ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கருநாடகாவில் பகுத்தறிவாளர் கல்புர்கி பெயரில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம்

கருநாடக சட்டப்பேரவையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் திருத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும், அச்சட்டத்துக்கு பகுத்தறிவாளர் கல்புர்கியின் பெயரை சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கருநாடகா மூடநம்பிக்கை தடுப்புச்சட்டம் 2016 என்று கருநாடக மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் 8.7.2016 அன்று முன்வைக்கப்பட உள்ளதாக  கருநாடக மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர கருநாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமய்யா தலைமையிலான ஆளும் காங்கிரசு அரசு முடிவு செய்திருந்தது. தற்போது மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள அச்சட்டத்துக்கு பகுத்தறிவாளர் எம்.எம். கல்புர்கியின் பெயர் சூட்டப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முன் வரையிவிலிருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு
மூடநம்பிக்கை தடுப்புச்சட்டத்தின் படி தொலைக்காட்சிகளில் ஜோதிடம் என்கிற பெயரால் நடத்தப்பட்டுவரும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டிய 13 வகையிலான மூடநம்பிக்கைகள் குறித்து சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 11 வகையிலானவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவையாக உள்ளன.
நரபலியைத் தடுத்திட மரண தண்டனை
மாந்தீரிகம், பில்லி சூனியம் என்றுகூறி நரபலி கொடுக்கின்ற மூடத்தனத்துக்கு முடிவு கட்டும்வகையில் அச்சட்டத்தில் இதுபோன்ற நரபலி செயல்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என சட்டமுன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களிடையே கருவிலேயே ஆணா, பெண்ணா என்று பாலினைத் தேர்வு செய்வது, நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி கொடுமைப்படுத்துவது, பிற சடங்குகள் என்கிற பெயரால் காயப்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கையான செயல்களைத் தடுப்பதற்கு இச்சட்டத்தில் வழிவகை காணப்பட்டுள்ளது.
காவல்துறையில் விழிப்புணர்வு அதிகாரிகள்
கருநாடக மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் குறைந்த பட்சம்  அய்ந்து காவல் நிலையங்களில் காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ள மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மூடநம்பிக்கை-களில் ஈடுபட்டு குற்றமிழைப்பவர்களை கைது செய்வது உள்ளிட்ட பணிகளின்மூலமாக அச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது அவர்களின் பணிகளாக இருக்கும்.

-உண்மை இதழ்,16-31.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக