சனி, 29 அக்டோபர், 2016

பரந்து பட்ட உலகில் பகுத்தறிவுத் தந்தை பெரியார்





தந்தை பெரியார் தம் பிறந்த நாளை செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு கொண்டாடிய நிலையில் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய நினைவு அலைகள்...

தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டைவிட பெருகிக் கொண்டே வருகின்றன. பிறந்த நாள் கொண்டாட்டம் மாநில, நாட்டு எல்லைகளைத் தாண்டி உலகின் பல நாடுகளிலும் பெருகி, தந்தைப் பெரியார்தம் மானிடம் போற்றிய - பகுத்தறிவு - சுயமரியாதை கொள்கைச் சிறப்பிற்கு பெருமை சேர்த்து வரு கிறது. செய்தி ஊடகங்களிலும் - அச்சு ஊடகம் மற்றும் மின் ஊடகங்கள் - தந்தை பெரியார் பற்றிய பதிவுகள் பெருகி வருகின்றன. இந்த ஆண்டு தந்தை பெரியார் 138ஆம் பிறந்த நாளையொட்டி ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் ஏதாவது ஒரு தளத்தில் தந்தை பெரியார் பற்றிய செய்திகளை, சிறப்புகளை பதிவு செய்துள்ளன.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் மானமிகு கோ.ஒளிவண்ணன் தந்தை பெரியாரது 138ஆம் பிறந்த நாளையொட்டி பெரியாரது வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய, எழுதிய கட்டுரை “தி டைம்ஸ் ஆப் இந்தியா” (The Times of India) இதழில் செப்டம்பர் 20, 2016 அன்று பிரசுரமாகி உள்ளது. தந்தை பெரியார் பற்றிய ஆங்கில கட்டுரை மற்றும் அதன் தமிழாக்கத்தினை “விடுதலை” வாச கர்களுக்கு வெளியிடுகிறோம்.

- ஆசிரியர்


1931ஆம் ஆண்டின் குளிர்காலம். கப்பல் ஒன்றின் அழுக்குப் படிந்த நான்காம் வகுப்பு அறை; மனிதர்களும், பண்டங்களுமாக நிரம்பி வழிந்தது. அதில் அய்ம்பத்திரண்டு வயதான தாடி நரைத்த ஒரு மனிதர் ஒரு நிலக்கரிச் சாக்கு மூட்டையின் மீது அமர்ந்திருந்தார். நான்காம் வகுப்பு என்பது கப்பலின் அடித்தளத்தில் இருக்கும். மேல் வகுப்புப் பயணம் கட்டுபடி ஆகாத கூலிக்காரர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் ஆனது. அளவுச் சாப்பாடுதான் கிடைக்கும். நாளுக்கு இரண்டுமுறை அவித்த உருளைக் கிழங்கும், வேர்க்கடலையும், தானியங்களும், பன் ரொட்டியும் கலந்த உணவு தருவார்கள்.

அந்த மனிதர் அப்போதுதான் காய்ச்சல் வந்து குணமாகியிருந்தார். அவ்வப்போது இருமல் வந்து தொந்தரவு கொடுத்தது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வசதியான அறை ஒன்றில் பயணம் செய்திருக்கலாம். எனினும் அவர் நான்காம் வகுப்பில் பயணம் செய்ய முன் வந்ததன் காரணம் அது வணிக முறைப் பயணமோ, உல்லாசப் பயணமோ அல்ல என்பதுதான். உலகின் பல நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல், சமூக இயக்கங்கள் பற்றியும், அவை எப்படி அந்தச் சமூகங்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு உதவின என்பது பற்றியும் தெரிந்து கொள்வதே அவரது பயணத்தின் நோக்கம். அவர்தான் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.இராமசாமி.

1931ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியன்று எஸ்.இராமநாதனையும், ஈரோடு இராமுவையும் உடன் அழைத்துக் கொண்டு பெரியார் அய்ரோப்பாக் கண்டத்தில் பத்து மாதம் பயணம் செய்வதற்காகப் புறப்பட்டார்.

போகும் வழியில் கொழும்புவில் சில நாள் தங்கி மூடநம்பிக்கை, ஜாதி, சமயம் அனைத்தையும் கண்டித்துப் பல கூட்டங்களில் பேசினார். ஜாதி இந்துக்களின் எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் ஆதிதிராவிடர்களின் சங் கத்தில் உரையாற்றினார். ஆதிதிராவி டர்கள் வலுப்பெற வேண்டுமெனில் சமுதாயம்முழுவதும்ஒன்றுசேர்ந்து ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிக் கொடு மைகளையும் எதிர்த்து நின்றால்தான் அது சாத்தியம் என்று வலியுறுத்தினார். அடுத்து எகிப்து, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.மார்க்சும்,ஏங்கல்சும்வெளி யிட்டிருந்த பொதுவுடைமை அறிக் கையைப் (Communist Manifesto) படித்திருந்த காரணத்தால் ரஷ்ய மக் களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டினார். ரஷ்ய நாட்டு ஆட்சி முறை அவரை மிகவும் கவர்ந்தது.

1932 ஜூன் மாதம் அவர் இங்கி லாந்து நாட்டின் பார்ன்ஸ்லி (Barnsley) என்னுமிடத்தில் தொழிற் கட்சியைச் சேர்ந்த 30,000 தொழிலாளர்கள் குழுமி யிருந்த அவையில் உரையாற்றினார். பிரிட்டன் - தொழிற் கட்சியின் தலைவரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜார்ஜ் லான்பரி (George Lanbery) அவையில் இருந்து பெரியாரின் உரையைச் செவி மடுத்தார். சொந்த நாட்டில் கொண்டிருந்த கொள்கைகளுக்கு நேர்மாறாக எப்படி ஆங்கில அரசு இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தைக் கொடுமைப்படுத்துகிறது என்பதை அவரிடமே கிண்டலாகத் தெரிவித்தார் பெரியார். இங்கிலாந்தில் இருந்த பொதுவுடைமைக் கட்சி அலுவலகங்கள் பலவற்றையும் சென்று பார்த்தார். இங்கி லாந்து நாடாளுமன்றத்தின் முதல் பொது வுடைமை கட்சி உறுப்பினரான சாபூர்ஜி சக்லத்வாலா (Shapurji Saklatwala)வைச் சந்தித்தார். ஜெர்மனியில் சோஷியலிஸ்ட் அமைப்புகள் பலவற்றிற்கும் சென்றார். அத்தோடு நிர்வாணச் சங்கம் ஒன்றிற்கும் சென்று அவர்களின் வாழ்க்கைக் கோட் பாடுகளைத் தெரிந்து கொள்ள முற்பட்டார்.

இந்தப் பயணத்தை மேற்கொண்டதில் பெரியாரின் முதன்மையான நோக்கம் மற்ற நாடுகளில் செயல்பட்டு வரும் முற்போக்கு இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதே. பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிறகு அந்த நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளைப்பற்றியும், நிர்வாக அமைப்பு,  நிதி அமைப்புகள் பற்றியும் “குடிஅரசு” இதழில் விரிவாக எழுதினார்.

1929 இல் மலேசிய நாட்டில் சுயமரி யாதை இயக்கத்தை வளர்க்க விரும்பிய நண்பர்களின்வேண்டுகோளைஏற்று அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற் கொள்வதற்காக டிசம்பர் 15ஆம் நாளன்று நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பெரியாரைப் பினாங்கு துறை முகத்தில் 50,000க்கு மேற்பட்டோர் திரண்டு வந்து வரவேற்றார்கள். மலேசியா விலும்,சிங்கப்பூரிலும்நிகழ்த்திய சொற் பொழிவுகள் அனைத்திலும் பெரியார் வலியுறுத்தியது சமயத்தையும், சமயச் சடங்குகளையும் நீக்கி விட்டுப் பொருளாதார முன்னேற்றத்தில் அனை வரும் கவனம் செலுத்தவேண்டும் என்பதே. மலேசியத் தமிழர்கள் தாயகம் திரும்புவதைப்பற்றி யோசிக்காமல் மலேசியக் குடிமக்களாக ஆகிவிடுவதே நல்லது என்று அறிவுரை கூறினார். இறுதிவரை அவரைவிட்டுப் பிரியாமல் தோழமையுடனிருந்த அவரது தாடி இந்தப் பயணத்தின்போதுதான் வளரத் தொடங்கியது.

பெரியார் 1954இல் மீண்டும் ஒருமுறை மலேசியா சென்றார். அப்போது பர்மாவில் பன்னாட்டுப் பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பர்மாவில் இரண்டு வார காலம் சுற்றுப்பயணம் செய்தபின் டிசம்பர் 11 அன்று பினாங்கு வந்தார். பர்மாவில் இருந்தபோது அம்பேத்கர் அவர்களைச் சந்தித்தார். பெரியாரைப் பவுத்த மதத்தில் சேருமாறு வேண்டிய அம்பேத்கரிடம், இந்து மத்திலேயே இருந்தால்தான் அதனை எதிர்க்க இயலும் என்று பதில் கூறினார் அவர்.

புத்தகங்களில் கண்ட விவரங் களைப் பெரியார் ஒருபோதும் அப் படியே நம்பிவிட மாட்டார், ஒரு ஆராய்ச்சியாளராக இருந்து தன்னுடைய அனுபவத்திலிருந்தும், முயற்சிகளில் இருந்தும் அறிவு பெறுவதையே விரும் பினார். அறிவைத் தேடி இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் மேற்கொள்வதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை, அதனால் ஏற்படும் தொல்லைகளை அவர் பொருட்படுத் தியதில்லை. மற்றவர்கள் அதிகம் சென் றிராத பாதையில் பயணம் மேற்கொள்ள விரும்பி முன்வந்தவர் அல்லவா அவர்?

கோ.ஒளிவண்ணன்
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் கழகத்தின் பொருளாளர்
(தமிழில்: அ.அய்யாசாமி)
-விடுதலை,23.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக