ஞாயிறு, 8 ஏப்ரல், 2018
உலக நாத்திகர் மாநாட்டுப் பிரகடனம்!
புதன், 4 ஏப்ரல், 2018
புரட்சியாளர் Dr.B.R.அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்:-
Dr.B.R.அம்பேத்கர்,அவர்கள் அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பௌத்த சமயத்தைத் தழுவியபோது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள்.
01. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.
02. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.
03. கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.
04. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
05. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.
06. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.
07. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீறமாட்டேன்.
08. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.
09. மானுட சமத்துவத்தை நம்புவேன்.
10. சமுத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.
11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.
12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்
13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.
14. பொய் பேச மாட்டேன்.
15. களவு செய்ய மாட்டேன்.
16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.
17. மது அருந்த மாட்டேன்.
18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.
19. மனித நேயத்துக்கு முரணான, சமுத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக்ககொள்கிறேன்.
20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.
21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.
22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.
புதன், 28 மார்ச், 2018
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்: தமிழர் தலைவர் அறிவிப்பு
சென்னை, மார்ச் 28 25.3.2018 அன்று சென்னை - பெரியார் திடலில் பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அக்கலந்துரையாடல் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவித்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் உரையாற்றியோர்
தாம்பரம் மாவட்ட தலைவர் அ.தா.சண்முகசுந்தரம், தென்சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அருள்செல்வன், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் தங்க.வீரமணி, திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.கரிகாலன், கடலூர் இரா.தமிழன்பன், புதுச்சேரி நெ.நடராசன், மேட்டூர் பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் புள்ளை.வீரமணி, தஞ்சை கோபு.பழனிவேல், காரைக்குடி மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி, தர்மபுரி தலைவர் கதிர்.செந்தில்குமார், செயலாளர் மாரி.கருணாநிதி, மேட்டுப்பாளையம் தலைவர் டி.வீரமணி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் டி.இருதயராஜ், லால்குடி மாவட்ட செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியன், பழனி மாவட்ட தலைவர் திராவிடச்செல்வன், ஆத்தூர் மாவட்ட செயலாளர் முருகானந்தம், ஆவடி பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் எழிலரசி, திருப்பத்தூர் ஆசிரியரணி சார்பில் இரா.பழனி, மயிலாடுதுறை தலைவர் ஞான.வள்ளுவன், வடசென்னை தலைவர் கோவி.கோபால், குடியாத்தம் செந்தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட செயலாளர் மலர்மன்னன், புதுச்சேரி தலைவர் கு.ரஞ்சித்குமார், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்கள் அண்ணா.சரவணன், கே.டி.சி.குருசாமி, கோ.ஒளிவண்ணன், அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச் செல்வன், பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.ரமேசு, ப.க.பொதுச் செய லாளர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் ஜெ.தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக தலைவர் வா.நேரு, மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக வெளி யுறவு செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழகத்துணை தலைவர் கலி.பூங்குன்றன், நிறைவாக பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் வழிகாட்டுதல் உரையாற் றினார்கள்.
கூட்டத்தில் மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு சந்தா வழங்கியவர்கள்: மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் டி.வீரமணி, மேட்டூர் மாவட்ட தலைவர் கோவி.அன்புமதி, பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன், திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் ஆசிரியரணி மாவட்ட தலைவர் இரா.பழனி, அண்ணா.சரவணன், மாடர்ன்ரேசனலிஸ்ட் சந்தா இது வரை 100 சந்தாக்களை வழங்கி இலக்கினைஅடைந்தது மேட்டுப்பாளையம் மாவட்டம். காரைக்குடி மாவட்டம் 75 சந்தா வழங்கியுள்ளது. மாவட்ட தலைவர் அ.சிவக்குமார் நன்றி கூறினார்.
பகுத்தறிவாளர் கழகம் - புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்
தென் சென்னை மாவட்டம்
எம்.ஆர்.மாணிக்கம் - தலைவர், இளம் பெரியார் - துணைத்தலைவர், ராஜராஜன் - மாவட்ட செயலாளர், தமிழரசன் - துணைச் செயலாளர், செல்வக்குமார் - பொருளாளர்
வேலூர் மாவட்டம்
இர.அன்பரசன் - தலைவர், க.அருள்மொழி - செய லாளர், பெல் தங்கராசு - அமைப்பாளர்
தஞ்சாவூர் மாவட்டம்
ந.காமராசு - தலைவர், ச.அழகிரி - செயலாளர், பொ.ராஜீ - அமைப்பாளர்
ஆத்தூர் மாவட்டம்
வ.முருகானந்தம் - தலைவர், அறிவுச் செல்வன்- செயலாளர்
மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்: மாநிலத் தலைவர் - வா.நேரு, மதுரை, மாநில துணைத் தலைவர் - கோ.ஒளிவண்ணன்
திராவிடர் கழக மகளிரணி மாநில அமைப்பாளர் - தகடூர் ஜெ.தமிழ்செல்வி
பகுத்தறிவாளர் கழகம்: மாநிலத் தலைவர் - மா.அழகிரிசாமி, (தஞ்சாவூர்), பொதுச்செயலாளர் - இரா.தமிழ்ச்செல்வன், பொருளாளர் - சி.தமிழ்ச்செல்வன்
பகுத்தறிவு ஆசிரியரணி
பள்ளிகள்: மாநில அமைப்பாளர்கள் - சி.ரமேசு (நீடாமங்கலம்), வா.தமிழ்பிரபாகரன் (ஆத்தூர்)
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் அமைப்பாளர் - இரா.கலைச்செல்வன், திருச்சி
பல்கலைக்கழகம், கல்லூரிகள்: மாநில அமைப்பாளர் - எஸ்.அருள்செல்வன் (சென்னை)
தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி
தலைவர் - ஆசிரியர் இரா.கிருட்டிணமூர்த்தி, துணைத் தலைவர் - கே.ஆர்.குமார், செயலாளர் - ஆசிரியர் தீ.சிவாஜி, அமைப்பாளர்: மு.பிரபாகரன்
பகுத்தறிவாளர் கழக மாநிலத்துணைத் தலைவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள்
1. அ.தா.சண்முகசுந்தரம், தாம்பரம்
மாநில துணைத் தலைவர் (தாம்பரம், அரக்கோணம், காஞ்சிபுரம், தென் சென்னை) 2. அண்ணா .சரவணன், மத்தூர்
மாநில துணைத் தலைவர் (வேலூர், திருவண்ணாமலை, செய்யாறு, திருப்பத்தூர், கிருட்டிணகிரி, தருமபுரி, சேலம், மேட்டூர், ஆத்தூர்)
3. த.வீரமணி, மேட்டுப்பாளையம்
மாநில துணைத் தலைவர் (ஈரோடு, கோபி, திருப்பூர், தாராபுரம், கோவை, நீலமலை, மேட்டுப்பாளையம்)
4. மு.நடராஜன், புதுச்சேரி
மாநில துணைத் தலைவர் (புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, விருதாச்சலம், கடலூர், சிதம்பரம்)
5. ச. மணிவண்ணன், துறையூர் மாநில துணைத் தலைவர் (திருச்சி, லால்குடி, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல்)
6. கே.டி.சி. குருசாமி, ராயகிரி
மாநில துணைத் தலைவர் (குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி)
7. கா.நல்லதம்பி, விருதுநகர்
மாநில துணைத் தலைவர் (விருதுநகர், மதுரை, மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல், பழனி)
8. பேராசிரியர் மு.சு.கண்மணி, காரைக்குடி மாநில துணைத் தலைவர் (காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை)
9. கோபு.பழனிவேல், தஞ்சாவூர்
மாநில துணைத் தலைவர் (தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, மயிலாடுதுறை)
10. எம்.ஆறுமுகம், ஆவடி
மாநில துணைத் தலைவர் (கும்மிடிப்பூண்டி, வட சென்னை, ஆவடி, திருவள்ளூர்)
- விடுதலை நாளேடு, 28.3.18
திங்கள், 26 மார்ச், 2018
நாத்திகம் தவறான சொல் அல்ல!
கவிஞர் கலி. பூங்குன்றன்
நாத்திகம் என்ற சொல் ஒன்றும் தவறானதல்ல. கடவுள் மறுப்பாளர்களை நாத்திகர்கள் என்று சொல்லுவது சரிதான். மதுரைத் தமிழ்ப் பேரகராதி கூட நாத்திகம் என்ற சொல்லுக்கு தெய்வமின்மை, நிரீஸ்வரம் என்றே பொருள் கூறுகிறது.
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (பக்கம் 626) என்ன கூறுகிறது?
நாத்திகம் Atheism: தெய்வம் அல்லது தெய்வ நம்பிக்கை போன்ற பொருண்மை சாராத வற்றைத் திறனாய்தல். கடவுள் உள்ளாரா என்று வினா எழுப்பி சடப்பொருட்களில் மட்டும் நம்பிக்கை கொள்ளும் உலகாயதம் போலல்லாமல் நாத்திகம் கடவுளை முற்றிலும் மறுக்கிறது. பல தத்துவ முறைகளில் இது வேரூன்றியுள்ளது. பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளான டெமாகிரிட்டஸ், எபிக்யுரஸ் ஆகியோர் பொருண்மைத்துவம் குறித்துப் பேசுகையில் இதை ஆதரித்து வாதிட்டுள்ளனர். 18ஆம் நூற்றாண்டில் டேவிட் ஹ்யூம், இம்மானுவல் கான்ட் ஆகியோர் நாத்திகவாதிகளல்லர் எனினும், கடவுள் இருப்பதற்கான மரபு வழிச் சான்று களுக்கு எதிராக வாதிட்டனர். கடவுட்பற்றே நம்பிக்கைக்குக் காரணம் என்றனர். லுட்விக் ஃபாயர்பாக் போன்ற நாத்திகவாதிகள் கடவுள் என்பது மனித லட்சியங்களின் உருவகப் புனைவு என்றும், இந்தப் புனைவை அடையாளம் காண்பது தன்னை உணர்தலைச் சாத்திய மாக்குகிறது என்றும் கூறினர். மார்க்ஸியம் நவீன பொருண்மைத்துவத்தின் வடிவமாகத் திகழ்கிறது. ஃபிரடெரிக் நீட்ஷேயிலிருந்து தொடங்கிய இருத்தலியல் நாத்திகம், கடவுளின் மரணத்தைப் பிரகடனப்படுத்தி, மதிப்பையும் பொருளையும் நிர்மானிக்கும் மனித உரிமையை அறிவித்தது. தர்க்க நேர்காட்சி வாதம் (லாஜிகல் பாசிடிவிஸம்) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சினையே முட்டாள்தனமானது அல்லது பொருளற்றது என்று கூறுகிறது. இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட சகாப்தத்தில் சார்வாகர் என்று அறியப்பட்ட ரிஷியின் சார்வாகக் கொள்கையும் நாத்திகம் சார்ந்ததே. பவுத்த மதத்தின் ஸ்தாபகரான புத்தர் கடவுளை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. எனவே பவுத்த மதம் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை வழிபடுவதில்லை. தமிழகத்தில் நாத்திக வாதத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி முக்கியமானவர் என்கிறது பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்.
இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்கள், நாத்திகத்தை ஏன் வெறுக்க வேண்டும். சாருவாகனம் என்பதெல்லாம் நாத்திக வாதம் தானே.
இந்து மதத்தில் ஒரு வினோதம் என்னவென்றால் கடவுளை மறுப்பவர்கள் நாத்திகர்கள் அல்லர், மாறாக வேதத்தை மறுப்பவர்தான் நாத்திகர்.
மனுதர்மம் 2ஆம் அத்தியாயம் 11ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
வேதம் (சுருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான். இத்தகைய நாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால் தெய்வத்தை நிந்திக்கின்றவனாவான். நாத்திகத்துக்கு மனுதர்மம் கூறும் விளக்கம் இது.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
“நாஸ்திகம் என்றால் ஸ்வாமி யில்லை என்று சொல்கிற நிதீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக் கின்றோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.’’
“அப்படிப்பட்ட பலபேர் இருந்திருக் கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்பது அர்த்தம்.’’
“வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல’’ (‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408)
இப்பொழுது புரிகிறதா _ நாத்திகம் _ ஆத்திகம் என்பதற்கான விளக்கம்?
1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ஜனசங்கத்தினர் தந்தை பெரியார் மீது செருப்பினை வீச, அந்தச் செருப்பினை இலாவகமாகப் பிடித்த கருஞ்சட்டைத் தோழர் மூடநம்பிக்கை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ராமன் படத்தினை அந்த செருப்பைக்கொண்டு அடிக்க _ தேர்தல் நேரம் என்பதால் பார்ப்பனர்கள் குறிப்பாக ‘துக்ளக்’, ‘தினமணி’ போன்ற ஏடுகள் அதைப் பெரிதுபடுத்தியதோடு தேர்தல் பிரச்சாரமே இதனை மய்யப் புள்ளியாகக் கொண்டு சுழன்றது.
அப்பொழுது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் திருக்குறள்போல இரண்டு வரிகளில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.
“இன்று ‘ஆஸ்திகம்’ என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று ‘நாஸ்திகம்’ என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.” உங்களுக்கு இதில் எது வேண்டும்? என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். (‘விடுதலை’ 19.2.1971 )
இராமனை தி.க.வினர் செருப்பாலடித்து விட்டனர்; அப்படிப்பட்ட தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று எதிரிகள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவு என்ன தெரியுமா? இராமனை செருப்பாலடித்ததற்கு முன்பு 1967இல் தி.மு.க.வுக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 138, செருப்படிக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் தீவிரமாகப் எதிர்ப் பிரச்சாரம் செய்த நிலையில் தி.மு.க.வுக்குச் சட்டமன்றத்தில் கிடைத்த இடங்கள் 186.
அப்பொழுது ராஜாஜி கையொப்பமிட்டு ‘கல்கி’ இதழில் (4.4.1971) என்ன எழுதினார் தெரியுமா?
“இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்’’ என்று எழுதினார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் உறுதி செய்த நாத்திகம்
எத்தன்மையுடையது என்பதை இதன் மூலம் நன்கு அறியலாமே!
ஆன்மீக அரசியல் பேசுவோருக்கும் இது ‘காணிக்கை!’
இராமாயணத்தில் தசரதன் அமைச்சரவை யில்கூட ஜாபாலி என்ற நாத்திகர் இருந்தார். அவர் ஒரு பார்ப்பனர்.
“நாத்திக வாதமென்றால் ஜாபாலி சொன்னதுபோல் இருக்க வேண்டும். பவுத்த மதம், ஜைன மதம் நம்மிடம் நாத்திக வாதம் பேசி இருக்கிறது. புனர்வாதம், புத்திவாத மெல்லாம் பேசி இருக்கிறார்கள்’’ என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மணியனின் ‘இதயம் பேசுகிறது’ இதழுக்கு (10.7.1988) அளித்த பேட்டியில் கூறியதுண்டே!
உண்மைகள் இவ்வாறு இருக்க நாத்திகம் என்றால் தவிர்க்கப்பட வேண்டிய பெருமையற்ற வார்த்தையல்ல _ எதிர்மறையான சொல்லாடலும் அல்ல. பகுத்தறிவை உள்ளடக்கிய தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய சிந்தனைக் கூர்மையுடைய கம்பீரமான பொருள் பொதிந்த சொல்லே.
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ,
சமத்துவத்திற்கு இடமில்லையோ,
அங்கெல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கிறது.
- தந்தை பெரியார்,
‘குடிஅரசு’ 07.09.1930
- உண்மை இதழ், 1-15.2.18
வெள்ளி, 2 மார்ச், 2018
ஆன்மிக அரசியல் இந்த உலக மக்களுக்குச் செய்த நன்மைகள் என்ன?
“பசுத்தோல் போர்த்திய புலி” என்பது வேறொன்றுமில்லை. அது தான் “ஆன்மிக அரசியல்” என்ற பெயரால் தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்யப் புறப்பட்டிருக்கும் ஆரிய மதவாத அரசியல்.
“மதவாதக் காரணங்களுக்காக, உலகில் சிந்தப்பட்டிருக்கும் ரத்தம் தான் அதிகம்” என்றார் கவிஞர் கனிமொழி. உலகை மாற்றி யமைத்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக ளுக்கு எதிராகவும், அந்த விஞ்ஞானிகளின் உயிர்களையும் பலி வாங்கியது மதவாதத் தின் பிடிவாதம் தான் என்பதை ரஜினியும் அவ ரைச் சார்ந்தவர்களும் உணர்வார்களாக!
கோப்பர்னிக்கஸ்
உலகம் உருண்டை - அது தனது அச்சில் தன்னைத் தானே 24 மணி நேரத்திற்கு ஒருமுறை சுற்றிக்கொண்டு, வருடத்திற்கு ஒருமுறை சூரியனையும் சுற்றிவருகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். இது மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது எனப் பயந்து, அவரது கண்டுபிடிப்பை புத்தக மாக வெளியிடவில்லை.
அவரது 70ஆவது வயதில் மரணப் படுக்கையில் இருக்கும்போது 1543இல் “புரட்சிகளின் விண்மண்டல சுழற்சி” என்கிற புத்தகம் அவரிடம் கொடுக்கும்போது, கைகள் நீண்டது - கண்கள் மூடின, உயிர் பிரிந்தது.
விஞ்ஞானி புருனோ
“பிரபஞ்சம் எல்லையற்றது. விண்மீன் கள் ஒவ்வொன்றும் சூரியனே” என்று கூறினார். இது மதக்கோட்பாடுகளுக்கு விரோதமானது. புரூனோ மதவிரோதி, அவரை உயிருடன் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தீர்ப்புக்கூறி பிப்ரவரி 8, 1600இல் ரோம் நகர நடுவீதியில் கட்டை களை அடுக்கி தீயிட்டுக்கொன்றனர்.
கலிலியோ
முதன் முதலாக ஆகாயத்தை தொலை நோக்கி மூலம் பார்த்தார். 1609ஆம் ஆண்டு தொலைநோக்கியைக் கண்டு பிடித்து, பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனை யும் சுற்றி வருகிறது என்பதை ஆதாரத்து டன் விளக்கினார். இதை 1632இல் புத்தகமாக வெளியிட்டார். இவரை மத துரோகி என குற்றம் சாட்டி, கைது செய்து 8 ஆண்டுகள் வீட்டுச்சிறை யில் அடைக்கப்பட்டார். 1642இல் ஜனவரி 8ஆம் நாள் உயிர் துறந்தார்.
அந்த மாமனிதன் இறந்து 352 ஆண்டு கள் கழித்து அவர் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இது எப்படி இருக்கு?
விஞ்ஞானி லாவாசியர்
எரிதலுக்கு உதவும் வாயுவிற்கு ஆக்ஸி ஜன் என்கிற பெயரை இவர்தான் முதன் முதலில் வைத்தார். நீர் என்பது ஆக்ஸிஜ னும் ஹைட்ரஜனும் இணைந்து ஏற்பட்ட வேதியியல் கலப்புத்தான் என அறிவித் தார். கெமிக்கல் என்கிற வார்த்தையை உருவாக் கினார்.
சுவாசத்தின்போது ஆக்ஸிஜனை எடுத் துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறோம் என்பதை அறிவித்தார். மனிதனின் உடல் எப்போதும் வெப்பமாக இருப்பதற்குக் காரணம் உடலில் இடை விடாது எரிதல் நடந்து கொண்டேயிருக் கிறது என்று கூறினார்.
ஃபிரெஞ்சு புரட்சி முடிந்து, ஏற்பட்ட புதிய அரசாங்கம், முன்பிருந்த அரசாங் கத்துக்கு துப்பாக்கி மருந்து தயாரித்துக் கொடுத்தார் எனக்குற்றஞ்சாட்டி, மே 8, 1794 அன்று தலைவெட்டும் கருவியில் இவர் தலை வெட்டி வீசப்பட்டது.
பெண் விஞ்ஞானி மேரி கியூரி
1903ஆம் ஆண்டு மேரி கியூரி மற்றும் பியார்கியூரி ஆகியோருக்கு இயற்பிய லுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதன் முதலில் நோபல்பரிசு பெற்ற பெண் மணி மேரி கியூரி - 1911ஆம் ஆண்டு வேதி யியல் (ரேடியம் கதிரியக்கம்) சாதனைக்காக இரண்டாவது நோபல் பரிசு கிடைத்தது.
பெண்களுக்கு எதிரான பழமை வாத மதக்கருத்து காரணமாக, பாரிஸில் உள்ள புகழ்பெற்ற விஞ்ஞானக் கழகத்தில் உறுப் பினராக சேர்த்துக் கொள்ளவில்லை. அறி வியல் என்பது மனிதநேயம். ஆன்மிகம் என்பது ஏமாற்று மாயம்.
மதவாத(ம்) நோய் உலகைப் பிடித்த பீடை என்பதை உணர்ந்திருப்பீர்கள். மதவாதிகள், மின்சாரம், மின் விசிறி, ஆடியோ, வீடியோ, தொலைக்காட்சி, குளிர்சாதனம் என அனுபவித்துக் கொண் டிருந்தாலும், தங்களது சுயநலத்துக்காக ஆன்மிக அரசியல் (பழைய கள்ளு புதிய மொந்தை - ரஜினி) எனும் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள்.
நன்றி! வணக்கம்.
(ஆதாரம்: “உலகை மாற்றிய விஞ்ஞானிகள்)
- கா.நா.பாலு, மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், சேலம் மாவட்டம்
- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18