு பெரும்பங்கு ஆற்றி உள்ளது. தொடர்ந்து செல்வோம் பெரியாரின் கொள்கைகளை உலகமயப்படுத்துவோம் என முழக்கமிட்டார்.

மாநாட்டின் வெற்றிக்குப் பாடுபட்ட பொறுப் பாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இறுதியில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் சுமதி விஜயகுமார் நன்றி கூற மாநாடு இனிதாக நிறைவு பெற்றது.

பெரியாரின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் மெல்போர்னில் நடைபெற்ற 4–ஆம் பன்னாட்டு மனிதநேய மாநாடு அடுத்தக்கட்ட மாபெரும் பணியினை எடுத்துச் செல்லும் பயணத்தில் ஒரு மைல்கல்லாகவே திகழ்ந்தது.

– நிறைவு

 - விடுதலை நாளேடு,21.11.25


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக