புதன், 25 செப்டம்பர், 2019

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' விருது

விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை;

பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப்பட்டுள்ளது-பெரியார்தாம் விருதுக்கு உரியவர்

இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது

விருதினை பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை


வாஷிங்டன், செப்.23 ‘‘மனிதநேய சாதனையாளர் விருது'' தனிப்பட்ட முறையில் எனக்கு வழங்கப்படவில்லை. பெரியாரின் தொண்டன் என்பதனால்தான் வழங்கப்பட் டுள்ளது; பெரியார்தாம் விருதிற்கு உரியவர். இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான ‘‘மனிதநேய வாழ் நாள் சாதனையாளர் விருது'' வழங்கப்பட்டது. அவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்.

அவரது உரையின் சுருக்கம் வருமாறு:

விருதினை பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் தமது ஏற்புரையில், ‘‘விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட வில்லை; பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப் பட்டுள்ளது. பெரியார்தாம் விருதுக்கு உரியவர். இத்தகைய விருது மேலும் பணியாற்றுவதற்கு - இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப் பிற்குக் கிடைத்த விருது'' எனக் குறிப்பிட்டு மிகவும் நெகிழ்ச்சி கரமாகப் பேசினார். உலகளாவிய அளவில் ‘‘சுயமரியாதை மனித நேயம்'' பற்றிய நீண்டதொரு ஆழமான உரையினை வழங்கினார்.

அதற்கு முன்னதாக,  கலிபோர்னியா பெர்க்லிபி பல்கலைக் கழக தமிழ்ப்புல மேனாள் தலைவரும், சமஸ்கிருத அறிஞரு மான பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்  ‘‘செவ்வியல்,  தமிழி லக்கியங்களில் மனிதநேயக் குறிப்புகள்'' எனும் தலைப்பில் ஓர் ஆய்வுரையினை வழங்கினார்.


அடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்கிடும் நிகழ்வு நடைபெற்றது. விருது வழங்கிடும் நிகழ்வின் வரவேற் புரையினை பேராசிரியர் முனைவர் அரசு செல் லையா வழங்கினார். அமெரிக்கா மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் விருது பெறவுள்ள தமிழர் தலைவர்பற்றிய சிறப்பினை எடுத்துரைத்து விருதினை தமிழர் தலைவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் ‘மனிதநேயமும் திராவிட இயக்கமும்' எனும் தலைப்பில் திராவிட இயக்க சாதனைகள்பற்றி உரையாற்றினார்.

அடுத்து ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழக தென் ஆசிய & தென்கிழக்கு ஆசியப் புலம் பேராசிரியர் முனைவர் ஸ்வென் வொர்ட்மென் ‘பரிணாமம் மனிதநேயம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். எழுத்தாளர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன், ‘பெரியாரும் மனிதநேயமும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அடுத்து ‘மாற்ற அறிவியல் - ஆதாரம் அடிப்படையிலான செயல்பாடு' எனும் தலைப்பில் டெப்பி கோடார்டு உரை யினை வழங்கினார்.

நண்பகல் உணவிற்குப் பின்னர் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கின. கருத்துகள நிகழ்ச்சியினை ஊடகவியலாளர் ப.திருமாவேலன் முகவுரையாற்றி தொடங்கி வைத்தார்.

கருத்துக் களத்தில் மருத்துவர் சரோஜா இளங்கோவன், ‘பெண்ணின் நிலை: பெரியாருக்கு முன், பெரியாருக்குப்பின்' எனும் தலைப்பிலும்,

அகத்தியன் பெனடிக்ட், ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு..... தந்தை பெரியார்' எனும் தலைப்பிலும்,

பெனிசில்வேனியா பன்னீர்செல்வம் இராஜமாணிக்கம், ‘வைகறை - வைக்கம் பெரியார்' எனும் தலைப்பிலும், சிகாகோ செல்வி அகிலா செல்வராஜ், ‘இன்றைய கல்வியும், கேள்விக் குறியாகும் சமூகநீதியும்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

கருத்துக் களத்தில் அடுத்து எம்.வி.கனிமொழி, ‘திராவிட இயக்கம் பதித்த தடங்களும் இன்று சந்திக்கும் பிரச்சினை களும்' எனும் தலைப்பிலும்,

துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், ‘உயர்ஜாதி ஒதுக்கீடும் சமூகநீதியும்' எனும் தலைப்பிலும்,

சிகாகோ சரவணக்குமார், ‘அறிவியக்கத்தின் தேவை' எனும் தலைப்பிலும்,

வேல்முருகன் பெரியசாமி, ‘பெரியாரைத் துணைக்கோடல் இன்றைய தேவை' எனும் தலைப்பிலும்,

மேரிலாந்து மணிக்குமார், ‘ஒரு நாடு, ஒரு மொழி, ஒரே மதம் - பொய்' எனும் தலைப்பிலும் கருத்துகளை வழங்கி னார்கள்.

அடுத்து ஊடகவியலாளர் ப.திருமாவேலன், ‘தமிழ்த் தேசியமும், பெரியாரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். திராவிடம் என்பதில் தமிழ்த் தேசியம் அடங்கும் என்று ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன், ‘மனிதநேயமும் சமூகநீதியும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.

எழுச்சித் தமிழர் உரையாற்றுவதற்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் மாநாடு நடந்த விதம்பற்றி சுருக்கமாக உரையாற்றினர்.


மாநாட்டு நிறைவு அமர்வில் அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் மேனாள் செயல் இயக்குநரும், ‘தி ஹியூமனிஸ்ட்'  (The Humanist) ஆங்கில ஏட்டின் மேனாள் ஆசிரியருமான பிரட் எட்லர்ட்ஸ், ‘மகிழ்ச்சியான வாழ்வு' என்பதுபற்றி உரையாற்றினார்.

மாநாட்டின் நிறைவுரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘எதிர்காலம்' எனும் தலைப்பில் செய்யவேண்டிய பெரியார் பணிகள்பற்றி அரியதொரு உரையினை ஆற்றினார்.

அமெரிக்க தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருவதற்கான ‘சேவை விருது'களை மருத்துவர் சரோஜா இளங்கோவன், குழந்தைவேலு ராமசாமி, ஜெயந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பரிசினை வழங்கினார்.

இரண்டாம் பன்னாட்டு மாநாடு முதலாம் பன்னாட்டு மாநாட்டைவிட  ஏற்பாட்டிலும், பேராளர்கள் பங்கேற்பிலும் வெகுசிறப்பாக நடந்தேறியது. முதல் நாள் மாநாட்டை பெரியார் பன்னாட்டு மய்யம் மட்டும் நடத்தியிருந்தது. இரண்டாம் நாள் மாநாட்டை அமெரிக்க மனிதநேயர் சங்கத்துடன் இணைந்து நடத்தியது மாநாட்டு சிறப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இரண்டு நாள் மாநாட் டிலும் சிறப்பாகப் பங்கேற்று, 2021  ஆம் ஆண்டு நடை பெறவுள்ள பன்னாட்டு மாநாட்டிலும் பங்கேற்றிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பேராளர்கள் விடைபெற்றனர். பெரியார் கொள்கைகளை உலக மயப்படுத்துதலில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு ஒரு சாதனை மைல் கல்லாகும்.

- விடுதலை நாளேடு, 23. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக