அவனி சதுர்வேதி, மோகனா சிங், பாவனா காந்த். இந்திய விமானப் படையில், வீர தீர சாகசம் செய்ய தகுதி பெற்றிருக்கும் முதல் பெண் போர் விமானிகள். இந்திய விமானப் படை சரித்திரத்தில் இடம் பெறப் போகும் வீராங்கனைகள்.
"அய்தராபாத்தில் இந்திய விமானப் படையின் பயிற்சி. அதுவும் கடுமையான பயிற்சிக்குப் பிறகு தேர்வாகியிருக்கின்றனர் மூவரும். வட இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்திய விமானப்படையில் பெண் போர் விமானிகளை நியமிக்க, இந்திய விமானப் படைத் தலைமை சுமார் 83 ஆண்டுகளாக தயாராகயில்லை. காரணம், போர் விமானியாக செயல்பட தரப்படும் பயிற்சிகள் மிகவும் கடுமையானவை. எதிரியின் நாட்டுக்குள் ஊடுருவ வேண்டி வரும். அப்படி ஊடுருவும் போது, எதிரியின் விமான, குண்டு தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும். ஆபத்து, அபாயம், சாகசம், சாமர்த்தியம், வீரம், விவேகம் கலந்த பணிக்கு ஆண்கள்தான் சரியானவர்கள் என்று, பெண்கள் போர் விமானிகளாக ஆவதை இந்திய விமானப் படைத் தலைமை தள்ளிப் போட்டு வந்தது.
ஹெலிகாப்டர்களை, போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் விமானங்களை ஓட்டும் பெண் விமானிகள் 1991- லிருந்து இந்திய விமானப் படையில் பணி புரிகிறார்கள். ஆனால் பெண் போர் விமானிகள் யாரும் இல்லை.
பெண் போர் விமானிகள் தேவை என்னும் கருத்தியலில், இந்திய விமானப் படைத் தலைமையகம் தனது தயக்கத்தை தள்ளி வைத்தது. எட்டு திறமையானப் பெண்களைத் தேர்ந்தெடுத்து அதில் மூன்று பெண்களை போர் விமானி பயிற்சிக்காகத் தெரிவு செய்தனர். மூன்று பெண்களும் முழு ஒத்துழைப்பு தந்ததுடன், மிகுந்த ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியின் முதலாம் நிலையில் 55 மணி நேரம் Pilatus PC 7 ரக போர் விமானம் ஓட்டி அனுபவம் பெற வேண்டும். இரண்டாம் நிலையில் Kiran Mark II விமானத்தை வானில் இயக்க வேண்டும். மூன்றாவது நிலையில், ஹாக் விமானங்களை ஓட்டும் அனுபவம் பெற்றதும் சூப்பர்சானிக் விமானங்களை இயக்கும் பயிற்சி தரப்படும். இந்த மூன்று நிலைகளையும் இவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து ஜூன் 18 ஆம் தேதி, பெண் போர் விமானிகளாக நியமிக்கப்பட்டனர்'' என்கிறார் இந்திய விமானப் படைத் தலைவர் அருப் ரஹா.
இதுவரை தரப்பட்ட பயிற்சியில், இந்த மூவரும் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மனோ ரீதியிலும், உடல் ரீதியாகவும் பயிற்சிக்கு பொருத்தமாக உள்ளனர். இன்னும் 5நி + என்னும் சோதனைக்கு அவர்கள் ஆளாக வேண்டும். சாதாரண புவி ஈர்ப்பு சக்தியைக் காட்டிலும் அய்ந்து மடங்கு சக்தியை அவர்கள் கையாள வேண்டி வரும். ஆண் போர் விமானிகளுக்கு 9G + அதாவது ஒன்பது மடங்கு புவி ஈர்ப்பு விசை சக்தியை கையாள வேண்டி வரும். அதே பரிசோதனைகளில் இந்த மூன்று பெண் விமானிகளும் பங்கேற்க வேண்டி வரும். அந்த பரிசோதனைக்குப் பிறகே, இவர்கள் சூப்பர்சானிக் போர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
பிகாரைச் சேர்ந்த பாவனாவுக்கு போர் விமானியாக வேண்டும் என்ற லட்சியம் சிறு வயது முதலே இருந்தது.
"எனது பெற்றோர்கள் என்னை ஊக்கு-வித்தார்கள். இந்த வேலையெல்லாம் பெண்ணுக்கு ஏற்றதல்ல என்று சொல்லவே இல்லை. மிகச் சிரமமான பணி என்று தெரிந்தே வந்திருக்கிறோம் சாதித்துக் காட்டுவோம்'' என்கிறார் பாவனா.
"அப்பாவும், தாத்தாவும் விமானப் படையில் போக்குவரத்து விமானத்தில் பணி புரிந்தவர்கள். அதனால் விமானப் படையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் என் ரத்தத்தில் இருக்கிறது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்ததும், எல்லாரையும் போல தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலையில் அமர்ந்தேன். அத்துடன், இந்திய பாதுகாப்பு படைகளில் சேர என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன். போர் விமானியாகத் தேர்வு பெரும் வாய்ப்பு கிடைத்ததும் அதை இரண்டு கைகளால் வாரிக் கொண்டேன்'' என்கிறார் மோகனா சிங்.
"ஆண் போர் விமானிகளுக்குத் தரப்பட்ட பயிற்சிதான் எங்களுக்கும் தரப்படுகிறது. பெண்கள் என்று எந்தச் சலுகையும் தரப்பட-வில்லை. நாங்களும் சலுகைகளை எதிர்பார்க்க-வில்லை. பெண்களாலும் போர் விமானியாக முடியும் என்று நிரூபிக்க வந்திருக்கிறோம், நிரூபித்து காட்டுவோம்'' என்று சொல்லும் அவனி சதுர்வேதி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
அத்துடன் போர்ப் பிரிவு அல்லாத விமானிகளாக 22 பெண்கள் உள்பட 130 பேர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமான பயிற்சி நிறைவு விழா துண்டிகல் அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், விமானப் படையின் போர்ப் பிரிவில் பெண்கள் இணைந்துள்ளது ஒரு மைல்கல் என்று தெரிவித்தார்.
இது ஒளிமயமான நாள் என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் முப்படையிலும் முழுமையான பாலினச் சமத்துவம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த மூவருக்கும் ஓர் அறிவுரையினை இந்திய விமானப் படை தந்துள்ளது. குறைந்தது நான்கு ஆண்டுகளுக்காவது தாய்மை அடைவதைத் தள்ளி வைக்குமாறு. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
முழுமையான போர் விமானியாகத் தகுதி பெற அய்ந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான பயிற்சி இந்த பெண் விமானிகளுக்குத் தேவைப்படும். இது எல்லா முன்னணி நாட்டு விமானப் படையில் உள்ள விதி. இயற்கையாகவே, பெண்களின் உடல் அமைப்பு நீண்ட நேரம் போர் விமானியாகப் பறக்க ஏதுவாக அமையவில்லை. அதுவும், உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், கர்ப்பம் தரிக்கும் போதும் போர் விமானத்தை ஓட்டுவதென்பது மிகவும் சிரமமான விஷயம். இவற்றைத் தெரிந்து கொண்டுதான் ஒரு சாகச வாழ்க்கைக்குத் தயாராக வந்துள்ளனர் இந்த மூன்று வீராங்கனைகளும்.
-உண்மை இதழ்,16-31.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக