பெரியாரியல் பகுத்தறிவுப் பயிற்சி பரிசளிப்பு விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்
சென்னை, மார்ச் 9 வெளிநாடுகளில் உள்ள இயக்கங்களுக்கும், பெரியார் இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு? என்று விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியாரியல் பயிற்சி வகுப்பு - பரிசளிப்பு விழா
கடந்த 4.2.2022 அன்று பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பகுத்தறிவுப் பயிற்சி பரிசளிப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
எனவேதான், பகுத்தறிவாளர்கள் என்று சொல் வதற்கு இதுதான் வேறுபாடு என்று மிகத் தெளிவாகச் சொன்னேன்.
இது அறிவியல் பூர்வமான செய்தி.
அறிவியல் பூர்வமான செய்திகளை பகுத்தறிவா ளர்களான நாம் சொல்வது எவ்வளவு சிறப்பானது என்றால், அய்யா அவர்களுடைய இந்த இயக்கம் நீண்ட காலமாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த இயக்கத்தினுடைய தனிச் சிறப்பு அது என்பதை மற்றவர்கள் உணரவேண்டும்.
அதிலும் குறிப்பாக நம்முடைய தோழர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்ற 10 பேரில் ஒரு சிறப்பு என்ன வென்றால், அதில் ஆசிரியர்கள் 3 பேர். மாணவர்கள் 2 பேர். பேராசிரியர் ஒருவர். மின் பொறியாளர் ஒருவர். கணக்காளர் ஒருவர். பொறியியல் பட்டதாரி ஒருவர். கல்வி ஆய்வாளர் ஒருவர்.
பத்து திசைக்கு விளக்கம்!
இந்த பத்து பேரையும் பார்த்தீர்களேயானால், பத்து தலை என்று சொல்வது போன்று,
''அய்யிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்'' என்று இராவணனைப் பற்றி பாடுகின்றபொழுது புரட்சிக்கவிஞர் சொல்வார்.
இந்தப் பாடலுக்குப் பேராசிரியர் புலவர் அய்யா இராமநாதன் அவர்களிடத்தில்தான் விளக்கம் கேட் டுத் தெரிந்துகொண்டேன்.
திசை எட்டுதானே? ஆனால், புரட்சிக்கவிஞர் அய்யிரண்டு திசைமுகத்தும் என்று பத்து திசை என்று சொல்கிறாரே? என்றேன்.
பத்து திசை என்றால், எட்டு திசை மற்றும் மேல், கீழ் ஆக, பத்து திசை என்று அவர் கூறியுள்ளார் என்றார்.
யுனிவர்ஸ் என்று சொல்லக்கூடியது எல்லாவற் றையும் இணைத்ததுதான். அப்படிப்பட்ட புகழ்பெறக் கூடிய ஒரு நிலை என்ற அளவிலே, அதற்கும் இந்த அளவிற்குப் பயன்படக்கூடிய ஓர் அருமையான தத் துவம்தான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை.
வெளிநாடுகளில் உள்ள இயக்கங்களுக்கும் - பெரியார் இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு?
உலகமெங்கும் பகுத்தறிவாளர்களை ஒருங் கிணைத்து, இயங்கிக் கொண்டுதானிருக்கிறது; அதற்கும், தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் ஆகிய இந்த இயக்கத்திற்கும் வேறு பாடு உண்டு. ஏறத்தாழ - சுயமரியாதை இயக்கம் தொடங்கி 94 ஆண்டுகள் ஆகின்றன; நூறாண்டை நெருங்கப் போகிறது.
பகுத்தறிவு சுயமரியாதை இயக்கம் என்பது மானிடத்தின் மதிப்பை உயர்த்தக்கூடியது என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி அந்த மானி டத்தை உயர்த்தக்கூடிய இந்த இயக்கத்திற்கும் - பகுத்தறிவாளர் கழகம் லண்டனில் இருக்கிறது, அமெரிக்காவில் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது, அய்ரோப்பாவில் உள்ள பல நாடு களில் இருக்கிறது. ஆனால், அந்த நாடுகளில் உள்ள இயக்கங்களுக்கும், தந்தை பெரியார் உருவாக்கி மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்கின்ற நம்முடைய இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு?
நோக்கம் மனிதர்களைப் பகுத்தறிவாளர் களாக ஆக்குவது; மனிதர்களை சுதந்திர சிந்தனையாளர்களாக ஆக்குவது, பேதமிலா பெருவாழ்வு வாழவேண்டும் என்று மானுடப் பற்றாளர்களாக ஆக்கவேண்டும் என்பதுதானே!
ஆனால், நண்பர்களே சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன். மேலை நாடுகளில், பகுத்தறிவாளர் கழகத்தில், விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கை யில்தான் இருக்கிறார்கள். நான் நேரிலே அதைக் கண்டிருக்கிறேன்.
முதலமைச்சர் அண்ணா அவர்கள், 'விடுதலை' மலரில் அந்த வசந்தம் என்ற தலைப்பில் அய்யா வைப்பற்றி எழுதிய கட்டுரையில், பகுத்தறிவாளர்கள் மேலை நாட்டில்கூட இருப்பார்கள், சில பேர் - கூடுவார்கள், பேசுவார்கள் ஒரு சிறிய அறையில் என்பார்.
அதை நேரிலேயே நான் பார்த்தேன். அமெரிக் காவில் உள்ள மிக முக்கிய நகரங்களில் ஒன்று செயின்ட் லூயிஸ் நகரம்.
அந்த நகரத்திற்கு என்னை அழைத்திருந்தார்கள். காரணம், அந்தப் பகுதியிலிருந்து இங்கே தமிழ் நாட்டிற்கு வந்து நம்முடைய பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து பிரமித்துப் போன பேராளர் அம்மையார் அவர்கள் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.
அந்த அம்மையார் சொன்னார், Tamil Nadu Rationalist Capital of the World (உலகத்தினுடைய பகுத்தறிவின் தலைநகரம் தமிழ்நாடு) என்று சொன்னார்கள். இங்கே இன்னும் மூடநம்பிக்கை இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 140 கோடிக்கும் மேல். ஆனால், நோபல் பரிசு பெற்றவர்கள் உலகத்தில் அதிகம் இல்லை; இருக்கவும் மாட்டார்கள். அது போன்று, பகுத்தறிவாளர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அதனுடைய தத்துவம் என்பது யாராலும் மறுக்கப்பட முடியாதது.
சனாதனத்தைப் பேசுகிறவர்கள்கூட, அறிவியலை நம்பித்தான் வாழ்கிறார்கள்
என்னதான் சனாதனத்திற்காகவே இருக்கிறோம் என்று சொன்னாலும், சனாதனத்தைப் பேசுகிறவர் கள்கூட, அறிவியலை நம்பித்தான் வாழ்கிறார்கள். இன்றைக்கு அவர்கள் அறிவியல்மூலம்தான் தங் களுடைய பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
வேதத்தை, பழைமைவாதத்தை பரப்புவதற்கு இணைய தளத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
மெய்ஞானத்தைப்பற்றி சொல்லவேண்டும்; ஆன்மிகத்தைப் பரப்பவேண்டும் என்றாலும், விஞ்ஞானம்தான் அவர்களுக்கும் பயன்படுகிறது. மாற்றமே இருக்கக்கூடாது என்பதுதான் சனாதனம். ஆனால், அறிவியல் என்பது மாற்றத்தை உருவாக்குவதுதான் - இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.
ஆனால், அறிவியலைத்தான் அவர்களும் பயன் படுத்தவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி என்பது அறிவியலின் கண்டு பிடிப்பு. அந்தத் தொலைக்காட்சியின் வழியே மூட நம்பிக்கையைப் பரப்புவதற்காக அதைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
தந்தை பெரியார்
மாஸ் மூவ்மெண்ட்டாக ஆக்கினார்
எனவே, இதை ஒரு மக்கள் இயக்கமாக தந்தை பெரியார் அவர்கள், மாஸ் மூவ்மெண்ட்டாக ஆக் கினார்.
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நக ரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அங்கே 10 பேர் மட்டுமே இருந்தார்கள்; நான் உரை யாற்றுவதற்கு முன்பாக, அவர்களிடம் கேட்டேன்; யாராவது இன்னும் வரவேண்டுமா? காத்திருக்க வேண்டுமா? என்றேன்.
அங்கே இருந்தவர்கள் எல்லாம் வயதானவர்கள்; எல்லோரும் ரிலாக்சாக சோபாவில் அமர்ந்திருந் தார்கள். அப்பொழுது எனக்குத் தேநீர் கொடுத்த அந்த அம்மையார், ''இதுவரையில் நாங்கள் மூன்று, நான்கு பேர்தான் பேசிக் கொண்டிருப்போம். இன்றைக்கு 10 பேர் வந்திருக்கிறார்கள். அதிகமான அளவிற்கு வந்திருக்கிறார்கள் - உங்களுக்காக'' என்று சொன்னார்.
அதைக் கேட்ட எனக்கு வியப்பாக இருந்தது.
காரணம் என்னவென்றால், அங்கே இருக்கும் இயக்கத்திற்கும், நம் நாட்டில் உள்ள பெரியாரியக் கத்திற்கும் என்ன வேறுபாடு?
This is a Mass Movement - நம்முடைய இயக்கம் என்பது ஒரு மக்கள் இயக்கம். நாத்திகர் இயக்கத்தை, கடவுள் மறுப்பு இயக்கத்தை, மானுடத்தின் தத்துவமான சுயமரியாதையை, பகுத்தறிவை வலியுறுத்தக் கூடிய ஓர் இயக்கத்தை மக்கள் இயக்கமாக ஆக்கிய பெருமை தந்தை பெரியாருக்கு உரியதாகும்.
பாதையில்லா ஊருக்கெல்லாம்
ஈரோட்டுப் பாதை
மாலை நேரக் கல்லூரிகளைப்போல, தன்னுடைய உரைகளின் மூலமாக,
பாதையில்லா ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதையை தந்தை பெரியார் அவர்கள் மிக அருமையாக அமைத்தார்.
இதை நான் சொல்லவில்லை நண்பர்களே, நார்வே நாட்டைச் சேர்ந்த International Humanist Association தலைவர் லெவி பிராஃகல், சொல்லியிருக்கிறார்.
பெரியார்மீது அவருக்கு மிகப்பெரிய அளவிற்கு மரியாதை. இங்கே வந்து நம்முடைய நிகழ்வு களையெல்லாம் பார்த்து வியந்த அவர் சொன்னார்,
''எங்களுக்கு உலகம் முழுவதும் அமைப்புகள் இருக்கின்றன; நானும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் பெரியார் இயக்கம் போன்று வேறு எங்கும் கிடையாது'' என்றார்.
அப்பொழுது இரண்டு உதாரணங்களை அவர் சொன்னார். இந்த நேரத்தில் அதைச் சுட்டிக்காட்டுவது - நமக்கெல்லாம் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும். அடுத்து இந்த இயக்கத்தை மேலும் உற்சாகத்தோடு முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதற்கு நல்ல உரம் போட்ட செய்தியாகும் அது.
அவர் சொன்னார், ''நாங்கள் எல்லாம் உங்களை விட முன்னேறிய நாடுகள்; வாழ்க்கையில் வளம் பெற்ற நாடு என்று எங்கள் நாட்டிற்குப் பெயர். ஆனால், இந்த நாட்டில் உள்ள பகுத்தறிவாளர் அமைப்புகள் கூட்டங்களை, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் நடத்த முடிகிறது.
ஆனால், உலகத்தில் நாள்தோறும் பகுத்தறிவைப் பற்றி பேசிக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கின்ற ஒரு நாளிதழ் 'விடுதலை' - 'லிபர்ட்டி' என்ற பெயராலே இவ்வளவு ஆண்டுகள் நடைபெற்று வருவது என்பது வியப்பாக இருக்கிறது.
இந்த சக்தி மற்ற அமைப்புகளுக்குக் கிடையாது. பெரியார் மக்களோடு இணைந்திருக்கிறார். இந்த இயக்கத்தை பெரியார் அவர்கள் மக்கள் இயக்கமாக இந்தப் பகுத்தறிவு இயக்கத்தை ஆக்கியிருக்கிறார்கள்'' என்று சொன்னார்.
தமிழ்நாட்டில் பெரியாருக்கும் - அண்ணாவிற்கும் சிறப்பு செய்திருக்கிறார்கள்!
''நான் சென்னைக்கு வந்து அடிக்கடி பார்ப்பேன். சென்னை நகரத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையில் இரண்டு பெரிய தெருக்கள் இருக் கின்றன.
ஒன்று, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை
இன்னொன்று அண்ணா சாலை.
பெரியார், அண்ணா ஆகியோர் இரண்டு பேர் நாத்திகர்கள். அவர்கள் பெயரில் சென்னையில் உள்ள பெரிய தெருக்களுக்கு பெயர் வைத்திருக் கிறார்கள். இதுபோன்ற ஒரு சிறப்பை - அமெரிக் காவிலோ அல்லது வளர்ந்த நாடுகளிலே கூட பகுத் தறிவாளர்களுக்கு இவ்வளவு சிறப்பு செய்யக்கூடிய அளவிற்கு - பெருமைப்படக் கூடிய அளவிற்கு வேறு எங்கும் இவை போன்று எதுவும் கிடையாது'' என்றார்.
ஆகவே, இந்த இயக்கம் என்பது எப்பேர்ப்பட்டது என்பதை நீங்கள் எல்லாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்மிடம் ஏன் இந்த அளவிற்குத் தெளிவு இருக்கிறது? அவர்கள் பகுத்தறிவை அணுகுவது என்பது - எல்லோரும் கற்றறிந்தவர்கள்; அறிவார்ந்த அறிவாளிகள் மத்தியில், தங்களுடைய அறிவை, ஆற்றலை, திறமையை வெளிப்படுத்திக் கொண்டு, பேசுகின்ற ஒரு ஆய்வுக் கூட்டமாகத்தான் அங்கே பகுத்தறிவாளர் கூட்டம் - விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கிறது. (தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக