செவ்வாய், 24 செப்டம்பர், 2019

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது


வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவுப்பரிசாக புத்தகங்கள் வழங்கினார். உடன் அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் ஆகியோர் உள்ளனர்.
வாஷிங்டன், செப். 22 அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யமும், அமெரிக்க மனிதநேயர் சங்கமும் இணைந்து நடத்திடும் வாஷிங்டன் நகர் - மேரிலாந்துப் பகுதியில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு வெகு சிறப்பாகத் தொடங்கியது.
அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் மனிதநேயர்கள், பெரியார்தம் சுயமரியாதைக் கருத்தாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிட வருகை தந்தனர்.
இரு நாள்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழா செப்டம்பர் 21ஆம் நாள் தொடங்கியது. மேரிலாந்து பகுதியில் அமைந்துள்ள மாண்ட்கோமரி கல்லூரியின் கலாச்சார கலை மய்யத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது.
தொடக்க விழாவில் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் முகவுரை வழங்கிட, அமெரிக்க மனிதநேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெர்க்ஹார்ட் வரவேற்புரை ஆற்றினார்.
புத்தக வெளியீடு
பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகளான இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தந்தை பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' - ஜெர்மன் மொழி பெயர்ப்பு (மொழி பெயர்ப்பாளர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ்) நூலும், பெரியாரின் வழித் தடமும் அவரது சீடர் ஆசிரியர் (Periyars Footprints and His Disciple Asiriyar) ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பேராசிரியர் அ. அய்யாசாமி - மூலநூல் மஞ்சைவசந்தன் எழுதிய 'வியப்பின் மறுபெயர் வீரமணி' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
அமெரிக்க மனிதநேய சங்கத்தின் ராய் ஸ்பெக்ஹார்ட் புத்தகங்களை வெளியிட்டார். தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி புத்தகங்களை வெளியிட்ட ராய் ஸ்பெக்ஹார்ட் அவர்களுக்கு நினைவுப் பரிசாக 'தந்தை பெரியாரின் பணிகள்'(COLLECTED WORKS OF PERIYAR E.V.R.) நூலினை வழங்கினார்.
தொடக்க விழாவினைத் தொடர்ந்து பல்வேறு அமர்வுகளில், பல்வேறு தலைப்புகளில் மனிதநேய அறிஞர்கள் கருத்துரை வழங்கிட உள் ளனர்.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ”அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் மனிதநேயமும் சுயமரியாதையும்” என்ற தலைப்பிலான கலந்தாய்வு அமர்வில்  தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டின் துவக்க முதல் அமர்வில் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் அறிமுக உரையாற்றினார். முதல் அமர்வில் 'மதமின்மையே சிறப்பு' எனும் தலைப்பில் ஜெர்மனியைச் சார்ந்த  பிலிப் மொல்லர் கருத்துரை வழங்கினார். 'வரவேற்புரை' எனும் தலைப்பில் மாநாட்டிற்கு வந்திருந் தோரை வரவேற்கும் வகையில் அமெரிக்கா - மேரிலாந்து 8ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் உரையாற்றினார்.
தேநீர் இடைவேளைக்குப் பின் தொடங்கிய இரண்டாம் அமர்வில், 'மனிதநேயர் கண்ணோட்டத்தில் பெண்ணியம்' எனும் தலைப்பில் பெண்ணுரிமைப் போராளி டோனி வான் பெல்ட் உரையாற்றினார். அடுத்து திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், 'தந்தை பெரியாரும், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரும்' எனும் தலைப்பில் தமது ஆய்வுரை யினை வழங்கினார். பின்னர் 'மனிதநேயப் பணியில் இளைஞர் களை எப்படி பங்கேற்றிட செய்வது?' எனும் தலைப்பில் ரியான் பெல் உரையாற்றினார்.
சிறார் பங்கேற்பு
அடுத்த அமர்வு சிறார் பங்கேற்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. 'மனித நேயம்' எனும் தலைப்பில் யாழினியும், 'மனிதநேயமும் பருவ நிலை மாற்றமும்' எனும் தலைப்பில் மோனா சந்திரசேகரன் உரையாற்றிய பின்னர் 'பெரியாரும் கடந்த காலத் தலைவர்களும்' எனும் தலைப்பிலும் உரை யாற்றினர்.
அம்பேத்கர், நாகம்மையார், மணியம்மையார், ரோசா பார்க் ஆகியோர் போல் வேடமணிந்து சிறார்கள் அரங்கத்திற்கு வந்து  அனைவரின் கரவொலியினைப் பெற்றனர்.  போட்டியில் பங்கேற்ற சிறார்களுக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சான்றிதழினையும், பரிசுப் பொருள்களையும் வழங்கினார்.
மாநாட்டில் புதிய புத்தகங்களை வெளியிட்ட அமெரிக்க மனிதநேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் அவர்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களையும், நினைவுப்பரிசினையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கினார்.
அடுத்து நடைபெற்ற அமர்வில் பெரியார் பன்னாட்டு மய்ய ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர்
மனிதநேயக் கண்ணோட்டத்தில் பெண்ணியம் என்னும் தலைப்பில் உரையாற்றிய டோனிவான் பெல்ட் அவர்களுக்கு தமிழர் தலைவர் நினைவுப் பரிசினை வழங்கினார்.
முனைவர் உல்ரிக் நிக்லஸ் 'உலக மனிதநேயம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். தமது உரையினை நிறைவு செய்து 'புதிய வானம், புதிய பூமி,  எங்கும் தமிழ் மொழி பரவுகிறது' எனப் பாடி அனைவரது பாராட்டுதலைப் பெற்றார். பின்னர் நடைபெற்ற அரங்கில் அறிமுக உரையினை குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் சித்தானந்தம் ஆற்றிட கனடா வான்கூவர் நகரிலி ருந்து வருகை தந்திருந்த தென் ஆசிய மனிதநேயர் சங்கத்தின் வெளியுறவுச் செயலாளர் டாக்டர் மாத்வி போட்லூரி 'ஜாதி அமைப்பும் டி.என்.ஏ. பரிசோதனையும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் உணவிற்குப் பின்னர் நடைபெற்ற அமர்வின் ஒருங்கிணைப்பாளரான திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி 'சமூகநீதி' பற்றி உரையாற்றித் தொடங்கி வைத்தார். பெண்ணியலாளரும், உளவியல் நிபுணருமான கிளாரா ஆர்தரும், கருப்பினர் அமைப்பின் தலைவர் நார்ம் ஆர் ஆலனும் 'சமூகநீதியும் விளிம்பு நிலை மனிதரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  சிறப்பு விருந்தினர்களுக்கு பகுத்தறிவு நூல்களை அளித்தார்
பின்னர் நடைபெற்ற அமர்வில் வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர் ராமசாமி அறிமுக உரையாற்றிட, கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தின் தமிழ்க் கல்விப் புலத்தின் மேனாள் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் சிறப்புப் பேச்சாளரான டாக்டர் ஆர். பிரபாகரன் பற்றிய குறிப்பினை வழங்கினார். 'திருக்குறளில் மனிதநேயம்' எனும் தலைப்பில் டாக்டர் ஆர். பிரபாகரன் ஆழ்ந்த ஆய்வுரையினை வழங்கினார். 'மனித நேயர்களின் பொறுப்புகள்' எனும் தலைப்பில் அமெரிக்க மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பினைச் சார்ந்த டெப்பி ஆலன் சிறப்புரை ஆற்றினார்.

- விடுதலை நாளேடு, 25.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக