திங்கள், 20 ஜூலை, 2015

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே!

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே!
அமெரிக்க உளவியல் சங்கத்தின் முடிவினைப் பாரீர்!
தந்தை பெரியார் கருத்துக்கு மேலும் ஓர் ஆதாரம்
துண்டறிக்கை மூலம் மக்களுக்கு எடுத்துச் செ(சொ)ல்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே என்று அமெரிக்க உளவியல் நிபுணர்கள் வெளி யிட்டுள்ள அரிய கருத்தினைத் துண்டறிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் எடுத்துச் செ(சொ)ல்ல வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது.
அதே போன்று நன்னெறிகள் குறித்த வழிகாட்டுதல் களை சங்கம் அளித்து அதற்கான சட்ட வடிவமும் அமெரிக்காவில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
1892ஆம் ஆண்டில் தோற்றம்
31 பேரைக் கொண்டு 1892ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அதிவேகமாக வளரத் தொடங்கியது. உளவியல் உட்பிரிவுகளாக 54 பிரிவுகளைக் கொண்டு சங்கத்தின் உறுப்பினர்களாக 1,37,000 பேர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
1,37,000 பேர் உறுப்பினர்கள்
அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1,37,000 பேரை உறுப்பினர் களாகக் கொண்டுள்ள அமைப்பாக அமெரிக்கன் உளவியல் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 11.50 கோடி டாலர் (115 மில்லியன் டாலர்) செலவினங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறையினரின் விசாரணையில் உள்ளவர்களின் நலன், மனிதக்கடத்தல், மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை ஆகியவைகளை உள்ளடக்கிய மனித உரிமைக் கான செயல்பாடுகள், ஓரினச் சேர்க்கையாளர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், பல்வேறு நிலைகளிலும் சமூகத்தில் உள்ள பாலியல் வேறுபாடுகளைக் களைதல் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
நிர்வாகம்
சங்கத்தின் நிர்வாகம் என்பது ஜனநாயக முறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்படுவதாகும். சங்கத்தின் உறுப்பினர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தலைவர் அவருடைய பணிக்காலத்தில் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும்படியாக செயல்படுவார். நிர்வாகத்தில் ஆறுபேர் இடம் பெறுகிறார்கள். மேனாள் தலைவர், தலைவர், அடுத்த தலைவர், பொருளாளர், பதிவு செயலாளர், தலைமை செயல் அலுவலர் ஆகியோர் நிர்வாகிகளாகவும் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் பட்டதாரி மாணவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஆண்டு வருவாய் 6 கோடி டாலர்
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்குத்தான் நிறுவனத்தின் கொள்கைகளை வகுப்பதற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத்துக்கு கிடைக்கின்ற ஆண்டு வருவாய் சுமார்  6 கோடி டாலர் (60 மில்லியன் டாலர்) ஆகும். உளவியல் நிறுவனத்தின் சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலம் மற்றும் மாகாணங்களில் உள்ள உளவியல் சங்கத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு ஆண்டு வருவாய் 6 கோடி டாலர் சேகரிக்கப்பட்ட வருவாயாகும்.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் நிர்வாக முறை என்பதில் நடைமுறைப்படுத்துவது, படிநிலை செயல் முறைகள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள் ஆகிய வற்றில், அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்தி, 2011ஆம் ஆண்டு ஜனவரியில் நல்ல நிர்வாகத் தன்மைக்கான திட்டம் தொடங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் மேலும் சிறந்த நிர்வாகத்துக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 31.7.2013 முதல் 2.8.2013 வரை நிறுவனத்தின் செயல்பாடுகளில் சிறப்பான நிர்வாகத் துக்குரிய மாற்றங்களை செய்வதற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்படியே பின்பற்றப்பட்டது.
சங்கத்தின் கட்டமைப்பு
செயல் அலுவலகம், பதிப்பகப் பணிகள், அலுவல கங்கள் மற்றும் நிர்வாக முகவரி, வணிகம், தகவல் தொழில் நுட்பம், இயங்குவதற்கான தேவை, கல்வித்துறையுடன் இணைந்து உளவியல் மருத்துவத்தை செயல் திட்டங்களை செயல்படுத்துவது, உடல்நலன் பேணுவோருக்கு உளவியல் சார்ந்த மருத்துவத்தை வழங்குவது என பல்வேறு திட் டங்களை அமெரிக்கன் உளவியல் சங்கம் கொண்டுள்ளது.
பொதுமக்களிடையே ஆர்வத்துடன் உளவியலைக் கொண்டு செல்வதில் அவர்களிடையே உள்ள அடிப்படையான பிரச்சினைகளை பேசுவதன்மூலமும், மக்கள் நலன் கருதி, உரிய அளவில் அவர்களுக்கான பங்களிப்பை வழங்குவது, அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளவர்களிடையே சமத்துவத்தைக் கொண்டுவருவது ஆகியவைகளில் பொது மக்களிடையே அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் இருந்து பொறுப்புடன் செயல் ஆற்றுவார்கள். அறிவியல் செயல்கள்மூலம் நிரூபிக்கவும், உளவியல் அறிவியலுக்காக குரல் கொடுக்கவும் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
உறுப்பினர்கள்-உளவியலாளர்கள்
இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்கள் உளவியலாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதற்குரிய அளவில் கல்வியும், பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்படும்.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் செயல்பாடுகளாக பாலியல் மாறுபாடுகளைக் களைவது மற்றும் பாலியல் உரிமை, மனித உரிமை, நல்ல முறையிலான நிர்வாகங் களில் செய்யப்படவேண்டிய  மாற்றங்கள், கருக்கலைப்பு உரிமை, ஒருபாலின மண உரிமை, உடல்நலத்துக்கு இன்றி யமையாத உளவியல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வருகிறது.
உடல் நலம் பேண உளவியல் நிலை பாதுகாக்கப்பட வேண்டும், உளவியல் என்பது அறிவியலே, மாணவர் களிடம் உளவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முதன்மையானவை யாக முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது.
பணியிடங்கள்
மருத்துவர்களுக்கு ஈடாக ஆரம்பக் கல்வி முதல் பள்ளிக் கல்வி வரை பள்ளிகள், மருத்துவமனைகள், இராணுவப் படை முகாம்கள், நீதித்துறை, சிறைகள், வணிகம் மற்றும் தொழில்கூடங்கள் உள் ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இடங்களில் அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவ னங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், உள வியல் ஆய்வாளர்கள், உள வியல் கல்வி பெற்றவர்கள் அமெரிக்கன் உளவியல் சங் கத்தில் அங்கத்தினர்களாக சேர்க்கப்படுகிறார்கள். அமெரிக்க அய்க்கிய நாடுகள் மற்றும் கனடா மட்டுமன்றி பிற நாடுகளி லிருந்தும் உளவியல் கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மன நல மருத்துவத் துறையினர் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்.
கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள்
கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும்  தாங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று   அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் ஆய்வுத் தகவல் கூறுகிறது.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் மத நம்பிக்கையாளர்களாக இருப்ப வர்கள் மிகுந்த கவலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், உணர்ச்சிவயப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களாகவும், இயல்புக்கு மாறாக கற்பனை உலகில் உலவுபவர்களாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர் களாகவும் இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆண்டு கால ஆய்வின் முடிவாக அமெரிக்கன் உளவியல் சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கருணையே வடிவானவன் என்று கருதுவதுடன் தங்களுக்கு மன அமைதியைத் தருபவர் என்றெல்லாம் கடவுள்குறித்து எண்ணிவரும் கடவுள் நம்பிக்கை யாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். மத நம்பிக்கையில் உள்ள இரண்டு விதமான நடவடிக்கைகள் முற்றிலும் உண்மைநிலைக்கு தொடர்பற்று முரணாகவே இருந்துவருகின்றன.
பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரியூஸ்
உளவியல் பேராசிரியர் டாக்டர் லில்லியன் ஆண்ட் ரியூஸ் கூறுகையில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக் கானவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகளால் உயிரிழக்கிறார்கள். அந்த சிகிச்சை அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்பார்கள் என்று எடுத்துச் சொன்ன போதிலும், அந்தக் கருத்தை மறுத்து, கடவுள் அவர்களைக் காப்பார் என்று கடைசிவரை நம்புகிறார்கள். ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதில் முடிவை எடுக்க தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வரும்போதுதான், அந்த மக்களைக் காக்க முடிகிறது.
குருதிக்கொடை ஏற்காத மனக்கோளாறு
யகோவா என்கிற கடவுளே சாட்சியாக இருக்கிறார் என்பார்கள். அவர்களுக்கு ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் எந்த சூழலிலும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் அடுத்தவர் ரத்தத்தைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதேமேல் என்பார்கள். மதவாதிகளாக இருப்பவர்கள் பலரும் தங்களின் கைகளுக்கே குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக நம்புகிறார்கள். கடவுளுக்கு என தனியே மொழி இருப்பதாக நம்புகிறார்கள். அந்த மொழி யாருக்கும் தெரியாது. இடையில் தொடர்பாளராக இருப்பவர் களுக்கும், கடவுளுக்கும் மட்டுமே அந்த மொழி தெரியும் என்று எண்ணுகிறார்கள். (கடவுளும் மனிதர்களைப் போன்று நாவால் பேசுவதாக எண்ணுகிறார்கள்) அவ்வப் போது பலரும் ஆவிகளைக் கண்டதாகக் கூறிக் கொள்வார்கள். உண்மைக்கு மாறானவைகளாக உள்ள இவ்வாறான நிலையை மனக் கோளாறுகளின் அடை யாளமாகவே பார்க்க முடியும்.
கடவுளின் கோபம் எனும் மூடநம்பிக்கை
கடவுளின் கோபத்தால் குழப்பம், அழிவு, இறப்பு, நூற் றாண்டுகளாக போர்கள் ஏற்படுவதாக மத நம்பிக்கை யாளர்கள் கருதுகிறார்கள். காலத்தால் ஏற்பட்டு வரும் மாற்றங்களிடையே நவீன சமூகத்திலும் இவையாவும் தொன்மையான நம்பிக்கைகளாக, மூளை செயல்பாடு களின்றி நீண்ட காலமாக அப்படியே நீடித்த நிலையில் இருந்து வருகிறது. இவைகுறித்த முதல் அடியாக பல வகையிலும் நேர்மறை வழிகாட்டுதலாக இந்த ஆய்வு அமைந்துள்ளது என்று பேராசிரியர் ஆண்ட்ரியூஸ் கூறினார்.
உயிரைக் காக்க கட்டாய சிகிச்சை
புதிய விளக்கங்களின்படி, அமெரிக்க உளவியல் சங்கம் சட்டம் இயற்றுவதற்கான வழிகாட்டுதல்களை முன் னெடுக்கிறது.  அந்த சட்டத்தின்மூலமாக, மத நம்பிக்கை களால், மத காரணங்களால், மத சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல்,  அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தேவையான முடிவை எட்ட முடியாதவர்களுக்கு,  மத நம்பிக்கையின் பேரால் சிகிச்சை பெற மறுப்பவர் களின்  உயிரைக் காப்பதற் காக எந்த நிலையிலும், மருத்துவர்கள் கட்டாய சிகிச்சை முறைகளைப் பின் பற்றலாம் என்று மருத்துவர்களுக்கு முழு உரிமையை அளித்திட முடியும்.
விரைவில் இந்த ஆய்வு குறித்த முழு விவரங்கள் அமெ ரிக்கன் உளவியல் சங்கத்தின்மூலம் வெளியிடப்பட்டுவரும் இதழில் வெளிப்படையாக அனைவரும் அறிந்து கொள் ளும்படியாக வெளியிடப்படும் என்றும் அச்சங்கத் தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் www.thenewsnerd.com  எனும் இணையத் தில் மருத்துவச் செய்தித் தலைப்பில் வெளியிடப் பட்டுள்ளது.
மேற்கண்ட அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும், தகவல்களும் எவ்வளவு சரியானவை - துல்லியமானவை என்பதை  விரைவில் உலகம் அறியப் போகிறது. இவை சரியானவைகளே என்று முடிவு கட்டவும் இந்த ஆய்வுகள் பயன்படும்; இதற்கான சரியான பரிசோதனைக் கூடம் (Laboratory) ஒன்று உண்டு என்றால், அது இந்த இந்தியத் திருநாடுதான்.
இங்குள்ள பல கோடி மக்களை மதம் பிடித்துள்ளதோடு, கடவுள் நம்பிக்கை எத்தனை மோசமான நிலையில் அவர்களை வைத்துள்ளது!
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி  பேருந்திலிருந்து மனிதாபிமானமின்றி உருட்டி விடப்பட்டுக் கொன்ற பஞ்சாப் பெண்மணியினைப் பற்றி அங்குள்ள அமைச்சர் அது கடவுள் செயல் - கடவுள் சித்தம் என்று  இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூறினார் என்றால் இதைவிட மனநோயாளிகளாக கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை?
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வரும் ஆந்திர மாநிலம், கோதாவரி மகா புஷ்கர நீராடலில் 81 லட்சம் பேர் கூடினர் - கடந்த ஒரு வாரமாக நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 30-க்கும் மேல் என்ற கொடுமையான கோர நிகழ்வுக்குப் பின்னரும் கூட்டம் அங்கே சென்றுள்ளது என்பது எதைக் காட்டுகிறது?
கடவுள் நம்பிக்கை முற்றிலும் ஒரு மன நோய் - பக்தி என்பது அதன் வெறித்தன வெளிப்பாடு என்பதைத்தானே அது காட்டுகிறது!
அதுபோலவே நேற்று முன்தினம் ஒடிசாவின் பூரி தேர் இழுப்பு விழாவில் 3,4 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இன்னமும் நரபலிக்கு ஆள்தேடும் அளவுக்கு தமிழ் நாட்டில்கூட அவ்வளவு மோசமான பைத்தியக்காரத்தனம் தலை தூக்கி - அடி வாங்கியவுடன் தலையை இழுத்துக் கொள்ளுகிறது என்பது எதைக் காட்டுகிறது!
அமெரிக்கா ஆய்வான இதை நாடு முழுவதும் துண்டறிக்கையாக பகுத்தறிவாளர்களும் பரப்ப வேண்டும்.
அறிவுப் பூர்வமான - உளவியல் பூர்வமான இந்த ஆய்வு செய்தவர்களை, துணிவுடன் வெளியிட்ட அமெரிக்க உளவியல் ஆய்வாளர்களையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர்களும் நீண்ட காலமாகக் கூறி வருவதை ஆய்வு மூலம் அமெரிக்கன் உளவியல் ஆய்வு நிரூபித் துள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்கும், வரவேற்புக்கும் உரியதாகும்.
கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்
சிங்கப்பூர்
20.7.2015
விடுதலை,20.57.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக